(தமிழ்ச்சொல்லாக்கம் 677-682  தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 683-687

(சொல்மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளனமொழி மாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

683. Carbonic Acid gas — நச்சுக் காற்று

நாமும் ஏனைச் சிற்றுயிர்களும் உட்கொள்ளும் உயிர்க்காற்று உள்ளே சென்றவுடன் அழுக்காகிப் பின் வெளிப்பட்டு விடுகின்றது. அப்போது அது நச்சுக் காற்றாய் (Carbonic Acid gas) மாறி விடும். இந்நச்சுக் காற்றையே திரும்பவும் நாம் உட்கொள்வமாயின் உடனே இறக்க வேண்டுவதுதான்.

நூல்        :               ஏன் புலால் மறுத்தல் வேண்டும்? (1930) பக்கம் – 53

நூலாசிரியர்         :               பண்டிதர் பாலசுந்தரம் பிள்ளை

684. Criminal Code – குற்றச் சட்டம்

மெக்காலே ‘சட்டம் இயற்றும் குழு’வின் தலைவராக இருந்து, இந்தியாவில் குற்றச் சட்டம் (Criminal Code) இயற்றினார். அச்சட்டம் இன்றும் இந்திய அறிஞர் அனைவராலும் பாராட்டப்படுகின்றது.

நூல்        :               மெக்காலே பிரபு (1930) பக்கம் :55

நூலாசிரியர்         :               பி. எசு. இராசன்

685. Advocate General – தலைமை வழக்கறிஞர்

மெககாலே, இந்தியாவின் நிலை, சீதோசுண அளவு, மக்கள் குணம், வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றி எல்லாம் அறிந்து கொள்ள முயன்றார். வங்காளத்தில் தலைமை வழக்கறிஞராய் (Advocate General) இருந்து இந்தியாவைப் பற்றிய அனுபவம் மிக்காராய் இலண்டனில் வந்திருந்த போபசு சுமித் என்பவரிடம் சென்று பலவாறு விசாரித்தார்.

நூல்        :               மெக்காலே பிரபு (1930) பக்கம் : 45, 46

நூலாசிரியர்         :               பி. எசு. இராசன்

686.Fellow ship – உறுப்பினர் உரிமை

மெக்காலே, கேம்பிரிட்சு சருவ கலாசாலையால் நன்கு கெளரவிக்கப்பட்டது. அவருக்கு இருமுறை அத்தியட்சகரின் பொற்பதக்கம் அளிக்கப்பட்டார். இந்த இரு முறைகளிலும் அவர் அழகிய கவிதைகள் புனைந்ததற்காகவே பொற் பதக்கங்கள் பெற்றார். அவருக்கு, இவற்றுடன் கிரேவன் சருவகலாசாலை உபகாரச் சம்பளமும் கிடைத்தது. இவை அனைத்தும் அவருக்குப் பெருஞ் சிறப்பை அளித்தன. சில ஆண்டுகள் கழிந்த பின்னர் அவருக்குச் சருவ கலாசாலையின் உறுப்பினர் உரிமை (Fellowship) கிடைத்தது.

மேற்படி நூல் : பக்கம் 13, 14

687. Honey Moon – தேன்மதி

தேன்மதி என்பது ஆங்கிலத்தில் ஃகனிமூன் என்னும் வார்த்தையின் நேர் தமிழ் மொழி பெயர்ப்பாகும். ஆங்கிலத்தில் இவ்வார்த்தையின் அருத்தம் யாதாயினும் ஆகுக. அதனுடைய தமிழ்மொழி பெயர்ப்பு மிக்க அழகாகவும் ஆழ்ந்த கருத்தைக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கிறது. தேன்மதி என்றால் கன்னி யென்னும் பதத்திற்கு இசைய, அப்பருவத்தில் நடந்து கொள்ள வேண்டிய நெறிக்குச் சிறிதும் பங்கமின்றி யொழுகிய ஒரு பெண்ணும், உண்மைப் பிரமசாரியாக விளங்கும் ஓர் ஆணும், பெற்றோர் மற்றோரால் விவாகம் எனப்படும் சடங்கின் வழியதாக இன்ப சுகத்தை அனுபவித்தலே யாகும்.

இதழ்     :               விவேக போதினி, சூலை 1930

தொகுதி               :               22 பகுதி – 7

கட்டுரையாசிரியர்            :               ச. தா. மூர்த்தி முதலியார்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்