Sunday, July 6, 2014

நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும் : ச.பாலமுருகன்

நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும் : ச.பாலமுருகன்

http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/06/days-of-the-hero01-600x221.jpg
 அறிமுகம்
   உலகில் உள்ள தொன்மைச் சமூகங்களில் ஒன்றாகவும், மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவும் இயங்கிவரும் தமிழ் மன்பதையினர் தலைசிறந்த இலக்கியம், கலை, பண்பாட்டு, கோயில் கட்டடக்கலை, வானவியல் துறைகளில் அறிவு பெற்றவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். தமிழர்களின் சிறப்பு உலகத்திற்கு தெரிவித்து நிற்பன செல்வியல் தன்மை வாய்ந்த இலக்கியங்களும் வரலாற்று நினைவுச்சின்னங்களும் ஆகும். ஆயிரக்கணக்கான வரலாற்று நினைவுச்சின்னங்கள் நம் தமிழ்நாட்டில் விரவிக்கிடக்கின்றன. அவை ஒரு சில மட்டுமே அரசாலும் ஆர்வலர்களாலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நடுகற்களும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவிக்கிடக்கின்றன. வரலாற்று ஆர்வலர்கள் தற்போது நடுகற்கள் பற்றிய தரவுகளைத் திரட்டவும், ஆய்வு செய்யவும் முன்னெப்போதும் இல்லாத அளவில் முயன்று வருகின்றனர். இந்நிலையில் ஊர்தோறும் உள்ள நடுகற்களின் அமைவிடம், அவற்றின் தற்போதைய நிலை அவற்றைப் பாதுகாக்கவும் பேணவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேவை ஏற்பட்டிருக்கிறது. அதை எவ்வாறு செய்யலாம் எனக் கருத்துகளைப் பதிவதே இக்கட்டுரையின் மையக்கருத்தாகும்.
நடுகற்களின் அமைவிடம்
  நடுகற்கள் தமிழ்நாட்டில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகின்றன. herostone01தொல்லியல் துறையில் ஓரளவிற்கு இதில் உள்ள நடுகற்களை அடையாளம் கண்டு இனம் பிரித்து அவற்றில் உள்ள கல்வெட்டுகளைப் படித்தறிந்து அதன் தகவல்களை, புத்தகங்கள், இதழ்கள், கட்டுரைகளாக வெளியிட்டு உள்ளனர். ஆனால் தொல்லியல் துறையினரால் படிக்கப்படாத, கண்டறியப்படாத பல ஆயிரம் நடுகற்கள் இன்னும் உள்ளன. இவை வரலாற்று ஆய்வாளர்கள், கல்லூரி மாணவர்கள் முதலானவர்களால் கண்டறியப்பட்டு அவற்றைப்பற்றிய குறிப்புகள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. இன்னும் சில இடங்களில் நடுகற்களை, தொல்லியல் துறையினர், வரலாற்று ஆய்வாளர்கள் கண்ணில் படாமல் உள்ளூர் மக்களால் ஏதோ ஒரு தெய்வம் என்ற அளவில் புரிந்து கொள்ளப்பட்டு அதைப் பேணி வருகின்றனர். நடுகற்களில் உள்ள தகவல்கள் பேரரசுகள் பற்றியும் சிற்றறசுகள் பற்றியும் செய்திகள் ஓரளவிற்குத் தெரிந்து கொள்ளப்பட்டாலும், நடுகற்கள் இறந்துபட்ட வீரனின் பெயர் இறந்தமைக்கான செய்தி போன்றவை உள்ளூர் வராலாற்றுச் செய்தியாகும். அதாவது தமிழ்நாட்டில் உள்ள சிற்றூர்களுக்கான வரலாற்றுக் கருவூலமாக நடுகற்கள் திகழ்கின்றன. ஓர் ஊரில் நடுகல் இருந்தால் அவ்வூர் எந்தவிதத்திலோ வரலாற்று முதன்மை பெற இயலும். அந்நடுகற்கள் சொல்லும் செய்தியும், அதன் அமைப்பும், அதன் இருப்பிடமும், உள்ளூர் மக்களின் நம்பிக்கையும் அவ்வூரின் அல்லது அப்பகுதியின் வரலாற்றுக்கு முதன்மையான மூல ஆதாரமாகும்.
 எடுத்துக்காட்டிற்கு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவிகாபுரம் என்ற ஊரில் உள்ள 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெரியநாயகி அம்மன் கோயில் பற்றிக் கூறலாம். ஆனால் அவ்வூரிலும் அதன் அருகில் உள்ள ஊர்களிலும் வெவ்வேறு நூற்றாண்டுகளைச் சேர்ந்த 20 நடுகற்கள் உள்ளன. இவை அந்தப் பகுதியின் வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவுகின்றன.
   நடுகற்கள் பெரும்பாலும்   ஊரின் வெளிப்புறமாக அமைந்துள்ள வயல்களில், குளத்தின் கரையில், ஏரியின் கரையில் அமைந்துள்ளன. இந்நடுகற்கள் அக்காலத்தில் பெருமளவில் நீர்நிலைகளை நிறுவியது பற்றியும் அவற்றைப் பாதுகாக்க வீரர்கள் அமர்த்தப்பட்டனர் என்றும் அவ்வாறு அமர்த்தப்பட்ட வீரர்கள் எக்காரணத்தினாலோ இறந்து போனால் அவர்களின் நினைவாக நடுகற்கள் அமைக்கப்பட்டன என்றும் தெரிவிக்கின்றன. இவை தவிர ஆநிரை மீட்க போராடி இறந்த வீரன் நடுகல், சதிக்கல், வேடியப்பன் கல், நவகண்டம் நடுகல், தொரு நடுகல், புலிகுத்திப்பட்டான் நடுகல் எனப் பலவகையான உள்ளன.
இன்றைய நிலை
    நடுகற்கள் அக்காலத்தில் எந்த இடத்தில் நடப்பட்டதோ அதே இடத்தில் சில நடுகற்கள் இல்லை. வேளாண்மை அல்லது வேறு சில தேவைக்காக அவை பெயர்த்து எடுக்கப்பட்டு வேறு இடத்தில் நடப்பட்டுள்ளன. சில நடுகற்கள் பெயர்த்து எடுத்து அருகில் உள்ள ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. சில பெயர்த்து எடுத்து சாலையின் அருகில்,(File:HS-07.jpg) ஏதோ ஓர் இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
      தமிழ்நாட்டில் தற்போது பெருகிவரும் வணிக மயச் சூழ்நிலையால்   வேளாண்மை, குடிசைத் தொழில், சிறு தொழில், கைத்தறி போன்றவை நலிவடைந்து வருகின்றன. அதே சமயம், மனைவணிகம் (real estate) என்ற பெயரில் விளைநிலங்களை வீட்டுமனைகளாக விற்பனை செய்வது தொடர்ந்து அச்சுறுத்தும் வண்ணம் அதிகரித்து வருகின்றது. இதனால் வயல் வெளியில் உள்ள சிறு கோயில்கள், பழைய மண்டபங்கள், நினைவுச்சின்னங்கள், நடுகற்கள் ஆகியன இருந்த இடம் சுவடு தெரியாமல் போகும் நிலையில் உள்ளன.
  சான்றாக, திருவண்ணாமலை மாவட்ட தேவிகாபுரம் ஊரில் 2010 ஆம் ஆண்டு வயலில் இருந்த நடுகல் 2012 ஆண்டு அவ்வயல் வீட்டு மனைகளாக விற்பனை செய்யப்பட்டதால் இப்போது அந்நடுகல் ஒரு தெருவின் மையத்தில் உள்ளது. தொடர்ந்து வீடுகட்டி குடியேற்றப்பட்டால் இந்நடுகல் காணாமல் போய்விடும் நிலை ஏற்படும். மற்றொன்று 2011 ஆண்டு குளத்தின் அருகில் மணல் தோண்டும் போது எடுத்து வீசப்பட்டிருந்தது.    (File:HS-06.jpg)
 அது தற்போது (2014 இல் ) எங்குள்ளது என்று தெரியவில்லை. இது போல் பல நடுகற்கள் தற்போது பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. ஏரி, குளம் போன்றவையும் தற்போது அதிக அளவு கவரப்பட்டு(ஆக்கிரமிக்கப்பட்டு) வரப்படுவதால் அப்பகுதியில் உள்ள நடுகற்களும் காணாமல் போகும் நிலையில் உள்ளன. இந்நிலை தொடரும் போது ஒவ்வொரு நடுகல்லும் காலத்தால் அழிந்து போகும் நிலை ஏற்படும்; வரலாற்று ஆர்வலர்களுக்கு பேரிழப்பு ஏற்படும்.
ச.பாலமுருகன்
துணை வட்டாட்சியர்
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்,
திருவண்ணாமலை
கைபேசி – 9047578421
மின்வரி  balu_606902@yahoo.com
sa.balamurugan01(தொடரும்)

 

Wednesday, May 7, 2014

ஆர்க்கிமிடிசு 2 – தி.சி.கருப்பண்ணன் : Archimidese by T.C.Karuppannan, akaramuthala

ஆர்க்கிமிடிசு 2 – தி.சி.கருப்பண்ணன், கலை.மு.

archimides03

  விலக்கம் உற்ற தண்ணீரின் எடை எவ்வளவோ, அவ்வளவு குறைவு பொருளின் எடையிற் காணும். ஏனெனில் தண்ணீருள் அமிழும் பொருளை தண்ணீர் எப்போதும் மேல் நோக்கித் தள்ளுகிறது. இவ்வாறு கீழே அமிழும் பொருளை மேல் நோக்கித் தள்ளும் தண்ணீரின் ஆற்றல், பொருளால் விலக்கம் உற்ற தண்ணீரின் எடைக்கு ஒப்பாகும் எடுத்துக்காட்டாக, ஓர் இரும்புத் துண்டு 4 கிலோ கிராம் எடையுள்ளதாகக் கொள்வோம். இது தண்ணீருள் முழுதும் மூழ்கும்படி தொங்கவிடப்பட்டால் ஏறத்தாழ அரைகிலோகிராம் எடையுள்ள தண்ணீர் விலக்கப்படும். எனவே தண்ணீருக்குள் அதன் எடை 8 கிலோ கிராம் தான்.
  மேற்கூறிய அடிப்படையிற்றான் நாம் தண்ணீரில் எளிதாக மிதந்து நீந்துகின்றோம். நாம் நீந்தும்போது நமது உடலால் விலக்கம் உறும் தண்ணீரின் எடை ஏறத்தாழ நமது எடைக்கு ஒப்பாகும். நம் எடைக்கு ஒப்பான ஆற்றல் கொண்டு தண்ணீர் நம்மை மேல் நோக்கித் தள்ளுகிறது. எனவே தான் தண்ணீரினுள் நமக்கு எடையே இல்லாததுபோல் புலப்படுகின்றது. அதனாற்றான் தண்ணீருக்கு மேலே தலையை வைத்து நீந்துவதை விட, உடல், தலையாவும் தண்ணீருள் ஆழ்ந்த நிலையில் நீந்துவது எளிமையாக இருக்கிறது. தலையும் சேர்ந்து தண்ணீருள் அமிழும்போது விலக்கம் உறும் தண்ணீரின் அளவும் பெரிதாகிறது. அதனால் முன்னைய நிலையை விடப் பின்னைய நிலையில் தண்ணீரின் மேல் நோக்கித் தள்ளும் ஆற்றலும் பெரிதாகிறது. ஒரு மரக்கட்டை அதன் எடை என்னவோ அவ்வெடையுள்ள தண்ணீர் விலக்கம் உற்றதும் மிதத்தல் பெறுகிறது. இவ்வாறே படகும் கப்பலும் மிதக்கின்றன. நீர் மூழ்கிக் கப்பலும் ஆர்க்கிமிடிசின் இத்தத்துவ அடிப்படையிற்றான் இயங்குகிறது. ஆர்க்கிமிடிசு கணிதம் அறிவியல் இவற்றில் பெரும் புலமை பெற்று விளங்கினார். அவர் கல்லறையும் உருளை உருண்டை வடிவங்கள் பொறிக்கப்பட்டுப் பார்ப்போர்க்குக் கணித அறிவை ஊட்டவல்லதாய் அமைந்துள்ளது.
(குறள்நெறி – வைகாசி 2, 1005 / 15.05.1964)

 

Tuesday, April 29, 2014

ஆர்க்கிமிடிசு – தி.சி.கருப்பண்ணன்

ஆர்க்கிமிடிசு – தி.சி.கருப்பண்ணன், கலை.மு.,


 archimides03
மழை பெய்கிறது கதிரவன் காய்கிறது. இவற்றால் மண்ணால் புற்பூண்டுகள் பயிர் பச்சைகள் முளைத்துத் தழைக்கின்றன. இன்னோரன்ன பல்வேறு நிகழ்ச்சிகள் இயல்பாய் நடைபெறுகின்றன. மழை எங்கிருந்து உருவாகின்றது? காயும் கதிரவன் எவ்வாறு இயங்குகின்றது? மண்ணினிருந்தும் புற்பூண்டுகள் எப்படித் தோன்றி வளர்கின்றன? இத்தகைய வினாக்கள் நம் மனத்துள் எழுதுவதில்லை. நாம் இவற்றையெல்லாம் இயற்கையெனக் கூறி மேனோக்கோடு விட்டு விடுகின்றோம். ஆனால் ஒரு விஞ்ஞானியோ இவை போன்ற நிகழ்ச்சிகளைக் கூர்ந்து நோக்குகின்றான். நோக்கியவற்றை ஆழ்ந்த அறிவு கொண்டு ஆய்கின்றான். இங்ஙனம் பெற்ற ஆராய்ச்சி அறிவைப் புதுமைகள் காணப் பயன்படுத்துகின்றான்.
தண்ணீர் நிரப்பிய பெருந்தொட்டியில் ஒரு விஞ்ஞானி குளித்தார். குளிக்கும் நிலையில் அவருக்கு ஓர் உண்மை தென்பட்டது. அவர்தான் ‘நிற்க வேறு இடம் அளிப்பின் இவ்வுலகையே ஆட்டிக் காட்டுவேன்’ என முழங்கிய கிரேக்க விஞ்ஞானி ஆர்க்கிமிடீசு. அவர் அப்போது கண்ட உண்மைதான் நாம் இப்போது கூறும் பொருட்செறிவுத் தத்துவம் அவர் பிறந்த ஆண்டு கி.மு.257. அவரது இடம் சிசிலித்தீவைச் சார்ந்த சிராக்கூசு. அவரது தந்தை ஒரு கிரேக்க வானறிஞர். அலெக்சாண்டிரியாவில் அன்று புகழ் பெற்று விளங்கிய கணிதப் பள்ளியில் ஆர்க்கிமிடீசு பயின்றார். கணித ஆராய்ச்சியில் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டிருந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் கிரேக்கர்கள் உடல் உழைப்பை இழிவாய்க் கருதினர். கருவிகள் மூலம் சோதனை செய்து விஞ்ஞான உண்மைகளைத் தெளிவுபுடுத்தலை, கிரேக்கர்கள் அன்று விரும்பவில்லை. ஆயினும் ஆர்க்கிமிடிசு தான் கண்ட உண்மைகளை வெளியிடுமுன் கருவி கொண்டு அவற்றிற்கு விளக்கம் பெற்றார் என நம்ப இடமுண்டு. ஆனால் கருவிகளின் மூலம் எப்படித் தெளிவு பெற்றார் என்பதை மட்டும் அவர் விளக்கவில்லை. அவர் தான் கண்ட அறிமுறை உண்மைகளைப் பல வழிகளில் பயனுறும்படி செயற்படுத்தியும் காட்டினார்.
ஐரோ என்னும் கிரேக்க மன்னன் தனக்கு ஒரு பொன்முடி செய்ய பொற் கொல்லன் ஒருவரிடம் வேண்டிய அளவு தங்கத்தைக் கொடுத்தான். பொற்கொல்லனும் பொன்முடி செய்து மன்னனிடம் தந்தான். பொன்முடி நிறுக்கப்பட்டபோது கொடுத்த தங்கத்தின் எடையளவு ஒப்ப இருந்தது. இருந்தாலும் பொற்கொல்லன் பொருள் விரும்பிப் பொன்முடியில் வெள்ளிக் கலப்புச் செய்திருக்கக் கூடுமென மன்னன் ஐயுற்றான் பொன்முடி தூய தங்கத்தாலேயே செய்யப்பட்டதா என்பதை அறிய மன்னன் வழிதேடினான். வெவ்வேறு மாழை(உலோக)ப் பொருள்கள் வெவ்வேறு எடையுள்ளன என்பது அன்று தெரிந்து உண்மைதான். ஒரு தங்கக் கட்டி அதே அளவுள்ள வெள்ளிக் கட்டியை விட மேலான எடை கொண்டது. இவ்வுண்மையை பயன்படுத்திப் பொன்முடியைச் சோதிக்க முடியும். ஆனால் இவ்வழியைப் பின்பற்றினால் பொன்முடியே சிதைவுறும். ஏனெனில் முதலில் அப்பொன்முடியை உருக்கி ஒரு சதுரக் கட்டியாய்ச் சமைக்க வேண்டும். பின்னர் அதை அளவுள்ள தூய தங்கக் கட்டியோடு ஒப்பிட வேண்டும் இத்தூய தங்கக் கட்டியின் எடையை விட அது குறைந்து காணப்பட்டால், வெள்ளிக் கலப்பு வெளியாகும். பொன்முடியையே அழித்துப் பின்னர் சோதிப்பது பயனுடைத் தன்று. எனவே உருவம் சிதையாமல் கொடுத்த தங்கத்தாலேயே அப்பொன்முடி செய்யப்பட்டதா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். இப்பொறுப்பை மன்னன் ஆர்க்கிமிடிசிடம் ஒப்படைத்தான்.
archimedes-eureka
இம்முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது தான் ஆர்க்கிமிடிசு பொருட் செறிவுத் தத்துவத்தைக் கண்டதாகக் கூறப்படுகிறது. ஆர்க்கிமிடிசு குளிக்கத் தண்ணீர்த் தொட்டிக்குள் இறங்கினார். தண்ணீர் மட்டம் சற்று உயர்ந்ததைக் கண்ணுற்றார். தொட்டிக்குள் உடல் மேன் மேலும் முழகுங்கால் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வந்தது. இவ்வாறு வருதல் இயற்கைதான். இன்று இதை நாமே செய்து கண்கூடாகப் பார்க்கலாம். இதில் எந்தப் புதுமையும் நாம் காணவில்லை. ஆனால் ஆர்க்கமிடிசு இதிலிருந்துதான் ஒழுங்கற்ற உருவங்களின் கன அளவைக் காணும் முறையைக் கண்டு பிடித்தார். பொன்முடியைச் சோதிக்க இம்முறையைக் கையாண்டார். ஒரு பாத்திரம் நிறையத் தண்ணீர் ஊற்றினார். பொன்முடியை இத்தண்ணீரில் முழுதும் மூழ்கும்படி பக்குவமாகத் தொங்க விட்டார். வழிந்து வரும் தண்ணீரை அளந்தார். இத்தண்ணீரின் கன அளவும் பொன்முடியின் கன அளவும் ஒன்றுதான் என்பது தெற்றென விளங்குகின்றதன்றோ! இப்போது எளிதில் பொன்முடியைச் சோதிக்கலாம். வழிந்து வந்த தண்ணீரின் கன அளவுள்ள தூய தங்கம் எடை போடப்பட்டது. இவ்வெடையும் பொன் முடி எடையும் ஒன்றாய் அமைய வேண்டுமன்றோ! ஆனால் அவை ஒன்றாய் அமையவில்லை. இவ்வாறு திருட்டு வெளிப்பட்டுப் பொற்கொல்லன் தூக்கிலிடப்பட்டான். பொறியியலாளர்களும் விஞ்ஞானிகளும் ஒரு பொருளை அதே கன அளவுள்ள தண்ணீரோடு ஒப்பிட மேற்கண்ட முறையைக் கையாண்டனர். ஒரு பொருளின் எடைக்கும் அதே கன அளவுள்ள தண்ணீரின் எடைக்கும் உள்ள விகிதத்தை செறி எண் என வழங்குகின்றனர். ஏறத்தாழத் தங்கத்தின் செறிவு எண் 20; வெள்ளியின் செறிவு எண்10. அதாவது,
ஒரு கன சென்டிமீட்டர் தங்கத்தின் எடை             =  செறிவு எண்  20
ஒரு கன சென்டிமீட்டர் தண்ணீரின் எடை
ஒரு கன சென்டி மீட்டர் வெள்ளியின் எடை     = செறிவு எண் 10
ஒரு கன சென்டி மீட்டர் தண்ணீரின் எடை
(ஒரு கன சென்டி மீட்டர் தண்ணீரின் எடை 1 கிராம் ஆகும்.)
மேற்கூறிய முறையை ஒட்டியே மிதக்கும் தத்துவமும் அமைந்துள்ளது. நரம் கிணற்றில் இறங்கி மூழ்கிக் குளிக்கும்போது சிறிது மேலும் தண்ணீருள் எளிதாக நீந்திச் செல்லுகின்றோம். மற்றும் மரக்கட்டை தண்ணீருள் முழுவதும் அமிழாமல் மிதப்பதைக் காண்கின்றோம். இவை பற்றி நாம் சிறிதும் சிந்திப்பதில்லை. ஆனால் ஆர்க்கிமிடிசு இவற்றை ஆராய்ந்து தான் படகு, கப்பல் முதலானவை மிதந்து செல்லும் அடிப்படைத் தத்துவத்தைக் கண்டுபிடித்தார். ஒரு பொருள் தண்ணீருள் அமிழும் போது ஓரளவு தண்ணீரை விலக்கிச் செல்கிறது. பொருள் முழுவதும் அமிழுங்கால் அதன் கன அளவு எவ்வளவோ அவ்வளவு தண்ணீர் விலக்கம் உறுகிறது. தண்ணீருள் ஆழ்ந்துள்ள போது பொருளின் எடை ஓரளவு குறைவாக இருக்கும்.
(தொடரும்)
-          குறள்நெறி சித்திரை 19,1995 / மே 05,.1964