Friday, July 5, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 1. அ. அறிவியற் கவிஞர் திருவள்ளுவர்

 


ஃஃஃ       06 July 2024      கரமுதல



(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், பேச்சாளனின் எழுத்துரை – தொடர்ச்சி)

திருவள்ளுவப் பெருந்தகைக்குக் ‘கவிஞர்’ என்னும் சொல்லை அடைமொழியாக்கலாம். ஆக்கினால் அச்சொல் பெருமை பெறும். அதனுடன் ‘அறிவியல்’ என்பதை அடைமொழியாக்கினால் அடைமொழியாக்குவோன் திருவள்ளுவரின் அறிவியல் திறத்தை அணுகியவன் ஆகிறான்.

திருவள்ளுவர் கவிஞரா ?

திருவள்ளுவரைப் ‘புலவர் திருவள்ளுவர்’, ‘மன்புலவன் திருவள்ளுவன்’, ‘முதற் பாவலர்’- எனப் புலவராகவும், பாவலராகவும் ‘மாலை’[1] சூட்டிப் போற்றினர். மணிமேகலை ஆசிரியர் சாத்தனாரும் ‘பொய்யில் புலவன்’[2] என்றார். முந்தையோர் ‘கவிஞர்’ என்று பாடவில்லை.

கம்பருடனும், இளங்கோவுடனும் இணைத்துப் பாடிய நம் காலக் கவிமாமன்னன் பாரதி, ‘யாமறிந்த புலவரிலே’ என்று திருவள்ளுவரைப் புலவராகப் போற்றினார்.

ஆனால், அவரே,

“கம்பன், இளங்கோ, திருவள்ளுவர் முதலிய மகா கவிகளுக்கு ஞாபகச் சின்னமும் வருசோற்சவமும் ஏற்பாடு செய்ய வேண்டும்”[3] என்று கட்டுரையில் ‘கவி’யாகக் குறித்தார். பாரதிதான் திருவள்ளுவரைக் ‘கவிஞர்’ என்று குறித்த முதற் கவிஞர். அவ்வையாரையும் “கவியரசி” என்று போற்றினார்.

புலவர் புலமை உடையவர். புலமையால் பாடம் சொல்லும் ஆசிரியராகவும், எழுதும் ஆசிரியராகவும் விளங்குவார். முற்காலத்தில் எழுதும் புலமை “செய்யுள்’ எழுதுவதாக இருந்தது. பின்னர் உரைநடையும் கூடிற்று. செய்யுளுக்குப் ‘பா, பாட்டு’ எனவும் பெயர். பாவைப் பாடுபவர், எழுதுபவர் பாவலர் எனப்படுவார்.

செய்யுளும் பாவும் பாட்டும் இலக்கணக் கட்டுக் கோப்புடன் அமைபவை. சீரான பலவகை ஓசைகள் உடையவை. ஆற்றுநீரில் மிதந்து செல்வது போன்று பாவின் பொருளை எளிமையாகக் கொள்ளலாம். எதிர்த்து நீந்துவது போன்று மூழ்கி வளப்பொருளை எடுப்பது போன்று முயன்றும் பொருள் கொள்ளலாம்.

‘செய்யுள், பா, பாட்டு’ எனப்படுபவைதாம் ‘கவிதை’ எனப்படுவதும். கவிதை இலக்கண அமைப்பு உடையதே. பாரதியாரும் பாவேந்தர் பாரதிதாசனாரும் செய்யுள் இலக்கணம் வழுவாது எழுதினர். அவர்தம் செய்யுள்களும் பாக்களும் பாட்டும் ‘பாரதியார்கவிதைகள்’, ‘பாரதிதாசன் கவிதைகள்’ எனக் கவிதைப்பெயரில் வழங்கப்படுகின்றன.

பொதுவான ஒரு கருத்து, ‘செய்யுளைப் பாடுபவன் புலவன்; கவிதை எழுதுபவன் கவிஞன் என்பது. இதற்கு மாற்றாக ஓர் அமைதி சொல்வதுபோன்று திருஞானசம்பந்தர் “உரவார் கலையின் கவிதைப் புலவர்[4] என்று “கவிதைப் புலவர்” என்னும் தொடரை வழங்கினார்.

ஒரு கருத்திற்குப் பழமைச்சொல்லும் இருக்கும். புதுமையாகச் சொல்லாக்கமும் அமையும். இவ்விரண்டையும் சங்க இலக்கியங்களிற் காணலாம்.

“புலவர் புல
நாவிற் புனைந்த நன்கவிதை“
[5]

என்று பாடினார். இதிலுள்ள ‘கவிதை’ என்னும் சொல் அக்காலப் புதுமைப் படைப்புச் சொல். புலவர் புலமையால் பாடும் செய்யுளுக்குத்தான் ‘கவிதை’ என்னும் சொல்லை ஆக்குவதாக ஆசிரியர் நல்லந்துவனார் “புலவர், புலம்” எனும் இரண்டு சொற்களையும் முன்னே வைத்துள்ளார்.

இதற்குப் பொருள் விரித்த பரிமேலழகரும்,

“கவிதை-கவியின் தன்மை. அஃது ஈண்டு செய்யுள் மேல் நின்றது” என்றார். இது, ‘செய்யுள்’ என்னும் சொல்லுக்குரிய மாற்றுச் சொல்லாகக் ‘கவிதை’ என்பதைக் காட்டியதாகும்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான சிறுபஞ்ச மூலத்தில்,

“செந்தமிழ் தேற்றாதான் கவிசெயல்
நாடின் நகை“
[6]

என்பதில் ‘கவி’ என்னும் சொல் உள்ளது. இதனை எழுதியவர் காரியாசான் என்பவர்.

கவிதை – தமிழ்ச்சொல்

‘கவிதை, கவி’- என்னும் சொற்கள் பற்றி ஓர் ஐயம் எழலாம். பரிபாடலிலும், மாமூலத்திலும் பல வட சொற்கள் உள்ளன. அவைபோன்று ‘இவையிரண்டும் வடசொற்கள் ஆகாவோ(?) என்று வினவலாம். இந்த ஐயம் தோன்றி, நிலைத்து, உறுதியான முடிவாக வடமொழிதான் என்று இக்காலத்தில் கருதப்படுகிறது.

பாரதிதாசனார் புரட்சிக் கவிஞர் என்று புகழப் பட்டவர். இப்புகழ் மொழியில் உள்ள ‘கவிஞர்’ என்பதை வடமொழியாகக் கொண்டு அதனை அவருக்கு வழங்க மனமின்றி ‘பா வேந்தர்’என்று புகழப்படுகிறார். ஆனால், பாவேந்தராம் புரட்சிக் கவிஞர் அவர்களே ‘கவிதை’ தமிழ்ச்சொல் என்று எழுதினார். அவர் கருத்தின்படியும் ‘கவிதை’ என்பது தமிழ்ச் சொல்லே.

எவ்வாறு?

‘கவிதை’ என்னும் தமிழ்ச் சொல்லிற்குப் பகுதி ‘கவி’. இதற்கு மூலச்சொல் ‘கவ்’ என்பது ‘கவ்’ என்றால் கவ்வுதல், கவர்தல் கவர்ச்சித்தல் எனப் பொருள்படும். இதற்குத் திருவள்ளுவரே சான்று தந்தார் :

“கவ்வையால் கவ்விது காமம்” (1144) என்னும் தொடரில் ‘கவ்’ இரண்டு இடங்களைப் பிடித்துள்ளது. முதலில் உள்ள ‘கவ்வை’ என்பதற்குத் ‘துன்பம்’ என்று பொருள். அஃதாவது கவ்வுதலால் ஏற்படும் மனத்துன்பம். இக்குறட்பாவில் கவ்விய, ‘அலர்’ என்னும் பழிச்சொல்லும் துன்பத்தைக் குறிக்கும். இரண்டாவதாக உள்ள ‘கவ்’ என்பது கவர்ச்சியுள்ளது; ‘கவர்ச்சியால் இன்பம் தருவது’ என்னும் பொருள் காட்டுவது.

இஃது இ என்னும் இறுதி இணைந்து ‘கவி’ என்னும் சொல்லாயிற்று, செவ் + இ = செவி: குவ்+இ = குவி (குவியல்); புவ்+இ = புவி என்றெல்லாம் ஆனமை போன்று ‘கவி’ உருப்பெற்றது. (‘பெளவம்’ என்னும் தமிழ்ச் சொல்லுக்குக் ‘கடல்’ என்று பொருள். பெளவம், ‘புவ்வம்’ என்றாகும். “புவ்வத்-தாமரை”[7] என்று பாடப்பட்டுள்ளது). ‘புவ்’ என்னும் கடல் நீரை உடையது புவி.

இச்சான்றுகளால் ‘கவி’ என்னும் சொல் தமிழ்ச்சொல். ‘கவி’ என்பது இடையில் ‘த்’ என்னும் எழுத்துப்பேறு பெற்று ஐ இறுதியாகக் ‘கவிதை’ என்னும் சொல் ஆக்கம் பெற்றது. கவ்விக் கவரும் தன்மையை உடையது ‘கவிதை’; தன் சொற்சுவையால் படிப்போர் உள்ளத்தைக் கவ்விக் கவர்வதை உடையது ‘கவிதை’.

‘த்+ஐ=தை’ என்று முடிவுறும் சொற்களாக ஓதை,’அகுதை, மருதை, சிவதை’ என்னும் சொற்கள் தமிழில் உள்ளமையும் சான்றாகும். மொழி மூல அடித்தளத்தாலும், சொல் இலக்கண அமைப்பாலும், சொல்லாக்கக் கருத்தாலும் ‘கவிதை’ என்னும் சொல் புத்தாக்கமான தமிழ்ச் சொல்லேயாகும். இது செய்யுளையும் பாவையும் பாட்டையும் குறிக்கும்.

கவிதையும் பாவும்

இக்காலத்தில் கவிதையுடன் பிற சொற்களும் எந்த அளவில் வழக்கில் உள்ளன? புலவர்களில் சிலரே செய்யுள் என்னும் சொல்லை வழங்குகின்றனர். தனித்தமிழ் உணர்வுடையோர் ‘கவிதை’ என்னும் சொல்லை வடசொல் என்று கருதுகின்றனர், எனவே, பா, பாட்டு இரண்டையும் கொண்டுள்ளனர். பெரும்பாலோர் ‘கவிதை’ என்பதையே வழங்குகின்றனர். இன்று ஆட்சி செய்வது கவிதையே.

இக்காலச் சூழலில் ‘செய்யுள், பா’ என்பன இலக்கணச் செறிவு உடையவை என்றும், முயன்று பொருள் காணப்பட வேண்டியவை என்றும் கருதப்படுவனவாகும். கவிதை “எளிமையானது, சுவையுள்ளது” என்று கொள்ளப்படுகிறது.

செய்யுளையும் கவிதையையும் ஈடுகட்டிப் பார்க்க வேண்டும்.

மயிலின் கால் அடிக்கும் நொச்சி இலைக்கும் மாற்றி மாற்றி உவமைகளை இரண்டு இலக்கியங்களில் காண முடிகிறது.

“மயிலடி இலைய மாக்குரல் நொச்சி“[8]

இது குறுந்தொகை என்னும் சங்க இலக்கியச் செய்யுள்.

“நொச்சிப் பாசிலை அன்ன பைக்தாள் மஞ்சை“[9]

இது திருவிளையாடற் புராணச் செய்யுள்.

‘நொச்சி இலைபோல் மயிலின் கால்’ இது நம் காலத்துக் கவிஞர் சுரதா அவர்களின் கவிதை.

முன்னர் செய்யுளாகக் காணப்படுபவற்றுள் உள்ள உவமைக் கருத்தே இங்குக் கவிதை எனப்படுகிறது. இவ் உவமையைப் பாடியதைக் கருதியும் கவிஞர் சுரதா “உவமைக் கவிஞர்’ என்று பாராட்டப்பட்டார்.

மற்றொன்று:

குளத்து நீரில் செக்கச் சிவந்த ஆம்பல் பூத்ததை முத்தொள்ளாயிர வெண்பாச் செய்யுள்,


“வெள்ளம் தீப்பட்டது” என்கின்றது. இக்காலப்

புதுக்கவிதை ஒன்று முத்தொள்ளாயிரத் தொடரை வட மொழியில் மொழி பெயர்த்தது போன்று.

⁠”ஜலத்தின் ஜுவாலைகள்” என்கின்றது. இதனைப் புதுக்கவிதை என்பர்.

எனவே, ஒரே வகைக் கருத்து அவ்வக்காலத்தில் வழங்கிய சொல்லாட்சிகளாலும், தொடர் அமைப்பு களாலும் ‘செய்யுள்’ என்ற பெயரையும் ‘கவிதை’ என்ற பெயரையும் பெறுகின்றதைக் காண்கிறோம்.

திருவள்ளுவமும் கவிதை நூல்

இவற்றைக் கொண்டு நோக்கினால் ‘தம்கால வழக்குச் சொல்லில் எளிமையாக படித்ததும் கருத்தையும் சுவை நயத்தையும் அறிந்து கொள்ளும் கவர்ச்சியுடையது கவிதை என்றாகிறது.

திருவள்ளுவர்தம் திருக்குறள் படைப்பில் செய்யுள் பாங்கும் உள்ளது; கவிதைப் பாங்கும் உள்ளது.

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண் (1239)

இக்குறளில், முயக்கு, தண்வளி, போழ, பசப்பு’ என்னும் இலக்கியச் சொற்கள் கூர்ந்து பொருள் காணப்பட வேண்டியவை. இவற்றாலும், உள்ளீடான கருத்தாலும் இக்குறள் ஆழ்ந்து கண்டு பொருள் காணும் பாங்குடையதா கிறது. இது செய்யுட் பாங்கு.

இதே கண்ணைப் பற்றிக் குறள் ஒன்று உள்ளது. காதலி தன் காதலனை நோக்கி ஒடும் தன் நெஞ்சைப் பார்த்துப் பேசுகின்றாள்; ‘நெஞ்சே! என் கண்ணையும் கொண்டு செல்’ என்பவள் அதற்குக் காரணமும் கூறுகிறாள்:

கண்ணும் கொளச்சேறி நெஞ்சேஅவைஎன்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று(1244)

இக்குறளில் ‘என் கண்கள் அவரைக் காணும் துடிப்பில் என்னைக் கடித்துத் தின்னுகின்றன’ என்கின்றாள்: ‘தின்னும்’ என்ற ஒரு சொல்லே சுவையை அள்ளித் தந்து நம்மை மகிழவைக்கிறது. இது கவிதைப் பாங்கு.

எனவே, திருவள்ளுவத்தில் இது போன்று கவிதைப் பாங்குகள் மிக மிக உள்ளன. கவிதையைப் பாடுபவர் கவிஞர்; திருவள்ளுவரும் கவிஞர் ஆகிறார்.

கவிஞர் – சொல்லமைப்பு

‘கவிதை’ தமிழ்ச்சொல் என்று காணப்பட்டது. ‘கவிஞர்’ என்னும் சொல் தமிழ்ப்பாங்கில் உருவானதையும் காணவேண்டும்.

இச்சொல் கவி+ஞ் + அர் என்பதன் கூட்டு உருவம். இடையில் உள்ள ‘ஞ்’ எழுத்துப்பேறு எனப்படும். கவி(ய்)அ ‘கவியர்’ என்று தான் வரவேண்டும். இதில் இடை யில்உள்ள ‘ய்’ உடம்படுமெய் எனப்படும். இது போன்றே அறி+அர்-அறிவர், இளை+ அர்-இளையர், கிளை+அர்- கிளையர், வினை+அர்-வினையர், வலை+அர்-வலையர் என வரும். இவ்வாறும் இலக்கியங்களில் உள்ளன.

இவற்றுடன்,

அறிஞர், இளைஞர் கிளைஞர், வினைஞர், வலைஞர் எனச் சங்க இலக்கியங்களில் அமைந்துள்ளன. இவற்றுள் ல், ய், என்னும் உடம்படுமெய்களுக்கு மாற்றாக ‘ஞ்’ அமைந்துள்ளது. இவ்வமைப்பால் ‘ஞ்’ அமைந்த சொற்கள் ஒரு தனி இன்னோசையுடன் ஒரு மெருகுப் பாங்கு பெற்றன. ‘ஞ்’ அந்த மெருகுப் பாங்கைத் தருகிறது.

இவை போன்றே கவியர் என்பது கவிஞர் என்று சுவையுள்ள மெருகுச் சொல்லாகியது. தமிழ்ப் பண்பாட்டு மொழியமைப்பையும் கொண்டது.

எனவே, திருவள்ளுவர் கவிதைப்பாங்கில் குறட் பாக்களைப் படைத்திருப்பதால் நல்ல மெருகுத் தமிழ்ச் சொல்லாம் கவிஞர்’ என்பதை அடைமொழியாக்கிக் ‘கவிஞர் திருவள்ளுவர் என்று போற்றுவது பொருத்தமே.

(தொடரும்)

++++

குறிப்புகள்

  1.  அடியார்க்கு நல்லார்: சிலம்பு உரைப்பாயிரம்.
  2.  மாங்குடி மருதனார்: மது. கா. 191.
  3.  பெருங்குன்றுார் கிழார்: பதி: பதிகம்-9-11.
  4. காரியாசான்: சிறுபஞ்சமூலம்: 91-1.
  5.  சிவவாக்கியர் : சிவ : 203
  6. கடியலூர் உருத்திரங்கண்ணனார் : பெரும்பாணாற்றுப்படை: 28
  7. கபிலர் : புறநானூறு : 110-2
  8. கடுவன் இளவெயினனார் : பரிபாடல் : 7-18, 19
  9. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் : புறநானூறு : 72-5

Monday, July 1, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியஇதழ்களும் ஆசிரியர்களும் – ங

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கிய
இதழ்களும் ஆசிரியர்களும் – க – தொடர்ச்சி
)

சொற்கள் வழங்கிய
இதழ்களும் ஆசிரியர்களும் 22- 42

  1. நச்சினார்க்கினியன் 1926
  2. குடியரசு 6. 5. 1928
  3. ஆனந்த விசய விகடன்
    ⁠ஆசிரியர் : விகடகவி பூதூர் வைத்தியநாதையர்
  4. குமுதம் (செய்தி ’சுரதா சுண்டல்’
  5. விநோதன் (மலர் 2, இதழ் 3) 1934
    கட்டுரை : ஆட்டமும் பாட்டும்
    கட்டுரையாளர் : இராவ்பகதூர் ப. சம்பந்தமுதலியார்
  6. சித்தன் (திங்கள் இதழ்) மாலை 1, மணி 6, 1935
    (குடியரசு கட்டுரையாளர் : எ. ஆளவந்தார் 1939
  7. செந்தமிழ் (யவனர் வரலாறு) கட்டுரை த. இராமநாதபிள்ளை 1940
  8. தமிழணங்கு – மலர் 1; இதழ் 9 1941
    ஆ. மா. சிவஞானம் – ஆம்பூர்
  9. சினிமா உலகம் 1941
    (செந்தமிழ் கட்டுரையாளர் : ச. சிரீவாசஐயங்கார்
  10. குண்டுசி – கட்டுரையாளர் : பாலபாரதி ச.து.சு. யோகியார் 1947
  11. இணக்கம்(மலர் 3, இதழ் – 9)
    1949
    • மொ. அ. துரை. அரங்கசாமி
  12. தம்பி (தமிழ்) – தில்லை. வில்லாளன் 1953
  13. திராவிடன் குரல் (பொங்கல்மலர்) கட்டுரையாளர் அ. வி. இராசன் 1956
  14. கலைவாணன் (மலர் 2 – இதழ் 21) 25. 9, 1961
  15. தமிழ்ப்பாவை 7. 11. 1967
  16. நவமணி 13. 7. 1970
  17. இளந்தமிழன் சனவரி – 1989
    • சிறப்பாசிரியர் தி.வ. மெய்கண்டன்
  18. முத்தமிழ் முரசு – மு. சுப. கருப்பையா 21. 12. 1992
  19. வாழ்வியல் (2ஆவது ஏடு, (16.9.1960) – பி.எம். வேங்கடாசலம்
  20. தேனமுதம் (மார்ச் 1972 அடை 2; துளி 13)
  21. தமிழர் நேசன்

Friday, June 28, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், பேச்சாளனின் எழுத்துரை



(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், அணிந்துரையும் பதிப்புரையும்-தாெடர்ச்சி)

வணங்கி மகிழ்கின்றேன்.

உலகம் அறிவியலின் உறைவிடம்;
அறிவியல் உலகத்தின் உயிர்மூச்சு;
“உலகம் தழீஇயது ஒட்பம்” 1

என்னும் திருவள்ளுவர் வாய் மொழி இவை இரண்டின் புதையல். இவ்வாறு எழுதுவதை மிகைபட எழுதுவதாகவோ ஆர்வத்தை மட்டும் வெளிப்படுத்துவதாகவோ கருதுவோர் நூலினுள் புகுந்து வெளிவரின் புதையல்தான்’ என்று ஒப்புவர்.

அறிவியல் திருவள்ளுவம், அறிவியல் திருமகனாரின் அணிந்துரையால் அழகில் திகழ்கிறது. –

சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்பமை முனைவர் க. ப. பொன்னுசாமி அவர்கள் இவ்வறிவுப் பொலிவை வழங்கிச் சிறப்பித்துள்ளார்கள்.

துணைவேந்தரவர்கள்.
அறிவியல் நெறித்துலாக்கோல்;
தமிழுணர்வின் தனிப்பேழை;
தூய உள்ளத்தின் துணிபொருள்;

நேர்மைப் பாங்கின் நிலைப் பொன். என் பால் பேரன்பும், பெருந்தகவும் நிறைந்த இனியவரின் நெஞ்ச வைரத்தை என் நன்றிப் பொன்னால் தாங்குகின்றேன்.

திருவள்ளுவர் நம்முன் தம்மை நிறுத்திப் பேசும், பட்டறிவுக் குறட்பாக்கள் மூன்று. ஒன்றில் அமைந்த “அறிவறிந்த“ என்னும் சொல் அறிவியலின் அறிமுகச் சொல்லாக அமைந்துள்ளமை தெளிவாக்கப்பெற்றுள்ளது.

முதற்சான்றாக ஒரு குறளில் ‘வான அறிவியல்’ புலனாக்கப்பெற்றுள்ளது.

“பிணியின்மை’ என்று துவங்கும் குறளில் நாட்டிற்கு அணியாம் ஐந்துகொண்டு பதினான்கு அறிவியற் கருத்துகள் புலனாக்கப் பெற்றுள்ளன. இதற்கு 85 குறட்பாக்கள் முழுமையாகவும் தொடராகவும் எடுத்தாளப் பெற்றுள்ளன.

இந்நூல் ஒரு பொழிவின் எழுத்துருவம். சுருக்கமான பொழிவை விளக்கி நூலாக்கியுள்ளேன்.

1980-இல் இரத்தினகிரியில் நிகழ்ந்த திருக்குறள் பேரவை மாநாட்டிலும், 1993இல் திருத்துறைப்பூண்டியில் நிகழ்ந்த தமிழ்நாடு திருவள்ளுவர் திருமன்ற மாநாட்டிலும் ‘திருக்குறளில் அறிவியல்’ என்னும் தலைப்பில் உரை யாற்ற நேர்ந்தது. தமிழ்நாடு திருவள்ளுவர் திருமன்றத்தை நிறுவி இயக்கி வரும் திரு ப. முருகையன் அவர்கள் தன்னைத் திருவள்ளுவரடிமை ஆக்கிக் கொண்டவர். ‘திருக்குறளில் அறிவியல்’ உரையை எழுத்துருவாக்கித்தர வேண்டினார். எழுத்துருவ அமைப்பிற்கேற்ப ஆக்கினேன். ஆர்வமுடன் வெளியிடும் திரு முருகு அவர்களைப் பாராட்டி வாழ்த்தி நன்றி கூறுகின்றேன். அவர்தம் திருவள்ளுவப் பணிமாலையில் இந்நூல் ஒரு முத்து; திருவள்ளுவ முத்து: அறிவியல் முத்து.

என் நூல் மாலையில் ஒரு பொன்மணி.
அறிவியல் ஆக்கந் தரும்;
திருவள்ளுவப் பசியினர் பருகிச் சுவைக்கலாம்;
 புத்தகக் காதலர் புகுந்து பார்க்கலாம்;
அறிவியலார் அசைபோடலாம்.

வணங்கி அமைகின்றேன்.

கலைக்குடி
தஞ்சாவூர்-7

  1. ஒட்பம்-அறிவொளி.

Monday, June 24, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கிய இதழ்களும் ஆசிரியர்களும் – க

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஒள – தொடர்ச்சி)

  1. சனவிநோதினி ஆகட்டு, 1874
  2. தேசோபகாரி மார்ச்சு, 1883
  3. சிரீலோக ரஞ்சனி சி. கோ. அப்புமுதலியார் 15.8.1888
    கட்டுரை : கிறித்துமதம் முளைத்ததேன்? 1.5.1890
    பீமநகர் சங்காபிமானி 1.5.1890
    கட்டுரை : தி. மா. பழனியாண்டிபிள்ளை 1.5.1890
    கட்டுரை : ஓர் இந்து 15.9.1890
  4. மகா விகட தூதன் ஓர் இந்து 1.10.1988/90
    கட்டுரையாளர் : சான் டானியல் பண்டிதர் 4.4.1891
  5. பிரம்ம வித்தியா கட்டுரையாளர் சான்டானியல் பண்டிதர் 1.12.1891
  6. சநாநந்தினி ஆசிரியர் அன்பில் எசு. வெங்கடாசாரியார் மார்ச்சு 1891
  7. சீவரத்நம் – டி. ஆர். சந்திரஐயர், சென்னை 1902
    (வகை 1, மணி 1)
  8. யதார்த்த பாசுகரன் (சம்புடம்1 இலக்கம் 5) பக். 136 1902
    • வி. முத்துக் கமாரசாமி முதலியார் பி.ஏ, சென்னை
  9. விவகார போதினி – எ. நடேசபிள்ளை (திருவாரூர் பிளீடர் 1904
  10. விவகாரி – ஏ. நடேசபிள்ளை, வக்கீல், மாயவரம் 1906
  11. செந்தமிழ் – கட்டுரை வீராசாமி ஐயங்கார் (செளமிய, மார்கழி)
    கட்டுரை : செபன்னிசா – முத்தமிடலின் வரலாறு
    எழுதியவர் வீ. சுப்பிரமணிய ஐயர் 1910
  12. விவேகபோதினி – சொல்லாக்கம் : சி. வி. சாமிநாதையர் 1911
  13. சித்தாந்தம் – பத்திராதிபர் : சித்தாந்த சரபம் அட்டாவதானம்
    சிவசிரீ – கலியாணசுந்தர யதீந்திரர் (சொல்லாக்கம் : பூவை கலியாண சுந்தர முதலியார்)
  14. தேசபக்தன் – திரு. வி. க. 2. 1. 1918
  15. தமிழ்நேசன் – கட்டுரை : எம்.சி.ஏ., அனந்தபத்மநாபராவ் 1919
  16. நல்லாசிரியன் – கா. நமச்சிவாய முதலியார் 1919
  17. நல்லாசிரியன் – (வயது 15, மாதம் 1)
    கட்டுரை : சி. வே. சண்முகமுதலியார் 1919
  18. செந்தமிழ்ச் செல்வி (பரல் 9, செப்டம்) 1925
    சொல்லாக்கம் – பிறாஞ்சீசுகு சூ. அந்தோனி
  19. ஒற்றுமை தொகுதி – 4. இதழாசிரியர் மு.ஏ. வீரபாகுபிள்ளை 1925
  20. பாலவிநோதினி கட்டுரையாசிரியர் கே. எசு. மணியன் திசம்பர், 1925
    கட்டுரை : திருவனந்தபுரம் தி. இலக்குமணபிள்ளை 1926

(தொடரும்)

Friday, June 21, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், அணிந்துரையும் பதிப்புரையும்

 




காலத்தை வென்று வாழ்வன நல்ல இலக்கியங்கள். அந்தச் சிறப்பிற்கு ஓர் இலக்கியம் தகுதிபெற வேண்டுமானால் அஃது உண்மையைப் பேச வேண்டும். வளரும் அறிவியல் அந்த உண்மையைப் பகுதிகளாக அறிந்து நமக்குத் தெளிவுபடுத்தும். அப்படி அறிவியலால் அடையாளம் காணப்படும் உண்மையின் பகுதிகள், ஏற்கெனவே உருவாக்கப் பட்டுள்ள இலக்கியங்களுள் பொதிந்துள்ளன என்பதை உணர்ந்து, அந்தவாழும் இலக்கியங்களை ஆய்ந்தும், போற்றியும், பின்பற்றியும் மனித இன நன்மை பெறுகின்றது. அப்படிப் பெருமைபெறு இலக்கியங்களில், திருக்குறள் முதன்மையானது.

நல்லறிஞர்கள் பலரால், திருக்குறள் – திருவள்ளுவம் – நயம், சுவை, பொருள், இலக்கப்கோப்பு உள்ளிட்ட – பலவித ஆய்வுகளுக்குத் தொடர்ந்து உட்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும், இலக்கியத்தின் இலக்கும் “உண்மை” என்பதாலும், அவ்வுண்மை அறிவியல் பகுதிகளாக அவ்வப்போது வெளிக்கொணரப் பட்டுக் கொண்டிருப்பதாலும், வாழும் இலக்கியத்தையும் வளரும் அறிவியலையும் இணைந்து ஆராய்வதும், ஆராய்ந்து இணைப்பதும் தேவையாகின்றது.

அந்தத் தேவையை உணர்ந்து, கவிஞர்கோ கோவை, இளஞ்சேரனார் நூல்கள் படைக்க முனைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. அவருடைய முனைப்பில் இப்போது உருபெற்றிருக்கும் ‘அறிவியல் திருவள்ளுவம்‘ என்கிற ஆய்வு நூலைப் படித்து மிக மகிழ்ந்தேன். அரசாண்மையிaல், வானவியல், மருத்துவம், உளப்பகுப் பாய்வியல், பொருளாதாரம், வேளாண்மையியல் உள்ளிட்ட பல்வேறுதுறைச் செயற்பாடுகளில் இன்றைய மனித இனம் கண்டறிந்துள்ளனவற்றைக் திருக்குறள் குறிப்புகளுடன் தக்கவாறு பொருத்தி ஆய்ந்திருப்பதைக் கண்டு வியக்கிறேன்.

தமிழர்தம் வளர்ச்சியின் தேவையறிந்து இந்நூலின் வாயிலாக, கவிஞர் இளஞ்சேரனார் திருக்குறளை ஒர் அறிவியல் நூலாக அடையாளம் காட்டியுள்ளார். இந்தப் புதிய பார்வையின் அடிப்படையில் அவருடைல் ஆய்வுப்பணியும், எழுத்துப்பணியும் தொடர பயில்பவர் உலகம் அவருக்கு ஊக்கமளிக்க வேண்டும். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

சென்னை-600005

திசம்பர்-23, 1994

அன்பன்,

0000

திருவள்ளுவம் மாந்த வாழ்வு சிறப்புறத் தேவையான அனைத்து அறிவையும் தெளிவுபடுத்தும் ஒப்பற்ற நூல்.

அறிவியல் (விஞ்ஞான) கருத்துகளின் மூலக்கூறுகளைத் தெரியப்படுத்தும் அறிவியல் நூல்.

இந்த நூல் மூலம் ஆசிரியர், திருவள்ளுவம் அறிவியல் அடிப்படையில் அமைந்துள்ளதை அக்குவேறு ஆணிவேறாகச் சான்றுகளுடன் விளக்கியுள்ளார்.

இந்நூலாசிரியர் திருமிகு. கவிஞர்கோ. கோவை. இளஞ்சேரனார் தமிழுலகுக்கு நன்கு அறிமுகமானவர். தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை இயக்குநராகப் பல்லாண்டுகள் பணிபுரிந்தவர். சிறந்த எழுத்தாளர்; பேச்சாளர்; தமிழ்ப்பற்றாளர்; திருவள்ளுவம் பரவ உழைப்பவர்.

பேரறிஞர் அண்ணா வழி நடப்பவர்; கலைஞரின் அன்புக்குரியவர். பகுத்தறிவு பாதை மாறாதவர்.

அன்னாரின் இந்த நூலை வெளியிடுவதில் நாங்கள் மெத்தவும் மகிழ்கின்றோம்.

தமிழுலகம் எமக்கு அரவணைப்பு நல்கி எம்மை ஊக்குவிக்க வேண்டுகிறோம்.

நூலாசிரியர் அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இராசாபுரம் 614806

தி.ன. 2025 கார்த்திகை 10
(1994)

(பதிப்புத்துறை)