(தமிழ்ச்சொல்லாக்கம் 704-708தொடர்ச்சி)
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 709- 715
(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு.
கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
709. க.ப. சந்தோசம் – மகிழ்நன் (1934)
மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள்
இந்நூலிலே தொகுக்கப் பெற்ற கட்டுரைகள் அனைத்தும் சைவசித்தந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் பத்தாண்டுகளாக வெளியிடப் பெற்றுவரும் செந்தமிழ்ச் செல்வி என்னும் திங்கள் தாளிற்கு யான் இடையிடையே எழுதி வந்தனவாகும்.
ஆங்கில மொழியில் நல்லிசைப் புலவர்களான சுடீல் (Steele), அடிசன் (Addison), காருலைல் (Carlyle), கோலுடு சுமித்து (Gold-smith) முதலியவர்கள் சொற்சுவை பொருட்சுவை நகைச்சுவை நிரம்ப எழுதிய கட்டுரைகள் அம்மொழி பயிலும் மாணவர்கட்கு உவகையூட்டிப் பயன்படுவன போலத் தமிழ் பயிலும் மாணவர்கட்கு இந்நூற் கட்டுரைகள் பயன்படுமென்று கருதுகின்றேன். இதனைக் கல்லூரித் தலைவர்களும், தமிழாசிரியர்களும், மாணவர்கட்குப் பாடப் புத்தகமாக ஏற்று உதவி, என்னை ஊக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
மகிழ்நன்
நூல் : மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் (1934 பக். 7, 8
நூலாசிரியர் : மகிழ்நன்
★
710. பிராணாயாமம் – மூச்சடக்கி விடுதல்
உடற்பயிற்சி தேக உழைப்பில்லாத உடலின் நலத்திற்கு இன்றியமையாததது. நடத்தல், மலையேறுதல், கருவியின்றி உடற்பயிற்சி செய்தல், தோட்டம் பயிரிடுதல், மரமறுத்தல், மூச்சடக்கி விடுதல் (பிராணாயாமம்) முதலியன சாதாரணமான உடற்பயிற்சி முறைகளாகும்.
நூல் : உடல் நூல் (1934), பக்கம் – 41
நூலாசிரியர் : கா. சுப்பிரமணிய பிள்ளை, எம்.ஏ., எம்.எல்.
முத்துகிருட்டிணன் – மணி நீலன்
★
711. Anatomy – உடற்கூற்று நூல்
712. Physiology – உடற்செயல் நூல்
உடலின் பல பகுதிகளின் அமைப்பைப் பற்றிக் கூறும் நூல் (Anatomy) உடற் கூற்று நூலெனப்படும். அவற்றின் செயலைப் பற்றிக் கூறும் நூல் (Physiology) உடற்செயல் நூலெனப்படும். இரண்டும் உடல் நூலென்பதிலடங்கும்.
நூல் : உடல்நூல் (1934) முன்னுரை பக்கம் – 1
நூலாசிரியர் : கா. சுப்பிரமணிய பிள்ளை, எம்.ஏ., எம்.எல்.
★
713. Proto – plasm – முதற் சந்து
ஒரு நீர்த்துளியைப் பூதக் கண்ணாடி வழியாய்ப் பார்க்கும் பொழுது அதில் காணப்படும் மிகச் சிறிய உயிர்களின் உடலொன்றினை நுணுகி நோக்கின் அது குழைவான கண்ணாடி பேன்ற சத்தின் நுண்ணிய பிண்டமாகக் காணப்படும். அதனை அறிவியல் நூலார் முதற்சத்தென்பர் (Proto-Plasm).இம் முதற் சத்தானது மிக நுட்பமான உணவுத் துகள்களையுடையது. அதன் ஒரு பகுதியில் வித்துப் போன்ற ஓரிடம் காணப்படும். அதுவே அதன் உயிர்ப்பகுதி.
நூல் : உடல் நூல் (1934) முன்னுரை – பக்கம் -2
நூலாசிரியர் : கா. சுப்பிரமணிய பிள்ளை, எம்.ஏ., எம்.எல்.
★
714. Living Cell – உயிர்வாழ் சிற்றறை, சிற்றணுக் கூடு
வித்தோடு கூடிய முதற் சத்தினை உயிர்க் கருவென்னலாம். அது ஒரு சிற்றறை போன்றிருத்தலால் அதனை உயிர்வாழ் சிற்றறை (Living Cell) யெனவும் சிற்றணுக் கூடெனவும் நூலோர் கூறுவர்.
மேற்படி நூல் : முன்னுரை : பக்கம் – 2
★
715. Amoeba – திரிபுயிர்
நீர்த்துளியிலுள்ள புழுக்கள் பலவற்றின் உடம்புகள் ஒரு சிற்றறையே யுடையன. அவ்வுயிர்களின் உடம்பு அடிக்கடி மாறுவதால் அவற்றைத் திரிபுயிர் (Amoeba) என்பர்
மேற்படி நூல் : முன்னுரை – பக்கம் – 3
★
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
No comments:
Post a Comment