(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 9 இன் தொடர்ச்சி)
குமரிக் கோட்டம்
அத்தியாயம் 2 தொடர்ச்சி
’சே, கட்டேலே போறவனே?’ என்று கூவிக் கொண்டே, செட்டியார் பிடியிலிருந்து திமிரிக் கொண்டு கிளம்பினாள் குமரி. இதற்குள், ஆடை நெகிழ்ந்து புரண்டிடவே, காலிலே புடவையின் ஒரு முனை சிக்கிக் கொள்ள, இடறிக் கீழே வீழ்ந்தாள். செட்டியார் அவளைத் தூக்கி நிறுத்தினார். அவளுக்கு மேலும் மேலும் மயக்க உணர்ச்சி அதிகரித்தது. எதிர்க் கும் போக்கும் போய்விட்டது. அவளும், அணைப்புக்கு அணைப்பு, முத்தத்துக்கு முத்தம், என்ற முறையில் விளையாடத் தொடங்கினாள்.
“கண்ணு”
“ஏன், மூக்கு “
“இதோ பார்! ”
“மாட்டேன், போ.”
“ஒரே ஒரு முத்து.”
”வெவ்வெவ்வே.”
இன்பவிளையாட்டு! செட்டியார் பல நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்ததை விட, மிக இரம்மியமாகி விட்டது.
செட்டியார் மடி மீது தலை வைத்து அவள் சாய்வாள். செட்டியார் குனிந்து ஒரு முத்தம் தருவார்; தலையைப் பிடித்து அவள் ஓங்கிக் குட்டுவாள். பிறகு திமிரிக் கொண்டு எழுந்திருப்பாள். செட்டியாரைப் பிடித்திழுத்துத் தன் மடியில் தலையைச் சாய்த்துக் கொள்ளச் சொல்வாள்; செட்டியாருக்கு மூச்சுத் திணறும்படி முத்தங்கள் சொரிவாள். ஒரு ஆண்பிள்ளையின் பார்வை சற்று வேகமாகப் பாய்ந்தால் கோபிக்கும் குமரிக்கு இவ்வளவு “சரசத்தன்மை” இருக்குமென்று செட்டியார் நினைத்த தில்லை! செட்டியாருடைய முழுக்கு, பூச்சு, பக்தி, பாராயணம், ஆசாரம், சனாதனம் ஆகியவற்றைக் கண்டவர் தான். நள்ளிரவில், அவர் கல் உடைக்க வந்த கன்னியின் கன்னத்தைக் கிள்ளிக் கொண்டும், கூந்தலைக் கோதிக் கொண்டும், காமுகக் குமரன் போல் ஆடிக் கிடக்கக் கூடியவர் என்று எண்ணியிருக்க முடியும் !
காலை முதல் வேலை செய்த அலுப்பினால் அவள் குடிசையிலே, கையே தலையணையாகக் கொண்டு தூங்கி இருக்க வேண்டியவள், ஒரு இலட்சாதிகாரியின் மடியிலே ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டு இருக்கிறாள்! கைலாயக் காட்சியைக் கனவிலே கண்டு இரசிக்க வேண்டிய நேரத்திலே பக்திமானான செட்டியார், தம்முடைய வாலிப மகன், காதலித்தவளைக் கடிமணம் புரிவேன் என்று சொன்னதற்காக, ‘காதலாம், காதல் ! சாதியைக் கெடுத்துக்கொள்வதா, குலம் நாசமாவதா, ஆசாரம் அழிவதா, ஒரு பெண்ணின் சிநேகத்துக்காக, என்று கனல் கக்கிய செட்டியார், ஒரு பெண்ணை, கூலி வேலை செய்ய வந்தவளை, நடுசியில், கட்டி முடியாத கோயிலில். ’கண்ணே ! மணியே!’ என்று கொஞ்சிக்கட்டித் தழுவிக்கொள்கிறார், அதுவும் அவள் தன்னுடைய நிலையை இழந்து விடும்படியாக மயக்கம் தரும் லேகியம் சாப்பிடும்படி செய்து. செட்டியாருக்கு இவற்றை எண்ணிப் பார்க்க நேரமில்லை ; அவருக்கு அளவில்லாத ஆனந்தம் ; எத்தனையோ நாட்களாகக் கொண்டிருந்த இச்சை பூர்த்தியாயிற்றே என்ற சந்தோசம் !
இன்று இரவு அவருக்கு. இன்ப இரவுக்குக் கடிகாரம் ஏது? கோட்டான் கூவினால் கூடக் குயிலின் நாதமாக வன்றோ அந்த நேரத் தில் தொனிக்கும். கருத்த மேகம் சூழ்ந்த வானமும் கூட. அன்று தனி அழகாகத்தானே காணப்படும்! இன்பத்துடன் அளவளாவும் நாள் அமாவாசையாக இருந்தாலும், பெளர்ணமியாகி விடுகிறது என்பார்கள். செட்டியாரின் நிலை அதுதான். அவர் மனத்திலே அந்த நேரத்தில் கொஞ்சமும் பயமில்லை. “என்ன காரியம் செய்தோம் ! நமது வயது என்ன ! வாழ்க்கை எப்படிப்பட்டது ! எவ்வளவு பாசுரம் படித்தோம், எத்தனை திருக்கோயில் வலம் வந்தோம்? காமத்தின் கேடுபற்றி எத்தனை புண்ணிய கதை படித்திருக்கிறோம்? ஒரு கன்னியை, — அவள் நிலை தவறும் படி செய்வது தகுமா? இவ்வளவு மோகாந்த காரத்தில் மூழ்குவது சரியா?” என்று சிந்திக்கத் துளியும் முடியவில்லை.
அவளுடைய அதரம், அதன் துடிப்பு ! அவளுடைய விழிகள், அவை கெண்டை போல ஆடுவது! அவளுடைய துடியிடை ! குழையும் பேச்சு ! இவற்றைக் கண்டு, ரசித்துக்கொண்டிருந்த நேரத்தில் அவருக்கு வேறு விதமான நினைப்பு வருமா!
எந்த வாயால், “காமத்துக்குப் பலியாகி சாதியைக் கெடுக்கத் துணிந்தாயே, நீ என் மகனல்ல, என் முகாலோபனம் செய்யாதே, போ வீட்டை விட்டு” என்று கூறினாரோ அந்த வாயால், செட்டியார், அழகுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தார். காதல் கீதம் பாடிக் கொண்டிருந்தார். “இது இதழல்ல கனி; கன்னமல்ல ரோசா ; கண்ணல்ல தாமரை,” என்று கவிதைகளைப் பொழிந்து கொண்டிருந்தார். தூங்கிக் கிடந்த ரசிகத் தன்மை முழுவதும் வெள்ளமெனக் கிளம்பிற்று. இன்ப இரவு அவருக்கு ! அவளுக்கோ, ஏமாந்த இரவு ! அவள் அறியமாட்டாள், காமத்துக்குத்தான் பலியாக்கப் படுவதை.
அவள் ஏதோ ஓர் உலகிலே சஞ்சாரம் செய்து கொண்டிருந்தாள். அந்த உலகிலே நிற்கமுடியவில்லை; கண்கள் சுழன்றபடி உள்ளன; ஏதோ ஓர் வகைக் களிப்பிலே மூழ்கி மூழ்கி எழுந்திருக்க வேண்டி இருக்கிறது. காரணம் தெரியவில்லை களிப்புக்கு. ஆடலும் பாடலும் திடீர் திடீரென்று கிளம்புகிறது; லாகிரியால் ஏற்பட்ட ஆனந்த நிலைமையிலே அவள் இருந்தாள். அவள் நிலை இழந்தாள், அவர் இன்பம் பெற்றார். தாம் சூது செய்து அந்தச் சுந்தரியை அடைந்ததாகவே அவர் எண்ணவில்லை : எப்படியோ ஒன்று எதிர்பார்த்தது கிடைத்துவிட்டது என்ற திருப்தி. அதுமட்டுமில்லை, சாமர்த்தியமாக அந்தச் சரசியைப் பெற்றுவிட்டோம் என்ற சந்தோசம். மதில் சுவரின் மீது ஓசைப் படாமல் ஏறி, மேல் வேட்டியை வீசிக் கிளையை இழுத்து, கிளையிலே கூத்தாடிய மாங்கனியை மெல்லப் பறித்தெடுத்து, முகர்ந்து பார்த்துத் தின்னும் போது, அதன் சுவையிலே இலயித்துவிடும் கள்ளனுக்கு, கனி திருடினோம் என்ற கவனங்கூட வருவதில்லை. மீறிவந்தாலும், தன் சாமர்த்தியத்தைத் தானே புகழ்ந்து கொள்வானே தவிர, செச்சே! எவ்வளவு சூதாக நடந்து கொண்டோம் என்று எண்ணிச் சோகிக்கமாட்டானல்லவா !
கனியைக் களவாடுபவனை விட, கன்னியரைக் களவாடுபவன், கட்டுத் திட்டம், சட்டம் சாத்திரம், பதிகம் பாசுரம் ஆகியவற்றின் பிடியிலா சிக்குவான் ! முள் வேலியைத் தாண்டி விட்டோம் என்று கருதிக் களிப்பான். இன்ப இரவு. அவ்வளவுதான் அவருக்குத் தெரியும் ! அவள் ஓர் அழகி, அவ்வளவுதான் அவருக்குத் தெரியும். அவளை அடைந் தாகிவிட்டது. அதுபோதும் அவருக்கு . குறும்புப் பார்வைக்கும் கேலிப் பேச்சுக்கும் கூடக்கோபித்துக் கொள்ளும் குமரி, குழந்தை போலத் தூங்கிவிட்டாள், குழந்தை வேலச் செட்டியாரின் மடியில் சாய்ந்தபடி. செட்டியார், மடியில் சாய்ந்திருந்த மங்கையைப் பார்த்தபடி இருந்தார். நெடுநேரம் தூங்கவில்லை. பிறகு, அப்படியே அவரும் நெல்மூட்டை மீது சாய்ந்தபடி நித்திரையில் ஆழ்ந்தார். ஆதவன் உதித்தான்!
(தொடரும்)
கா.ந. அண்ணாதுரை
குமரிக்கோட்டம்
No comments:
Post a Comment