(வெருளி நோய்கள் 1526-1530 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1526-1530
- நெருப்புலவி வெருளி – Iomophobia
வியாழனின் உட்புற உலவியான நெருப்பு உலவி(Io)தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நெருப்புலவி வெருளி.
Io என்பது வியாழனின் மூன்றாவது பெரிய உலவி(moon)யாகும். மேலும் இது நமது சூரிய மண்டலத்திலேயே மிகவும் எரிமலைச் செயல்பாடு மிக்க கோளாகும். எனவே நெருப்புபோல் மிகுதியாக வெப்பமாக இருக்கும்.
வியாழனின் ஆதிக்கத்தால் உடலில் கொழுப்பு, சருக்கரை அளவு, உடல் எடை அதிகரிக்கும்; ஞாபக மறதியும் குழப்பமும் மனக்கவலையும் ஏற்படும் எனக் கணியன்கள்(சோதிடர்கள்) கூறுகின்றனர். இதை நம்புவோர் வியானின் உலவி குறித்தும் பேரச்சம் கொள்கின்றனர்.
00
- நெருப்பு வெருளி-Pyrophobia/Arsonphobia/Arsonophobia
தீ குறித்த இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் நெருப்பு வெருளி.
இதனைத் தீ வெருளி என்றால் தீய வெருளி எனப் பொருள் கொள்ளலாம் என்பதால் நெருப்பு வெருளி என்கிறோம். நெருப்பு வெருளி உடையோர், தீப்பெட்டி, வெண்சுருட்டு கொளுத்தி, முதலியவற்றைப் பயன்படுத்தவும் தீ உள்ள பகுதிக்கு அருகில் செல்லவும் இத்தகையோர் மிகவும் அஞ்சுவர்.
pyro- என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் தீ / நெருப்பு.
00
- நெவாடா வெருளி – Nevadaphobia
நெவாடா(Nevada) மாநிலம் குறித்த வரம்பற்ற பேரச்சம் நெவாடா வெருளி.
நெவாடா ஐக்கிய அமெரிக்காவில் 36 ஆவதாக 1864 இல் இணைந்த மாநிலம். இதன் தலைநகரம் கார்சன்(Carson).
00
- நேயர் வெருளி – Laudaphobia
புகழவும் போற்றவும் செய்யும் நேயர்கள்(இரசிகர்கள்) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நேயர் வெருளி.
வெவ்வேறு கலைஞர்களின் நேயர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்வதையும் அதனால் அவர்களது போற்றுதலுக்கு உரியவர்கள் அஞ்சுவதையும் திரைப்படவெளியீடுகளின் பொழுது நாம் பார்க்கிறோம். இந்த வெருளி இதனால் துன்புறும் பொதுமக்களுக்கும் மிகுதியாக வருகிறது.
கலைஞர்கள் மீதுஅளவுகடந்த வெறியார்ந்த உணர்வு மிக்கவர்கள் ஆங்கிலத்தில் அப்பொருளை உணர்த்தும் fanatic என்ற சொல்லால் fanatics எனக் குறிக்கப்பெற்றனர். பின்னர் இதைச் சுருக்கி fan என்றனர். தமிழில் இரசிகர்கள் என்றனர் . பின் அது தமிழ்ச்சொல் இல்லை என்பதால், மூலச் சொல்லை உணராமல் நேர்பொருளாக விசிறி என்றனர். இது தவறான சொல்லாட்சியாகும். எனவே, இரசிப்பு என்பதன் அடிப்படையில் சுவைஞர்கள் என்றனர். இது பொருந்தவில்லை. வெறியார்வலர் என்ற சொல்லே சரியான பொருள் தரும். எனினும் முரட்டுத்தனமாக அவ்வாறு குறிப்பிடாமல் நேயர் அல்லது அன்பர் எனக் குறிக்கலாம்.
00
- நேரமின்மை வெருளி – Chronophobia
போதிய நேரமின்மை குறித்த வரம்பற்ற பேரச்சம் நேரமின்மை வெருளி.
ஒரு செயலைத் தொடங்க அல்லது ஒரு செயலைச் செய்து முடிக்க அல்லது ஓரிடத்திற்குச் சென்று சேர, அல்லது புறப்பட அல்லது ஆயத்தமாக என எதற்கும்போதிய கால வாய்ப்பு இல்லை எனப் பெருமளவில் பேரச்சம் கொள்வதே நேரமின்மை வெருளியாகும்.
இது கடிகார வெருளி(Chronomentrophobia/Roloiphobia/Soloiphobia) உடன் தொடர்புடையது.
Chrono என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் நேரம்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5
No comments:
Post a Comment