Tuesday, September 23, 2025

வெருளி நோய்கள் 436-440 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 431-435 : தொடர்ச்சி)

உருப்படம்(icon) குறித்த வரம்பற்ற பேரச்சம் உருப்படவெருளி.
இவற்றுள் குறிப்பாக மதச் சின்னங்கள் மீதான ஒரு வலுவான வெறுப்பு அல்லது பேரச்சம் இருக்கும். உருவ வழிபாட்டாளர்களை, கடவுள் உருவ எதிர்ப்பாளர்களை எதிர்க்கும் உருவ எதிர்ப்பு நிலைக்கு மாறுபட்டது. எனினும் உருவப்பட வெருளி, உருவ எதிர்ப்பு நிலைக்குக் கொண்டு செல்லலாம்.
மேலும் இஃது உருவ நேயர்களுக்கு எதிரானநிலைப்பாடாகும்.

  1. உருப்பொருள் வெருளி – Objectshowphobia

உருப்பொருள்கள் மீதான அளவுகடந்த பேரச்சம் உருப்பொருள் வெருளி.
அசைவூட்டப்படங்கள் அல்லது கேலிப்படங்களில் பயன்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கில் உருப்பொருள்கள் உள்ளன. இவற்றின்மீதான பேரச்சமே உருப்பொருள் வெருளி.
சில இடங்களில் பொருட்காட்சி வெருளியையும் ஆடற்காட்சி வெருளியையும் Objectshowphobia என்றே குறிக்கின்றனர். எனினும் முதன்மையாக இஃது உருப்பொருள் வெருளியையே குறிக்கிறது.
00

இடி மின்னல் கண்டு அளவுகடந்த பேரச்சம் கொள்வது உருமு வெருளி.

பொதுவாகச் சிறாரிடம் இவ்வெருளி தோன்றுகிறது. பலர் அகவை கூடும் பொழுது இவ்வெருளியில் குறைந்து காணப்படுகின்றனர். சிலர் எவ்வகை மாற்றமுமில்லாமல் இவ்வெருளியால் துன்புறுகின்றனர்.
வானிலை மாற்றத்தால் துயரம் வரும் வாய்ப்பு இல்லாத பொழுதும் அல்லது குறைந்த அளவு துன்பம் வரும் என்று அறிய நேர்ந்த பொழுதும், அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள வழி யிருந்தும், மிகப்பேரிடராகக் கற்பித்துக் கொண்டு அளவுகடந்த பேரச்சம் கொள்வர்.
விலங்கினம், பறவையினங்களுக்கும் இத்தகைய வெருளி வரும் என்கின்றனர்.

இடியைக் குறிக்கும் மற்றொரு சொல் உருமு.

இடிப்பதால் வரும் ஓசை:

“பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக் கடிது இடி வெரீஇய வெண் குருகு” (அகநானூறு:141:18-9) என்னும் பாடலில் நக்கீரர், அவல் குற்றும் உலக்கையின் இடி ஓசைகேட்டு பேரிடிபோல் கருதி அஞ்சும் நிறைந்த சூலினை உடைய வெண்குருகு பற்றிக் கூறுகிறார்.
“கடிது இடி உருமின் பம்பு பை அவிய
இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே
” (குறுந்தொகை:391:3-4)
என்னும் பாடலடியில் பொன்மணியார் இடியுடன் கலந்து இனிதாக மழை பெய்த பொழுது விரைந்து வரும் இடியோசையால் பாம்பு அஞ்சுவதைக் குறிப்பிடுகிறார்.
“இடி ஓசை கேட்ட நாகம் போல” என்னும் உவமையும் இடிக்குப்பாம்பு அஞ்சுவதைக் குறிப்பிடுகிறது.
பாம்பின் உருமுவெருளி குறித்த பல குறிப்புகள் உள்ளன.
எனவே பிற உயிரினங்களுக்கும் உருமு(இடி) வெருளி வரும் என்பதை அன்றே தமிழர்கள் உணர்ந்திருந்தனர் எனலாம்.

bronte என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் இடி.
astrape என்பதற்கு மின்னல் எனப் பொருள்.
Cerauno என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் இடி, மின்னல்
.

00

  1. உருளப்ப வெருளி -Rigatoniphobia

உருளப்பம் (rigatoni/tube-shaped pasta) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உருளப்ப வெருளி.
rigatoni என்பது என்னும் இத்தாலியச் சொல்லிலிருந்து உருவானது. இதன் பொருள்,கோடிட்டது/வரி என்பன. எனினும் இங்கே உருள் வடிவமான இத்தாலிய உணவு வகை ஒன்றின் பெயரைக் குறிக்கிறது.
இத்தாலிய உணவு வகைகளை விரும்புபவர்கள்கூட, உருளப்பம் உடல் நலனுக்குக் கேடு தரும் எனச் சிலர் கூறுவதைக் கேள்வியுறுவதால் இதன் மீது அளவு கடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
00

  1. உருளி ஓட வெருளி – Veloxrotaphobia

உருளி ஓடம் (roller coaster) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உருளி ஓட வெருளி.
தண்ணீரிலும் தரைக்கு மேலும் சுழன்று உருண்டு செல்லும் பொழுதுபோக்கு வண்டியான இதனை உருளி ஓடம் எனலாம்.
விரைவாக உருண்டோடும் சக்கரம் உடைய விளையாட்டு வண்டியைக் குறிப்பிடுவதால், இதனை உருளி ஓடம் எனலாம். உருளி தரையில் இயங்கவும் ஓடம் நீரில் இயங்கவும் உதவுகின்றன.
விரைவாக இயங்குவதாலும் நிலத்திலும் நீரிலும் மாறி மாறி இயங்குவதாலும் மிகு அச்சம் கொள்கின்றனர்.
vēlōx என்னும் இலத்தீன் சொல்லிற்கு விரைவு/வேகம் எனப் பொருள்.
rota என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் சக்கரம்.
00

(தொடரும்)

வெருளி நோய்கள் 431-435 : இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 426-430 தொடர்ச்சி)

உயிரிய மணிப்பொறி (biological clock) தொடர்பான அளவுகடந்த கவலையும் பேரச்சமும் உயிரிய மணிப்பொறி வெருளி
00

    உயிருடன் அடக்கம் செய்யப்படுவோமோ என்ற பெருங்கவலையும் பேரச்சமும் உயிருடன் அடக்க வெருளி.
    இதை முதலில் உயிருடன் புதைதல் வெருளி எனக் குறித்திருந்தேன். ஆனால் புதைவு வெருளி எனத் தனியாகக் குறித்துள்ளதால் இவ்விரண்டிற்கும் குழப்பம் வரக்கூடாது என்றே உயிருடன் அடக்கம் வெருளி என இப்போது குறித்துள்ளேன்.
    Subterranea நிலத்தடி எனப் பொருள்; premorte என்றால் இறப்பிற்கு முன் எனப் பொருள்; இணைந்து இறப்பிற்கு முன் நிலத்தடியில் அடக்கம் செய்யப்படுதல் எனப் பொருளாகிறது.
    இது குறித்த வெருளியே இவ்வெருளி. இதனைச் சியார்சு வாசிங்குடனின் புதைவுவெருளி(George Washington’s taphophobia) என்றும் சொல்வர். சியார்சு வாசிங்கு்டன் இறக்கும் தறுவாயில் (14.02.0979)தன் செயலர் தோபியாசு இலியரிடம்(Tobias Lear) தான் இறந்ததாக அறிவித்தாலும் இருநாள் அடக்கம் செய்யாமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். உயிருடன் அடக்கம் செய்யப்படுவோம் என்ற அச்சம் அவருக்கிருந்ததால் இத்தகைய வெருளி சியார்சு வாசிங்குடனின் புதைவு வெருளி எனப்பட்டது. அடக்கம் செய்யப்படுவோம் என அஞ்சியதால் இதை வாசிங்குடனின் அடக்க வெருளி என்பதே சரி.
    00

    உயிர்ப்பிக்குறுமி(dwarf planet Makemak) குறித்த வரம்பற்ற பேரச்சம் உயிர்ப்பிக்குறுமி வெருளி.
    dwarf என்றால் குள்ளன் எனக் குறிக்கின்றனர். அஃறிணையை உயர்திணையாகக் குறிப்பது தவறு. சிலர் குறுங்கோள் என்கின்றனர். குறுமி என்பது சரியாகும். இக்குறுமிக்கு உயிர்ப்புத் தீவில் வழங்கும் இரப்பா நூயி(Rapa Nui) மொழியில் கருவுயிர்ப்பிக் கடவுள் எனப் பொருள்.

    00

    உயர்நிலைப்பள்ளி குறித்த வரம்பற்ற பேரச்சம் உயர்நிலைப்பள்ளி வெருளி.
    தொடக்கப்பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளி செல்லும் பொழுது மேல் ஆசிரியர்களின் கண்டிப்பு குறித்து அஞ்சி உயர்நிலைப்பள்ளி வெருளி வருகிறது.
    கற்கை வெருளி(Sophophobia) உள்ளவர்களுக்கு உயர்நிலைப்பள்ளி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
    Hisk என்றால் உயர்நிலை. இங்கே உயர்நிலைப்பள்ளி.

    00

    உருசியா தொடர்பானவற்றில் ஏற்படும் அளவுகடந்த அச்சம் உருசிய வெருளி.

    உருசியா அல்லது உருசிய மக்கள் அல்லது உருசியப் பண்பாடு, உருசியப் படைப்பாளிகள் என உருசியா தொடர்பானவற்றில் வெறுப்பும் பேரச்சமும் கொண்டிருப்பர்.
    உருசியா ஒரு பொதுவுடைமை நாடு என்ற நிலையில் பொதுவுடைமைக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளவர்கள் காரணமின்றி இந்நாட்டுத் தொடர்பானவற்றை வெறுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
    உருசியா இரும்புத்திரை நாடு என அழைக்கப்படுகிறது. இதனாலும் உருசிய வெருளி வருகிறது.
    உருசியா-உக்கிரைன் போர் மூண்ட பின் உருசியாவின் அச்சுறுத்தல் கண்டு அஞ்சி உருசிய வெருளி கொள்வோர் உள்ளனர்.

    இதன் எதிர் நிலைப்பாட்டை – உருசியா, உருசியா தொடர்பானற்றின்மீது நேசம் கொள்ளும் நிலையை – உருசிய நாட்டம் (Russophilia) என்பர்.
    00

    (தொடரும்)

    Sunday, September 21, 2025

    வெருளி நோய்கள் 426-430 : இலக்குவனார் திருவள்ளுவன்

     




    (வெருளி நோய்கள் 421-425 : தொடர்ச்சி)

    உயரம் அல்லது உயரமான இடங்களை அண்ணாந்து பார்ப்பதால் ஏற்படும் பேரச்சம் அண்ணாத்தல் வெருளி.
    உயரமான இடங்களை அண்ணாந்து பார்க்கும் பொழுது தலைசுற்றல், கிறுகிறுப்பு, மயக்கம் வரலாம் எனப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர். hyps என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் உயரம். இதனை முதல் பதிப்பில் உயர வெருளி(Hypsiphobia) எனத் தனியாகக் குறித்திருந்தேன். என்றாலும் உயரம் குறித்த பேரச்சம் உயர்வு வெருளி எனத் தனியாகக் குறிக்கப் பெற்றுள்ளது. எனவே, மேல் நோக்கி அண்ணாந்து பார்ப்பது குறித்த பேரச்சம் என்பதால் இதை அண்ணாத்தல் வெருளி என இப்போது பகுத்துள்ளேன்.
    00

    உயரமான கட்டடங்களின் அருகில் இருக்கும் பொழுது ஏற்படும் அளவு கடந்த காரணமற்ற பேரச்சம் உயரண்மை வெருளி.
    உயரமான கட்டடம் அருகில் இருந்தால், அக்கட்டடம் இடிந்து விழும், இடிபாடுகளில் சிக்க நேரிடும் என்று தேவையற்ற பேரச்சம் கொள்வோர் உள்ளனர். மாடி வீடுகளில் அல்லது படி, மின்னேணி உள்ள கட்டடங்களில் குடியிருக்கப் பெரிதும் அஞ்சுவர். மாடி இல்லாத வீடுகளில் மட்டுமே வசிக்க விரும்புவர்.
    batos என்னும் கிரேக்கச் சொல்லிற்கு வழிச் செல்லுதல்/கடந்து செல்லக்கூடிய/அண்மைப்பாதை எனப் பொருள்கள். உயரமான கட்டடங்கள் அண்மையில் செல்லுதல், இருத்தல் ஆகிய பொருள்களை இங்கே உணர்த்துகிறது.
    00

    உயர் கூரை குறித்த வரம்பற்ற பேரச்சம் உயர் கூரை வெருளி.
    தாழ்கூரை வெருளி(Minicelarophobia), உட் கூரை வெருளி (Celarophobia) உள்ளவர்களுக்கு உயர் கூரை வெருளி வரும் வாய்ப்புள்ளது..
    00

    உயரமான இடங்களைப் பார்த்தால் வருவது உயர்பு வெருளி.

    உயரமான இடங்களுக்குச் செல்லும் பொழுது கீழே விழுந்து விடுவோம் என்று பேரச்சம் கொள்கின்றனர. இவ்வச்சம் வீழ்பு வெருளி(Basophobia/Basiphobia) எனத் தனியாகக் குறிக்கப்பெற்றுள்ளது.

    ஏணிகள் அல்லது வீட்டுக்கூரைகளில் ஏறவும் மலையில் அல்லது பாலத்தில் வண்டி ஓட்டவும் அஞ்சுவர். படிக்கிணறுகளில் இறங்கவும் அச்சம் கொள்வர்.

    உயரமான இடங்கள் கண்டு அஞ்சாதவர்களும் உள்ளனர். அவர்கள்தாம் மலையே றுதல், வானளாவிய கட்டடங்கள் கட்டுதல், பேணுதல் போன்றவற்றில் ஆர்வமுடன் ஈடுபடுகிறார்கள்.

    ஏறத்தாழ 5% மக்கள் உயரவெருளியால் பாதிப்புறுகிறார்கள். இவர்களில் பெண்கள் ஆண்களைவிட இரு மடங்கு எண்ணிக்கையில் உள்ளனர்.

    உயர்நிலை வெருளி(Altophobia)யும் இதுவும் ஒரே பொருண்மையின. எனவே, தனித்தனியாகக் குறிக்காமல் இணைத்துத் தரப்பட்டுள்ளது.
    . உயரண்மை வெருளி(Batophobia), ஏறுவெருளி(Climacophobia), மலை வெருளி(Orophobia), நெட்டை வெருளி(Procerophobia) ஆகியவற்றுடன் தொடர்புடையது.
    akron என்னும் கிரேக்கச் சொல்லிற்கு முகடு, உச்சி, விளிம்பு எனப் பொருள்கள்.
    alto என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உயரிடம் எனப் பொருள்

    00

    உயர்ந்த திறந்த வெளியைக் கண்டு ஏற்படும் பேரச்சம் உயர்வெளிவெருளி.
    உயர்பு வெருளி(Acrophobia) யுடன் தொடர்புடையது.
    Aero என்பது காற்றுவெளியைக் குறிக்கும் கிரேக்கச் சொல்.
    acro என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் உயரம், உயர் முனை.
    00

    (தொடரும்)

    Saturday, September 20, 2025

    வெருளி நோய்கள் 421-425 : இலக்குவனார் திருவள்ளுவன்

     




    (வெருளி நோய்கள் 416-420 : தொடர்ச்சி)

    உதைபந்தாட்டம்(soccer) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உதைபந்தாட்ட வெருளி.
    இதனைக் காற்பந்து வெருளி(footballphobia) என்றும் சொல்வர்.
    ஆடுபவர்களில் சிலருக்கு அல்லது வேடிக்கை பார்ப்பவர்களில் ஒரு சாராருக்குப் பந்து தங்கள் மீது பட்டுக்காயம் ஏற்படலாம் என்ற பேரச்சம் வரலாம். இதனால் ஆட்டத்தின் மீதே வெருளி வரும்.
    00

    உந்து ஒலிப்பான்(horn) குறித்த வரம்பற்ற பேரச்சம் உந்து ஒலிப்பான் வெருளி.
    Keras என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் கொம்பு. கொம்பு என்பது பின்னர் ஊது கொம்பையும் இசைக் கொம்பையும் குறித்தது. ஊர்திகள் பந்த பின்னர் அவற்றில் எச்சரிக்கை தெரிவிப்பதற்காக உள்ள ஒலிப்பானையும் பின்னர்க் குறிக்கலாயிற்று.
    இரைச்சல் வெருளி உள்ளவர்களுக்கு ஒலிப்பான் எழுப்பும் ஒலி வெறுப்பை ஏற்படுத்தி வெருளிக்கு உள்ளாவர்.
    00

    உந்து கழுவல் குறித்த வரம்பற்ற பேரச்சம் உந்து கழுவல் வெருளி.
    உந்துவை முழுமையாகக் கழுவும் பொழுது சக்கரங்களில் சிக்கியுள்ள அழுக்குகள், சகதிகள், சேறுகள் முதலியனவும் கழுவப்பட்டு மேலே தெறிக்கும் என்று அஞ்சுவோர் உள்ளனர். உந்து கழுவும் பொழுது பகத்தறிவிற்குப்பொருந்தாக பேரச்சம் சிலருக்கு வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.


    Auto என்றால் தான், தன்னால் எனப் பொருள்கள். எனவே, தன்னால் இயங்கும் ஊர்தி என்பதன் சுருக்கமாக எண்ணுகின்றனர. எனவே, Automobile என்பதன் சுருக்கமாக இங்கே Autoஎனப்படுகிறது. தானாக இயங்கும் ஊர்தி, தானூர்தி, தானி என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் தன்னால் இயங்கும் ஊர்தி அல்ல. இயந்திரத்தால் இயங்கும் ஊர்திதான்.
    pleno என்னும் போர்த்துகீசியச் சொல்லின் பொருள் முழு. எனினும் இங்கே ஊர்தியை முழுமையாகக் கழுவுதல் என்னும் பொருளில் வழங்கப்படுகிறது.

    00

    உந்து-படகு(car boat) குறித்த அளவு கடந்த பேரச்சம் உந்து-படகு வெருளி.
    நிலத்தில் பயணம் செய்யும் பொழுது நீர்ப்பயணத்தையும் நீரில் பயணிக்கும்போது சாலைப்பயணத்தையும் எண்ணிக் குழம்பிப் பகுத்தறிவிற்குப் பொருந்தாத காரணங்களை எண்ணி அஞ்சுவதே உந்து படகு வெருளி என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
    Cuimu என்றால் உந்து படகு.
    இயந்திரப் படகு என்பது இயந்திரத்தால் இயக்கப்படும் படகு. உந்து படகு என்பது உந்துபோல் இயந்திர அமைப்பு, தோற்றம் கொண்ட படகு. நிலத்தில் உந்து போன்றும் நீரில் படகு ஆகவும் இயங்கும் ஊர்தி எனலாம்.
    00

    உப்பு(salt) உப்பு உணவுகள் மீதான வரம்பற்ற பேரச்சம் உப்பு வெருளி.
    உப்பு வாழ்க்கைக்குத் தேவையான ஒரு கனிமம் ஆகும். “உப்பில்லாப்பண்டம் குப்பையிலே” என்பதிலிருந்து அதன் நன்மையைப் புரிந்து கொள்ளலாம். இருப்பினும் நேரடியாவோ உணவில் சேர்த்தோ உட்கொள்ளும் உப்பு நமக்குத் தீமைகளை விளைவிக்கிறது. உயர் இரத்த அழுத்தம், இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், உடல் பருமன், எலும்பு மெலிதல், உடலுறுப்பு வீக்கம் முதலியவற்றுக்குக் காரணமாக மிகுதியான உப்பு அமைந்து விடுகிறது. இதனால் கட்டுப்பாடாக இருக்க வேண்டியவர்கள் அளவுக்கு மீறிய பேரச்சம் கொள்கின்றனர்.
    உப்பு குறைந்தாலும் கூடினாலும் தீமையே. எனவே, நோய்வாய்ப்படும்பொழுதோ நோய் வரும் சூழலிலோ மருத்துவர்கள் அறிவுரையைப் பின்பற்ற வேண்டுமேயன்றி வெருளிக்கு ஆளாகக் கூடாது.
    hals என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உப்பு எனப் பொருள்.

    (தொடரும்)

    Friday, September 19, 2025

    வெருளி நோய்கள் 416-420 : இலக்குவனார் திருவள்ளுவன்



    (வெருளி நோய்கள் 411-415 : தொடர்ச்சி)

    உண்ணுகை குறித்த வரம்பற்ற பேரச்சம் உண்கை வெருளி.
    உண்ணும் பொழுது அருகில் அல்லது சுற்றுப்புறத்தில் யாரேனும் காற்றை வாய்வழியாகவோ பின்வழியாகவோ வெளியேற்றும் பொழுது உண்பதை வெறுத்துப் பேரச்சம் கொள்வதும் இவ்வகைதான். உண்ணும் பொழுது வாய்வழியாக மூச்சு விடுவதும் உண்கை வெருளிதான்.
    00

    உண்டியகம்(cafeteria) பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் உண்டியக வெருளி.
    கஃபேட்டிரியா என்பது நமக்கு நாமே பரிமாறிக்கொள்ளும் தற்பரிமாற்றச் சிற்றுண்டியகம். சில இடங்களில் ஒரு பகுதித் தற்பரிமாற்றப் பகுதியாகவும் மறு பகுதி பரிமாறுபவர்கள் உள்ள உண்டியகமாகவும் இருக்கலாம். இதனாலும் உணவு வருவதில் காலத்தாழ்வு ஏற்படும் என அஞ்சலாம்.
    நமக்கு நாமே பரிமாறிக் கொள்வதால், உணவுத் தட்டு தடுமாற்றத்தால் கீழே விழலாம், உணவு சிதறலாம், நேரம் ஆகலாம் என்பன போன்ற எண்ணங்களால் சிற்றுண்டியகம் – உண்டியகம் மீதான வெருளி.
    00

    உண்மையை ஒப்புக்கொள்வது குறித்த வரம்பு கடந்த பேரச்சம் உள்ளதுரைத்தல் வெருளி.
    நாம் சில நேரங்களில் நாம் செய்த தவறுகளை ஒத்துக் கொள்வதில்லை. உண்மையை ஒப்புக் கொள்ளாமல், பிடிவாதமாக எதிர் வாதம் செய்வதுண்டு. இப்பிடிவாதப் போக்கு உள்ளதுரைத்தல் வெருளி ஆகாது.
    கண்டறிதல், எதிர்பார்க்கும் துயரச்செய்தியைக் கேட்டல் முதலானவையும் உள்ளதுரைத்தல் வெருளிக்குக் காரணமாக அமைகின்றன.
    இங்கே உள்ளதுரைத்தல் என்பது பொய் பேசாதிருத்தல் அல்ல. உள்ளதைக் கண்டறிதல், உள்ளதைக் கேட்டறிதல் என்பனவாகும்.
    வாய்மை வெருளியில் (veritaphobia) இருந்து இது வேறுபட்டது.
    உண்மை சொல்ல அஞ்சுவது வாய்மை வெருளி .
    aletheia என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் உள்ளது(ரைத்தல்).
    00

    உதட்டு அழகு குறித்துக் கவலைப்பட்டுப் பெருமளவில் பேரச்சம் கொள்வது உதட்டு வெருளி.
    கரு நிற உதடுகளைச்சிவப்பாக மாற்ற வேண்டுமே என்று கவலைகொள்வோர் பலர் உள்ளனர். உதட்டு நிறம், உதட்டுச் சுருக்கங்கள் முதலியவற்றால் அழான உதடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கவலைப்படுவர். உதட்டு வண்ணம் பூசுவது குறித்தும் தேவையற்ற அச்சம வரும்.
    cheilos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் உதடுகள்.
    00

    (தொடரும்)

    Thursday, September 18, 2025

    வெருளி நோய்கள் 411-415 : இலக்குவனார் திருவள்ளுவன்

     




    (வெருளி நோய்கள் 406-410 : தொடர்ச்சி)

    உணர்ச்சி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உணர்ச்சி வெருளி.
    மகிழ்ச்சி சார்ந்த அல்லது துயர உணர்வுகள் எதுவாயினும் அதற்கு ஆட்பட்டுப் பேரச்சம் கொள்வர்.
    உணர்ச்சிவய வெருளி(Emotaophobia) உள்ளவர்களுக்கு உணர்ச்சி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
    00

    உணர்ச்சிவயம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உணர்ச்சிவய வெருளி.
    உணர்ச்சி வெருளி(Animotophobia) உள்ளவர்களுக்கு உணர்ச்சிவய வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.

    00

    உணவு விடுதிபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் உணவு விடுதி வெருளி.
    உணவகங்களில் தரப்படும் உணவு நலஆதாரமற்று(சுகாதாரமற்று) இருக்கும், தூய்மையற்ற சூழலில் சமைக்கப்படும், கலப்பட உணவாக இருக்கும், கலப்படப் பொருள்களில் உணவை ஆக்கியிருப்பர், தரமற்ற பொருள்களில் சமைத்திருப்பர், பணியாளர்கள் அழுக்குடையுடன், அழுக்கு உடம்புடன் சமைப்பர், வேறு எங்கோ சமைத்ததைத இங்கே கொண்டுவந்து விற்பர் என்பன போன்ற பல ஐயங்கள் ஏற்பட்டுப் பெருங்கவலையும் இவற்றால் வயிற்றுப்போக்கு, உடல் நலக்குறைவு ஏற்படும் என்று பேரச்சமும் கொள்வர்.

    தமிழ்நாடு உணவு விடுதிகள் சட்டம்-1958 பிரிவு – 2(1)இன் படி, பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உணவகம் அல்லது தங்கும் வசதியுடன் உணவு வழங்கும் தொழில் இடங்கள் போன்றவை உணவு விடுதிகள் எனப்படும். சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்படி பதிவு பெற்ற சங்கங்களால் நடத்தப்படும் உணவகங்கள், சிற்றுண்டி விடுதிகள் போன்றவையும் உணவு விடுதிகள் எனப்படும். ஆனால் கல்வி நிறுவனங்கள் நடத்தும் உணவகங்கள் இச்சட்டத்தின் கீழ் உணவு விடுதி என்னும் வகைப்பாட்டில் வரா.

    பொதுவாக நாம் வழக்கில் உணவுப்பொருள் விற்பனை நிலையத்தையே உணவு விடுதி(Hotel) என்கிறோம். ஆனால் ஆங்கிலத்தில் தங்கும் வசதி உள்ள உணவு விடுதியையும ‘Hotel’ என்றே சொல்கின்றனர். எனவே, தமிழில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே, தங்கும் வசதி யுள்ள உணவு விடுதியை உறைவகம் என வேண்டும். உணவகம் என்றால் உணவு மட்டும் தரும் இடம். உறைவகம் என்றால் உணவும ்தங்குமிட வசதியும் தருமிடம். விடுதி என்பது தங்குமிட வசதி மட்டும் உள்ள இடம்.

    00

    உணவு குறித்த வரம்பற்ற பேரச்சம் உணவு வெருளி.
    அரைகுறையாய்த் தெரிந்து கொண்டு இன்னின்ன உணவு ஒவ்வாமையானது, இன்னின்ன உணவு வயிற்றுப் புண்ணை அல்லது வாய்ப்புண்ணை அல்லது இரண்டையும் உண்டாக்கும்; வளி(வாயு) முதலிய மூன்றை உண்டாக்கும்; கை கால் மூட்டு வலிகளைப் பெருக்கும்; நீரிழிவை உண்டாக்கும் அல்லது பெருக்கும்; இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் அல்லது கூட்டும்; எனப் பலவகையாகக் கவலைப்பட்டுப் பேரச்சம் கொள்வர். மருத்துவர்களின் அறிவுரைக்கிணங்க உணவுக் கட்டுப்பாட்டைப் பேண வேண்டும்.ஆனால் தேவையற்ற பேரச்சம் கொள்ளக் கூடாது.
    பசியற்ற உளநோய்(anorexia nervosa) என்பதுடன் இதை ஒப்பாகக் கருதக்கூடாது என்கின்றனர்.

    அனோரெக்சியா நெர்வோசா என்னும் சொல் 1873 ஆம் ஆண்டில் விக்டோரியா அரசியின் தனிப்பட்ட மருத்துவர்களில் ஒருவரான் வயவர் வில்லியம் குல் என்பவரால் உருவாக்கப்பட்டது. orexis என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பசி. முதல் எழுத்து அ(a) என்பது இன்மையைக் குறிக்கும் முன்னடை. n இரண்டு உயிர் எழுத்துகளின் இணைப்பைக் குறிக்கிறது. எனவே, பசியின்மை என்ற சொல் மூலம் உண்பதற்கு விருப்பமின்மை என்னும் பொருள் வழங்குகிறது. என்றாலும் பசியற்ற உளநோய்கூட நாளடைவில் உணவின் மீது வெறுப்பை உண்டாக்கலாம் அல்லவா?
    பொதுவாகவே உண்பதில் சிலருக்குப் பேரச்சம் இருக்கும். சிலருக்குச்சிலவகை உணவுமீது மட்டும் பேரச்சம் இருக்கும். சிலருக்கு வெளியூர்களில் அல்லது வெளிநாடுகளில் உண்பதற்குப் பேரச்சம் வரும். பழக்கமில்லாத உணவை உண்பதற்கும் பேரச்சம் கொள்வர்.

    sîtos என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் கோதுமை வெதுப்பம் எனப் பொருள்.
    cibus என்னும் இலத்தீன் சொல்லிற்கு உணவு எனப் பொருள்.
    cibo என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் உணவு.
    sîtos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கோதுமை, உரொட்டி. இங்கே பொதுவாக உணவைக் குறிக்கிறது.
    Sitophobia என்றால் உண்ணும் வெருளி என்னும் பொருளில் தனியாகச் சிலர் குறிக்கின்றனர். உண்ணும் வெருளியும் உணவு வெருளியும் ஒன்றுதான். எனவே இணைத்து இங்கே தரப்பட்டுள்ளன.

    அயல்நாட்டு உணவுகள் பட்டியலில் இருந்து உணவைத் தெரிவுசெய்வது தொடர்பான பேரச்சம் (அயலக)உணவுத்தெரிவு வெருளி.

    அயல்நாட்டு உணவுப்பெயர்கள் அயல்மொழியில்தான் இருக்கும். அதனைத் தம்மொழி ஒலிவடிவில் படிக்கும் பொழுது புரியாமல் ஒத்துக் கொள்ளாததை அல்லது உணவுப்பழக்கத்தில் இல்லாததை அல்லது விரும்பாததைத் தெரிவு செய்து விடுவோம் என்று குழப்பத்தில் ஆழ்ந்து பேரச்சம் கொள்வர் இத்தகையோர்.

    அன்றாடப் பயன்பாட்டில் தமிழைத் தொலைத்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டில் உணவகங்களின் உணவு நிரல் ஆங்கிலத்தில்தான் உள்ளன. அரிதாக எங்கேனும் தமிழ், ஆங்கிலம் என இரு மொழியில் இருந்தாலும் அயற்சொற்களைத்தான் தமிழ் வரிவடிவில் காணலாம். இச்சூழலிலும் வெருளி வருகிறது.
    00

    (தொடரும்)