archimides03

  விலக்கம் உற்ற தண்ணீரின் எடை எவ்வளவோ, அவ்வளவு குறைவு பொருளின் எடையிற் காணும். ஏனெனில் தண்ணீருள் அமிழும் பொருளை தண்ணீர் எப்போதும் மேல் நோக்கித் தள்ளுகிறது. இவ்வாறு கீழே அமிழும் பொருளை மேல் நோக்கித் தள்ளும் தண்ணீரின் ஆற்றல், பொருளால் விலக்கம் உற்ற தண்ணீரின் எடைக்கு ஒப்பாகும் எடுத்துக்காட்டாக, ஓர் இரும்புத் துண்டு 4 கிலோ கிராம் எடையுள்ளதாகக் கொள்வோம். இது தண்ணீருள் முழுதும் மூழ்கும்படி தொங்கவிடப்பட்டால் ஏறத்தாழ அரைகிலோகிராம் எடையுள்ள தண்ணீர் விலக்கப்படும். எனவே தண்ணீருக்குள் அதன் எடை 8 கிலோ கிராம் தான்.
  மேற்கூறிய அடிப்படையிற்றான் நாம் தண்ணீரில் எளிதாக மிதந்து நீந்துகின்றோம். நாம் நீந்தும்போது நமது உடலால் விலக்கம் உறும் தண்ணீரின் எடை ஏறத்தாழ நமது எடைக்கு ஒப்பாகும். நம் எடைக்கு ஒப்பான ஆற்றல் கொண்டு தண்ணீர் நம்மை மேல் நோக்கித் தள்ளுகிறது. எனவே தான் தண்ணீரினுள் நமக்கு எடையே இல்லாததுபோல் புலப்படுகின்றது. அதனாற்றான் தண்ணீருக்கு மேலே தலையை வைத்து நீந்துவதை விட, உடல், தலையாவும் தண்ணீருள் ஆழ்ந்த நிலையில் நீந்துவது எளிமையாக இருக்கிறது. தலையும் சேர்ந்து தண்ணீருள் அமிழும்போது விலக்கம் உறும் தண்ணீரின் அளவும் பெரிதாகிறது. அதனால் முன்னைய நிலையை விடப் பின்னைய நிலையில் தண்ணீரின் மேல் நோக்கித் தள்ளும் ஆற்றலும் பெரிதாகிறது. ஒரு மரக்கட்டை அதன் எடை என்னவோ அவ்வெடையுள்ள தண்ணீர் விலக்கம் உற்றதும் மிதத்தல் பெறுகிறது. இவ்வாறே படகும் கப்பலும் மிதக்கின்றன. நீர் மூழ்கிக் கப்பலும் ஆர்க்கிமிடிசின் இத்தத்துவ அடிப்படையிற்றான் இயங்குகிறது. ஆர்க்கிமிடிசு கணிதம் அறிவியல் இவற்றில் பெரும் புலமை பெற்று விளங்கினார். அவர் கல்லறையும் உருளை உருண்டை வடிவங்கள் பொறிக்கப்பட்டுப் பார்ப்போர்க்குக் கணித அறிவை ஊட்டவல்லதாய் அமைந்துள்ளது.
(குறள்நெறி – வைகாசி 2, 1005 / 15.05.1964)