(தமிழ்ச்சொல்லாக்கம் 699 -703 தொடர்ச்சி)
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 704-708
(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு.
கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
704. Picture Gallery – ஓவியக்கூடம்
பேர் பெற்ற பெரியாரால் தீட்டப்பட்ட ஓரழகிய ஓவியம் இருந்தது. ஒரு கோடீசுவரன், கலைகளின் அருமை சிறிது மறியாதவன், புகழ் கருதி அதை வாங்கித் தன் ஓவியக் கூடத்தில் (Picture Gallery) வைத்தான். அக்கூடமானது ஒரு கலைஞன் ஆட்சிக்குட்பட்டிருந்ததால், அக்கலைஞன் அவ்வோவியத்தைக் காணுந்தோறும், மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் உற்றான்.
நூல் : கட்டுரை மலர் மாலை 1933
கட்டுரை : செல்வமும் வறுமையும், பக்கம் – 102
கட்டுரையாசிரியர் : சாமி, வேலாயுதம் பிள்ளை, பி.ஏ., எல்.டி.,
(தலைமை ஆசிரியர், கழக (போர்டு) கலாசாலை,
அய்யம்பேட்டை, தஞ்சம் சில்லா)
★
705. பன்னசாலை – இலை வீடு
காவிரியாற்றின் கரையில் (பன்னசாலை) இலை வீட்டில் சுபத்திரையான, தன் மனையாளோடு பரதன் வாழுநாளில் ஒருநாள் அப்பரதன், அரிய தவஞ் செய்தாலன்றி அருமகவைப் பெறலாகுமா? ஆதலால் இங்கிருந்து யான் என்செய்வேனென்று தன் மனையாளோடு கூறினன்.
நூல் : திருத்துருத்திப் புராணம் (1933)
திருவாலங்காட்டுப் படலம், பக்கம் – 17
உரைநடை, குறிப்புரை : ப. சிங்கார வேற்பிள்ளை
(குற்றாலம், கழக (போர்டு ) உயர்தரக்
கலாசாலைத் தலைமைத் தமிழ்ப்பண்டிதர்)
★
706. Museum – பொருட்காட்சிச் சாலை
707. Scientist – அறிபொருள் வல்லுநர்
நான் ஒரு பெரிய பொருட்காட்சிச் சாலைக்குச் சென்றேன். ஓர் அறிவில்லாப் பணக்காரன், அதன் உயர்வை உணராதவன். அதைத் தனதென்று பெயரிட்டுக் கொண்டிருந்தான். ஆனால், அதன் மேற்பார்வையாளராகிய ஒர் அறி பொருள் வல்லுநர் (Scientist) அதிலுள்ள பொருள்களுள் ஒவ்வொன்றின் அருமையையும் உணர்ந்து, அவற்றின் மெய்ப்பொருள் காண்பதில் கண்ணுங் கருத்துமாய், அவற்றைத் தேடி ஆராய்ந்து அடுக்கி வைப்பதில் தம் வாழ்நாளெல்லாவற்றையும் செலவழித்தவராய் இருந்தார்.
நூல் : கட்டுரை மலர் மாலை, பக்கங்கள் – 101, 102 – 1933
★
708. Will – இறப்பு ஏற்பாடு
ஓர் அரிய விருந்திற்கு ஓரறிவாளர் வந்திருந்தார்; ஒரு பணக்காரனும் வந்திருந்தன். பணக்காரன் தற்பெருமை வாய்ந்தவனாதலின், அறிவாளர் அவனை அணுகவில்லை. அதனால் மனம் புழுங்கிய செல்வன், மதிவலாரை நோக்கி, யான் ஒரு கோடீசுவரன் என்பது உனக்குத் தெரியாதா? – எனக் கடுங்குரலில் கழறினன். அதற்கவர் மிக்க அமைதியுடன், அவ்வளவுதான் உனது பெறுமானமென்பது எனக்குத் தெரியும் என்றார். இத்தகைப் பெரியாரொருவர், யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் உயரிய உணர்வுடன் அழகுபட எழுதி வைத்திருக்கிற இறப்பு ஏற்பாடு (Will) பின்வருமாறு அமைந்துள்ளது.
நூல் : கட்டுரை மலர் மாலை 1993
கட்டுரை : செல்வமும் வறுமையும், பக்கம் – 105, 106
★
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
No comments:
Post a Comment