மகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்!
மகுடை(கரோனா) நோய் பற்றிய செய்திகள் நாளும் வருகின்றன. அவற்றிற்கு உரிய தமிழ்ச்சொற்களை அறிவதன் மூலம், நோய் தொடர்பான விளக்கங்களையும் அறியலாம்.
தொற்றுத் தடுப்பிற்காக முகத்தில் அணியும் கவசத்திற்கு எண்கள் குறிப்பிடுகின்றனர். இப்பொழுது குறிப்பிடப்படுவது என்.95 ஆ? எண் 95ஆ என்ற ஐயப்பாடு பலருக்கு வருகிறது. இங்கே’ என்’ என்பது எண்ணைக் குறிக்கவில்லை.
NIOSH – National Institute for Occupational Safety and Health என்பதன் ஆங்கில முதல் எழுத்தான ‘என்’(N) என்பதைக் குறிக்கிறது. அமெரிக்காவில் உள்ள இதனை, நாம் ‘தேசியத் தொழிற்பாதுகாப்பு நலவாழ்வு நிறுவனம்’ எனலாம். அப்படியானால் தமிழில் இதன் முதல் எழுத்தான ‘தே’ என்பதைப் பயன்படுத்தலாமா? சிலர் இதனைத் ‘தொழிற்பாதுகாப்பு நலவாழ்விற்கான தேசிய நிறுவனம்’ என்றுகூடச் சொல்வர். மேலும் இந்நிறுவனத்தின் நோக்கம் நலவாழ்விற்கான பாதுகாப்புதான். அப்படியானால் ‘பா’ என்று சொல்லலாமா? இதனைவிடக் கா என்று குறிப்பது மிகப் பொருத்தமாக இருக்கும். ‘கா’ என்றாலே தீமை வரவொட்டாமல் காப்பாற்றுதல், தீதிலிருந்து விலக்குதல், தீயவற்றைத் தடுத்தல் என்னும் பொருள்கள் உள்ளன. எனவே, தொற்றுக் காப்பிற்கான இதனைச் சுருக்கமாகக் ‘கா’ என்றே குறிக்கலாம்.
அப்படியானால் 95 என்பது எதனைக் குறிக்கிறது என்ற எண்ணம் வரும். இது காற்று வடிகட்டுதலின் மதிப்பீட்டு அளவைக் குறிப்பதாகும். அஃதாவது, வான்வழித் துகள்களில் வடிகட்டும் அளவைக் குறிப்பதே இந்த எண். இந்த இடத்தில் 95 விழுக்காட்டுத் துகள்களை வடிகட்டுகிறது என இதன் சிறப்பைக் குறிக்கிறது. (எனினும் இஃது எண்ணெயை எதிர்க்காது.) எனவே, நாம் என்.95 எனக் குறிப்பதை விட 95 விழுக்காட்டுக் காப்புப் பயன் உடைய கவசத்தைக் கா 95 எனத் தமிழில் குறிப்பதே சிறப்பாகும்.
இந்த இடத்தில் கவசம் தமிழ்ச்சொல்தானா என்ற ஐயப்பாடு வரும். mask என்பதை, முகத்திரை, முகமூடி, பகுதி மறைப்பு, முகக்காப்பு வலை, கவசம் எனப் பல சொற்களால் குறிப்பிடுகின்றோம். கவ் என்பதில் இருந்து உருவான கவயம் என்பது கவசமாக மாறி உள்ளது. இதனைச் சமசுகிருதத்தில் கவச என்று குறிப்பிட்டதும் நாம் தமிழலல்ல என எண்ணி விட்டோம். கவசம் தமிழ்ச்சொல்தான். எனினும் முகம் முழுவதையும் மறைக்காமல், மூக்கு, வாய்ப்பகுதிகளை மட்டும் மறைப்பதால் நாம் பயன் அடிப்படையில் மூச்சுக்காப்பு எனலாம். எனவே, அரசு கா 95 மூச்சுக்காப்புகளைப் போதிய அளவில் வாங்கி அனைவருக்கும் வழங்க வேண்டும் எனலாம்.
தொற்றுத் தவிர்ப்பிற்காகச் சொல்லப்படும் தொடர் social distancing என்பதாகும். அப்படி என்றால் குமுகாயத்திலிருந்து விலகி இருத்தல் அல்ல. நாம் அதன் ஒரு பகுதிதான். ஆனால், மன்றங்கள், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், விருந்துகள் என்பனபோன்று குமுகாய நடவடிக்கைகளின் பகுதியான பொது நிகழ்வில் இருந்து விலகி இருத்தலையே குறிக்கிறது. விலகி இருத்தல் என்பதைக் குறிக்கத் தமிழில் பல சொற்கள் உள்ளன.
இராமலிங்க அடிகளார் (மூன்றாம் திருமுறை, 005. சல்லாப வியன்மொழி, பாடல் 5 அடி 4) விலகி இருப்பதைக் குறிப்பிட, “ஒற்றியிரும் என்றுரைத்தேன்” என்கிறார்.
ஒற்றிப்போதல் என்றால் விலகிச் செல்லுதல் எனப்பொருள். ஒற்றிப்போடுதல் என்றால் தள்ளிவைத்தல் என்று பொருள். இதுவே இப்போது ஒத்திவைத்தல் என மாறி வழங்கி வருகிறது. எனினும் விலகி இருத்தலை ஒற்றியிருத்தல் எனக் குறிப்பது மிகப் பொருத்தமாக இருந்தாலும் இன்றைய வழக்கத்தில் நாம் உரிய பொருளை நேரடியாகப்புரிந்து கொள்ள இயலாது.
எழவாங்குதல் என்றாலும் முகம் காட்டாமல் தொலைவில் இருத்தல் என்று பொருள். மேலும், கவிப்பு, தாவு, துலை முதலான சொற்களும் விலகி இருத்தலைக் குறிக்கின்றன. இவற்றையெல்லாம் வெவ்வேறு பொருள்களில் இப்பொழுது பயன்படுத்துவதால் வேறு சொல்லே சிறப்பாக அமையும். குமுகாயம் என்பதை அவ்வாறே குறிப்பிடாமல் குமுகாய நிகழ்வு என்பதைக் குறிப்பாகக் கொண்டு நாம் நிகழ்வுச்சேய்மை எனலாம். அஃதாவது கூடிக்களிக்கும் நிகழ்வுகளில் இருந்து சேய்மையாக இருத்தல். ( distance = சேய்மை என்றும் பொருள்.)
எனவே, மகுடைத் தொற்றிலிருந்து காத்துக் கொள்ளகூட்ட நிகழ்வுகளில் இருந்து விலகும் கூட்ட விலகலை – நிகழ்வுச் சேய்மையைக் கடைப்பிடிப்போம் என்போம்.
அடுத்துத் தற்தடைக் காப்பு.
Quarantine என்பது, தொற்றுத் தடைக்காப்பு, நோய்த்தொற்றுத்தடுப்பு, தொற்றுத்தடுப்புத் தனிப்படுத்தல் என்னும் பொருள்களை உடையது. மருத்துவர்கள் கூறுவதும் அரசு வலியுறுத்துவதும் நம்மை நாமே தனிப்படுத்தி வைத்துக் கொள்ளல். அதுவே, தற்தடைக் காப்பு(self-quarantine). மகுடைத் தொற்று நோய்மியானது தொற்று உள்ளவரிட மிருந்து வெறும் ஆறு அடி தொலைவு தான் செல்ல இயலும். எனவே, நாம் தனிமைப்படுத்திக்கொண்டு விலகி இருப்பதன் மூலம் உடன்இருக்கும் யாருக்கேனும் இத் தொற்று இருப்பின் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள இயலும்.
அடுத்து வல்லுநர்கள் சொல்வது, அளவுக்கோட்டை மட்டப்படுத்தல்.
flattening the curve என நோய் நிலை வரைபடத்தில் உள்ள வளைவுக்கோடு தட்டையாகும் வண்ணம் நோய்நிலையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு கூறுகின்றனர். (நோய்நிலை வரை)வளைவு தட்டையாக்கல் எனலாம்.
அடுத்தது ஒதுக்கம்(isolation)
ஒதுக்கம் என்பது தற்தடைக்காப்பிலிருந்து மாறுபட்டது. இங்கே, தொற்றுக்கு ஆளானவர்களை அவர்கள் மூலம்தொற்றுக்கு ஆளாகாதவர்களிடம் நோய் பரவக்கூடாது என்பதற்காகத் தனித்து ஒதுக்கி வைப்பதைக் குறிப்பது. இதனைப் பின்பற்றினால்தான் ஒருவருக்கு வந்த தொற்று பிறருக்குப் பரவாது. மகுடைத் தொற்றிலும் இது பின்பற்றப்படவேண்டும்.
அடுத்தது தொற்று ஐயப்பாட்டில் உள்ளவர்களை ஆய்வு செய்தல். இது குருதி ஆய்வு, உறிகை ஆய்வு என இருவகைப்படும். உறிகை ஆய்வு என்பதைச் சிலர், ஆங்கிலத்தில் தவறுதலாக ‘swap test’ எனக் குறிப்பிடுகின்றனர். swap என்றால் பகர மாற்றம் எனப் பெயர். இது ‘swab test’ எனக் குறிக்கப்பெற வேண்டும்.
அடுத்தது தொற்றுப் பெருக்க விகிதம். ஒவ்வொரு தொற்றுநோய்மிக்கும் இரண்டு குணங்கள் உண்டு. முதலாவது தொற்றுப் பெருக்க விகிதம் எனப்படும் R0 (ஆர் நாட் – ‘R Naught’). தொற்றுநோய்மி உள்ள ஒருவர் இயல்பாக எவ்வளவு பேருக்கு இந்த நோய்மித் தொற்றைத் தர வாய்ப்பு உள்ளது என்பதே தொற்றுப் பரவு விகிதம். இதுவே அடிப்படை இனப்பெருக்க எண் என்றும் சில நேரங்களில் அடிப்படை இனப்பெருக்க விகிதம் என்றும் சொல்கின்றனர். இனப் பெருக்கம் என்பதைவிடத் தொற்றுநோய்மிப் பெருக்கம என்பதன் சுருக்கமாகத் தொற்றுப்பெருக்கம் என்பது சரியாக இருக்கும்.
அடுத்து நோயரைத் தனிமைப்படுத்தி வைக்கும் அறை அல்லது கூடம் பற்றியது. பகுக்கப்படுவது பகுதி என்பதுபோல் தனித்தனியே வகுத்து அமைக்கப்படும் வார்டு(ward) என்பதை வகுதி எனலாம்.
நோயருக்கு மூச்சுயிர்ப்பிற்கு உதவும் இயந்திரம் பற்றிப் பார்ப்போம்.
அறைகளில் இருக்கும் வெண்டிலேட்டர் என்பதை நாம் காலதர் என்கிறோம். கால்+அதர்; கால் என்றால் காற்று; அதர் என்றால் வழி. காற்று வரும் வழி எனப்பொருள். காற்றுவாரி என்றும் இதனைச் சொல்வர். அதேபோல் நோயருக்கு மூச்சு உயிர்ப்பு உதவியாக உள்ள வெண்டிலேட்டரையும் காலதர் என்றால் தவறில்லை. ஆனால், பொருள் குழப்பம் வரும். எனவே, வேறு சொல் தேவை. எல்லாருமே வெண்டிலேட்டர் என்றே குறித்து வருகின்றனர். ஓர் அகராதி மூச்சுக்காற்றுவாரி என்று குறிப்பிடுகிறது. சொல்வழக்கில் செயற்கைச் சுவாசக் கருவி என்போரும் உள்ளனர். மூச்சுக்காற்றுக்கு உதவும் இதனை மூச்சதர் எனலாம்.
சீரான மூச்சிற்கு உதவும் மற்றொன்று மூச்சுச்சீராக்கி (respirator). சிலர் மூச்சதரை மூச்சுச் சீராக்கி என்கின்றனர். பலர், கவசம் என நாம் சொல்கின்ற மூச்சுக்காப்பினை மூச்சுச் சீராக்கி என்கின்றனர். பொதுவாக மூச்சதர் நோயருக்கு உதவுவதுபோல், அவர்களைக் கவனிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு உதவுவது மூச்சுச் சீராக்கி.
நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுக்கும் அந்நோய்த்தொற்றின் காரணமாக இறந்தவர்களுக்கும் உள்ள விகிதம் ஆட்கொல்லி விகிதம்(case fatality rate- CFR) எனப்படுகிறது. மகுடைநோயின் ஆட்கொல்லி விகிதம் நாளும் மிகுதியாவதுதான் வேதனையான ஒன்று.
மகுடை நோய் தொடர்பானவை மட்டுமல்ல, பிற நோய் தொடர்பாகவும் உள்ள இவற்றை நாம் தமிழிலேயே குறிப்பிட்டுப் பயன்படுத்துவோம்!
இலக்குவனார் திருவள்ளுவன்
காண்க –
occupational safety என்பது தொழில் பாதுகாப்பு அன்று; தொழில் செய்கையில் பாதுகாப்பு என்றே பொருள்தரும் என்று கருதுகிறேன்.
ReplyDelete