(வெருளி அறிவியல் 5 இன் தொடர்ச்சி)

வெருளி அறிவியல்  –  6

12. அம்மண வெருளி Dishabiliophobia/Gymnophobia /Nudophobia
அம்மணம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அம்மண வெருளி.
அம்மணமாக இருப்பது அல்லது தன்னுடைய அம்மண நிலையைப் பிறர் பார்ப்பது பிறரின் அம்மண நிலையைப் பார்ப்பது தொடர்பான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் கொண்டிருப்பர்.
gymnos என்னும் கிரேக்கச் சொல்லிற்கு  உடுப்பற்ற எனப் பொருள்.
(gymnasion என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உடற்பயிற்சிக்கான இடம் எனப் பொருள். gymnasein என்றால் உடையின்றிப் பயிற்சி எனப் பொருள்.)
ஆடையிலி வெருளி(Dishabiliophobia), உடுப்பின்மை(நிருவாண) வெருளி (Gymnophobia), அம்மண வெருளி(Nudophobia) எனத் தனித்தனியாகக் கூறுவதை விட அம்மண வெருளி என்றே சொல்லலாம்.
ஆடை அவிழ்ப்பு வெருளி(exuerphobia) என்பது மருத்துவ நோக்கில் ஆடையை அவிழ்க்கச் சொல்வது குறித்தது.
dis என்னும் இலத்தீன் சொல்லிற்குப் பிரி எனப்பொருள். habil என்னும் இலத்தீன் சொல்லிற்கு ஆடை எனப் பொருள்.
00
13. அமைதி வெருளி-Sedatephobia
அமைதிச் சூழலில் உருவாகும் தேவையற்ற அச்சமே அமைதி வெருளி.
அமைதி ஆயிரம் சொற்களை உணர்த்தும் என்பர். ஆனால் அமைதியான சூழலே சிலருக்கு தேவையற்ற சிந்தனைகளுக்கு வழி வகுத்து அச்சம் ஏற்படுத்தும். புயலுக்குப்பின்தான் அமைதி என்பர். ஆனால், அமைதியான சூழலே சிலருக்குப் பேரிடர் வரப்போகிறது  என எண்ணச்செய்து மனத்தில் கலவரத்தை உண்டு பண்ணிப் பேரச்சத்திற்குத் தள்ளிவிடும். தனிமைச் சூழல் அமைதியைத் தருவதால் அதுவே பேரச்சம் தரவும் வாய்ப்பாகிவிடுகிறது.
sedate என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் அமைதி அல்லது உறக்கம் அல்லது இறப்பு.
00
14. அயர்ச்சி வெருளி– Copophobia/Kopophobia
அயர்ச்சியின் பொழுது ஏற்படும் தேவையற்ற பேரச்சம் அயர்ச்சி வெருளி.
அயர்ச்சி, களைப்பு அல்லது சோர்வு ஏற்பட்டால் நோய் ஏற்படும், உடலுக்கு முடியாமல் போகும், படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாமல் போய்விடும், இவற்றால் மேற்கொண்டு வேலைபார்க்க முடியாமல் துன்பப்பட  நேரிடும் என்று கற்பனைகளை வளர்த்துக் கொண்டு பேரச்சம் கொள்வர். 
களைப்பால் வேலையைக் குறித்த காலத்தில் முடிக்க முடியாது, குறிப்பிட்ட நேரத்திற்குள் படிக்க முடியாது குறித்த நேரத்தில் முடிக்க முடியாமையால் வரவேண்டிய பணமோ வெற்றியோ வராது போய்விடும் களைப்பால் உடல் நலக் கேடு ஏற்படும் மருத்துவச் செலவு ஏற்படும் என்று களைப்பு தொடர்பாகப் பேரச்சம் கொள்வர்.
kopo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அயர்ச்சி/சோர்வு.
00
15. அயல்மனை வெருளி / கழிவறை வெருளி – Expellophobia
அயலார் வீடுகளில கழிவறைக்குச் செல்வதற்கு ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் (அயல்) கழிவறை வெருளி.
அடுத்தவர் வீடுகளில் கழிவறைக்குச் செல்வதற்குக் கூச்சம் கலந்த அச்சம் சிலருக்கு ஏற்படும். கழிவறை தூய்மையின்மையாக இருக்கும் என்ற கவலையிலும் சிலருக்கு அடுத்தவர் இல்ல அல்லது வெளியிடங்களில் உள்ள கழிவறைகளைப் பயன்படுத்த பேரச்சம் வரும். கழிவறைகளில் கூடுதல் நேரம் இருப்பவர்களும் நோயுற்று இருப்பவர்களும் அடுத்தவர் இல்லக் கழிவறைகளுக்குச் செல்ல அஞ்சுவர். தம் வீட்டுக் கழிவறைகளைப் பயன்படுத்த இவர்களுக்கு அச்சம் இருப்பதில்லை.
பொதுவாக இதனை அயல்மனை வெருளி என்னும் பொருளில் கையாண்டாலும் அயல் மனையில் உள்ள கழிவறைக்குச் செல்ல ஏற்படும் பெருங்கவலை என்பதால் கழிவறை வெருளி எனலாம்.
பிறர் வீடுகளுக்குச் சென்றால் சீட்டாட்டம் ஆட நேரிடும் என அளவுகடந்த பேரச்சம் கொள்வதையும்  Expellophobia என்றுதான் கூறுகின்றனர். இதனை அயல்மனை வெருளி எனலாம்.
Expello என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் வெளியேற்று.
00
16. அயலக மருத்துவர் வெருளி – xeniatrophobia
அயல்நாட்டு மருத்துவர்கள் மீதான அளவுகடந்த பேரச்சம் அயலக மருத்துவர் வெருளி.
சிலர் பழகிய மருத்துவர் தவிர வேறு மருத்துவர்களிடம் செல்ல மாட்டார்கள். அவர் வெளியூர் சென்றிருந்தாலும் அவர் வரட்டும் என, வந்தபின்னரே பார்ப்பர். அதைப்போன்றுதான் அயல்நாட்டு மருத்துவர்கள் குறித்த அச்சமும் சிலருக்கு ஏற்படுகிறது. நாட்டுச் சூழலுக்கும் உடல்நிலைச் சூழலுக்கும் அயல்நாட்டு மருத்துவர்கள் பாெருந்தி வர மாட்டார்கள் எனக் கவலைப்படுவர். புதிய மருத்துவ முறைகளால் கூடுதல் கட்டணம்  கொடுக்க வேண்டி வரும், பொருள் நிலைக்கேற்ப அமையாது என்பதுபோன்ற அச்சங்களும் சிலருக்கு வரும்.
அயலார் வெருளி(Xenophobia/Zenophobia), மருத்துவர் வெருளி(iatrophobia) போன்ற வெருளிதான் இதுவும்.
Xeno என்னும் கிரேக்கச் சொல்லிற்கு அயல் நாடு, அயல்நாட்டிற்குரிய எனப் பொருள்கள்.
iatro என்னும் கிரேக்கச் சொல்லிற்கு மருத்துவர் எனப் பொருள்.
00
17. அயலார் வெருளி-Xenophobia/Zenophobia
அயலாரைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் அயலார் வெருளி
அயல்(27), அயலிலாட்டி(3), அயலிற்பெண்டிர்(1), அயலார்(2), அயலோர்(3), அயல(9), அயலது(25) ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களி்ல் பயன்படுத்தப்பட்டுள்ளன. போர்க்காலத்தில் அயல் நாட்டார், அயல்வீரர்கள் வரும்பொழுது நாடு தோல்வியைத் தழுவினால் அயலவர் மீது அச்சம் கொண்டுள்ளனர்.
அயல் நாட்டினர், அயல் மொழியினர், அயல் இனத்தவர், அயல் ஊரினர்,உறவும் நட்புமாய் அமையாத அயலார் என அயலார்கள் மீது சிலர் தேவையற்ற பேரச்சம் கொள்வர்.
xenos என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் அயல்நாட்டினர்/முன்பின் அறியாதவர்
00
(தொடரும்)



அம்மண வெருளி
அம்மண வெருளி
அமைதி வெருளி
அமைதி வெருளி
அயர்ச்சி வெருளி
அயர்ச்சி வெருளி
அயல்மனை வெருளி / கழிவறை வெருளி
அயல்மனை வெருளி / கழிவறை வெருளி
அயலக மருத்துவர் வெருளி
அயலக மருத்துவர் வெருளி
அயலார் வெருளி
அயலார் வெருளி
(காண்க – வெருளி அறிவியல் 7)