Monday, October 27, 2025

வெருளி நோய்கள் 594-598: இலக்குவனார் திருவள்ளுவன்

      28 October 2025      கரமுதல



(வெருளி நோய்கள் 589-593: தொடர்ச்சி)

கடமான் (moose) பற்றிய பேரச்சம் கடமான் வெருளி.

அல்செசு(Alces) என்பது காட்டுமானின் அறிவியல் பெயராகும். ஐரோப்பாவில் இலத்தீன் மூலச் சொல்லான எல்கு(elk) என அழைக்கப்பெறுகிறது. எல்கு என்பது அல்கி என மருவியிருக்கிறது.

00

கடமை ஆற்றாமல் அஞ்சி விலக்கி வைத்துக் கடமை தவறுவது, கடமை (வெருளி.

தனக்குரிய கடமையை ஆற்ற முடியாது என்று சோர்ந்து இருப்பதும் மிகுதியாக உள்ளது எப்படிச் செயலாற்ற முடியும் என்று கலங்கி நிற்பதும் தன்னம்பிக்கையின்றி அக்கடமையை விலக்கி வைப்பதும் பொறுப்பைத் தவறவிடுவது அல்லது தவற விட நேரிடுவது குறித்துக் கலைப்படுவதும் சிலரின் பழக்கம்.

“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” என்னும் ‘தெய்வத்தாய்’ திரைப்படத்தில் வரும் வாலியின் பாடலில்

வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்

கோழை குணம் மாற்று தோழா

நாளை உயிர் போகும் இன்று போனாலும்

கொள்கை நிறைவேற்று தோழா

…………    ……………..     …………

கடமை அது கடமை

கடமை அது கடமை

என வரும். இவ்வாறு கடமை உணர்வு உள்ளவர்களும் உள்ளனர். மாறாகக் கடமை தவறுவோரும் உள்ளனர்.

பொறுப்புவெருளி(Hypegiaphobia/Hypengyophobia)யும் இத்தகையதே!

00

கடல் உயிரிகளைப் பற்றிய காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் கடலுயிரி வெருளி.

கிரேக்கத்தில் thalassa என்பது கடலைக் குறிக்கும் சொல். இங்கே கடல்வாழ் உயிரிகளையும் குறிக்கிறது.

          00     

கடல் நண்டு மீதான அளவுகடந்த பேரச்சம் கடல் நண்டு வெருளி.

இயல்பான நண்டுகள்மீது அச்சம் கொள்ளாதவர்களுக்கும் கடல் நண்டுகள் மீது பேரச்சம் வருவதுண்டு. 

காண்க: நண்டு வெருளி(Kavouriphobia/Kabourophobia)

00

கடல் வானூர்தி(seaplane) மீதான அளவு கடந்த பேரச்சம் கடல் வானூர்தி வெருளி.

கடல் பயணங்கள் குறித்தும் வான் பயணங்கள் குறித்தும் பேரச்சம் உள்ளவர்களுக்குக் கடல் வானூர்திமீதும் பேரச்சம் வருகிறது. வானூர்தி நேர்ச்சி நேர்ந்தால் மண்ணில் விழுந்து பிழைக்க வாய்ப்புள்ளது. கடலில் விழுந்தால் பிழைக்க வாய்ப்பில்லையே எனக் கவலைப்பட்டு அச்சம் கொள்வோரும் உள்ளனர். நம்பிக்கையுடனும்மகிழ்ச்சியுடனும் பயணம் மேற்கொண்டால் பேரச்சத்திற்கு வாய்ப்பில்லை.

00

(தொடரும்)

Sunday, October 26, 2025

வெருளி நோய்கள் 589-593: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 584-588: தொடர்ச்சி)

ஓவியம் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஓவிய வெருளி.
சிலர் எந்தவகை ஓவியமாக இருந்தாலும் பேரச்சம் கொள்வர்.சிலர், வரலாற்று ஓவியம், காதல் ஓவியம், சுற்றுலா இட ஓவியம், மக்கள் ஓவியம், விலங்கினங்கள் ஓவியம், பறவைகள் ஓவியம், தொன்மக்கதை ஓவியம், அச்சுறுத்தும் உருவ ஓவியம் எனக் குறிப்பிட்ட சிலவகை ஓவியங்கள் மீது மட்டும் பேரச்சம் கொள்பவர்களாக இருப்பர்.
00
   கசப்புச் சுவை குறித்த வரம்பற்ற பேரச்சம் கசப்பு வெருளி.
நரம்புகளை வலுப்படுத்துவபதாகவும் நோய் எதிர்ப்பு ஆற்றல் உடையதாகவும் கசப்புச் சுவை உள்ளது. இதை அறிந்திருந்தும் கசப்புச் சுவையுடைய உணவுப் பொருள்கள் மீது வெறுப்பும் பேரச்சமும் கொள்வோரே மிகுதி.
00
கடத்தல் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கடத்தல் வெருளி.
பொதுவாகக் குடும்ப உறுப்பினர்கள் அல்லது அறிந்தவர்களால் கடத்தப்படுவதே மிகுதி. இதனால், பணத்திற்காக அல்லது காதலினால் அல்லது காமத்தினால் கடத்தப்படுவோம், கடத்தப்பட்டால் உயிர் பறிக்கப்படும் அல்லது உடலுறுப்புகள் வெட்டப்படும் அல்லது கண்கள் பறிக்கப்படும்அல்லது ஒழுக்கம் சிதைக்கப்படும்  என்று கடத்தப்படாத பொழுதுே தேவையற்றுப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர். இருட்டில் செல்லவே இவர்கள அஞ்சுவர். குழந்தைகள் வீட்டைவிட்டு ஓடிப்போதல், வழி தவறுதல் போன்றவற்றால் காணாமல் போனாலும் கடத்தப்பட்டதாக எண்ணிக் குடும்பத்தினர் அஞ்சுவர்.
00
 592. கடந்தகால வெருளி – Paleophobia/Nostophobia(1)
கடந்த காலம் குறித்த அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் கடந்தகால வெருளி.
கடந்தகாலத் துன்பங்கள் மீண்டும் வருமோ என்று பேரச்சம் கொள்கின்றனர்.
வீட்டுத் துன்பங்களை எண்ணிப் படைக்குப் பணியாற்ற செல்பவர்கள், மீண்டும் வீடு திரும்பும் பொழுது கடந்தகால எண்ணங்களால் பேரச்சம் கொள்வதால் இது வீடு திரும்பல் வெருளி அல்லது இல்ல வெருளி [Nostophobia (2)] என்றும் அழைக்கப்டுகிறது
palaios என்னும் கிரேக்கச் சொல்லிற்கு பழைய எனப் பொருள்.
00
சாலை கடக்குமிடம்/குறுக்கு நடைபாதை(crosswalk) குறித்த வரம்பற்ற பேரச்சம் கடப்பு வெருளி.
சாலை நேர்ச்சிகள்/விபத்துகள், ஊர்திகள் மோதல், போன்றவற்றால் சாலையைக் கடக்கவே பலர் அஞ்சுவர். சாலைவிதிகளைப் பின்பற்றி விழிப்புடன் சாலையைக் கடக்காமல் தேவையற்ற அச்சத்திலேயே உழல்வர். இவ்வாறு சாலையைக் கடப்பதில் காரணமின்றி அச்சம் ஏற்படுவதே கடப்பு வெருளி.
சாலையைக் கடக்க விளக்கு ஒளி மாறும் வரை காத்திருந்து அவ்வாறு கடப்பதற்கான ஒளிவிளக்கு வந்த பின்னரும் யாருமில்லாவிட்டால் கடப்பதற்கு அஞ்சுவர். உடன் யாரும் இருந்தால் அவர்களுடன் மட்டுமே கடந்து செல்வர்.
பார்வையற்றவர்கள்  பழகிய நாய் மூலம் சாலையைக் கடக்கின்றனர். இப்பொழுது எந்திரன் மூலமும் சாலையைக் கடக்கின்றனர். ஆனால் எல்லாருக்கும் இவ்வாறு பயன்படுத்தும் வசதி இருக்காது அல்லவா? எனவே தேவையற்ற அச்சம் கொள்ளாமல் தேவையான விழிப்புணர்வு கொண்டு சாலையைக் கடக்கப் பழக வேண்டும்.
கடக்குமிடம் தொடர்பான கடக்குமிட வெருளியும் சாலையைக் கடப்பது குறித்த பேரச்சமான கடப்பு வெருளியும் ஒரே பொருள் தன்மைத்து என்பதால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
dromos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் ஓடுதடம்.
‘gyrus’  என்பது சாலைகள் சந்திக்கும் திருப்பத்தைக் குறிக்கிறது. A என்பது எதிர்ச்சொல்லாக்கப்பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே Agyrophobia சாலை திருப்பத்தைக் கடக்க இயலாமல் அஞ்சுவதைக் குறிக்கிறது. அஃதாவது Agyiophobia என்றால் அகன்ற சாலையைக் கடப்பதற்கான வெருளி என்று பொருள். அடிப்படையில் ஒன்று என்பதால் இணைத்தே பார்க்கலாம்.
00 

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

வெருளி அறிவியல் 2/5

Saturday, October 25, 2025

வெருளி நோய்கள் 584-588: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 579-583: தொடர்ச்சி)

ஓநாய்/ஓநாய்மனிதன்/ஓநாயன் (werewolf)பற்றிய பெருங் கவலையும் பேரச்சமும் ஓநாயன் வெருளி.

ஓநாய் குறித்த பேரச்சத்தையும் இவ்வகையில்தான் சேர்த்துள்ளனர்.

ஓநாய்போன்ற மனிதன் எனவே, ஓநாயன் எனப்படுகிறான்.

lupus என்னும் இலத்தீன் சொல்லின் பொருளும் lykos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருளும் ஓநாய்.

00

புனைவுரு  ஓமர் (Homer Simpson) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஓமர் வெருளி.

அமெரிக்க அசைவூட்டத் தொலைக்காட்சித் தொடரான ​​ சிம்பசன்னின் முதன்மைப் பாத்திரம் ஓமர் சே சிம்பசன்.00

கழிவறையில் இருக்கும் பொழுது மேல் அலுவலர் உள்ளே நுழைவதான ஒலி கேட்கும் பொழுது எவ்வாறு வெளியேறுவது என அளவுகடந்த பேரச்சம் கொள்வது ஓய்வறை நீங்கு வெருளி. மேல் அலுவலர் வெளியேறும் வரை கழிவறைக்குள்ளேயே இருப்பர்.

கழிவறை நாற்றம், துப்புரவின்மை போன்றவற்றிற்குக் காரணமாகத் தன்னை நினைப்பர் என்ற கவலையால் வரும் பேரச்சமே இது.

கழிவறையை இடக்கர் அடக்கலாகக் குறிக்க வேண்டும் என்பதற்காகப் பிரெஞ்சுச் சொல்லான ஆயத்த அறை அல்லது ஒப்படனை அறை(toilet room) பயன்படுத்தப்பட்டது. பிரித்தானியர்  வாய்ப்பு நல அறை(convenience room) எனப்பயன்படுத்தினர். வட அமெரிக்கர்கள் ஓய்வறை (rest room) என்று பயன்படுத்தினர். இச்சொல்லே இப்போது நிலைத்து விட்டது.

தமிழில் மலங்கழித்தல் என்று சொல்லாமல், ‘கொல்லைக்குப் போதல்’ என்றனர். அதுவும் இடக்கர் அடக்கல் என்னும் நிலை மாறி வெளிப்படைச் சொல்லாக மாறியது. பின்னர், ஆலந்து மொழிச் சொல்லான கக்கூசு பயன்படுத்தப் பெற்றது. தமிழ்ச்சொல்லாக இல்லை என்பதால் நீரடி என்பது பயன்படுத்தப் பெற்றது. இப்போது தமிழ்நாட்டிலும் பொதுவிடக்கழிப்பறை ஓய்வறை என்னும் சொல்லால் குறிக்கப் பெறுகிறது.

இலத்தீனில் Ab என்றால் விலகி இருத்தல் (அறையை விட்டு நீங்கி யிருத்தல்)  cellula என்றால், சிற்றறை என்று பொருள்.

காண்க: கழிவறை வெருளி

00

ஓய்விருக்கை(couche) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஓய்விருக்கை வெருளி

Lecho என்னும்இசுபானிய மொழிச்சொல் பொருள் படுக்கை. இதன் பிரெஞ்சு பொருள் couche என்பதாகும். இதன் பொருள் படுத்து இருத்தல் / கீழேஇருத்தல் / உறங்குதல் எனப் பொருள்கள்.

00

(தொடரும்)

Friday, October 24, 2025

வெருளி நோய்கள் 579-583: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 574-578: தொடர்ச்சி)

ஓக்கலகோமா மாநிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஓக்கலகோமா வெருளி.

ஓக்கலகோமா மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் 46 ஆவதாக 1907 இல் இணைந்த மாநிலம். இதன் தலைநகரம்  ஓக்கலகோமா நகரம்.
00
ஓங்கில் /கடற்பன்றி(dolphin)பற்றிய அளவுகடந்த பேரச்சம் ஓங்கில் வெருளி.
ஓங்கில் / கடற்பன்றி என்பது திமிங்கில இனத்தைச் சேர்ந்தது.
Dolphin/தால்பின் என்பதைத் தமிழில் கடற்பன்றி என்றும் கூறுகின்றனர். கடற்பன்றி இனத்திற்கு நெருக்கமான இனம் என்பதால் அவ்வாறு கூறுகின்றனர். எனினும் வேறுபடுத்த ஓங்கில் என்று குறிக்கின்றனர்.
00
ஓடுகள் (tiles) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஓடுகள் வெருளி.
தரை ஓடுகள் வழுக்கிவிட்டுக் காயம் ஏற்படுத்தும், தசைப்பிடிப்பு, எலும்பு முறிவு முதலான வேறு நலிவுகளை ஏற்படுத்திவிடும் என இத்தகையோர் பேரச்சம் கொள்கின்றனர்.
00
ஓடுதல் குறித்த காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் ஓட்ட வெருளி.
Treximo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் ஓட்டம்.
00
வாடகை ஊர்தி ஓட்டுநர் மீதான அளவு கடந்த பேரச்சம் (வாடகை) ஓட்டுநர் வெருளி.
ஓட்டுநர் சிலரின் எரிச்சல் மூட்டும் பேச்சு, அவர்கள் வன்முறையில் ஈடுபடுவார்களோ என்ற  ஐயம், சிலரின் தோற்றம், வாடகை ஊர்தியில் கடத்தப்பட்ட செய்திகளால் ஏற்படும் கலக்கம் போன்றவற்றால் ஏற்படும் தேவையற்ற பேரச்சம் மனப்பதற்றம் முதலியவற்றை உருவாக்குகிறது.
00

(தொடரும்)

வெருளி நோய்கள் 574-578: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 569-573: தொடர்ச்சி)

தண்டனை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஒறுப்பு வெருளி.
குறைகூறப்படுவோம், தண்டிக்கப்படுவோம், கழி, கம்பு, தடி, கம்பி, கோல், மந்திரக்கோல்  போன்றவற்றால் அடிக்கப்படுவோம் என்றெல்லாம் காரணமின்றி அச்சம் கொள்வர். குற்றங்கள் செய்து விட்டு அஞ்சாதிருப்பதுபோல் வெளியே காட்டிக்கொண்டு தண்டனை பற்றிய பேரச்சம்  கொள்வோர் உள்ளனர். பெரும் பெருங் குற்றங்கள் புரிந்து விட்டுச் செல்வாக்கால் தப்பித்து விட்டு அச்சம் இன்றி இருப்போரும் உள்ளனர்.
குற்றங்கள் செய்து விட்டு அஞ்சாதிருப்பதுபோல் வெளியே காட்டிக்கொண்டு சிறைத் தண்டனை பற்றிய பேரச்சம்  கொள்வோர் உள்ளனர். பெரும் பெருங் குற்றங்கள் புரிந்து விட்டுச் செல்வாக்கால் தப்பித்து விட்டு அச்சம் இன்றி இருப்போரும் உள்ளனர்.
ஒறுப்பு வெருளி என்பது குற்றங்குறை கூறப்படுவது, திறனாய்வு(விமரிசனம்)குறித்துப் பெருங்கவலையும் பேரச்சமும் கொள்வதையும் குறிக்கும். அரசியல் வாதிகள் பலருக்கும் குறிப்பாக ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு இவ்வெருளி உள்ளது. இதன்அடையாம்தான் அரசு தேவையற்ற அவதூறு வழக்குகளைத் தொடுப்பது. செவிகைப்பச் சொற்பொறுக்கும் – வெறுக்கத்தகும் சொற்களையும் பொறுத்துக் கொள்ளும் – பண்பு இருந்தால் குறைகளைக் களையும் செயல்பாடு வருமே தவிரப் பேரச்சம் வராது.
rhabdo என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் கழி, கம்பு, தடி, கம்பி, கோல் முதலான பொருள்கள்.
poin என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தண்டனை.
mastigo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கசையடி அல்லது பிரம்படி.
00
 ஒற்றைக் கொம்பன்(unicorn) பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் ஒற்றைக் கொம்பன் வெருளி.
ஒற்றைக் கொம்பன்  – ஒற்றைக் கொம்புள்ள குதிரை போன்ற வடிவுள்ள விலங்கு. –
00
ஒற்றைப்படை எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒற்றைப்படை  வெருளி.
impar, numerus ஆகிய இலத்தீன் சொற்கள் இணைந்து ஒற்றைப்படை எண் எனப் பொருள்.
00
ஒன்பதன்கூறுகள் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒன்பதன்கூறு வெருளி.+ ஒன்பதாம் எண் வெருளி உள்ளவர்களுக்கு ஒன்பதன்கூறு வெருளி வர வாய்ப்புள்ளது.
00
புனைவுரு ஓகி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஓகி வெருளி.
ஓகி என்னும் பூனை   ஃபிரெஞ்சு தொலைக்காட்சி அசைவூட்டத் தொடர் ஒன்றில் இடம் பெறும் புனைவுரு பாத்திரம்.
00 

Wednesday, October 22, 2025

வெருளி நோய்கள் 569-573: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 564-568: தொடர்ச்சி)

569. ஒளி வீச்சு வெருளி – Selaphobia

ஒளி வீச்சு குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒளி வீச்சு வெருளி.

கால் கை வலிப்பு உள்ளவர்களும் ஒற்றைத் தலைவலி உள்ளவர்களும் பெரிதும் ஒளி வெருளி உள்ளவர்களாக உள்ளனர். இத்தகையோர் இரவில் வெளியே செல்வதையும் இரவு மன்றங்களுக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

selas என்னும் கிரேக்கச் சொல்லுக்கு ஒளி எனப் பொருள்.

காண்க: ஒளி வெருளி (Photophobia)

00

570. ஒளி வெருளி-Photo Phobia 

வெளிச்சம் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம்  ஒளி வெருளி.

ஒளி வெருளி (Photophobia) என்பது பயிரியலில், ஒளியைக் கண்டு அஞ்சி ஒளி மறைவிடத்திற்கு அல்லது ஒளி இல்லா இடத்திற்குச் சென்று தங்கும் பூச்சிகளின் அல்லது பிற விலங்குகளின் இயல்பினை-ஒளிஎதிர் துலக்கத்தைக் குறிக்கும்.

கவிஞர் கண்ணதாசன், “எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்” என்ற கருப்புப்பணத் திரைப்படப்பாடலில்

“இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார்”

எனத் தவறான தொழில் புரிவோர் ஒளிக்கு அஞ்சுவதாகக் குறிப்பிட்டிருப்பார்.  மறைவான தொழில் புரிவோருக்கு ஒளி பகையாகிறது.

எனினும் ஒளியைக்கண்டு கூசுதல், ஒளியினால் கண்கள் பாதிப்புறும் என அஞ்சுதல். என ஒளி சார்ந்த கவலைகளால் ஒளி வெருளி உருவாகிறது.

சூரிய ஒளி வெருளி(Heliophobia)யும் ஒளி வெருளி போன்றதே.

Photo என்னும் கிரேக்கச் சொல்லிற்கு ஒளி என்றுதான் பொருள்.     Photograph  என்பதன் சுருக்கமாக Photo என்று சொன்னாலும் இங்கே ஒளியைத்தான் குறிக்கிறது.

00

571. ஒளியூடிப் பொருள் வெருளி – Diafanophobia

ஒளியூடிப் பொருள் / தெளி தெரி பொருள்(transparent object)  குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒளியூடிப் பொருள் வெருளி.

Diafano என்னும் கிரேக்கச் சொல்லிற்கு ஒளிபுகு/ஒளியூடி எனப் பொருள்.

00

572. ஒளிர் விளக்கு வெருளி – Fakosphobia

ஒளிர் விளக்கு( flashlight) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஒளிர் விளக்கு வெருளி.

காண்க: ஒளி வீச்சு வெருளி(Selaphobia)

00

573. ஒளிர்வு வெருளி-Photoaugliaphobia

ஒளிர்வது குறித்த தேவையற்ற பெருங்கவலையும் பேரச்சமுமே ஒளிர்வு வெருளி.

சூரிய ஒளி வெருளி(Heliophobia)யும் ஒரு வகையில் ஒளி வெருளி அல்லது ஒளிர்வு வெருளியே!

ஒளி என்னும் பொருளுடைய phōs என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து வந்ததே Photo  என்னும் சொல்

aug என்னும் கிரேக்கச் சொல்லிற்கு மிகுதிப்பாடு என்று பொருள். ஒளி மிகுதியாகிப் பளபளப்பதை – ஒளிர்வதை  Photoauglia குறிப்பிடுகிறது.

00

(தொடரும்)