ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்


துறைதோறும் துறைதோறும் தமிழ் வளர வேண்டும்! தமிழில் வரும் பிற துறைகள் பற்றிய கட்டுரைகளையும் நூல்களையும் பார்க்கும் பொழுது தமிழ் அறிவியல் துறையில் முன்னேறிவிட்டதுபோல் தோன்றும். ஆனால், உண்மையில் நாம் எட்ட வேண்டிய இலக்கு மிக மிகத் தொலைவில் உள்ளது. தஞ்சாவூரில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றபோது “அறிவியலிலும் தமிழ்! அனைத்திலும் தமிழ்!” என்பதே அரசின் முழக்கமாக அமைந்தது. ஆனால், இதனைச் செயல்படுத்தும் வகையில் போதிய துறையறிவும் தமிழ்ப் புலமையும் நிறைந்தவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் உள்ளனர். பிற துறை யறிவினர் தமிழில் புலமை பெறுவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும். தமிழ்ப் புலமையாளர்கள், அறிவியல் துறைகளில் தேர்ச்சி பெறுவதைக் கடப்பாடாகக் கொள்ள வேண்டும். ஒரே துறையின் உட்பிரிவாகவும் பல துறைகள் வளர்ந்துள்ளன. ஆனால் அவற்றின் பெயர்களைக்கூட அகராதிகளில் காண இயலவில்லை. இங்கே பெரும்பாலான துறைகளின் பெயர்கள் தமிழில் தரப்படுகின்றன. ஒவ்வொரு துறைகளைப் பற்றியும் குறைந்தது ஒரு பத்தி, அடுத்து ஒரு கட்டுரை, அதற்கடுத்து ஒரு நூல், பின்னர் பல்வேறு நூல்கள் என அறிவியல் துறைகளில் தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.

 

ஒரே தமிழ்ச்சொல், வெவ்வேறு மூலச் சொற்களைக் குறிக்கும் நிலைமையும் ஒரே மூலச்சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ்ச்சொற்களைக் குறிக்கும் நிலைமையும் பரவலாகக் காணப்படுகிறது. முதலில் ஐந்நூறு துறைப்பெயர்களைக் குறிப்பிட்டு, இந்த அட்டவணையை உருவாக்கிய பொழுது குறிப்பிட்ட சொற்களைத் தவிர்ப்பதற்கும் குறிப்பிட்ட சொல்லைப் பயன்படுத்துவதற்குமான காரணங்களும் சொற்சீர்மையும் குறித்திருந்தேன். இப்பொழுது துறைப்பெயர்கள் ஈராயிரமாகப் பெருகியதால் அவ்வாறு குறிப்பின் முன்னுரையில் ஒரு முறை அட்டவணையில் ஒரு முறை எனக் கூறியது கூறலாகும் எனத் தவிர்த்து விட்டேன். எனினும் சில இடங்களில் விளக்கங்களை அளித்தால்தான் சிறப்பாக இருக்கும்.சில இடங்களில் நேர் பொருளைக் குறிப்பிடாமல் பயன்பாட்டுப் பொருளைக் குறிப்பிடும்பொழுது விளக்கம் இல்லாவிட்டால் அதனைத் தவறு எனக் கருதலாம். இத்தகைய சூழல்களில் அட்டவணைப்பகுதியிலேயே சொற்பொருள் விளக்கங்களை அளித்துள்ளேன். ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் இருக்கும். எனினும் பயன்படும் இடத்திற்கேற்ற பொருளை மட்டும் குறித்திருப்பேன்.

 

துறைப் பெயர்கள் ஈராயிரத்திற்கு மேல் இருந்தமையால் இதனை ஈராயிரமாகக் கணக்கில் எடுத்துக் கொண்டேன். நூற்றுக்கு மேற்பட்ட சொற்களை நீக்கியமையால் இப்பொழுது ஏறத்தாழ ஈராயிரம் என்ற எண்ணிக்கைக்கு வந்துள்ளது. இருப்பினும் தலைப்பை மாற்றவில்லை.

 

முன்னரே வந்துள்ள சொற்களைக் குறிப்பன எல்லாம் பிற அகராதிகளில் இருந்து எடுத்தாளப்படுவன. எனவே, இவற்றில் ஒற்றுப்பிழைகள் முதலான எழுத்துப் பிழைகளும் இருக்கலாம். இவற்றை மேற்கோள் சொற்களாகக் கருதுமாறும் அவற்றிலுள்ள பிழைகளைப் பயன்படுத்த வேண்டா என்றும் பிழையற்ற சொற்களையே பயன்படுத்துமாறும் வேண்டுகிறேன்.

 

சில இடங்களில் இயல் என்றும் சில இடங்களில் இயல் சேரும் பொழுது நேர்வுகளுக்கேற்ப, –பியல், –யியல், –வியல் என்பனபோன்று முன் எழுத்துடன் இலக்கணப்படிச் சேர்ந்தும் குறிக்கப்பட்டிருக்கும். இயல் எனத் தனித்து எழுதுவதை விடப் புணர்ச்சி விதிக்கிணங்க எழுதுவதே சரி. ஆனால், முதன்முறையாகக் குறிக்கும் பொழுது புரிதல் கருதித் தனியாகக் குறிக்கப்பட்டிருக்கும்.

 

வெளிவந்துள்ள அகராதிகள், இணைய அகராதிகளில் உள்ள அச்சுப்பிழைகளைக் குறிப்பிட்டுள்ளேன். அகராதித் தொகுப்பாளர்கள், அத்தகைய பிழையான சொற்களைத் தத்தம் தொகுப்பிலிருந்து அகற்றிவிட வேண்டுகிறேன்.

 

பொதுவாகச் சொற்களைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது, என்கிறார்கள், எனப்படுகின்றது என்பனபோல், படர்க்கையில் குறிப்பிட்டிருப்பின் அவை பிறரது தொகுப்பில் உள்ளவற்றைக் குறிப்பிடுவனவாகும். மாறாகத் தன்மை ஒருமையிலோ தன்மைப் பன்மையிலோ குறித்துள்ளேன், குறித்துள்ளோம் என்பன போல் இடம் பெற்றிருப்பின் அவை என் கருத்துகளாகும்.

 

ஒலி பெயர்ப்பில் அல்லது பிற மொழியில் இல்லாமல் தமிழ்ச்சொற்களையே பயன்படுத்த வேண்டுகிறேன்.

 

  1. அஃறிணை உடம்பியியல்

 

physis  என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள்கள் இயல்பு, தோற்றம் ஆகியன.  உயிரினங்கள் வாழும் முறைமையில் உடலுறுப்புகள் இயங்கும் முறை குறித்த அறிவியல். எனவே, உடலியங்கியல் என்கின்றனர். இலங்கையில் உடற்றொழிலியல் என்கின்றனர். சுருக்கமாக நாம் உடலியல் என்றே குறிப்பிட்டுள்ளோம். a+bio இல்லா/இன்றி+உயிர் = உயிரற்ற; உயர்திணையற்ற; அஃறிணை என நாம் குறித்துள்ளோம்.

Abiophysiology

2.   அஃறிணையியல்

 

Abiology – உயிரிலி ஆய்வு, உயிரிலாப் பொருள் ஆய்வியல் எனக் கூறப்படுகிறது.

சுருக்கமாக

அஃறிணையியல் – Abiology என இங்கே தரப்பட்டுள்ளது.

( காண்க: Abiophysiology)

Abiology

3.  அகச்சுரப்பியியல்

 

Endocrinology –அகச்சுரப்பியியல்,  நாளமில்லா சுரப்பியல், நாளமில்லாச் சுரப்பியல், அகஞ்சுரப்பியல், அகச்சுரப்பியல், உட்சுரப்பியல், நாளமில் சுரப்பியியல் எனக் கூறப்படுகின்றது.

அகச்சுரப்பியல் என்றால் = அகச்சுரப்பு+இயல் என்றாகும் என அகச்சரப்பி+இயல் = அகச்சுரப்பியியல் என்கின்றனர். அகம், உள் எல்லாம் பொருள் ஒன்றுதான். இது நாளமில்லாச் சுரப்பி என்பதால்  நாளமில்லாச் சுரப்பியல் என்கின்றனர். (நாளமில்லா சுரப்பியல் எனக் குறிப்பது தவறு. நாளமில்லாச் சுரப்பியியல் எனக் குறிக்க வேண்டும்.)

இவற்றுள் சுருங்கிய வடிவான அகச்சுரப்பியல் என்பதையே நாம் பயன்படுத்தலாம்.

நாளமில்லாச் சுரப்பி என்பதைக் குறிக்கும் பிரெஞ்சு சொல்லில் இருந்து உருவானது Endocrine.

Endocrinology

4. அகப் பொருளியல்

 

Internal Economics – அகப் பொருளியல். அகச் சிக்கன நலன்கள், அகப் பொருளாதாரம். உள் பொருளாதாரம், அகப் பொருளியல், அகச்சிக்கனம், நாட்டகப் பொருளியல் எனக் கூறப்படுகின்றது.  economy என்பதைச் சிக்கனம் என்பதே சரி. எனவே, சிக்கனம் தொடர்பான இரு சொற்களும் ஏற்றவை அல்ல.  இவற்றுள் குறைந்த எழுத்துகள் உடைய அகப்பொருளியல் Internal economics என்பதையே நாம் பயன்படுத்தலாம்.

Internal Economics

5. அசீரியர் இயல்

 

அசீரியா, பண்டைய மெசப்பத்தோமியாவின் ஒரு பகுதி ஆகியவற்றில் வழங்கும் மொழி, பண்பாடு, வரலாறு முதலியவற்றை ஆராயும் துறை.

Assyriology

6.    அசைகையியல்

 

Phoronomy – இயங்கியல் எனக் கூறுகின்றனர். Dynamics என்பது இயங்கியல் எனப்படுவதால் பொருந்தாது. இயக்க இயல் –  Kinetics  உள்ளமையால் இயக்கவியல் – Phoronom என்பதும் பொருந்தாது.

அசைகையியல்  என்பதே சரியாக இருக்கும்.

Phoronomy

7.  அசைவியல்

 

kínēma என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் அசைவு.

 

Kinematics

8.  அஞ்சலட்டைஇயல்

 

deltion என்றால் எழுது பலகை, மடல்(கடிதம்) எனப்பொருள்கள். இங்கே எழுதி யனுப்பும் அஞ்ச லட்டையைக் குறிக்கிறது. அஞ்சலட்டைகளைத் திரட்டு தலும் ஆராய்தலும்பற்றிய துறை. எனவே,

அஞ்சலட்டை யியல் – Deltiology எனலாம்.

Deltiology

9.  அடிசிலியல்

 

áriston என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்குக் காலை உணவு, பகல் உணவு எனப் பொருள்கள்.

அடிசில் என்றால் உணவு எனப் பொருள். எனவே, அடிசிலியல் எனப்பட்டது.

Aristology

10.   அடுக்குப்பாறையியல்

 

Stroma என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் ஒரு பொருள் அடுக்கம். பாறைப் படுகை அடுக்கமாக உள்ளது குறித்த இயல் என்பதால் அடுக்குப் பாறையியல் எனப்பட்டது.

Stromatology

11. அடையாளவியல்

 

symbolum என்னும் இலத்தீன் சொல்லிற்கும் súmbolon என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கும் அடையாளம் எனப் பொருள். எனவே, அடையாளம் குறித்த இயல் அடையாள இயலானது.

Symbology

12. அணங்கியல்

 

fairy என்றால் தேவதை என்றும் பொருள் கொண்டு தேவதையியல் என்று சிலர் சொல்வர். ஆனால் தேவதை யியல் – Angelology எனத் தனியாக உள்ளதால் இஃதை அணங்கியல் என்பதே சரியாக இருக்கும்.

Fairyology

13.  அணலியல்

 

pogono என்னும் பழங்கிரேக்கச் சொல்லில் இருந்து உருவான சொல்லிற்குத் தாடி எனப் பொருள். தாடியுடன் தாடி உள்ள தாடை, கன்னம் முதலிய வற்றையும் பற்றிய இயல். அணல் என்றால் தமிழில் தாடியையும் கீழ்வாய், தாடை முதலிய வற்றையும் குறிக்கும். எனவே, தாடியியல் என்று குறிக்காமல் அணலியல் எனப்பட்டது.

Pogonology

14.  அணிவிசையியல்

Matrix mechanics

15. அணிக்கோவைஇயங்கியல்

Lattice dynamics

16. அணுஇயற்பியல்

Atomic physics

17. அணுஉலைஇயற்பியல்

Reactor physics

18. அணுக்கருஇயற்பியல்

Nuclear physics

19. அணுக்கருப்பொறியியல்

Nuclear Engineering

20. அணுவியல்

Atomology

 

(தொடரும்)

அறிவியல் வகைமைச் சொற்கள் 3000 நூலில் இருந்து