அகரமுதல
(வெருளி அறிவியல் 6 இன் தொடர்ச்சி)
வெருளி அறிவியல் – 7
18. அயலிந்தியர் வெருளி-Mikatikoindicaphobia
அயல்நாட்டில் வாழும் இந்தியர்கள் (NRI) தொடர்பில் ஏற்படும் தேவையற்ற அச்சம் அயலுறை இந்தியர்கள் வெருளி. சுருக்கமாக அயலிந்தியர் வெருளி எனலாம்.
வெளிநாட்டிலிருந்து செல்வம் திரட்டி வந்து, இங்கே நம் தொழிலைச் சிதைப்பார்கள், செல்வத்தைத் தேய்ப்பாரகள், செல்வாக்கை ஒடுக்குவார்கள், வளர்ச்சியை அழிப்பார்கள் என்றெலலாம் தேவையற்ற கவலையும் அளவு கடந்த வெறுப்பும் கொள்வர்.
Indica என்பது இலத்தீனிலும் கிரேக்கத்திலும் இந்தியாவைக் குறிப்பிடும் சொல்.
00
19. அரசியலர் வெருளி-Politicophobia/ civiliphobia
அரசியல்வாதிகள் அல்லது அரசியல்மீது ஏற்படும் அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் அரசியலர் வெருளி.
அடாவடித்தனம்செய்து மக்களைத் துன்புறுத்தும் அல்லது அச்சுறுத்தும் அரசியல்வாதிகள் உள்ளனர். இதனால் எந்த அரசியல்வாதியைப் பார்த்தாலும் அல்லது அரசியல் என்றாலே சிலருக்கு அச்சம் ஏற்படும்.
அரசியல்வாதிகள் சிலர் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தல், குறுக்கு வழிகளில் பணம் சம்பாதித்தல், தன்னலம், தம் குடும்பநலன் ஆகியவற்றுக்காகப் பிறரை அடக்குமுறைக்கு ஆளாக்குதல் போன்றவற்றை எண்ணி வேறுபாடில்லாது எல்லா அரசியல்வாதிகள் மீதும் அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் கொள்வர்.
அரசியல்வாதிகள் சிலர் செய்யும் அடாவடி, அட்டூழியம், ஒழுக்கக்கேடு, முறைகேடு, ஊழல், வன்முறை போன்றவற்றால் எல்லா அரசியலர் மீதும் சிலருக்குப் பேரச்சம் விளைவது இயற்கைதான். நாடகம், தொலைக்காட்சி, திரைப்படம், கதைகள் இத்தகைய காட்சிகளைக் காண்பதால் வெறுப்பு மேலும் வளர்கிறது.
அரசியல்வாதி வெருளி(civiliphobia) எனப் புதிய வெருளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அரசியலர் வெருளிக்கும் அரசியல்வாதி வெருளிகும் வேறுபாடு இல்லை என்பதால் அதனை இதிலேயே இணைத்துள்ளேன்.
00
20. அயில் வெருளி -Enetophobia
ஊசி அல்லது கூரிய முனை உடைய பொருள்களைப் பார்த்தால் ஏற்படும் இயல்பிற்கு மீறிய பேரச்சம் அயில்/ ஊசி வெருளி.
அயில் என்றால் கூர்மை, (கூர்மையான) கைவேல்,
இரும்பு, முதலான பல பொருள்கள் சங்கப் பாடல்களில் உள்ளன. இங்கு நாம் கூரிய முனைப் பொருள்கள் என்று கையாள்கிறோம்.
ஈட்டி, வேல்கம்பு, எஃகுமுனை கொண்ட வேட்டை எறிகருவி, படைவீரர் எறிவேல், மீனெறி வேல், மீன் குத்தும் ஈட்டி, ஊசி முதலான கூர் முனைப் பொருள்கள் சங்கக் காலத்தில் இருந்துள்ளன.
கூர்மையான நுனி உடைய யானையின் தந்தம் அயில் நுனை மருப்பு (முல்லைப்பாட்டு 34) எனப்படுகிறது.
கூரிய வேலைப் பகைவர் எறியும் பொழுது, கண்ணை இமைத்தால் தோல்வி என்று அஞ்சாது எதிர்நோக்கும் வீரர்கள் தமிழகத்தில் இருந்துள்ளனர்.
விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு என்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள் 775). இப்பொழுது காலம் மாறிவிட்டது.
ஊசி அல்லது கூரிய பொருள்கள் குத்தி,] குருதிக்காயம் ஏற்பட்டிருந்தாலோ பிறருக்குக் காயம் ஏற்பட்டதைக் கண்டிருந்தாலோ இளம்பருவத்தில் வரும் அச்சம் கூரிய பொருள்கள் மீதான பேரச்சத்தை வளர்க்கிறது.
கூர் வெருளி(Aichmophobia),நுனை வெருளி(Belonephobia), ஊசி வெருளி(needle phobia) ஆகியவற்றுடன் ஒப்புமை உடையது.
00
21. அலை பேசி வெருளி-Nomophobia (no-mobile-phone phobia)
அலைபேசியைப் பயன்படுத்த முடியாத சூழலில் ஏற்படும் தேவையற்ற பேரச்சமே அலைபேசி வெருளி.
அலை இணைப்பு கிடைக்காமல் அல்லது மின்னேற்றம் இன்மையால் அல்லது வேறு சூழலில் அலைபேசியைப் பயன்படுத்த முடியாமல் போனால் இதனைப் பயன்படுத்துவோர் அடையும் கிலி, மனத் தடுமாற்றம், காரணமில்லாப் பேரச்சம் முதலானவை அலைபேசி வெருளியாக மாறுகிறது. அலைபேசி இயங்கா வெருளி என்பதைச் சுருக்கமாக அலைபேசி வெருளி எனக் குறிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் அல்லது இளைஞர்கள் அலைபேசியைப் பயன்படுத்தும் பொழுது அவர்களின் பெற்றோர் முதலான உறவினர்களுக்கு இவர்கள் தவறாகப் பயன்படுத்தி வாழ்க்கையை அழித்துக் கொள்வார்களோ என்ற பெரும் அச்சம், மனத்தைப்பாதிக்கும் விளையாட்டு அல்லது பாலியல் படங்கள் மூலம் மனச்சிதைவிற்கு ஆளாவார்களோ என்ற பேரச்சம் எழுவதால் அலைபேசி வெருளி எனப் பொதுவாகச் சொல்வதும் பொருத்தம்தான்.
ஐக்கிய இங்கிலாந்தில் பாதிக்கு மேற்பட்டோர் அலைபேசி வெருளியால் துன்புறு கிறார்களாம்.
இதன் ஆங்கிலச்சொல் Nomophobia என்பது இரு சொற்கள் பகுதி கலந்து உருவான ஒட்டுச்சொல்(portmanteau). யூகோவு(YouGov) என்பவர் 2008 இல் இதனைக் கட்டுரையில் குறிப்பிட்ட பொழுது தொலைபேசி இயங்காத பொழுது53 விழுக்காட்டினர் பாதிப்பிற்குள்ளாவதாகத் தெரிவித்து இருந்தார். இப்பொழுது இந்த அளவு கூடியுள்ளது.
00
22. அவைக்கோ வெருளி(போப்பு வெருளி)-Papaphobia
போப்பாண்டவர் என அழைக்கப்பெறும் அவைக்கோ மீதான தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் அவைக்கோ வெருளி.
உரோமன் கத்தோலிக்க திரு அவையின் தலைவர் போப்பு அல்லது போப்பாண்டவர் என அழைக்கப்பெறுகிறார். திரு அவையின் தலைவர் என்ற முறையில் இங்கே அவைக்கோ எனச் சுட்டப்பட்டுள்ளது. திருத்தந்தை என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.
துறவியர் வெருளி(Hierophobia) சமயவர் வெருளி(Ecclesiaphobia / Ecclesiophobia) தூயவர் வெருளி(Hagiophobia) போன்ற சமயத்தவர் சாரந்த வெருளி இது.
papa என்னும் இலத்தீன் சொல்லிற்கு அவைக்கோ / ‘போப்பு’ எனப் பொருள்.
00
(தொடரும்)
(காண்க – வெருளி அறிவியல் 8)
No comments:
Post a Comment