25 July 2022 No Comment
(தமிழ்ச்சொல்லாக்கம்: 302-304 தொடர்ச்சி)
தமிழ்ச்சொல்லாக்கம் 305-308
(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
305. சர்வசுதந்தரம் – முற்றூட்டு
இராசநீதிகளையும், ஆசாராதிகளையும், வழக்கங்களையும், தெய்வத்தையும், புண்ணிய பாவ மோட்ச நரசாதிகளையும், சிவஞானத்தையும் யாவர்க்கும் உணர்த்துவதும், பூர்வ சரிதங்களை விளக்குவதும் இவ்வியற்புலமையன்றோ? இத்தகைய உயர்வு தாழ்வுகளையறிந்தே பூர்வ அரசர்களில் எத்தனையோ பேர், இயற்புலவர்கட்கு முற்றூட்டாகப் (சர்வசுதந்தரம்) பல கிராமங்களைத் தானஞ்செய்தும் பற்பல ஆடையாபரண வாகன முதலிய விசேட மரியாதைகளைச் செய்தும் பாதுகாத்ததுடன் தமக்கு முக்கிய மந்திரிகளாகவும், உயர்ந்த துணைவர்களாகவும், தம்மினுமிக்க மரியாதையுடன் எப்போதுந்தம்முடன் (இவ்வியற்புலவர்களையே) வைத்து, அவர்கள் சொல்வழி நின்று புவிபுரந்து புகழ்புனைந்து வாழ்ந்தார்களென்பது புறநானூறு முதலிய பழைய நூல்களால் நன்கு புலப்படுவதாகும்.
நூல் : இயலிசைப்புலவர் தாரதம்மியம் (1911) பக்கம் – 3
நூலாசிரியர் : மு. ரா. கந்தசாமிக் கவிராயர்
★
306. Photo – நிழல்படம்
ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் 5-மணியோடு கண்காட்சி சாலை முடிந்ததும் அன்றிரவு 8மணி முதல் 10 மணி வரை செயின்டு மேரி ஐசுகூல், போனரே சாமியார் அவர்கள் நிழல்படம் காட்ட ம-ள-ள-சிரீ என்.எசு.செம்புணாதய்யர் அவர்கள், ஊர்வன சாதி, பட்சி சாதி இவற்றைப்பற்றி ஒரு உபந்நியாசம் செய்தார்.
இதழ் : விவேக போதினி (நவம்பர் 1911) எண்,5. பக்கம் – 223
சொல்லாக்கம் : சி. வி. சாமிநாதையர்
★
307. Vote – வாக்கு
மேற்றிசை மதங்கள் தற்காலத்திய ‘ஸயன்சு’ என்னும் சாத்திர வாராய்ச்சியின் எதிர்நிற்கச் சத்தியற்று, படு சூரணமாய் மண்ணோடு மண்ணாய் மாறியும் குருட்டு நம்பிக்கையையும் மூட விசுவாசத்தையும் மிசனரி சபைகளில் (vote) வாக்கின்பேரில் முடிவாகும் சித்தாந்தங்களையுமே பிரமாணமாகக் கொண்டிருக்கும் மேற்றிசை மேற்பூச்சு மதங்களெல்லாம் சாத்திர வாராய்ச்சியாகிற பெருஞ் சம்மட்டியால் மொத்துண்டு இருந்தவிடந் தெரியாமல் பசுபமாகியும்; சாத்திர ஆராய்ச்சி விர்த்தியாக ஆக, அவைகளை யனுசரித்து அத்தேசத்திய மத நூல்களுக்கெல்லாம் பொருள் செய்தும், கடைசியில் அதுவும் சரிப்படாமற் போகவே, அம்மத நூல்களெல்லாம் குப்பை கூளங்கள் நிறைந்த அறைகளுக்கு அலங்கார சாமான்களாக மாற நேரிட்டும், மேற்றிசையில் உண்மையாய் மதவிசாரணை செய்பவர் தங்கள் மதத்தின் உபயோகமற்ற தன்மையைக் கண்டு, அதைத் துறந்து தீர்க்க சந்தேகிகளாகவும் இருந்து வருகிற இச்சமயத்தில் உண்மையாய் உயிருடன் இருக்கும் மதங்கள் அமிருத கலசங்களென்னும்படியான வேதங்களில் ஞானாமிர்தத்தைப் பானம் பண்ணிய இந்துமதமும் பெளத்த மதமுமே என்பது ஒர் அதிசயமல்லவா?
நூல் : விவேகானந்த விசயம் (1912). பக்கங்கள் :124, 125
நூலாசிரியர் : மகேச குமார சர்மா
★
308. Boarding House – விடுதி வீடு
ஆங்கிலம் கற்றற்கு நமது பிள்ளைகள் கொழும்பு, மதுரை, சென்னை, புதுக்கோட்டை முதலிய விடங்களுக்குப் போய் அசெளகரியத்தோடு படிப்பதைப் பார்க்கிலும் நம்மவர் வசிக்கிற பெரிய ஊர்களான தேவி கோட்டை, காரைக்குடி, கானாடு காத்தான் முதலிய விடங்களில் உயர்தர வித்தியாசாலை (High School) களும் அதையொட்டி மாணவர் விடுதிவீடு (Boarding House) களும், ஏற்பட்டுவிட்டால் நிரம்ப செளகரியமாக விருப்பத்தோடு சாசுத்தியான பிள்ளைகள் படிக்கவும் ஏதுவாகும்.
நூல் : வியாசங்களும் உபந்தியாசங்களும் (1913) இரண்டாம் பதிப்பு: பக்கம் : 31
நூலாசிரியர் : மு. சின்னையா(செட்டியார்), மகிபாலன்பட்டி
★
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
No comments:
Post a Comment