( தமிழ்ச்சொல்லாக்கம் 576 -580 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 581-584

(சொல்மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளனமொழி மாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

581. அநுபவம் – அடைவு

உண்மை இல்லா உள்ளம் என்றும் அச்சத்தால் பிடித்தலையும், அது பொலியும் உள்ளம் அச்சத்தால் பிடிக்கப்படாது அஞ்சாமையில் வீறுகொண்டு நிற்றலையும் விளக்கிக்கூற வேண்டுவதில்லை. அவரவர் அடைவு (அநுபவம்) அவரவர்க்கு இவ்வுண்மையை அறிவுறுத்தும்.

மேற்படி நூல் : பக்கம் – 58

582. வீரலெட்சுமி – விந்தைமகள்

கன்னிப்பேரில் விசயம் பெற்ற செழியன், அக்காலத்திலேயே வீரராவார்க்குச் செய்யத்தகும் களவேள்வியை முறைப்படி செய்யலானான். தோற்றொழிந்த வேந்தரின் முரசங்களே பானைகளாவும், வீரர்களின் முடித்தலைகளே அடுப்பாகவும், ஓடுகின்ற குருதிப்புனலே உலைநீராகவுங் கொண்டு அங்குச் சிதறிக்கிடக்கும் தசை, மூளை முதலாயின பெய்து, வீரவளை யணிந்த தோளாகிய துடுப்புகளால் துழாவிய உணவினால் திருக்களவேள்வியைச் செய்து முடித்தான். அது கண்டு களித்த விந்தைமகள் விரைந்து வந்து அச்செழியனது கொழுவிய புயங்களிற் கொலுவீற்றிருப்பதானாள்.

விந்தை மகள் : விரலெட்சுமி.

நூல்   :           பாண்டிய ராச வம்ச சரித்திரம் (1926) பக்கம் : 25

நூலாசிரியர்         :           ஆர். அரிகரமையர்

(அம்பாசமுத்திரம், தீர்த்தபதி ஐசுகூல் தலைமைத் தமிழ்ப் பண்டித்ர்)

583. நிகும்பலை – நீர்கொழும்பு

இலங்கையில், ஆங்கிலப் பாசையில் ‘நிகொம்போ‘ என்றும், தமிழில் நீர்கொழும்பு என்றும் பெயர் வழங்கி வரும் நகரமானது பூர்வத்தில் இராவணன் மகன் இந்திரசித்தன் என்பவன் நிகும்பலை என்னும் யாகம் நடத்திய விடமாம். ஆதலினால்தான் அவ்வூருக்கு ஆதியில் நிகும்பலை எனும் பெயர் வழங்கியதென்றும், அப்பெயர் நாளாவட்டத்தில் நீர் கொழும்பென மாறிவிட்டதென்றும் சொல்லப்படுகிறது.

இதழ் ; சத்திய நேசன் 1926, டிசம்பர்.

584. Play Ground – விளையாட்டுப்புலன்

முதன் முதலில் ஆதித்தியன் மகனான பராந்தகன் மதுரையை வென்று இலங்கைக்குப் போய் அவ்விடத்திலும் சயம் பெற்றான் என்பதும் அவனது ஆட்சியில் கிராம பஞ்சாயத்து ஓங்கி வளர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கவை. இவ்வம்சத்தில் பத்தாவது அரசனாகிய ராச ராசன் கீர்த்தி மிக அரியது. ஏனெனில் அவன்தான் தமிழகத்திலுள்ள நாடுகளையும் இலங்கைத் தீவையும் முதன் முதலில் ஒரு குடையின் கீழ்க் கொண்டு வந்தவன்.

இம்மன்னனின் குமாரத்தி குந்தவ்வையார் கீழச் சளுக்கிய விமலாதித்தியனை மணம் புரிந்து கொண்டதனால் அவர்கள் வம்சத்தில் தோன்றிய (பதினேழாவது சோழன்) குலோத்துங்க சோழன் சென்னை ராசதானியின் வடஎல்லை வரையிலும் ஒருகால் அரசு புரியலாயினன்.

ராச ராசனின் நன்கொடைகள் பலவுள. அவன் சைவ சமயத்தில் ஆழ்ந்தவனாயினும் நாகையில் புத்தர்களுக்கும் கோவில் கட்டுவித்தான். அதைப் பதினைந்தாவது நூற்றாண்டு வரை வெளிநாட்டார்கள் தரிசனஞ் செய்து கொண்டிருந்தனராம்.

அதன்பிறகு அது பின்னமாய்க் கிடந்ததைக் கண்ட பாதிரிமார்கள் அவ்விடத்திலேயே 1867 இல் ஒரு மாதா கோவில் தாபித்தனராம். அந்நகரத்தில் புத்தர் ஆலயம் இருந்ததென்பதற்குச் சான்றுகள் இன்று கிடைத்திருக்கும் 292 புத்த விக்கிரங்களாகும். இந்த விக்கிரகங்கள் நாகை வெளிப்பாளயத்தில் அமைக்கப் பெற்றிருக்கும் நியாயத்தலத்தின் எதிரில் பரந்து நிற்கும் விளையாட்டுப் புலனில் வெட்டி யெடுக்கப்பட்டதாகும்.

நூல்   :           நமது பரதகண்டம் (1926) இரண்டாம் பாகம், பக்கங்கள் 81, 82

நூலாசிரியர்         :           வை. சூரியநாராயண சாத்திரி, எம்.ஏ.எல்.டி.,

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்