Friday, November 7, 2025

வெருளி நோய்கள் 649-653: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 644-648: தொடர்ச்சி)

கத்தரிக் கோல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கத்தரிக் கோல் வெருளி.

கத்தரி என்றால் (சிறிது சிறிதாய்) வெட்டியறுத்தல் எனப் பொருள். இதற்குப் பயன்படுவது கத்தரிக்கோல். ஆனால் இதனைப் பலரும் கத்திரிக்கோல் என்கின்றனர். அகராதிகளிலும் இத்தவறான சொல்லாட்சி இடம் பெற்று விட்டது.

00

உலாக் கப்பல், காவற் கப்பல் ஆகியவற்றின் மீதான அளவுகடந்த பேரச்சம் கப்பல் வெருளி.

navis என்னும் இலத்தீன் சொல்லிற்கு நாவாய், கப்பல், படகு எனப் பொருள்கள். தமிழ்ச்சொல் நாவாய் என்பதிலிருந்துதான் இச்சொல் உருவானதாகக் கூறுவர்.

கப்பல் என்பது உட்குழிந்த மரக்கலம் என்னும் அறிவியல் காரணப்பெயர். இச்சொல்லும் மலாய் முதலான உலக மொழிகளில் இடம் பெற்றுள்ளது.

00

கதிர் வளி(Helium) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கதிர் வளி வெருளி.

கிரேக்க மொழியில், ஈலியோசு/எலியோசு(Helios) என்பது சூரியனைக் குறிக்கும் கடவுளாகும். இதனடிப்படையில் கதிர்வளிக்கு ஈலியம்(Helium)  எனப் பெயரிட்டனர். நாம் கதிர்வளி என்றே தமிழில் சொல்லலாம்.

00

கதிர்ப்பொறி(X-ray machine) குறித்த வரம்பற்ற பேரச்சம் கதிர்ப்பொறி வெருளி.

எக்சு கதிர்அச்சு என்றும் ஊடுகதிர்ப்படம் என்றும் அழைக்கப்பெறும் கதிர்ப்படப் பொறிகுறித்து, அதன் ஊடுகதிரால் உடலுக்குக் கேடு விளையும் என அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.

X-ray  என்பதைச் செயல் முறையில் ஊடுகதிர் என்கிறோம். ங-கதிர் என நான் குறித்து வருகிறேன்.

00

கம்பளம் குறித்த வரம்பற்ற பேரச்சம் கம்பள வெருளி.

நெய்தல் கம்பளம், பின்னல் கம்பளம், தடத் தையல் கம்பளம்(Tufted carpet)  முதலான பல வகைக் களம்பளங்கள் குறித்தும் பேரச்சம் கொள்வர். இளம்பருவத்தில் பறக்கும் கம்பளம், மந்திரக்கம்பளம் முதலான கதைகளைப்படித்தும் கேட்டும் அச்சம்  கொண்டு  வளரும் பொழுது அச்சமும் வளர்ந்து காரணமற்ற பேரச்சத்தை வளர்த்துக் கொள்கின்றனர்.

00

(தொடரும்)

Thursday, November 6, 2025

வெருளி நோய்கள் 644-648: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 639-643 : தொடர்ச்சி)

644. கதவு வெருளி – Entamaphobia

கதவு குறித்த வரம்பற்ற பேரச்சம் கதவு வெருளி.

Enta என்றால் உட்புகுதல் எனப் பொருள். உட்புகுவதற்கு வழியாக  அல்லது தடையாக உள்ள கதவை இங்கே குறிக்கிறது. ‘Eisodos, portos’ என்னும் கிரேக்கச் சொற்களில் இருந்து உருவானது Entama.

கதவு திறந்திருந்தாலும் அல்லது மூடியிருந்தாலும் கதவு வெருளிக்கு ஆளாகின்றனர்.

வெளியிட வெருளி(Agoraphobia), அடைப்பிட வெருளி (Claustrophobia), அடைதாழ் வெருளி(  Cleithrophobia/Cleisiophobia) ஆகியவற்றுடன் தொடர்புடையது.

00

 645. கதிராடி வெருளி – Gyaliailiouphobia

கதிராடி(sun glass) குறித்த வரம்பற்ற பேரச்சம் சூரியக் கதிராடி வெருளி.

கண் கூசாமல் இருப்பதற்காக அணியும் கதிர் ஒளிக் காப்புக்கண்ணாடி என்பதன் சுருக்கமே கதிராடி எனக் குறிக்கப்பெற்றுள்ளது.

மக்கள் வழக்கில் இதனை ஆங்கிலத்தில் குளுமைக் கண்ணாடி(Cooling glass) என்னும் பொருளிலும் தமிழில் கருப்புக்கண்ணாடி என்றும் அழைப்பர். கருப்புக் கண்ணாடி என்றாலும் இப்பொழுது வெவ்வேறு வண்ணங்களில் இக்கண்ணாடி உள்ளது.

00

 646. கதிரொளி அறை வெருளி – M🛥️groonphobia

கதிரொளி அறைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கதிரொளி அறை வெருளி.

சூரியமாடம்(solarium), தனியறை(Florida room), தோட்டக் காப்பகம்(garden conservatory),தோட்ட அறை(garden room), முற்ற அரங்கம்(patio room), கதிரவன் மாடம்(sun parlor), சூரியக்கொட்டாரம்(sun porch), முப்பருவ அறை(three season room) குளிர்காலத் தோட்டம்(winter garden) எனப் பலவகைகளிலும் அழைக்கப்பெறும் கதிரொளி ஊடுருவும் தன்மையுள்ள அரங்கம் குறித்துத் தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.

00

647. கதிரொளிக் கூரை வெருளி –  Taiஃuphobia

கதிரொளிக் கூரை(sunroof) குறித்த வரம்பற்ற பேரச்சம் கதிரொளிக் கூரை வெருளி.

ஊர்திகளின் மேல் பகுதி வழியாகக் கதிரொளி ஊடுருவிப் பாயும்வண்ணம் அமைக்கப்படுவதே கதிரொளிக் கூரை.

00

648. கதிர்ப்பட வெருளி-Radiophobia

 ஊடு கதிர்/ கதிர்வீச்சுப்படம் குறித்த அளவுகடந்த பேரச்சம் கதிர்ப்பட வெருளி.

கதிர் வீச்சால் உடல் பாதிப்புறும், அணுக்கதிர் வீச்சு உயிரைப் பறிக்கும் என்றெல்லாம் அளவுகடந்து பேரச்சம் கொள்வர். 

வானொலி வெருளி(Rundfuphobia), ஒலிவாங்கி வெருளி(Yinjiphobia) ஆகியன வேறு. இங்கே Radio என்பது கதிர்வீச்சைக் –  radiationஐக்-  குறிக்கிறது.

00

(தொடரும்)

Wednesday, November 5, 2025

வெருளி நோய்கள் 639-643: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 634-638: தொடர்ச்சி)

639. கண்ணீர் வெருளி – Dakruphobia
கண்ணீர் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கண்ணீர் வெருளி.
துயரத்தில் மட்டுமல்ல மகிழ்ச்சியிலும் கண்ணீர் வரும். மனைவிகள் கண்ணீரைப் பார்த்தததும் கணவர்களுக்கு அச்சம் வருவது இயற்கைதான். மனைவி பக்கம் உண்மை இல்லாவிடடடாலும் அவர்களின் கண்ணீரைக் கண்டு அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர். பிள்ளைகள் கண்ணீைக் கண்டு பெற்றோர்கள் வருந்துவது, நண்பரின் கண்ணீரைக் கண்டு மற்றொரு நண்பர் வருந்துவது எனக்கண்ணீர் கண்டு தேவையற்ற பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
. 640. கண்ணோய் வெருளி – Donoculophobia
 ஒருவர் நோயுற்ற தன் கண்களைப் பார்த்து அளவுகடந்து அஞ்சுவது கண்ணோய் வெருளி.  இதனால் கண்ணில் நாற்றம் வருகிறது, பிறர் நெருங்க அருவருப்பு அடைவர், கண்பார்வை பாதிப்புறும் போன்ற அச்சங்கள் கொள்வர்.
கண்தொடர்பு வெருளி என்னும் பொருளில்தான் ஆங்கிலத்தில் வழங்கி வருகிறது. சென்னைக் கண் எனப்படும் கண் நோய் வந்தவர்க்குக் கண்கள் சிவந்திருக்கும்.  இதைப் பார்க்கும் மற்றவர்களுக்கும் கண்கள் சிவந்து இந்நோய் ஒட்டிக் கொள்ளும். எனவே,  பிறருக்கும் கண்நோய் பரவும் என்று வரம்பு கடந்த பேரச்சம் கொள்வதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
oculus  என்றால் கண் எனப் பொருள்.
00
 641. கண்திறப்பு வெருளி-Optophobia
கண்களைத் திறப்பது குறித்த தேவையற்ற அச்சம் கண்திறப்பு வெருளி.
சிலருக்குப் பிணம் கண்களைத் திறந்த நிலையில் இருந்தால் அச்சம் வரும். சிலர் திகில் காட்சிகளைப் பார்த்துக் கண்களை மூடிய பின்னர் மீண்டும் திறப்பதற்கு அஞ்சுவர்.
Opto  என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள்கள் பார்வை, கண் என்பன.
00
 642. கதவு திறப்பி வெருளி – Karazportanoichtiriphobia
 ஊர்திக் கொட்டில் கதவு திறப்பி குறித்த வரம்பற்ற பேரச்சம் கதவு திறப்பி வெருளி.

Karaz என்றால் ஊர்திக் கொட்டில் என்று பொருள்.

00
643. கதவு மணி வெருளி – Doorbellphobia
 கதவு மணி குறித்த வரம்பற்ற பேரச்சம் கதவு மணி வெருளி.
அழைப்பு மணி(calling bell) என்றால் மேசையில் வைத்து உள்ள அழைப்பு மணியையும் குறிக்கும் என்பதால் வேறுபடுத்த மூலச்சொல் அடிப்படையில் கதவு மணி எனக் குறிக்கப்பெற்றுள்ளது.
அழைப்பு மணியை அலுவலர் முதலானவர்கள் அடிப்பது பணியாளர்களுக்குத் தெரியும். இப்பொழுது இதற்கு மின்னணு முறையும் வந்துள்ளது. ஆனால், கதவு மணி என்னும் பொழுது வந்திருப்பது யாரோ, தீயவரோ, திருடரோ, அழைப்பதுபோல் வந்து கொள்ளை அடிப்பவரோ, பொருள் விற்பனையாளர்களோ என்றெல்லாம் பலவகைக் கவலைகளுக்கு ஆட்பட்டு அச்சம் கொள்கின்றனர். காணொளி கதவு மணியும் இப்பொழுது வந்துள்ளது. எனினும் அறிமுகம் இல்லாதவர் தெரிந்தால் அச்சம் கொள்கின்றனர்.
00

Tuesday, November 4, 2025

வெருளி நோய்கள் 634-638: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 629-633: தொடர்ச்சி)

634. கண்ணாடி மேல் நிற்றல் வெருளி  – Stasihyelophobia

கண்ணாடி மேல் நிற்பது குறித்த பேரச்சம் கண்ணாடி மேல் நிற்றல் வெருளி.

கண்ணாடி உடைந்து விடலாம், கண்ணாடிமேல் நிற்பதால் உடைந்து கீழே விழலாம், காயம் படலாம் உயரத்தளத்தில் கண்ணாடி மீது நிற்பதால் ஏதும் எதிர்பாரா நேர்வு நிகழ்ந்து கீழே விழுந்து உயிர் இறக்க நேரிடலாம் என்பன போன்ற அச்சங்களுக்கு ஆளாகிக் கண்ணாடி மேல் நிற்றல் வெருளிக்கு ஆளாகின்றனர்.

சிகாகோவில் 1353 அடி உயரத்தில் உள்ள வில்லீசு கோபுரம் (Willis tower) போன்ற காட்சி இடங்களில் அல்லது பாலங்களில் அல்லது மேல் தளத்தில் கண்ணாடிப் பெட்டிகளில் அல்லது சில இடங்களில் கண்ணாடித் தளத்திலிருந்து சுற்றுப்புறத்தைப் பார்க்குமாறு அமைப்பு உள்ளது. இயற்கைக்காட்சி அல்லது நகர் அமைப்பைப் பார்க்கும் ஆர்வத்தில்  அல்லது வேலையின் பொருட்டு ஏறினாலும் பின்னர் அச்சம் வந்து விடுகிறது. இவ்விடங்களில் ஏற்பட்ட நேர்ச்சிகள்(விபத்துகள்) குறித்துக் கேள்விப்பட்டிருந்தாலும் கண்ணாடிமேல் ஏறிநிற்கும் அச்சம் வந்து விடுகிறது.

00

635. கண்டங்கள் வெருளி – Continentemophobia

கண்டங்கள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கண்டங்கள் வெருளி.

ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அன்டார்க்குடிக்கா, ஐரோப்பா, ஆத்திரேலியா என 7 கண்டங்களாக உலகைப் பிரித்துள்ளனர். எனினும் நான்கு அல்லது ஐந்து அல்லது ஆறு எனப் பகுப்பாரும் உள்ளனர். கண்டங்கள் பெயர்தல், இணைதல் போன்றவற்றால் அல்லது இவைபோன்ற செய்திகளால் கண்டங்கள் குறித்துப் பேரச்சம் கொள்கின்றனர்.

புவி வெருளி உள்ளவர்களுக்குக் கண்டங்கள் வெருளி வர வாய்ப்பு உள்ளது.

00

636. கண்டறியாமை வெருளி – Noninvophobia

கண்டறிய இயலாதது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கண்டறியாமை வெருளி.

கண்டறியாமை என்பது இருப்பதை இழத்தல் அல்ல. வேண்டியதைக் கண்டு பிடிக்க முடியாமை.

invenire என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கண்டிறிதல். Non என்றால் இல்லாதது.

00

 637. கண்ணாடிப்பொருள் வெருளி-Hyelophobia/ Hyalophobia/ Nelophobia

கண்ணாடிப்பொருள்கள் மீதான அளவு கடந்த பேரச்சம் கண்ணாடிப்பொருள் வெருளி.

மணிக்கல் வெருளி-Crystallophobia உடன் தொடர்புடையது.

hyel (hyal) என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கண்ணாடி

00

638. கண்ணாடிப் பந்து வெருளி – Perstilbospherphobia

கண்ணாடிப் பந்து குறித்த வரம்பற்ற பேரச்சம் கண்ணாடிப் பந்து வெருளி.

ஆடிப்பந்து உடைந்துவிடும் என்பனபோன்ற கவலைகளால் பேரச்சம் கொள்கின்றனர்.

Perstilbospher என்றால் ஆடிக் கோளம் அல்லது ஆடி உருண்டை எனப்பொருள். உருண்டை வடிவிலுள்ள பந்தினைக் குறிக்கிறது.

00

(தொடரும்)

Monday, November 3, 2025

வெருளி நோய்கள் 629-633: இலக்குவனார் திருவள்ளுவன்



வெருளி நோய்கள் 629-633

இவ்வெருளியின் பெயர், பெயரிலேயே புரிந்து கொள்ளும் வகையில் விளக்கப் படம் போல் உள்ளது. எனினும் எளிமை கருதி ஆங்கிலத்திலும் குறிக்கப்பட்டுள்ளது.
கணிப்பொறி விசைப்பலகையில் ஏற்பட்ட சிதைவு காரணமாக எழுத்துகள் தாறுமாறாக வருவது குறித்த பேரச்சம் கணிவிசைச் சிதைவு வெருளி.
00
கணிணி அல்லது புதிய தொழில்நுட்பம் குறித்த தேவையற்ற அச்சம் கணிணி வெருளி.
ஆசிரியர்களுக்குப் புதிய முறையில் கற்பிப்பது என்பதால் கணிணி மீது அச்சம் வரலாம். மாணவர்களுக்குப் புதிய முறைக்குத் தாங்கள் தகுதியில்லை என்ற எண்ணத்தால் அல்லது வாழ்க்கைக்குப் புதிய கணிநுட்ப முறை தேவையில்லை என்று கருதுவதால் கணிணி மீது வெறுப்பும் அச்சமும் ஏற்படலாம். பணியாளர்களுக்குப் புதிய முறையைக் கற்றுக்கொள்வதில் நாட்டமின்றிக் கணிணி மீது வெறுப்பும் அச்சமும் வரலாம்.
19 ஆம் நூற்றாண்டில் இயந்திரங்கள் தொழிற்சாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டபொழுது பெரிய எதிர்ப்பு எழுந்தது. அதுபோல் கணிணியை அறிமுகப்படுத்தினால் வேலைவாய்ப்பு பறிபோகும் என்று அஞ்சி வெறுப்பவர்களும் உள்ளனர்.
log என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பேசு அல்லது சொல்.
 machano என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் எந்திரம்.
00
 சீருந்து கொடும் இயந்திரனாக(Giant robot) மாறுவதாக அறிவுக்குப் பொருந்தாமல், நகைச்சுவையாகத் தோன்றும் வரம்பற்ற பேரச்சம் கணிணிமாற்று வெருளி.
இதனைப் பதின்மூன்றாம் எண் வெருளி(triskaidekaphobia)யுடனும் கோமாளி வெருளி(coulrophobia)யுடனும் தொடர்புடையதாகக் கூறுகின்றனர்.
00
கண்ணில் நோய்வரும், கண் பாதிப்புறும், கண்பார்வை இல்லாமல் போகும் என்றெல்லாம் கண்களைப்பற்றிக் காரணமின்றி அஞ்சுவது கண் வெருளி. 
சிலருக்குப் பிறரின் காதல் பார்வை, காமப்பார்வை, சினப்பார்வை, கொடும்பார்வை போன்றவற்றால்கூடக் கண்கள் மீது அச்சம் வரும்.
 ommato என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் கண்
00
 மூக்குக் கண்ணாடி எனப் பெறும் கண்கண்ணாடி குறித்த வரம்பற்ற பேரச்சம் கண்ணாடி வெருளி.
இங்கே கண்ணாடி என்பது மூக்குக் கண்ணாடியைத்தான் குறிக்கிறது. கண்பார்வைக் குறைபாட்டிற்கான ஆடி என்றாலும் மூக்கு தாங்கி நிற்பதால் மூக்குக்கண்ணாடி என்கிறோம்.
கண்ணாடி அணிந்தால் முதுமையாக அல்லது அகவை கூடியுள்ளதாகக் காட்டும் என்று பலர்  – குறிப்பாகப் பெண்கள் மூக்குக் கண்ணாடி குறித்து அளவு கடந்த பேரச்சம் கொள்கின்றனர் சிலர்.
00 

(தொடரும்)

Sunday, November 2, 2025

வெருளி நோய்கள் 624-628: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 619-623: தொடர்ச்சி)

கண எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் கண எண் வெருளி.
கணம் என்பது பத்தாயிரம் கோடி/1,00,00,00,00,000ஐக் குறிக்கும்.
00
 
கணக்கி(calculator) குறித்த வரம்பற்ற பேரச்சம் கணக்கி வெருளி.
கணக்கியைச் சரியாக இயக்கத் தெரியாததாலும் மெதுவாகப் பயன்படுத்துவதாலும் கணக்கி மீது தேவையற்ற வரம்பற்ற பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
கணக்கு குறித்த வரம்பற்ற பேரச்சம் கணக்கு வெருளி.
கணக்குப் பாடம் என்றாலே பலருக்கு அச்சமும் வெறுப்பும் உள்ளன. “கணக்கு எனக்கு பிணக்கு வணக்கு மணக்கு ஆமணக்கு” என்று கணக்கைக் கண்டு மாக்கவி பாரதியாரே அஞ்சியுள்ளார். கணக்கின் மீதுள்ள அச்சத்தால் கணக்கு ஆசிரியர் மீதும் பலருக்கு வெறுப்பு வந்துவிடுவதும் இயற்கையாக உள்ளது. கணக்காளர், பொருளாளர் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு அவர்களிடம் கணக்கு கேட்கப்படும் என்ற பேரச்சமும் உள்ளது.
கணக்கு கேட்டதால் அமைப்புகளும் கட்சிகளும் பிரிந்த வரலாறும் உண்டு.
கணக்கு வழக்கில் தவறு செய்து விட்டு அஞ்சுபவர்களும் தவறு செய்யாவிட்டாலும் செய்திருப்போமோ என்ற அச்ச உணர்வு உள்ளவர்களும் கணக்கு வெருளிக்கு ஆளாகின்றனர்.
00
கணக்கறிவு குறைபாடு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கணக்குக் குறைபாட்டு வெருளி.
கணக்கு வெருளி போன்றதுதான் கணக்குக் குறைபாட்டு வெருளி. மாணவப் பருத்தில் கணக்குக் குறைபாட்டுஅறிவு குறித்து வருந்துபவர்கள் அதனை வளர்த்துக்கொண்டு கணக்குக் குறைபாட்டு வெருளிக்கு ஆளாகின்றனர்.
00
 கணப்பு (fireplace) பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கணப்பு வெருளி.
தனிப்பட்ட முறையிலோ குழுவாகவோ அறையிலோ குளிரும் பொழுது வெப்பமூட்டிக் கொள்ள உதவும் கணப்பு குறித்து கொள்ளும் பேரச்சம் இது.
00

(தொடரும்)

Saturday, November 1, 2025

வெருளி நோய்கள் 619-623: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 614-618: தொடர்ச்சி)

கட்டாயப்படுத்தி மகிழ்ச்சியாக இருக்கச் செய்வது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கட்டாய மகிழ்ச்சி வெருளி.

காண்க மகிழ்ச்சி வெருளி-Hedonophobia/Laetophobia

00

கட்டணத் தொலைபேசி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கட்டணப் பேசி வெருளி.

கட்டணப்பேசியில் பேசும் பொழுது கால வரம்பு முடியும் பொழுதெல்லாம் மேற்கொண்டு பேச நாணயத்தைச் செலுத்த வேண்டும்  சில நேரங்களில் நாணயத்தைச் செலுத்தியபின் பேசவும் இயலாது, செலுத்திய நாணயம் திரும்பி வராது  போன்ற இடர்ப்பாடுகளால் கட்டணத்தொலைபேசி  குறித்துப் பேரச்சம் கொள்கின்றனர்.

அலைபேசிகள் பெருகியுள்ள இக்காலத்தில் கட்டணப்பேசியின் பயன்பாடு மிகவும் குறைந்து விட்டது.    

00

கட்டுகுழிக் குழாய்(sump pump) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கட்டுகுழிக் குழாய் வெருளி.

கட்டுதொட்டி, நிலத்தடித் தொட்டி, கழிநீர் தொட்டி என்றும் அழைக்கப்பெறும் கட்டுகுழியில் இருந்து குழாய் மூலமாகப் பூச்சிகள் வீட்டிற்குள் வந்துவிடும் என்பதுபோன்ற சூழல்களால் பேரச்சம் கொள்கின்றனர்.

00

கட்டடங்கள் கட்டித் தருநர் மீதான காரணமற்ற வரம்பற்ற பேரச்சம் கட்டுமானர் வெருளி.

பொதுவாக வீடுகள் அல்லது கட்டடங்கள் என்றாலே அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும் அடுக்கு மாடிக் கட்டடங்களாகவும் மாறிப் போய்விட்டது. இவ்வெருளி பொதுவாக அடுக்குமாடிக் கட்டுமானர்கள் மீதே ஏற்படுகிறது. பணிக்குறைபாடு, வசதிக் குறைபாடு, தரமான பொருள்களைத்தான் பயன்படுத்தினார்களா என்ற பேரச்சம், போன்ற  பல காரணங்களை உருவாக்கிக் கொண்டு பேரச்சம்  கொள்கின்றனர்.

aedificator  என்னும் இலத்தீன் சொல்லிற்குக் கட்டுமானர்(builder) எனப் பொருள்.

கட்டடம் கட்டுபவர்களைக் கட்டடம் கட்டுநர், கட்டடம் உருவாக்குநர், (இப்போதைய வழக்கில் கட்டடங்கள் கட்டி விற்பவர்களைக்) கட்டட மேம்பாட்டாளர்(Building Promoter) என்றெல்லாம் சொல்கின்றனர். வீடு கட்டும் பணி கட்டுமானம். எனவே, கட்டுமானப்பணி ஆற்றுநர் >  கட்டுமானர் என்று குறித்துள்ளேன். கட்டுநர் என்றால் Binder என்றாகும்.

00

கட்டுப்படுத்தல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கட்டுப்படுத்தல் வெருளி.

வணிகத்தில் பெரு முதலாளிகள் சிறு முதலாளிகளையும் அரசியலில் பெரிய கட்சித் தலைவர்கள் சிறிய கட்சித் தலைவர்களையும் தலைமைக்கு வேண்டியவர்கள் பிறரையும் மத்திய அரசு மாநில அரசுகளையும் கட்டுப்படுத்துவது தொடர்பான அளவுகடந்த பேரச்சம்.

00

(தொடரும்)