(தமிழ்ச்சொல்லாக்கம்: 362-367 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 368-370

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

368. Conductor – நடத்திக்கொண்டு போகிறவன்

மின்சாரம் சாதாரண உலர்ந்த காற்றின் வழி சுலபமாகச் செல்வதில்லை, சலத்தின் வழியும் ஈரமான வசுத்துகளின் வழியேயும் இரும்பு முதலான உலோகங்களின் மூலமாயும் சீக்கிரம் செல்லும்.

 வந்துக்களின்’ உடம்பின் வழி அதி சுலபமாய் மின்சாரம் பாயும். கண்ணாடியின் வழியும் உலர்ந்த தரையின் வழியும் செல்லாது. முன் சொன்ன வகை வசுத்துக்களுக்குக் கண்டக்டர்கள் என்று பெயர், (கண்டக்டர் – நடத்திக் கொண்டு போகிறவன்).

+++

 வந்துக்களின்’ – பொருள் தெரியவில்லை.

+++

ஆதலால் மழை பெய்து இடி இடிக்கும் காலத்தில், மரங்கள் மேலும் உன்னதமான வீடுகளின் மேலும், இடி விழுகின்றது.

இதழ்   :           தமிழ்நேசன் (1919) தொகுதி – 2, பகுதி – 2,

கட்டுரை          :           மின்சாரமும் மின்னலும்

கட்டுரையாளர் :           எம்.சி.ஏ. அநந்த பத்மநாபராவ், எம்.ஏ.,எல்.டி.,(சென்னை பிரசிடென்சி கலாசாலை பெளதிக சாத்திர போதகர்)

369. சிலேடை – பல்பொருட் சொற்றொடரணி

சிலேடையென்பது ஃச்லேசா வென்னும் ஆரியமொழியின்றிரிபு இங்ஙணம் வரல் தற்பவம்.

இதனைத் தமிழணி மரபுணர்ந்தார் பல்பொருட் சொற்றொடரணியென்றும் வடநூலார் ஃச்லேசாலங்கார மென்றுங் கூறுவர். சிலேடையென்பதன் பொருள் தழுவுதலுடைய தென்பது.

அஃதாவது உச்சரிப்பில் ஒரு தன்மைத்தா நின்ற சொற்றொடர் ஒன்றற்கு மேற்பட்ட பொருளைத் தழுவுதல்.

நூல்      :           கலைசைச் சிலேடை வெண்பா மூலமும் உரையும் (1920) பக்கம்.1

உரையாசிரியர்  :           சதாவதானம் தெ. கிருட்டிணசாமி பாவலர்

370. Scarlet Fever – செம்பொட்டுச் சுரம்

1870வது வருடம், ஆலிசு இராசகுமாரியார் சரித்திரத்திலும், ஐரோப்பாவின் சரித்திரத்திலும் அதிக முக்கியமானது. இவ்வருச முதலில் (உ)லூயிசு இராசகுமாரரும் அதற்கு மேல் விக்குடோரியா இராசகுமாரியும் சிறு இராசகுமாரனும் செம்பொட்டுச்சுரம் (Scariet Fever என்னும் வியாதியால் வருந்தினார்கள்.

நூல்      :           பன்னிரண்டு உத்தமிகள் கதை (1920) பக்கம். 147

தமிழாக்கம்      :        திவான் பகதூர் வி. கிருட்டிணமாச்சாரியார்.

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்