மழை பெய்கிறது கதிரவன் காய்கிறது. இவற்றால்
மண்ணால் புற்பூண்டுகள் பயிர் பச்சைகள் முளைத்துத் தழைக்கின்றன. இன்னோரன்ன
பல்வேறு நிகழ்ச்சிகள் இயல்பாய் நடைபெறுகின்றன. மழை எங்கிருந்து
உருவாகின்றது? காயும் கதிரவன் எவ்வாறு இயங்குகின்றது? மண்ணினிருந்தும்
புற்பூண்டுகள் எப்படித் தோன்றி வளர்கின்றன? இத்தகைய வினாக்கள் நம் மனத்துள்
எழுதுவதில்லை. நாம் இவற்றையெல்லாம் இயற்கையெனக் கூறி மேனோக்கோடு விட்டு
விடுகின்றோம். ஆனால் ஒரு விஞ்ஞானியோ இவை போன்ற நிகழ்ச்சிகளைக் கூர்ந்து
நோக்குகின்றான். நோக்கியவற்றை ஆழ்ந்த அறிவு கொண்டு ஆய்கின்றான். இங்ஙனம்
பெற்ற ஆராய்ச்சி அறிவைப் புதுமைகள் காணப் பயன்படுத்துகின்றான்.
தண்ணீர் நிரப்பிய பெருந்தொட்டியில் ஒரு
விஞ்ஞானி குளித்தார். குளிக்கும் நிலையில் அவருக்கு ஓர் உண்மை தென்பட்டது.
அவர்தான் ‘நிற்க வேறு இடம் அளிப்பின் இவ்வுலகையே ஆட்டிக் காட்டுவேன்’ என
முழங்கிய கிரேக்க விஞ்ஞானி ஆர்க்கிமிடீசு. அவர் அப்போது கண்ட உண்மைதான்
நாம் இப்போது கூறும் பொருட்செறிவுத் தத்துவம் அவர் பிறந்த ஆண்டு கி.மு.257.
அவரது இடம் சிசிலித்தீவைச் சார்ந்த சிராக்கூசு. அவரது தந்தை ஒரு கிரேக்க
வானறிஞர். அலெக்சாண்டிரியாவில் அன்று புகழ் பெற்று விளங்கிய கணிதப்
பள்ளியில் ஆர்க்கிமிடீசு பயின்றார். கணித ஆராய்ச்சியில் வாழ்நாள் முழுவதும்
ஈடுபட்டிருந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் கிரேக்கர்கள் உடல் உழைப்பை
இழிவாய்க் கருதினர். கருவிகள் மூலம் சோதனை செய்து விஞ்ஞான உண்மைகளைத்
தெளிவுபுடுத்தலை, கிரேக்கர்கள் அன்று விரும்பவில்லை. ஆயினும் ஆர்க்கிமிடிசு
தான் கண்ட உண்மைகளை வெளியிடுமுன் கருவி கொண்டு அவற்றிற்கு விளக்கம்
பெற்றார் என நம்ப இடமுண்டு. ஆனால் கருவிகளின் மூலம் எப்படித் தெளிவு
பெற்றார் என்பதை மட்டும் அவர் விளக்கவில்லை. அவர் தான் கண்ட அறிமுறை
உண்மைகளைப் பல வழிகளில் பயனுறும்படி செயற்படுத்தியும் காட்டினார்.
ஐரோ என்னும் கிரேக்க மன்னன் தனக்கு ஒரு
பொன்முடி செய்ய பொற் கொல்லன் ஒருவரிடம் வேண்டிய அளவு தங்கத்தைக்
கொடுத்தான். பொற்கொல்லனும் பொன்முடி செய்து மன்னனிடம் தந்தான். பொன்முடி
நிறுக்கப்பட்டபோது கொடுத்த தங்கத்தின் எடையளவு ஒப்ப இருந்தது. இருந்தாலும்
பொற்கொல்லன் பொருள் விரும்பிப் பொன்முடியில் வெள்ளிக் கலப்புச்
செய்திருக்கக் கூடுமென மன்னன் ஐயுற்றான் பொன்முடி தூய தங்கத்தாலேயே
செய்யப்பட்டதா என்பதை அறிய மன்னன் வழிதேடினான். வெவ்வேறு மாழை(உலோக)ப்
பொருள்கள் வெவ்வேறு எடையுள்ளன என்பது அன்று தெரிந்து உண்மைதான். ஒரு
தங்கக் கட்டி அதே அளவுள்ள வெள்ளிக் கட்டியை விட மேலான எடை கொண்டது.
இவ்வுண்மையை பயன்படுத்திப் பொன்முடியைச் சோதிக்க முடியும். ஆனால்
இவ்வழியைப் பின்பற்றினால் பொன்முடியே சிதைவுறும். ஏனெனில் முதலில்
அப்பொன்முடியை உருக்கி ஒரு சதுரக் கட்டியாய்ச் சமைக்க வேண்டும். பின்னர்
அதை அளவுள்ள தூய தங்கக் கட்டியோடு ஒப்பிட வேண்டும் இத்தூய தங்கக் கட்டியின்
எடையை விட அது குறைந்து காணப்பட்டால், வெள்ளிக் கலப்பு வெளியாகும்.
பொன்முடியையே அழித்துப் பின்னர் சோதிப்பது பயனுடைத் தன்று. எனவே உருவம்
சிதையாமல் கொடுத்த தங்கத்தாலேயே அப்பொன்முடி செய்யப்பட்டதா என்பதைக்
கண்டுபிடிக்க வேண்டும். இப்பொறுப்பை மன்னன் ஆர்க்கிமிடிசிடம் ஒப்படைத்தான்.
இம்முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது தான்
ஆர்க்கிமிடிசு பொருட் செறிவுத் தத்துவத்தைக் கண்டதாகக் கூறப்படுகிறது.
ஆர்க்கிமிடிசு குளிக்கத் தண்ணீர்த் தொட்டிக்குள் இறங்கினார். தண்ணீர்
மட்டம் சற்று உயர்ந்ததைக் கண்ணுற்றார். தொட்டிக்குள் உடல் மேன் மேலும்
முழகுங்கால் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வந்தது. இவ்வாறு வருதல்
இயற்கைதான். இன்று இதை நாமே செய்து கண்கூடாகப் பார்க்கலாம். இதில் எந்தப்
புதுமையும் நாம் காணவில்லை. ஆனால் ஆர்க்கமிடிசு இதிலிருந்துதான் ஒழுங்கற்ற
உருவங்களின் கன அளவைக் காணும் முறையைக் கண்டு பிடித்தார். பொன்முடியைச்
சோதிக்க இம்முறையைக் கையாண்டார். ஒரு பாத்திரம் நிறையத் தண்ணீர் ஊற்றினார்.
பொன்முடியை இத்தண்ணீரில் முழுதும் மூழ்கும்படி பக்குவமாகத் தொங்க
விட்டார். வழிந்து வரும் தண்ணீரை அளந்தார். இத்தண்ணீரின் கன அளவும்
பொன்முடியின் கன அளவும் ஒன்றுதான் என்பது தெற்றென விளங்குகின்றதன்றோ!
இப்போது எளிதில் பொன்முடியைச் சோதிக்கலாம். வழிந்து வந்த தண்ணீரின் கன
அளவுள்ள தூய தங்கம் எடை போடப்பட்டது. இவ்வெடையும் பொன் முடி எடையும்
ஒன்றாய் அமைய வேண்டுமன்றோ! ஆனால் அவை ஒன்றாய் அமையவில்லை. இவ்வாறு திருட்டு
வெளிப்பட்டுப் பொற்கொல்லன் தூக்கிலிடப்பட்டான். பொறியியலாளர்களும்
விஞ்ஞானிகளும் ஒரு பொருளை அதே கன அளவுள்ள தண்ணீரோடு ஒப்பிட மேற்கண்ட
முறையைக் கையாண்டனர். ஒரு பொருளின் எடைக்கும் அதே கன அளவுள்ள தண்ணீரின்
எடைக்கும் உள்ள விகிதத்தை செறி எண் என வழங்குகின்றனர். ஏறத்தாழத்
தங்கத்தின் செறிவு எண் 20; வெள்ளியின் செறிவு எண்10. அதாவது,
ஒரு கன சென்டிமீட்டர் தங்கத்தின் எடை = செறிவு எண் 20
ஒரு கன சென்டிமீட்டர் தண்ணீரின் எடை
ஒரு கன சென்டி மீட்டர் வெள்ளியின் எடை = செறிவு எண் 10
ஒரு கன சென்டி மீட்டர் தண்ணீரின் எடை
(ஒரு கன சென்டி மீட்டர் தண்ணீரின் எடை 1 கிராம் ஆகும்.)
மேற்கூறிய முறையை ஒட்டியே மிதக்கும்
தத்துவமும் அமைந்துள்ளது. நரம் கிணற்றில் இறங்கி மூழ்கிக் குளிக்கும்போது
சிறிது மேலும் தண்ணீருள் எளிதாக நீந்திச் செல்லுகின்றோம். மற்றும்
மரக்கட்டை தண்ணீருள் முழுவதும் அமிழாமல் மிதப்பதைக் காண்கின்றோம். இவை
பற்றி நாம் சிறிதும் சிந்திப்பதில்லை. ஆனால் ஆர்க்கிமிடிசு இவற்றை
ஆராய்ந்து தான் படகு, கப்பல் முதலானவை மிதந்து செல்லும் அடிப்படைத்
தத்துவத்தைக் கண்டுபிடித்தார். ஒரு பொருள் தண்ணீருள் அமிழும் போது ஓரளவு
தண்ணீரை விலக்கிச் செல்கிறது. பொருள் முழுவதும் அமிழுங்கால் அதன் கன அளவு
எவ்வளவோ அவ்வளவு தண்ணீர் விலக்கம் உறுகிறது. தண்ணீருள் ஆழ்ந்துள்ள போது
பொருளின் எடை ஓரளவு குறைவாக இருக்கும்.
(தொடரும்)
- குறள்நெறி சித்திரை 19,1995 / மே 05,.1964
No comments:
Post a Comment