(வெருளி அறிவியல் 7 இன் தொடர்ச்சி)

வெருளி அறிவியல்  –  8

 23. அழிவு வெருளி-Atephobia
அழிவு பற்றிய இயல்பிற்கு மீறிய பேரச்சம்  அழிவு வெருளி
அழி(74), அழிக்குநர்(1), அழிக்கும்(6), அழித்த(8), அழித்தரும்(1), அழித்தலின்(2), அழித்தான்(1), அழித்து(15), அழிதக்கன்று(2), அழிதக்காள்(1), அழிதக(6), அழிதகவு(1), அழிதரு(2), அழிந்த(14), அழிந்தன்று(1), அழிந்தனள்(1), அழிந்து(37), அழிந்தோர்(3), அழிப்ப(3), அழிப்படுத்த(1), அழிபவள் (1), அழிபு(4), அழிய(26), அழியர்(1), அழியல்(2), அழியலன்(1), அழியா(3), அழியாதி(1), அழியாது(1), அழியின்(1), அழியுநர்(1), அழியும்(4), அழிவது(3), அழிவல்(1), அழிவு(14), அழீஇ(1) ஆகிய சொற்கள் அழிவு தொடர்பாகச் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன.
 மனையியலில் destroy அழி, நிலைகுலை, தகர எனவும், பொறிநுட்பவியலில் destroyer அழிகலன் எனவும் பயன்படுத்துகின்றனர். எனினும் அழிவு பற்றிய பேரச்சம் குறித்த கலைச் சொல் இல்லை.
குறிப்பிட்ட நாளில் பெரு வெள்ளம் வந்து உலகம் அழியும், நிலநடுக்கத்தால் உலக மக்கள் அனைவரும் மடிவார்கள் என்றெல்லாம் அஞ்சுவது பலரின் வழக்கமாக உள்ளது. அவர்கள் அஞ்சும் நாள்வந்த பின்னரும் உலகம் இருக்கும். என்றாலும் வேறொரு நாளில் உலகம் அழியும் என மீண்டும் எண்ணத் தொடங்கிப் பிறரையும் அச்சுறுத்துவார்கள்.
00
24. அழுக்கு வெருளி- Automysophobia
மாசு வெருளி/தூசு வெருளி/ நுண்மி வெருளி/ தொற்றுவெருளி குப்பை வெருளி – Misophobia/ Mysophobia /Molysmophobia/Molysomophobia/Verminophobia/ Amathophobia/Koniophobia;
நோய் நுண்மி வெருளி-Bacillophobia, Microbiophobia, Bacteriophobia/ germophobia, germaphobia
தூய்மையின்மை அல்லது துப்புரவின்மையால் -அஃதாவது அழுக்கினால் – ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் அழுக்கு வெருளி.
 அழுக்கு’ என்பது சங்கக்காலத்திலேயே வழங்கிய சொல்.
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் (புறநானூறு : 126:11) என மலையமான் திருமுடிக் காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடும் பொழுது கபிலர் பற்றிக் குறிக்கின்றார். இங்கே மன அழுக்கின்மை போற்றப்படுகிறது.
பின்னர் உரைகளிலும் இன்றளவில் மக்கள் வழக்கிலும் அழுக்கு, அப்பழுக்கு என்பன இடம் பெறுகின்றன.
அழுக்கு வெருளி உடையவர்கள்  அழுக்கு மீதான பேரச்சம் அல்லது வெறுப்பால் ஓயாமல் கை கழுவுவர் அல்லது அடிக்கடி குளிப்பர்.
அழுக்கின் மீதான பெருவெறுப்பால் நலக்கேடு ஏற்பட்டுத் துன்பங்களுக்கு ஆளாக அல்லது உயிரிழக்க நேரிடும் என்ற தேவையற்ற பேரச்சமே இவர்களை ஆட்டுவிக்கும்.
தூசு வெருளி, மாசு வெருளி/தூசு வெருளிநுண்மி வெருளிதொற்றுவெருளி,நோய் நுண்மி வெருளி என முன்பு தனித்தனியாகக் குறிப்பிட்டிருந்தோம் வெவ்வேறு பெயர்களில் குறிக்கப்படுவன ஒன்றைத்தான் என்பதால்,  இப்பொழுது இணைத்துவிட்டோம்.
அழுக்கின் பிறப்பிடங்களில் ஒன்றாகிய குப்பை பற்றிய பேரச்சம் குப்பை வெருளி(Rupophobia) எனப்படுகிறது. இதனையும் அழுக்கு வெருளியுடன் இணைத்துள்ளோம்.
ஒரு பெயரை மட்டும் குறிப்பிட்டால் அது வேறு, இது வேறு என்பதுபோல் பேசவோ கருதவோ கூடும். எனவே, மாற்றுப்பெயர்கைளயும் இங்கே குறித்துள்ளோம்.
auto  என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் தான்/தானே. myso  என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அழுக்கு.
amathos,  koni  ஆகிய கிரேக்கச் சொற்களின் பொருள் தூசி.
musos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தூய்மையற்ற என்பதாகும்.
molysmo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அருவருப்பான அழுக்கு.
00
25. அழைப்பக வெருளி – coetusermophobia
அழைப்பு மையங்கள் மீதான தேவையற்ற பேரச்சம் அழைப்பக வெருளி.
இந்த உதவி வேண்டுமா, அந்த உதவி வேண்டுமா, இதற்குக் கடன் வேண்டுமா, அதற்குக் கடன் வேண்டுமா என்பனேபால் பணி மிகுந்துள்ள  நேரங்களிலும் கால நேரம் பார்க்காமலும் அழைப்பு மையங்களில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. இதனால் எரிச்சலடைவோர் மிகுதி. இதனால் இவர்களிடமிருந்து மட்டுமல்ல, தொலைபேசி மணி ஒலித்தாலே இம்மையங்களில் இருந்துதான் அழைப்பு வந்திருக்கும் என நடுங்குவோரும் உள்ளனர்.
இதற்கு மறுதலையாக அழைப்பு மையங்களில் வாடிக்கையாளர் பணி மையங்களில் பணியாற்றுவோர்  பல்வகை உணர்ச்சி மிகுந்த வாடிக்கையாளர்களை நாளும் எதிர்கொண்டு அழைப்புகள் கண்டு அஞ்சும் போக்கும் உள்ளது.
 00
26. அளறு வெருளிபாழ்வினையர் உலகு வெருளிநரக வெருளி– Hadephobia/Stygiophobia/Stigiophobia
அளறு/நரகம் தொடர்பான வரம்புமீறிய பேரச்சமே அளறு வெருளி.
எலலாச்சமய நூல்களிலும் குற்றம் இழைத்தவர்கள், பாவம் செய்தவர்கள் இறப்பிற்குப்பின் அளறுலகு/நரகுலகு செல்வர் என்றும் அங்கே கடுமையான தண்டனைகள் பாவியருக்கு வழங்கப்பெறும் என்றும் கதைகள் உள்ளன. இதனை அறிந்து அங்கே இறப்பிற்குப்பின் செல்ல நேரிடும் என்று அளவு கடந்த பேரச்சம் கொள்வர் இத்தகையர்.
மக்கள் தவறுசெய்யாமல் இருக்கத்தான் இத்தகைய கதைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், இதனைநம்பி மக்கள் தவறு இழைக்காமல் இருந்தால் இவ்வுலகம் பண்பாடு மிக்கதாக,அமைதியானதாக, ஒற்றுமையாக இருந்திருக்கும். பாவக்கதைகளை விளக்குபவர்களே பாவம் செய்பவர்களாகத்தான் இருக்கின்றனர். இருப்பினும் சிறுபான்மையர் ஒழுக்க வரம்பிற்குள் வாழ இக்கதைகள் உதவுகின்றன. அவ்வாறு வாழ விரும்புவோரே அளறு வெருளிக்கும் ஆளாகின்றனர்.
Hades என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் அளறு/நரகம்
stygius என்னும் இலத்தீன் சொல்லிற்கும் /Stúgios  என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கும்  நரகம் தொடர்பான என்று பொருள். [சுடைக்சு(Styx) என்பது நிலஉலகத்தையும்நரகமாகிய கீழுலகத்தையும் பிரிக்கும் ஆறு.இதன் தொடர்பான பேரச்சத்தை இச்சொல் குறிக்கிறது.]
00
(தொடரும்)
அழிவு வெருளி
அழிவு வெருளி
அழுக்கு வெருளி
அழுக்கு வெருளி
அழைப்பக வெருளி
அழைப்பக வெருளி
அளறு வெருளி/ பாழ்வினையர் உலகு வெருளி/ நரக வெருளி
அளறு வெருளி/ பாழ்வினையர் உலகு வெருளி/ நரக வெருளி