Saturday, June 8, 2019

வெருளி அறிவியல் 34 – 37 : இலக்குவனார் திருவள்ளுவன்


(வெருளி அறிவியல்  –  31-33 தொடர்ச்சி)
வெருளி அறிவியல் 34 – 37 
  1. 34. ஆண்வெருளி– Androphobia/Arrhenphobia/Hominophobia
ஆண்களைக் கண்டால் ஏற்படும் அச்சம் ஆண் வெருளி.
ஆண்களைக் கண்டு அஞ்சுவது குறித்துக் கூறுவதால் இது பெண்களுக்கு வரும் எனப் புரிந்து கொள்ளலாம். ஆடவர் தங்களை அடக்கி ஒடுக்குவார்கள், துன்பம் இழைப்பார்கள், தவறாக  நடந்து கொள்வார்கள், தவறான முறையில் பழகி அவப்பெயர் ஏற்படுத்துவார்கள் என்று பல வகைகளில் ஆண்கள் மீது வரும் பேரச்சம். இத்தகையோர் ஆண்கள் மீதுள்ள அச்சத்தால் பொது வண்டிகளில் ஏறாமல் பெண்கள் வண்டிகளில் மட்டும் ஏறுவார்கள், ஆண் வெருளியால் பணிக்குச் செல்ல அஞ்சுவோரும் உள்ளனர். ஆண்கள் மிகுதியாகப் பணியாற்றும் இடங்களில் வேலை பார்க்க விரும்ப மாட்டார்கள்.
ஆண் வெருளி உள்ளவர்களுக்குத் திருமண வெருளியும் வர வாய்ப்புண்டு.
arrhen என்றால் கிரேக்க மொழியில் ஆண் எனப் பொருள்.
Andro என்றால் பழம்கிரேக்கத்தில் ஆண் எனப் பொருள். Androphobia/Arrhenphobia என்பது ஆண் வெருளி.
Homino என்பது தற்பாலினரைக் குறித்தாலும் ஆடவருக்கு ஏற்படும் ஆடவர் விருப்பு வெறுப்பைக் குறிக்கிறது. தற்பாலின வெருளி என்று சொன்னால் பெண்களுக்குப் பெண்கள் மீது ஏற்படும் ஈர்ப்பினால் ஏற்படும் அச்சத்தையும் குறிக்கும். எனவே Hominophobia என்றாலும் ஆண் வெருளிதான்.
00
35.ஆலந்து வெருளி-Dutchphobia
ஆலந்து / நெதர்லாந்து தொடர்பான அச்சம், அளவுகடந்த வெறுப்பு ஆகியன ஆலந்து வெருளி எனப்படுகிறது.
ஆலந்து மக்கள் மீதும் அவர்களின் மொழி, கலை, பண்பாடு,நாகரிகம், வாழ்க்கை முறை, வணிகம், உற்பத்திப் பொருள்கள் என ஆலந்து தொடர்பானவற்றில் ஒன்றிலோ பலவற்றிலோ அனைத்திலுமோ அளவுகடந்த பேரச்சம் கொண்டிருப்பர்.
இடச்சு(Dutch) என்பது ஆலந்தைக் குறிக்கும் சொல்.
00
36. ஆவிகள் வெருளி-Pneumatiphobia
ஆவிகள் குறித்த சிந்தனை, ஆவிகள் குறித்துக் கேட்டல் அல்லது படித்தல் என ஆவிகள் மீது ஏற்படும் அச்சம் ஆவிவெருளி.
ஆவிகள் பற்றிய கதைகளைக் கேட்டல், படித்தல், நாடகங்கள், தொலைக்காட்சி ஒளிபரப்புகள், திரைப்படங்கள் முதலியவற்றில் பார்த்தல் முதலானவற்றால் ஆவிகள்பற்றிய பேரச்சத்திற்கு ஆளாவர்.
‘pneumat’ என்னும் கிரேக்கச்சொல்லிற்கு ஆவி எனப் பொருள்.
பேய் வெருளி(Phasmophobia/Spectrophobia), ஆடி உரு வெருளி(Spectrophobia / catoptrophobia), கழுது வெருளி(Demonophobia/Daemonophobia), பூத வெருளி(Bogyphobia), அலகை வெருளி(சாத்தான் வெருளி)(Satanophobia,), அளறு வெருளி/ பாழ்வினையர் உலகு வெருளி/ நரக வெருளி(Hadephobia/Stygiophobia/Stigiophobia), சூன்று வெருளி(Wiccaphobia) ஆகிய வெருளிகளுடன் தொடர்புடையது.
00
37.ஆழ்பு வெருளி-Bathophobia
ஆழம் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் ஆழ்பு வெருளி
ஆழ்(14), ஆழ்க(1), ஆழ்ச்சி(2), ஆழ்ந்த(2), ஆழ்ந்தன்று(1), ஆழ்ந்து(1), ஆழ்பவன்(1), ஆழ(1), ஆழல்(1), ஆழல(1), ஆழி(24), ஆழிமுதல்வ(1), ஆழியான்(1), ஆழும்(1), என ஆழ் அடிப்படையிலான சொற்கள் சங்கப்பாடல்களில் உள்ளன. ஆழ்நிலையில் உள்ளமையால் ஆழி என்பது கடலையும், மண்ணில் ஆழ்ந்து பதிதலால் சக்கரமும் ஆழி என்றும், துன்பத்தில் ஆழ்வதால் ஏற்படும் அழுகையும் ஆழ் என்றும் (ஆழல்-அழாதே) (அழுகை என்பதன் வேர்ச்சொல் நீட்டிப்பு போன்று), பிற பொருளிலும் இச் சொல் அமைந்துள்ளதைக் காணலாம். ஆழ் என்பதன் அடிப்படையில் ஆழ்பு எனக் குறித்துள்ளோம்.
மிகவும் கீழிறக்கமான படிக்கட்டுகள், தாழ்வான குகை,  ஆழமான கிணறு அல்லது பிற நீர்நிலைகள் முதலியவை தொடர்பான பேரச்சம் கொள்வர்.
bathos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் ஆழம்.
(தொடரும்)
ஆண் வெருளி
ஆலந்து வெருளி-
ஆவிகள் வெருளி
ஆழ்பு-வெருளி

Sunday, June 2, 2019

வெருளி அறிவியல் 31 – 33 : இலக்குவனார் திருவள்ளுவன்

வெருளி அறிவியல் 31 – 33 

 31.ஆடை வெருளி – Vestiphobia
ஆடை குறித்த அளவுகடந்த பேரச்சம் ஆடை வெருளி.
குழந்தைப்பருவத்தில் உடை உடுத்துவது குறித்த எரிச்சல் விருப்பமின்மை முதலியன வளர்ந்து இத்தகைய பேரச்சத்தை உருவாக்குவதும் உண்டு.
படைத்துறை முதலான சீருடைத் துறைகளில் பணியாற்றுவோருக்கு ஆடை வெருளி உள்ளது.
தாய் அல்லது தந்தைக்கு ஆடை வெருளி இருந்தால் பிள்ளைகளுக்கும் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றனர்.
புதுவகை ஆடைகளைக் கண்டு எரிச்சலுற்று ஆடை வெருளிக்கு ஆளாவோரும் உள்ளனர்.
vestis என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் ஆடை அல்லது மேலுடை என்பதாகும்.
00
32. ஆடை அவிழ்ப்பு வெருளி – exuerphobia
மருத்துவ ஆய்விற்காக உடைகளைக்கழற்றச் செய்தல் அவிழ்ப்பு வெருளி.
வேறு காரணங்களுக்காக உடலை அம்மணமாக்குவதிலிருந்து வேறு பட்டது இது.
மறைவிடங்களில் நோய் இருந்தால் மருத்துவரிடம் ஆடையை அவிழ்த்துக் காட்ட வேண்டுமே என்று அஞ்சி மருத்துவரைப் பார்க்காமல் நோயை முற்ற விடுபவர்களும் உள்ளனர்.
தொடைப்பகுதிகள் அல்லது பின் பகுதிகளில்  ஊசி செலுத்துவதற்காக ஆடையை ஒதுக்க அஞ்சி அது குறித்துக் கவலைப்பட்டே ஆடை வெருளிக்கு ஆளாவோரும் உள்ளனர்.
வீட்டைச் சுற்றி அம்மணமாக நடக்கும் இயல்பு உள்ளவர்களும் மங்கிய வெளிச்சத்தில் மருத்துவர் முன் ஆடையை அவிழ்க்க அஞ்சுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
exuer  என்றால் சட்டை கழற்று என்பது பொருள்.
00
 33. ஆணுறுப்பு வெருளி / விறைப்பு வெருளி -Phallophobia/Ithyphallophobia / Medorthophobia
ஆண் உறுப்பைப்பார்த்தால் அல்லது ஆண் உறுப்பு குறித்து எண்ணினால் ஏற்படக்கூடிய அச்சமே ஆணுறுப்பு வெருளி.
விரிந்த பொருளில் சொல்வதானால் ஆண்மை மீதான பேரச்சமே இது.
தாழ்வு மனப்பான்மை, இயலாமை இருப்பதாக எண்ணி வருந்துதல், பாலுறவு வெறுப்பு போன்றவற்றாலும் ஆணுறுப்பு வெருளி வரலாம்.
phallo என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் ஆண் குறி.
Ithy என்னும் பழம்கிரேக்கச் சொல்லிற்கு நேரான என்று பொருள்.
(தொடரும்)
00
ஆடை வெருளி
ஆடை அவிழ்ப்பு வெருளி
ஆணுறுப்பு வெருளி / விறைப்பு வெருளி –

Saturday, June 1, 2019

வெருளி அறிவியல் – 9 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல 


(வெருளி அறிவியல் 8 இன் தொடர்ச்சி)

வெருளி அறிவியல்  –  9

27. அறிவுவெருளி-Epistemophobia/Gnosiophobia
அறிவு தொடர்பில் எழும் தேவையற்ற மிகையான பேரச்சமே அறிவுவெருளி.
சிலருக்குப் புதியதாக எதைக் கற்க / அறிய வேண்டுமென்றாலும் பேரச்சம் வரும். சிலருக்குக் குறிப்பிட்ட ஒன்றைக் கற்க அல்லது அறிய மட்டும் பேரச்சம் வரும்.
பள்ளிக்கூடம் செல்ல பிள்ளைகள் அடம்பிடித்து மறுப்பதும் அறிவு வெருளிதான். பலர் படிப்படியாக இதிலிருந்து விடுபட்டு விடுகின்றனர். சிலர் இதிலிருந்து விடுபடாமல் முழுமையான அறிவு வெருளிக்கு ஆட்பட்டுவிடுகின்றனர்.
gnos  / epistemo ஆகிய கிரேக்கச்சொற்களின் பொருள் அறிவு.
00
28. அனைத்து வெருளி-Panophobia/Pantophobia/ Panphobia/ Omniphobia
பார்க்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் அனைத்து வெருளி.
அனைத்து என்பது இத்தன்மையது என்னும் பொருளில்தான் சங்கப்பாடல்களில் வருகிறது.
எல்லாவற்றையும் குறிக்க அனைத்தும் என்றுதான் பயன்படுத்தி உள்ளனர்.
அனைத்தும்,
புணர்ந்து உடன் ஆடும் இசையேஅனைத்தும், (மதுரைக் காஞ்சி : 266)
கடிப்பகை அனைத்தும்கேள்வி போகா (மலைபடுகடாம் : 22)
அனைத்தும் நீஅனைத்தின் உட்பொருளும் நீஆதலின், (பரிபாடல் : 3:68)
அனைத்தும்அடூஉ நின்று நலியஉஞற்றி, (அகநானூறு : 378:16)
இனைத்து என்போரும் உளரேஅனைத்தும்      
அறி அறிவு ஆகாச் செறிவினை ஆகி, (புறநானூறு : 30:7-8)
எனினும் தற்போது அனைத்து என்பதே அனைத்தும் என்னும் பொருள் மாற்றத்தைப் பெற்றுள்ளதால் அனைத்து என்பதையே இங்கே பயன்படுத்தலாம். அதற்கிணங்க
அனைத்து வெருளி
pan என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் அனைத்து.
Omni என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் எல்லாம்.
00
29. ஆங்கிலேய வெருளி-Anglophobia
ஆங்கிலேயர் தொடர்பான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் ஆங்கிலேய வெருளி.
இங்கிலாந்து, இங்கிலாந்து மக்கள், அவர்கள் மொழியான ஆங்கிலம் மீதான வெறுப்பு, அச்சம் ஆகியனவற்றை இது குறிப்பிடும். முதலில் அயர்லாந்து, வேல்சு, காட்லாந்து, பிரான்சு, சீனா, ஆத்திரேலியா,ஈரான் மக்களிடையே ஆங்கில வெருளி  ஏற்பட்டது.  பின்னர்ப் பிற நாட்டு மக்களிடமும் பரவியுள்ளது. 
Anglo  என்பது  இங்கிலீசு என்பதைக் குறிக்கும் இலத்தீன் முன் னொட்டு.
இங்கிலாந்தைக் குறிக்கும் இலத்தீன் பெயரான ஆங்கிலியா என்பதிலிருந்து இது வந்தது.
தமிழில் நாம் மூலச் சொல் அடிப்படையில் சரியாக ஆங்கிலம், ஆங்கில, ஆங்கிலேயர் என்று குறிக்கின்றோம்.
00
30. ஆடி வெருளி-Eisoptrophobia
கண்ணாடியைப் பார்த்தால் அல்லது கண்ணாடியில் காணும் தன் உருவத்தைப் பார்த்தால் ஒருவருக்கு ஏற்படும் தேவையற்ற அச்சம்  ஆடி வெருளி (ஆடிப்பார்வைவெருளி).
தொடக்கத்தில் கண்ணாடி போல் எதிரொளிக்கும் நீர்நிலைகளில் தன் உருவத்தைப் பார்த்து ஏற்படும் அச்சமே  ஆடி வெருளியாக அல்லது ஆடிப்பார்வை வெருளியாக உருவானது.
பொன்னின் ஆடியிற் பொருந்துபு நிற்போர்
(மணிமேகலை 19.91) எனச் சாத்தனார் பொன் வளையத்தினுள் பதிக்கப்பட்ட கண்ணாடியில் தம் உருவம் காண்பதைக் குறிப்பிடுகிறார்.
அப்பொழுதெல்லாம் ஆடி வெருளி இல்லை போலும்.
கண்ணாடி உடைந்தால் தீயூழ் நேரும் என்னும் மூடநம்பிக்கை உள்ளவர்கள், கண்ணாடி உடைந்துவிடும் என்ற அச்சத்தால்  அதைப் பயன்படுத்தாமல் கண்ணாடி வெருளிக்கு ஆளாவர்.
‘Eisoptro’ என்றால் கிரேக்க மொழியில் கண்ணாடி என்று பொருள். eis(உள்ளே), optikos(பார்வை) என்பதன் இணைப்பிலிருந்து இச்சொல் உருவானது.
ஆடி வெருளி (Eisoptrophobia)  என்பதைக் கரையான் வெருளியான ஐசோப்பிடிரோபோபியா Isopterophobia உடன் தொடர்பு படுத்திக் குழப்பிக் கொள்ளக் கூடாது.
(தொடரும்)
அறிவுவெருளி
அறிவுவெருளி
அனைத்து வெருளி
அனைத்து வெருளி
ஆங்கிலேய வெருளி
ஆங்கிலேய வெருளி
ஆடி வெருளி
ஆடி வெருளி
(காண்க – வெருளி அறிவியல் 10)