Sunday, December 11, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 566 – 570

 அகரமுதல




( தமிழ்ச்சொல்லாக்கம் 561-565 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 566 -570

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

566. Balcony – உயர்நிலைப்படி

கொட்டகையையடைந்ததும் டிக்கெட்டு விவரங்களை விசாரித்தான். இரண்டு டாலர் – அல்லது சுமார் ஏழு உரூபா – கொடுத்தால் எல்லாவற்றிலும் உயர்ந்ததான பாக்சு (Box) அல்லது பெட்டி என்ற ஆசனம் கிடைக்குமென்று இங்குள்ளவர்கள் சொன்னார்கள். பணப்பையைத்திறந்து பார்த்தான். அதில் ஐந்து டாலர்களிருந்தன. அவன்மனம் சோக்கில் நிலைத்திருந்தபடியால் பெட்டி டிக்கெட்டையே வாங்கிக்கொண்டு உள்ளே சென்று உயர்நிலைப் (Balcony) படியேறி, ஒரு பாக்சில் போய் உட்கார்ந்தான்.

நூல்   :           நாகரீகப் போர் (1925)

அதிகாரம்   :           4- மாயா மித்திரம், பக்கம் – 38

நூலாசிரியர்         :           பாசுகர என். நாராயணய்யா, பி.ஏ., பி.எல்., எல்.டி.,

★

567. Voters – வாக்காளிகள்

இனி அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுக்கும் விசயத்தைக் கவனிப்போமாக, ஒவ்வொரு கிராமத்தின் பிரிவினைகளிலுள்ள முக்கிய இடத்தில் ஒரு பானை வைக்கப்பட்டிருந்தது. அது உண்டியல் போல் சிறிய துவாரத்தை யுடையதாயிருந்தது. அந்தத் துவாரத்தின் வழியாய், பனை ஓலைச் சீட்டுகள் போட இடமிருந்தது. தேர்ந்தெடுக்கும் மனிதர்கள் (ஓட்டர்கள்-வாக்காளிகள்) பனை ஓலைச்சீட்டில் பேர் எழுதிப் போட்ட பின்னர் அந்தப் பானையிலுள்ள சீட்டுகள் மகாசன சபைகள் கூடுமிடத்தில் வேறொரு காலிப்பானையில் குலுக்கிப் போடப்பட்டன.

நூல்   :           நமது பரதகண்டம் (1926) இரண்டாம் பாகம், அத் – 3. சரு – 6, தமிழகத்தின் நாகரிகம் – பக்கம் – 93

நூலாசிரியர்         :           வை. சூரியநாராயண சாத்திரி, M.A., L.T,

★

568. Supreme Bliss – அறிவியப்பு

மனமென்பது சார்போத மெனப்படும். ஏனெனில் மனம் எதைப் பார்க்கிறதோ, அதன் சார்பாய் விடுதல். இங்ஙணம் மனமென்பது காற்றென்றும் விவேக மென்பது அனலென்றும் வியாபக அறிவென்பது சுத்த ஆகாயமென்றலுமாம். உன்னுகின்ற தொழிலையுடைய மனம் காற்றுருவாய் நின்று, தீர்க்க சிந்தையில் அனல் வடிவாகி விவேகமெனப் பேர் வகித்து வியாபக வடிவாய் சுத்த சாதக நிலையில் தன் வன்மை குன்றி, உலக நாட்டமிழந்து காற்றுக்குமேல் மிருதுவான தன்மையையடைந்திருக்குந் தருவாயில், சுத்த சாந்த உசுணந் தோன்றி இயற்கை வடிவாகி சுயம்பிரகாசமாகி எக்காலத்தும் அழிவில்லாததாய் விளங்கிக்கொண்டிருக்கின்ற உண்மை நிலையெதுவோ அதுவே அறிவியப்பாம்.

நூல்   :           அருள்சிவம் (1926)

6 அறிவியப்பு, பக்கங்கள் – 31, 32

நூலாசிரியர்         :           திரு. சாம்பசிவம்

★

569. Self Realization – தனிநிலை இயல்பு

தனி யென்பது மூன்று அவத்தைகளையும் நன்று விசாரித்து வாதனா வசத்தில் வருகிற விருத்தியைக் களைந்து அவ்விருத்திகள் அடக்கத் துருத்திபேல ஊது மூச்சை ஓரிட மமர்த்தி யூன்றி நிற்றலே சிவயோக நிலை.

தனியென்பது சுத்த சித்து நானென்ற திடத் தீர்மானம். நானே நீ, நீயே நான் ஆகையால் ஞானகுரு தன்னறிவைத் தவிர வேறின்மையால் சுத்த சாதகர்கள் ஊன் பிறந்த வுடலைச் சுமப்பது பாரமென்று எண்ணி, ஏன் பிறந்தோம் என்ற ஏக்கமே தங்கள் வாழ்நாள் முழுதும் குடிகொண்டு, பண்டைக் காலத்திற் செய்த புண்ணியத்தின் பலனாக, புதிய நிலையாகிய தான் பிறந்த விடமான வான் பிறந்த வனத்திற் சஞ்சரித்துக் கொண்டு உள்ளக் கோயிலை ஒன்றிப் பார்த்து தம்மிதயத்துட் காணவேண்டிய பொங்கு பேரொளியே தனிநிலை இயல்பாம்.

நூல்   :           அருள்சிவம் (1926)

1. தனிநிலை இயல்பு, பக்கங்கள் – 1, 2

நூலாசிரியர்         :           திரு. சாம்பசிவம்

★

570. Light House – கலங்கரை விளக்கம்

அந்த நகருக்கு அருகில் அழகிய அரணியம் ஒன்றுண்டு. அங்கு மா பலா முதலிய பழமரங்கள் தளிர்த்துத் தழைத்துப் பூத்துக் காய்த்துக் கனிந்து, சூரிய கிரணங்கள் பூமியிற் பரவாவண்ணம் செறிந்து விளங்கின. அந்தச் சூழலில், பாவமாகிய கடலைக் கடந்து, முத்தியாகிய கரையிற் சேர விரும்புவோர், தவமாகிய கலத்தைத் திகைப்பின்றி நடத்துவதற்கு ஓங்கிநின்ற கலங்கரை விளக்கமே போல, நெடுங்குன்றம் ஒன்று நிலைத்து விளங்கிற்று. அதன் சாரலில், யான் எனது என்னும் அகப்பற்றுப் புறப்பற்றுக்களை அறவே ஒழித்த அருந்தவத்து அந்தணர் சிலர் ஆங்காங்கே பருண சாலைகள் அமைத்துக் கொண்டு தம் மனைவி மக்களோடு வதிந்திருந்தனர்.

நூல்   :           குசேலன் (1926) பக்கம் – 8

நூலாசிரியர்         :           கா. நமச்சிவாய முதலியார்

(மேரி யரசி கலாசாலைத் தலைமைப் பண்டிதர்)

★

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Friday, December 9, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 561-565

 அகரமுதல





( தமிழ்ச்சொல்லாக்கம் 556-560 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 561-565

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

561. Lift – தூக்கி

சத்யவிரதன் மறுபடி யவளுக்குத் தைரியத்தைச் சொல்லிவிட்டுத் தூக்கி வழியே கீழே இறங்கினான். அவன் கீழே வந்த பொழுதும் அம்மாள் மறுநாள் வேலையில் உச்சித்தலைவரை மூழ்கியிருந்தாள்.

நூல்   :           நாகரீகப் போர் (1925)

அதிகாரம்   :           15 திண்ணம் விடுதலை திண்ணம், பக்கம் – 201

நூலாசிரியர்         :           பாசுகர என். நாராயணய்யா,

★

562. Introduction – முதலறிவு

இதற்கு மத்தியில், சனிக்கிழமை பொழுதடைந்ததும் சத்யவிரதன் பாட்டம் அம்மையிடம் சொன்னப் பிரகாரமே இரண்டு போலிப் பெண்களை அழைத்துக் கொண்டு அவள் மாளிகைக்குச் சென்றான். பெண்கள் முன்னேற்பாட்டின்படி வெவ்வேறிடத்திற்கு அனுப்பப்பட்டார்கள். சற்று நேரமானதும் சாமியாரும் வந்து சேர்ந்தார். சத்யவிரதனைக் கண்டு சற்று திகைப்பது போல் நின்றார். இருவருக்கும் பாட்டம் அம்மை முதலறிவு (introduction) செய்து வைத்தாள். பிறகு, சாமியாரைக் கொஞ்ச தூரத்திற்கப்பால் அழைத்துச் சென்று, சத்யவிரதனிடம் சொன்னது போல் அவரும் அன்றிரவு தனக்குத் துணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டாள். –

நூல்   :           நாகரீகப் போர் (1925) அதிகாரம் 20 – மாயாமித்திரம் மறைதல், பக்கம் – 266

★

563. Wig – மயிர்த்தொப்பி

கைதிகளுக்குள் அதிகக் கலவரை செய்யும் வகுப்பினர் ஒருவருண்டு. அவர்களை மேல் காற்றுகள் என்பார்கள். அவர்களெல்லாம் தங்கள் உடம்பில் பச்சை குத்திக் கொள்வார்கள். துன்பக் குழந்தை, தோற்கப்பட்டாலும் ஆளப்படவில்லை, கடவுளுமில்லை, எஜமானுவில்லை என்ற வாக்கியங்கள் அவர்கள் சரீரத்தில் பற்பல விடங்களில் எழுதப்பட்டிருக்கும். வழுக்கு மண்டையுடைய கைதியின் தலையில் மயிர்த்தொப்பி வரைந்திருக்கும். முழுக்குருடன் கண்கள் மேல் மூக்குக் கண்ணாடி குத்தி யிருக்கும்.

இன்னொருவன் மார்பில் ‘கண்ணிய சைன்யம்'(Legion of Honour) என்ற பிருது பச்சையில் விளங்கிற்று. அதிசயப் பேர்வழிகள் இதில் கூடியிருக்கிறார்கள்.

நூல்   :           நாகரீகப் போர் (1925) அதிகாரம் 18 – படையெழுச்சி, பக்கம் – 240

★

564. பாட்டை சாரி – வழிப்போக்கர்

‘இனி என் காதலியிருந்தென்ன? இறந்தென்ன? இனி நான் முன்போலின்றித் துறவியானேன். ஆகையால், இனி நான் வீட்டுக்குள் இருந்தாலென்ன? வெளியிலிருந்தாலென்ன? என்று ஒரு பாட்டை சாரி (வழிப்போக்கன்) யோசித்துப் பார்த்துச் சொன்னான்.

நூல்   :           பர்த்ருஅரி சிங்கார சதகம் உரை (1925) 5-வது அதிகாரம், போலித் துறவு, பக்கம். 31

தெளிபொருள் விளக்க உரை           :           தமிழ்ப் பண்டிதர் ம. மாணிக்க வாசகம் பிள்ளை

★

565. Sofa – சாய்மான மஞ்சம்

நேர்த்தியான மூங்கிற்பாயொன்று தரையில் விரித்திருந்தது. அதன் மேல் கித்தான் நாற்காலி ஓரிடத்திலும், சாய்மான மஞ்சம் (Sofa) மற்றோரிடத்திலும் வைக்கப்பட்டிருந்தன.

நூல்   :           நாகரீகப் போர் (1925) அதிகாரம் 2 – வீரனின் வியாகுலம், பக்கம்-9

நூலாசிரியர்         :           பாசுகர என். நாராயணய்யா, பி.ஏ., பி.எல்., எல்.டி.

★

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Wednesday, December 7, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 556-560

 அகரமுதல

 



(தமிழ்ச்சொல்லாக்கம் 551-555 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 556-560

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

உருதுமொழிச் சொற்கள்

556. கம்மி – குறைவு

557. சிபாரிசு – தகவுரை

558. டோபிகானா – வண்ணான் சாவடி

559. சராய் – காற்சட்டை

★

560. visting Card – காணும் சீட்டு

சிரீமதி, காமா என்ற அம்மையாரின் நட்பு சிறிது காலத்திற்குள் சிரீமான் ஐயருக்குக் கிடைத்தது. நாளுக்கு நாள் அவர்களது நட்பு அதிகமாகிக் கொண்டே வந்தது. பிறகு ஐயர் சிலகாலம் பாரீசு நகரிலிருந்து பின்னர் உரோமாபுரி, செருமனி, முதலிய இடங்களுக்குச் சென்று துருக்கி தேசத்தின் தலைநகரான கான்சுதாந்தி நோபிள் வந்தார். அங்கிருந்து அவர் ஒரு பக்கிரி வேடந்தாங்கி இந்தியாவுக்குச் செல்லும் கப்பலில் ஏறி சபமாலையுடன் ’அல்லாகோ அக்பர்’ என்று அடிக்கடி கூறிக்கொண்டு முகம்மதியர்களைப் போல் கப்பலில் ஒவ்வொரு நாளும் ஆறுதடவை கடவுளைத் தொழுது கொண்டு எகித்து தேசத்தின் துறைமுகப் பட்டினமான கெயிரோ நகரத்திற்கு வந்து சேர்ந்தார்.

அங்கே அவர் ஒரு துருக்கியப் பெயரை விசிடிங் கார்டுகளில் (காணும் சீட்டு) அச்சடித்துக் கொண்டு வழியில் தம்மைப் பற்றிக் கேட்பவர்க்கெல்லாம் அந்தச் சீட்டில் ஒன்றைக் கொடுத்துத் தாம் கல்கத்தாவில் ஒரு பெரிய வியாபாரி என்று சொல்லிக் கொண்டு இலங்கைத் தீவின் பிரபல துறைமுகப் பட்டினமான கொழும்பு வந்து சேர்ந்தார்.

கட்டுரை     :           உத்தம வீரர்-வ.வே.சு. ஜயர்

கட்டுரையாசிரியர்        :           கே.எசு. மணியன்

இதழ் :           பாலவிநோதினி

தொகுதி 7   :           பகுதி 11-12 நவம்பர், டிசம்பர் 1925 பக்கம் – 324

★

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, December 5, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 551-555

 அகரமுதல





(தமிழ்ச்சொல்லாக்கம் 546-550 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 551-555

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

551. Monkey Screw — குரங்குத் திருகு

விளக்கைப் பிரதாப்சிங்கிடம் கொடுத்துவிட்டுத் தன் இடுப்பிலிருந்து ஒர் நீண்ட கயிற்றைக் கழற்றினாள். அது சுமார் நீளமிருக்கும். அதன் சுற்றளவு மிகவும் குறைவாதலால், அது அதிகக் கனமாயாவது அதிக இடத்தை யடைத்துக் கொண்டாவது இருக்கவில்லை. மெல்லிய கம்பிகளாற் செய்யப்பட்ட கயிறாகையால், அறுந்து போகாதபடி பலமாயிருந்தது. தயிற்றை நீட்டி வைத்துக்கொண்டு, தன் சோப்பிலிருந்து பெட்டி போன்ற ஒர் இயந்திரத்தை எடுத்துக் கயிற்றின் ஒரு நுனியை அதில் இசைத்தாள். மற்றொரு நுனியில் குரங்குத் திருகு போன்ற பற்களுடன் கூடிய சிறு பிடியொன்றிருந்தது.

இந்த நுனியைத் தவிர கயிற்றின் மற்றெல்லாப் பாகங்களையும் பெட்டிக்குள் அடங்கும்படி பெட்டியின் வெளியே இருந்த ஒரு பிடியைச் சுற்றி உள்ளே இழுத்தாள்.

மேற்படி நூல் : அதிகாரம் 16 – ஸந்நேகந் தெளிதல், பக்கம் – 213

★

552. அங்காத்தல் – வாய்திறத்தல் (1925)

திருக்குறள்

அகர முதல வெழுத்தெல்லா மாதி

பகவான் முதற்றே யுலகு

எழுத்துகள் அங்காத்தலை (வாய் திறத்தலை) முதற்காரணமாக வுடைமைபோல உலகம் முதல்வனை முதற்காரணமாக வுடையது.

நூல்   :           ஞானபோதினி அல்லது சிவப்பிரகாசம் (1925) பக்கம் 13

நூலாசிரியர்         :           சோழ கந்த சச்சிதானந்தனார்.      

★

ஆங்கில மொழிச் சொற்கள்

553. சாக் – சீமைச் சுண்ணாம்பு

554. ஆப்சக்ட் லெசன் – பொருட் பாடம்

555. காம்பசு – திசையறி கருவி

நூல்   :           தற்கால தமிழ்ச்சொல்லகராதி (1925)

நூலாசிரியர்         :           திவான்பகதூர் ச. பவானந்தம் பிள்ளை 

★

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்