( தமிழ்ச்சொல்லாக்கம் 654-662 தொடர்ச்சி)
தமிழ்ச்சொல்லாக்கம் 663- 670
(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
663. பிரதமை திதி – முதல்நாள்
664. துவிதியை திதி – இரண்டாம் நாள்
665. திரிதியை திதி – மூன்றாம் நாள்
666. சதுர்த்திய திதி – நான்காம் நாள்
667. பஞ்சமி திதி – ஐந்தாம் நாள்
668. சசுட்டி திதி – ஆறாம் நாள்
முருகன் வரத்தில் அசுரர்கள் பிறந்து தேவர்களுக்கிடுக்கண் செய்வதையொழிக்க சிவன் தனது மனையாளிடம் மோகிக்குங்கால் அவர் கண் வழியாக ஐப்பசி மாத பூர்வசத்துப் பிரதமை திதியில் (முதல்நாள்) காமமாகிய வீரியந் தோன்றிற்று. அந்த விந்தே துவிதியை திதியில் (இரண்டாம் நாள்) பார்வதி கருப்பையிற் செலுத்தப்பட்டது. அதே விந்து திதியைத் திதியில் (மூன்றாம்நாள்) பார்வதி கருப்பையிலிருந்தெடுத்து, அக்கினி பகவானிடம் கொடுக்க அவனந்த அசுசியை வகித்திருந்து சதுர்த்திய திதியில் (நான்காம் நாள்) கங்கை நதியில் எறிந்துவிட, கங்கை நதி அக்கலிதத்தைச் சரவண குட்டையில் ஒதுக்கிவிட அவைகள் ஆறு குழந்தைகளாக அக்குழந்தைகளுக்குப் பஞ்சமி திதியில் (ஐந்தாம் நாள்) கிருத்திகா தேவிகளால் பாலூட்டி உயிர் நிறுத்த சசுட்டி திதியில் (ஆறாம் நாள்) பார்வதி தன் கணவனுடன் வந்து அந்த ஆறு குழந்தைகளையும் அந்தக் குளத்திலிருந்து சேர்த்தெடுக்க ஆறு தலைகளும், பன்னிரு புசங்களும், உடல் ஒன்றும் கால்களிரண்டுமாய்த் திரண்டு விட்டதாம். இந்த இயல்பலாத பிறப்புடையவன்தான் ஆறுமுகனாம்.
நூல் : சிரீ ஆறுமுகக் கடவுள் வரலாறு முதற்பதிப்பு (1930) பக்கம் – 27
நூலாசிரியர் : க. அயோத்திதாசு பண்டிதர்
★
669. Desert – விளைவிலாப் படுநிலம்
முருகன் பிறந்தது இமயமலை கங்கை நதி யோரத்துச் சரவண குளமாயிருக்க, வானலோக மேறுந்திடன் முருகனுக்கேதோ? பார்ப்பார் மத விட்ணு விளைவிலாப் படுநிலமுள்ள (Indian Desert) ஆரிய வர்த்தனமென்னும் வைகுந்த ஊராகிய (இ)ராசபுத்தானா வருகிலும், பிரமன் பருமா தேசத்திலும், சிவன் காசுமீர் தேசத்திற்குச் சிறிது வடகிழக்கில் சுமார் நூற்றுஐம்பது மைல் தூரமுள்ள கைலை மலை குகையிலு மிருந்தார்க ளென்றால், தேவேந்திரன் வானலோகத்திலிருந்திருப்பானா? அல்லது அமராவதி ஆற்றோர மிருந்திருப்பானா? வென்று நீங்களே நினைத்துப் பாருங்கள்.
நூல் : சிரீ ஆறுமுகக் கடவுள் வரலாறு முதற்பதிப்பு (1930) பக்கம் – 30
நூலாசிரியர் : க. அயோத்திதாசு பண்டிதர்
★
670. Magic Lantern — படக்காட்சிக் கருவிகள்
சொற்பொழிவாளர்கள் பலரை அமைத்து அவர்கட்குத் தக்க ஊதியங்கள் அளித்து இச்சென்னை நகரின் மட்டுமேயல்லாமற் சென்னை மாகாண முழுமையும் அளவிலாச் சொற்பொழிவுகள் அங்கங்கும் நிகழ்த்தி நம்மவர்களைப் புலால் மறுக்கும்படி செய்தல் வேண்டும். விரிவுரைகட்குப் படக்காட்சிக் கருவிகளும் (Magic Lantern) பயன்படுத்துதல் வேண்டும்.
நூல் : ஏன் புலால் மறுத்தல் வேண்டும்? (1930) ஒரு வேண்டுகோள் – மேலட்டையின் மூன்றாம் பக்கம்
நூலாசிரியர் : பண்டிதர் பாலசுந்தரம் பிள்ளை
★
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
No comments:
Post a Comment