(வெருளி நோய்கள் 494-498: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 499-503
- எபிரேயர் வெருளி-Judeophobia
எபிரேயர்/(இ)யூதர்கள்(Jews) மீதும் இவர்கள் தொடர்பானவை மீதும் ஏற்படும் அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் எபிரேயர் வெருளி.
எபிரேய இனத்தைச் சேர்ந்த (இ)யூதம் என்னும் சமயத்தைப் பின்பற்றும் இவர்கள் மீது ஈவிரக்கமற்றவர்கள், அளவுகடந்து சூழ்ச்சி செய்து ஏமாற்றுபவர்கள், எவரையும் எளிதில் நம்பாதவர்கள் என்றெல்லாம் எண்ணுபவர்கள், இவர்கள் மீது வெறுப்பும் அச்சமும் கொள்கின்றனர்.
1096இல் நடைபெற்ற முதலாம் சிலுவைப் போர், 1290இல் பிரித்தானியாவிலிருந்து எபிரேயர் /(இ)யூதர்கள் வெளியேற்றப் பட்டமை, 1391 இல் எசுபானியாவில் எபிரேயர் / (இ)யூதப் படுகொலை நிகழ்ந்தது, 1492இல் எசுபானியாவிலிருந்து வெளியேற்றப்பட்டமை, 1497 இல் போர்த்துக்கல்லிலிருந்து வெளியேற்றப்பட்டமை முதலான (இ)யூதக் கொள்கை எதிர்ப்பு நிகழ்வுகள் பல நூற்றாண்டுகளாக எபிரேய /(இ)யூத வெருளி பல நாடுகளில் இருந்து வருவதை உணர்த்துகின்றன.
செமிட்டிய இனத்தின் ஒரு பிரிவினரே எபிரேயர்கள் / (இ)யூதர்கள் என்றாலும் எபிரேய / (இ)யூத வெருளி செமிட்டிய வெறுப்பாகவும் மாறி உள்ளது.
பன்னூறு ஆண்டுகளாக எபிரேயர்கள் / (இ)யூதர்கள் அடக்கி ஆளப்பட்டவர்கள். இட்லரால் பெரிதும் துன்புற்று இன அழிப்பிற்கும் ஆளாயினர். எனினும் 1949 இல் நடைபெற்ற இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உலகில் சிதறிக்கிடந்த எபிரேயர்கள்/யூதர்கள் ஒன்றிணைந்து தங்களுக்கென இசுரேல் என்னும்நாட்டை உருவாக்கிக் கொண்டனர். எனினும் இவர்களின் சில வன்முறைகளால் பிற நாட்டு மக்களில் ஒரு சாராருக்கு இவர்கள் மீது வெறுப்பு உள்ளது. எனினும் இவர்கள் மீது மட்டும்தான் வெறுப்பு உள்ளதாக எண்ண வேண்டா. ஆங்கிலேய வெருளி, செருமானிய வெருளி எனப் பல நாட்டவர் அல்லது இனத்தவர் மீதும் அவர்கள் தொடர்பானவை மீதும் வெறுப்பும் பேரச்சமும் உள்ளன.
00
- எமிய வெருளி- Eremo phobia /Eremiphobia / Eremiophobia
ஒதுக்குப்புறமாகப் பிறரிடம் தொடர்பு கொள்ள விரும்பாமல் தனித்து இருப்பது குறித்துப் பெரிதும் அஞ்சுவது எமிய வெருளி
தமிழில் தனிமையைக் குறிக்கும் சொல் எமி.
எமியேம் துணிந்த ஏமம் சால் அருவினை என்னும் குறிஞ்சிப்பாட்டு(32) அடியில், தனித்து இருத்தல் குறிக்கப்பெறுகிறது.
வாவல்
பழுமரம் படரும் பையுண் மாலை
எமிய மாக வீங்குத் துறந்தோர்
தமிய ராக (குறுந்தொகை 172.1-4)
என்னும் பாடலடிகளில் கச்சிப்பேட்டு நன்னாகையார், பழுத்த மரங்களை நினைத்து வெளவால்கள் செல்லும் தனியராய் இருப்பவர்க்குத் துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில், எமியம் ஆக அஃதாவது தமியேமாகும்படி உள்ளதாகத் தலைமகள் கூறுவதாகக் கூறி உள்ளார். எமியர் என்பது தமியராய் இருப்பதைக் குறிப்பதால் இங்கே கையாளப்பட்டுள்ளது.
erem என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தனித்து இருத்தல்.
00
- எரி உலவி வெருளி – lomophobia
வியாழனின் எரி உலவி(Io)குறித்த அளவுகடந்த பேரச்சம் எரி உலவி வெருளி.
வியாழன் கோளைச் சுற்றும் 67 உலவிகளைக் கண்டறிந்துள்ளனர். இன்னும் சில ஆய்வில் உள்ளன. கண்டறிந்தவற்றுள் எரிமலைத்தன்மை உடைய ஐஓ/(உ)லோ (IO/LO) என்பதாகும். கிரேக்கக் கதையில் சீயசு (Zeus) காதலித்துக் கெடுத்து ஈனாப்பசுவாக(heifer) மாற்றப்பட்ட கன்னியின் பெயர் என்பதாகும். அதனையே இதற்குச் சூட்டியுள்ளனர். பழந்தமிழர் கோள்களைஅறிந்து அதன் தன்மைகளுக்கேற்பவே பெயர் சூட்டியுள்ளனர். எனவே, நாம் எரிமலைத் தன்மை மிகுதியம் உடைய இவ்வுலவியை எரி உலவி எனலாம்.
00
- எரி வளி மிதி கட்டை வெருளி – Gaspedalphobia
எரி வளி மிதி கட்டை குறித்த வரம்பற்ற பேரச்சம் எரி வளி மிதி கட்டை வெருளி.
இது முடுக்கி அல்லது நெருக்கு மிதி(throttle pedal) என்றும் அழைக்கப்பெறுகிறது.
00 - எரிமலை வெருளி – Volcanophobia
எரிமலை(volcano)பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் எரிமலை வெருளி.
எரிமலையால் ஏற்பட்ட பேரழிவுகளை அறிந்தவர்கள், இவைபற்றிய செய்தி படித்தவர்கள்,படம் பார்ப்பவர்கள், எரிமலை வெடிப்பால் அழிந்த உறவினர்கள், நண்பர்கள் முதலானவர்கள் பற்றி அறிந்தவர்கள் பேரச்சத்திற்கு ஆளாகிறார்கள். எரிமலைப் பகுதிகளுக்கு அருகில் உள்ளவர்களுக்கு எரிமலை வெருளி மிகுதியாக வருகிறது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் தொகுதி 2/5
No comments:
Post a Comment