Showing posts with label science. Show all posts
Showing posts with label science. Show all posts

Sunday, September 30, 2012

மூ மா(Dinosaur)

மூ மா(Dinosaur)
இலக்குவனார் திருவள்ளுவன்

ஊழித் தொடக்கக் காலத்தில் தயனோசர்(Dinosaur) முதலான விலங்குகள் வாழ்ந்தமையாகக் கண்டறிந்துள்ளனர். அவற்றைத் தமிழில் கூற இயலுமா என்றால் மிகச் சிறப்பாகக் கூற முடியும் என்பதே உண்மை.  நீரில் வாழும் உயிரினங்களை நீரி என்றும் ஊர்ந்து வாழும் உயிரினங்களை ஊரி என்றும் வயிற்றால்-அகட்டால் ஊர்ந்து செல்லும் பாம்பினை அகடூரி என்றும் அழைத்துள்ளனர். இவை போல் மிக மிக மிக மூத்தக் காலத்தினைச் சேர்ந்த - அழிந்து ஒழிந்து போன பேரளவிலான ஊரும் உயிரினங்களை - ஊர்வனவற்றை  மூஊரி - மூவூரி என்றும் கூறலாம். ஊர்வனவை  முதுகுத்தண்டுகள் உள்ள உயிரினங்கள்.  இவை நுரையீரல் மூலமே மூச்சுவிடுகின்றன.

 மூத்த பல்லியினம் என்ற வகையில் மூ ஊரி என்னும் பொருளைத்தான்  தயனோசர் என்னும் சொல்லும் குறித்தாலும், ஊர்வன அல்லாத சில உயிரிகளும் இவற்றில் அடங்கும் என்பதால், தமிழறிந்தோர் தவறு என எண்ணுவர். எனவே, மா என்பது விலங்கினத்தைக் குறிப்பதால் இவ்வகை உயிரினங்களை மூமா எனலாம். இவற்றுக்கும் முந்தையவை  தொன்மா  ஆகும்.  எனவே மூமா  என்பதைக் கேலியாக எண்ணாமல் பயன்படுத்தினால் எளிய பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும். மூமா வகைகளை அவற்றின் தோற்றம், உணவுப் பழக்கம் முதலியவற்றின் அடிப்படையில்தான் பெயரிட்டுள்ளனர். அவ்வாறே நாமும் தமிழில் கூறலாம். எனினும் சில உயிரினங்களை அவற்றின் நேர்  பொருளில் குறிப்பதைவிடத் தோற்றம் அல்லது உண்ணும் முறை அல்லது செயல்பாட்டு அடிப்படையில் கூறுவதே ஏற்றதாக இருக்கும். மேலும், இவ்வினங்கள் நீர் வாழ்வன அல்லது பறப்பனவாக இருப்பின் அதற்கேற்ற வகையில் மீனம், நீரி, புள்(பறவை) முதலான அடைமொழிகளுடன் அழைக்கலாம். தமிழில் குறிப்பிடுவதால்  அதன் உடல் அமைப்பை வைத்துக்கொண்டே பெயரைப் புரிந்து கொள்ளவும் அல்லது பெயர் மூலம் உருவ  அமைப்பைப் புரிந்து கொள்ளவும் இயலும். சான்றாகப் பரு மூமா என்னும் பொழுது மிகவும் பருத்துள்ள மூமா எனப் புரிந்து கொள்ளலாம். அல்லது மூன்று கொம்புடைய - முக் கொம்புடைய- மூமாவின் படத்தைப் பார்த்தால் முக்கொம்பு மூமா  எனப் புரிந்து கொள்ளலாம். புரியாமல் பிறமொழிச் சொற்களை மனப்பாடமாகக் கூறுவதை விடப் புரிந்து சொன்னால் எளிதில் மனத்தில் பதியுமல்லவா?
மூமா  வகைகளை இனிப் பார்ப்போம்.


● ஆப்பிரிக்க வேட்டைமூமா (Afrovenator):
 ஆப்பிரிக்க வேட்டையாளர் என்னும் பொருளில் அழைக்கப்படுகிறது. ஆப்பிரிக்க வேட்டை மூமா எனத் தமிழில் கூறலாம். விலங்குபோல் காலும் மூன்று விரல்களும் கொண்ட இருகாலி. ஊனுண்ணி வகையைச் சேர்ந்தது. இதன் மூக்கிலிருந்து வால் வரை ஏறத்தாழ 9 கோல்(மீட்டர்) நீளம் உள்ள விலங்கு; இதன் எடை ஏறத்தாழ  1.5 பாரம்(டன்).

● ஈரளவிப் பல்மூமா /இரை கொல் மூமா  (Dimetroden):
 வெட்டுப்பற்களும் கூரிய பற்களும் என  ஈரளவுப்  பற்களை உடையன என்னும் பொருளில்  பெயரிடப்பட்டுள்ளது. ஈரளவிப் பல்மூமா என்பது  சரியாக அமையும். ஏனெனில்  தோற்றத்தின் அடிப்படையில் இதனை  மூத்த ஊர்வனவற்றுடன் கருதினாலும் இவ்வினம் அதற்கும் முந்தைய பாலூட்டி வகையைச் சேர்ந்தது. இரையைக் கொன்று தின்னும் மூத்த உயிரினம் என்னும் பொருளில் இரைகொல் மூமா  என்றும் சொல்லலாம். இரையைக் கொன்று தின்பன பலவாக இருப்பினும் மூத்த இனம் என்ற வகையில் அச் சிறப்பை இவ்வுயிரினத்திற்குத் தரலாம். 285 பேராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம்; 3.5 கோல்(மீட்டர்)/11 அடி நீளமானது; சிறு விலங்குகளைக் கொன்று இரையாக உண்ணும் உயிரி; முதுகுத் துடுப்பு உடல் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்த உதவும்.

● கிளியலகி மூமா(Achelousaurus):
 கிரேக்கத் தொன்மைக் கதையில் குறிக்கப்படும் ஆக்கிலோசு (Achelous)என்னும் கொம்பிழந்த ஆற்றுத் தேவதையின் பெயரில் இம் மூமா அழைக்கப்பெறுகிறது.  தோற்றத்தில் இதன் மூக்கு,  கிளியின்அலகைப் போல் உள்ளதால் நாம் இதனைக் கிளியலகி மூமா எனலாம். இது 74  நூறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மூமா எனப்பெறுகிறது.  இதன் உயரம் 6 கோல்(மீட்டர்). இது பயிருண்ணி விலங்கு.


● கொடு நக மூ மா  (deinonychus):
 பயங்கரமான கை என்னும் பொருளில் பெயரிடப்பட்டுள்ளது. கொடு(வளைந்த) நகம் உடையதால் கொடுநக மூமா  என நாம் அழைப்பின் ஏற்றதாக இருக்கும்.  மனிதனின் அளவே உயரமானது; விரைவாகச் செல்லக் கூடியது. இரையாகும் உயிரிகளின் குடல்களைக் கிழித்து எடுப்பதற்கேற்ப 12 சிறுகோல்(செ.மீ)/4.5 அங்குலம் நீள வளைந்த நகங்களை உடையது.

● கொம்பு மூமா  (Agathaumas):
 பெருவிந்தை என்னும் பொருளுளில் இதற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கொம்புமுக உயிரினங்களில் இவ்வகைதான் முதலில் கண்டறியப்பட்டது. கொம்புடைய மூமா என்பதால் கொம்பு மூமா என்று சொல்வது எளிதில் புரிவதாக அமையும். 65 பேராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம்; 30 அடி நீளமும் 6 பாரம்(டன்) எடையும் உடையது.

● சதை உண் மூமா  (Allosaurus):
 பல்லியினங்களில் இருந்து இதன் முதுகு மாறுபட்டு அமைந்துள்ளமையால் மாறுபட்ட பல்லி என்னும் பொருளில் இதற்குப் பெயர் சூட்டி உள்ளனர். பிற உயிரிகளின் சதைகளைக் கிழித்து உண்ணும் பழக்கமுடைய இதனைச் சதைஉண் மூமா என்று சொல்லலாம். 200 பேராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த  இருகால் உயிரினம்; 13 கோல்(மீட்டர்)/43 அடி நீளமும் இரண்டு பாரத்திற்கு(ton) மேல் எடையும் உள்ளது; 3 கோல்(மீட்டர்)/10 அடி நீளமானது.  

● சிதள் மூமா  (Stegosaurus):
 கூரைப்பல்லி என்னும் பொருளில் அழைக்கப்படுகிறது. முதுகில் உள்ள சிதள்கள் கூரைபோல் அமைவதால் அவ்வாறு கூறுகின்றனர். அதைவிடச் சிதள் மூமா என்பது தமிழுக்கு ஏற்றதாக அமையும்.1.5 பாரம்(ton) எடையுள்ளது. முதுகில் உள்ள சிதள்கள் உடல் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்தும். 8 கோல்(மீட்டர்)/26அடி நீளமுள்ளது; தீங்கற்றது; பயிர் உண்ணி.


● சிறு மூமா  (Euparkeria):
 இங்கிலாந்து நாட்டு இயற்பியலாளர்-விலங்கியலாளர் வில்லியம் கிச்சன் பார்க்கர் (William Kitchen Parker :23.06.1823 - 03.07.1890)  என்னும் அறிஞரைப்  போற்றும்  வகையில் பார்க்கரின் சிறந்த விலங்கு என்னும் பொருள்பட இப்பெயர் இடப்பட்டுள்ளது. எனினும் சிறிய மூமா என்பதால் நாம்  சிறு மூமா என்று சொல்லலாம். 245 பேராயிரம் (மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம்; கோழி அளவு உடையது; ஊண் உண்ணி; வெகுவிரைவாகச் செல்லக் கூடியது.

● நெட்டெலும்பு மூமா (Acrocanthosaurus) :
 நெடுமுதுகெலும்புப் பல்லி என்னும் பொருளில் அழைக்கப்படுகிறது. நெட்டெலும்புப் பல்லி  என்று சொன்னால் தவறாகப் புரிந்து கொள்ளலாம். எனவே, நெட்டெலும்பு மூமா எனலாம். இருகால் உயிரி; பிற உயிரிகளை இரையாகக் கொண்டு வாழும்;  இதன் நீளம் ஏறத்தாழ 12 கோல்(மீட்டர்); இதன் எடை  6 முதல் 7   பதின் பாரம் (மெட்ரிக் டன்).

● நெடுங்கழுத்தி மூமா(Mamenchisaurus):
  தாவர உண்ணி. 156 முதல் 145 பேராயிரம் (மிலலியன்) ஆண்டுகளுக்கு முற்பட்ட இனம். 9.3 கோல் (மீட்டர்)/31 அடி நீளமுடைய நெடுங்கழுத்தும் நீண்ட வாலும் உடைய நாற்கால் விலங்கு. மிக நீளமான கழுத்தையுடைய தோற்றத்தின் அடிப்படையில் நெடுங்கழுத்தி மூமா எனப்படுகிறது. இதன் நீளம் 21 கோல்(மீட்டர்).

● பயிர் உண் மூமா  (Dryosaurus):
 இதன்பின் கடைவாய்ப்பற்கள்  கருவாலி(ஓக்) இலை போன்று இருப்பதால் கருவாலி(ஓக்) பல்லி என்னும் பொருளில் அழைக்கின்றனர். பயிரினங்களை உண்பதால், பயிர் உண் மூமா என்று நாம் சொல்லலாம். சதைஉண் மூமாக்களிடமிருந்து தப்பிப்பதற்காக மிக விரைவாகச் செல்கிறது.


● பரு மூமா  (Brontosaurus):

 இடி முழக்கப் பல்லி என்னும் பொருளில் பெயர் கொண்டது. பருத்த உடல் அமைப்பின் அடிப்படையில் நாம், பரு மூமா என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். 200 பதின்நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம்; 21 கோல்(மீட்டர்) /69 அடி நீளமுடையது.

● புடைப்போட்டு  மூமா(Stygimoloch) :
 ஃச்டைக்சு(styx) ஆற்றிலிருந்து வந்த பேய் என்னும் பொருளில்  அழைக்கப் படுகிறது.  பயிருண்ணி மூமா; இருகால் விலங்கு. இதன் தலை ஓட்டில் கொம்பு போன்ற 4 அங்குலப் புடைப்பு இருக்கும். எனவே, இதனைப் புடைப்போட்டு மூமாஎன்று சொல்லலாம். இதன் நீளம் 2 முதல் 3 கோல்(மீட்டர்); எடை 170 நிறை.

● புள்ளலகி மூமா(Pterodactylus):
 சிறகு விரல் என்னும் பொருளில் அழைக்கப்படுகிறது. பறவையின் அலகைப் போன்ற அலகு உடையது.  எனவே, புள்ளலகி மூமா என்று சொல்லலாம். மிக நீண்ட இறக்கை உடையது.

● பெரு மூ மா  (Tyrannosaurus):
 பல்லி அரக்கன் என்னும் பொருளில் குறிப்பிட்டுள்ளனர். அரக்கன் என்பது உயர்திணை. அரக்கனைப் போன்ற பெருந்தோற்றம் கொண்டது என்பதால் பெருமூமா என்று சொல்வதே சிறப்பாய் அமையும். 100 பதின்நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினம். 5 கோல்(மீட்டர்)/16 .2 அடி உயரமும் 14 கோல்(மீட்டர்)/45 அடி நீளமும் உள்ளது; 6.8 பதின்பார(metric ton)எடை உடையது.

● முக்கொம்பு மூமா  (Triceratops):
 முகத்தில்  மூன்று கொம்புகளை உடையது. மூன்று கொம்புடைய முகம் என்னும் பொருளில் அழைக்கப்படுகிறது. எனவே, மூன்று  கொம்புடைய - முக்கொம்புடைய - மூமா என்னும் பொருளில் முக்கொம்பு மூமா என்பது பொருத்தமாக இருக்கும். 6 பாரம்(ton) எடையுடையது; 9 கோல்(மீட்டர்)/30அடி  நீளமுடையது. இதுவும் பயிர் உண்ணியே.

● மூச்சிறகி(pteranodon):
 பெரும் சிறகின் அடிப்படையில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.  பெருஞ்சிறகினை  உடைய மூத்த இனம் என்பதால் மூச்சிறகி எனப்படுகிறது. 100 பேராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம். 7.5 கோல்(மீட்டர்)/25 அடி நீளத்தில் பெருஞ் சிறகுடையது. எனினும் பறவை போல் உயரத்தில் பறக்காது. தலையிலுள்ள தட்டைக் கொம்பு சுக்கான் போல் செயல்படும்.  இரையாகப் பிற உயிரைக் கொன்று தின்னும் இரைகொல்லி விலங்கு.

● மூ நீரி(Plesiasaurus):
 பல்லியை விட நீர் வாழ் மீனினத்துடன் ஒப்புமை மிகுதியாக உள்ளமையால் பல்லியை ஒத்தது என்னும் பொருளில் அழைத்துள்ளனர். நீரில் வாழும் உயிரி என்ற வகையில் தமிழில் தெளிவாகவே மூநீரி என்று சொல்லலாம். 200 பேராயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம்; 5 கோல்(மீட்டர்)/16 அடி நீளமுடையது.

● மூப் புள்(archaeopteryx):
 தொன்மைச்சிறகு என்னும் பொருளில் அழைக்கப்படுகிறது. சில நேரங்களில்  மூலப்பறவை அல்லது முதல் பறவை என்னும் பொருள்கொண்ட உருவோகெல்(Urvogel) என்னும் செருமானியப் பெயரிலும் குறிக்கப்படுகின்றது. மூப்புள் எனத் தமிழி்ல்  இப்பொருளில் சுருக்கமாகச் சொல்வது சிறப்பாக உள்ளது.  195-135 பேராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  வாழ்ந்த உயிரினம்; .5 கோல்(அரை மீட்டர்) நீளம் உடையது; காகம் அளவுடையது. சிறு வடிவப்பறவை. எனினும்  இதன் சிறகுகள் நீளமானவை.



● மூ மீனம்(Ichthysaurus):
மீன் பல்லி என்னும் பொருளில் அழைக்கப்பட்டாலும் நீர் வாழ் உயிரினமான இதனை மூ மீனம் என்பதே பொருத்தமாக இருக்கும். 2 கோல் முதல் 10 கோல்(மீட்டர்)/(6.6 அடி முதல் 33அடி) வரை நீளமுள்ளது. பொதுவாகச் சிறிய அளவிலே காணப்பட்டவை. 225 பேராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த (கடற்பன்றி/டால்பின் வகை) உயிரினம். மீன்களை உண்பது. ஊனுண்ணி; பிற உயிரினங்களின் சதை முதலியவற்றை உண்ணும் உயிரினம்.

● மூப் பெரு முதலை(Deionosuchus):
 பயங்கர முதலை என்னும் பொருளில் பெயரிட்டுள்ளனர். பெருத்த உருவம் கொண்ட முதலை என்பதால் மூப் பெரு முதலை என்று சொல்லலாம். 75 பேராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம். 16 கோல்(மீட்டர்)/52அடி  நீளம் வரை உள்ளது.

 மேலும் நூற்றுக்கணக்கிலான மூமாக்கள் பற்றிக் கண்டறிந்து உள்ளனர். எனவே, இவற்றின் தொடர்ச்சியைப் பிறிதொரு நாளில் காணலாம்.


Monday, September 24, 2012

நுண்ணோக்கி(microscope)

நுண்ணோக்கி(microscope)
 இலக்குவனார் திருவள்ளுவன்

மிக நுண்ணிய சிறு பொருள்களையும் பன்மடங்காகப் பெருக்கிக் காட்டுவது நுண்ணோக்கியாகும். கண்ணுக்குப் புலப்படாத நோயுயிரி போன்ற சிறிய அல்லது நுணுக்கக் கூறுகளைப் பெரிதாகக் காட்டி, கண்களால் காண உதவுவதால் நுணுக்குக் காட்டி என்கின்றனர் ஈழத்தில்.

பழந்தமிழகத்தில் கண்ணாடி, ஆடி, படிகம், புளகம், அத்தம், படிமக்கலம், உருவங்காட்டி, கஞ்சனம் எனக் கண்ணாடிகள் குறிக்கப் பெற்றுள்ளன; தொலை நோக்காடி, நுண்ணோக்காடி போன்றவை இருந்ததற்கான குறிப்பு கிடைக்கவில்லை. ஆனால், மிகத் தொலைவில் உள்ள கோள்கள், விண்மீன்கள், பிற விண் பொருள்கள் பற்றியும் மிகச்சிறிய அணு நோயுயிரி பற்றியும் நன்கு அறிந்திருந்தனர். இத்தகைய அறிவியல் அறிவைப் பெறவும் தொலைவில் எதிரிகள் வருவதை அறியவும் எவ்வகை ஆடிகளைப் பயன்படுத்தி உள்ளனர் எனத் தெரியவில்லை.

கண்ணுக்குப் புலப்படாத மிகச் சிறிய பொருள்களையும் மிகப்பெரிதாகக் காட்டும்கருவியான நுண்ணோக்கி, நோய்மிகளை அறிந்து கொள்ளவும் இலை, வேர் முதலியவற்றின் அமைப்பைத் தெரிந்து கொள்ளவும் பல வழிகளில் பயன்படுகிறது.

பல்வகையிலான நுண்நோக்கிகள் பயன்பாட்டில் உள்ளன. என்றாலும் நுண்நோக்கி எனும்போது முதலில் கண்டறியப்பட்ட ஒளி நுண்நோக்கியையே குறிக்கின்றது.

10ஆம் நூற்றாண்டில் படிப்பதற்கு உதவியாக எழுத்துருப் பெருக்கிக் கண்ணாடி உருவாக்கப்பட்டது. கி.பி.1284 இல் சால்வினோ தி அர்மதெ (Salvino D'Armate) என்னும் இத்தாலியர் அணியக்கூடிய கண்ணாடியைக் கண்டு பிடித்தார்.

நெதர்லாந்தில் உள்ள மூக்குக் கண்ணாடி உருவாக்கும் ஆன்சு ஏன்சென்(Hans Janssen)னும் அவருடைய மகன் சக்கரியாசு ஏன்சென்னும்(Zacharias Janssen) 1590 இல் கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கினார்கள்.

அண்டன் வான் இலீவன்ஃகோக்கு (Anton van Leeuwenhoek, 1632-1723) என்னும் அறிவியலாளர் இதன் தரத்தை உயர்த்தி, உருப்பெருக்கத்தையும் உயர்த்தினார்

17ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அறிஞர் கலிலியோ கலிலி (Galileo Galilei 1564-1642) குழி வில்லைகளையும் குவி வில்லைகளையும் பயன்படுத்திக் கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கினார். இதற்கு செருமானிய மருத்துவர் கியோவான்னி ஃபபெர்(Giovanni Faber) மைக்கிராசுகோப்பு(microscope)- நுண்ணோக்கி என்னும் பெயரைச் சூட்டினார்.

செருமானிய இயற்பியலாளர் எர்னசுட் உருசுக்கா (Ernst Ruska: 25.12.1906 – 27.05. 1988) முதலில் மின்னணு வில்லையை உருவாக்கினார். 1933 ஆம் ஆண்டில் இயற்பியலாளர் மாக்ஃசு நொல் என்பாருடன் சேர்ந்து மின்னணு நுண்ணோக்கியை உருவாக்கினார். இதன் மூலம் 400 மடங்கு உருப்பெருக்கத்தைக் காண முடிந்தது. நடைமுறைத் தேவைகளுக்கு இந்நுண்ணோக்கி போதுமானதாக இல்லை. எனவே, மேலும் திருத்தமான நுண்ணோக்கிப் படைப்பிற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

1938 இல் கனடாவிலுள்ள உரொராண்டோ பல்கலைக் கழகத்தில், எலி பிராங்க்ளின் பர்ட்டன் (Eli Franklin Burton), அவரது மாணவர்களான சிசில் ஆல் (Cecil Hall), சேம்சு இல்லியர் (James Hillier), அல்பர்ட் பிறிபசு (Albert Prebus) ஆகியோர்களால் திருத்தமான நுண்ணோக்கி உருவாக்கப்பட்டது. இவ்வாறான பல்வேறு முயற்சிகளால், வெவ்வேறு தர நுண்ணோக்கிகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும் அனைத்திற்கும் அடிப்படை இயற்பியலாளர் எர்னசுட் உருசுக்கா படைத்ததே. எனவேதான் இவருக்கு 1986 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல்பரிசு (பகிர்வாக) வழங்கப் பெற்றது.

1981 ஆம் ஆண்டு கெர்டு பின்னிங்கு (Gerd Binnig) எய்ன்ரிச்சு உரோரெர் (Heinrich Rohre) ஆகியோர் பொருளின் முப்பருமையைக் காட்டும் அலகூடி நுண்ணோக்கி (scanning tunneling microscope) கண்டுபிடித்தனர். இவ்விருவருக்கும்தான் 1986 ஆண்டுநோபல் பரிசு உருசுக்காவுடன் பகிர்ந்து வழங்கப்பட்டது.

நுண்ணோக்கிகளுள் கைகளில் எடுத்துப்பயன்படுத்தும் இயல்பான உருப்பெருக்காடி தனி நுண்ணோக்கி என்றும் இரு குவி வில்லைகள் அல்லது அவற்றிற்கு மேற்பட்டவற்றைக் கொண்டது கூட்டு நுண்ணோக்கி என்றும் சொல்லப்பெறும். இவைபோல், புற ஊதாக்கதிர் மூலம் உருப் பெருக்கம் காண உதவுவது புற ஊதாக் கதிர் நுண்ணோக்கி என்றும் மின்னணுக் கற்றைகளைப்பயன்படுத்தி மீ நுண்பொருள்களையும் அறிய உதவுவது மின்னணு நுண்ணோக்கி என்றும் சொல்லப்பெறும். எனினும் ஒளியன் நுண்ணோக்கி, மின்னணு நுண்ணோக்கி, வரைவலகி நுண்ணோக்கி என அடிப்படையில் மூவகையாக நுண்ணோக்கிகள் அமைகின்றன. 20நூறாயிரம் மடங்கு பெரிதாக்கிக் காட்டும் மின்னணு நுண்ணோக்கிகளும் இப்போது உள்ளன.

வரைவலகி ஆய்வு முறையில், நுண்ணோக்கி அமைக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பக் கோட்பாட்டு அடிப்படையில், பின் வரும் வகைகள் முதன்மையாக உள்ளன:-

  1. அணுவிசை நுண்ணோக்கியம் (Atomic Force Microscopy, AFM)
  2. அமுக்க காந்த வலிவு நுண்ணோக்கியம் (Piezo Force Microscopy, PFM)
  3. அலகூடு நுண்ணோக்கியம்(Scanning Tunneling Microscopy,STM)
  4. உந்து விசை உமிழ்வு மின்னணு நுண்ணோக்கியம் (Ballistic Electron Emission Microscopy, BEEM)
  5. ஒளி வெப்ப நுண்ணலைமாலையியம் (Photothermal Microspectroscopy, PTMS)
  6. ஒளியன் அலகூடு நுண்ணோக்கியம் (Photon Scanning Tunneling Microscopy, PSTM)
  7. காந்த ஒத்ததிர்வு வலிவு நுண்ணோக்கியம் (Magnetic Resonance Force Microscopy, MRFM)
  8. காந்த வலிவு நுண்ணோக்கியம் (Magnetic Force Microscopy, MFM)
  9. சுழற்சி முனைப்புறு அலகூடு நுண்ணோக்கியம் (Spin Polarized Scanning Tunneling Microscopy,SPSM)
  10. தழலிஆய்வு வலிவு நுண்ணோக்கியம் (Kelvin Probe Force Microscopy,KPFM) அல்லது புறப்பரப்புதிறல் நுண்ணோக்கியம் (Surface Potential Microscopy,SPM)
  11. நிலை மின் நுண்ணோக்கியம் (Electrostatic Force Microscopy, EFM)
  12. பரப்பண்மை வரைவலகி ஒளிசார் நுண்ணோக்கியம் (Near-Field Scanning Optical Microscopy, NSOM) (or Scanning Near-Field Optical Microscopy,SNOM)
  13. மின்வேதியல் அலகூடு நுண்ணோக்கியம் (Electrochemical Scanning Tunneling Microscope, ESTM)
  14. வரைவலகி கொண்ம நுண்ணோக்கியம் (Scanning Capacitance Microscopy, SCM)
  15. வரைவலகி மின்துகள் கடத்தும நுண்ணோக்கியம்(Scanning Ion-Conductance Microscopy,SICM)
  16. வரைவலகி மின்வேதிய நுண்ணோக்கியம் (Scanning Electrochemical Microscopy, SECM)
  17. வரைவலகி மின்னழுத்த நுண்ணோக்கியம்(Scanning Voltage Microscopy,SVM)
  18. வரைவலகி மீ.ஏதி நுண்ணோக்கி முறை (Scanning SQUID microscope, SSM)[மீ. ஏதி - மீக்கடத்துக் குவைய இடையீட்டு ஏதி(SQUID-Superconducting Quantum Interference Device)]
  19. வரைவலகி முற்ற ஆய்வு நுண்ணோக்கியம்(Scanning Hall Probe Microscopy, SHPM)
  20. வரைவலகி வாயில் நுண்ணோக்கியம் (Scanning Gate Microscopy, SGM)
  21. வரைவலகி வெப்பஞ்சார் நுண்ணோக்கியம் (Scanning Thermal Microscopy, SThM)
  22. வலிவேற்ற நுண்ணோக்கியம் (Force Modulation Microscopy, FMM)
அணுவிசை நுண்ணோக்கிய நுட்பத்தில் அமைக்கப்படுவது அணுவிசை நுண்ணோக்கி என்பதுபோல் நுண்ணோக்கியின் வகைப்பாடுகளை நாம் புரிந்து கொள்ளலாம்.

Thursday, September 20, 2012

பழமொழிகளும் தொடர்பான அறிவியல் சிந்தனைகளும்

பழமொழிகளும் தொடர்பான அறிவியல் சிந்தனைகளும்
இலக்குவனார் திருவள்ளுவன்
 
அத்தி

  1. அத்தி மரத்தில் தொத்திய கனிபோல்
  2. அத்திக்காயைப் புட்டுப்பார்த்தால் அங்கும் இங்கும் பொள்ளல்
  3. அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு
  4. அத்திப்பழத்தைப் பிட்டால் அத்தனையும் சொத்தை
  5. அத்திப்பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அதற்குள்ளும் விதை இருக்கும்.
  6. அத்திப்பூ  பூத்தாற்போல்
  7. அத்திப்பூவை ஆர் அறிவார்?
  8. அத்திப்பூவைக் கண்டவர் உண்டா?
  9. அத்திப்போல் துளிர்த்து .. .. வாழ்ந்திருப்பர்.
 இப்பழமொழிகள் அத்தி பற்றிய அறிவியல் உண்மைகளை நம்முன்னைத் தமிழ்மக்கள் நன்கு அறிந்திருந்தனர் என்பதை உணர்த்துகிறது. அத்தி பற்றிய பொதுவான செய்திகளை நாம் தெரிந்து கொள்வோம்.

 பயிரினங்கள் பூத்துக் காய்த்துக் கனிவதே வழக்கம் என்றாலும் பூக்காமல் காய்க்கும் மரங்களும் உள்ளன. இவற்றைக் கோளி என்பர் பழந்தமிழர்.

கொழு மென் சினைய கோளியுள்ளும்
பழம் மீக் கூறும் பலாஅப் போல     (பெரும்பாணாற்றுப்படை : 407-408)
கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்து                   (மலைபடுகடாம் : 268)
முழுமுதல் தொலைத்த கோளி ஆலத்து                      (புறநானூறு : 58.2)
முன்ஊர்ப் பழுனிய கோளி ஆலத்து  (புறநானூறு : 254.7)

இவ்வாறு, பூவிலி வகைத் தாவரங்களை, ஈராயிரம் ஆண்டுகளுக்கு  முன்பே சங்கப்புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மாதரி கண்ணகிக்குச் சமைக்க   வழங்கிய பொருள்களைக் குறிப்பிடும் பொழுது,

கோளிப் பாகல் கொழுங் கனித் திரள் காய், (சிலப்பதிகாரம்:16.22)

என்கின்றார் தமிழ்த்தேசியப் புலவர் இளங்கோஅடிகள்

 தேவாரப்பாடல் எண் 78 இல் எவ்விடங்களிலும் மரங்கள் நிறைந்திருப்பதாக அவற்றின் பெயர்களை அடுக்கிக் கூறும் பொழுது கோளி என்று பலா குறிப்பிடப்படுகின்றது.
   பொதுவாக அரசு, அத்தி, ஆல், பலா ஆகியவற்றைப் பூக்காமல் காய்க்கும் மரங்கள் என்கின்றனர்.

பூவாது காய்க்கு மரமுள நன்றறிவார்
மூவாது மூத்தவர் நூல்வல்லார்

என்னும் சிறுபஞ்ச மூலம் (22) அடியில் பூவாது காய்க்கும்  மரம், ஆண்டால்  மூப்பு அடையாமல் அறிவால் மூப்பு அடைவோரைக் குறிக்கப் பயன்படுகின்றது. பூவாது காய்க்கும் மரங்கள் அத்தி, ஆல், பலா, அரசு முதலியன  என அறிஞர்கள் விளக்கி உள்ளனர்.
 மேலே கூறிய சிலப்பதிகார அடிகளை விளக்கும் பொழுது,

சொல்லாம லேபெரியர் சொல்லிச் செய்வார் சிறியர்
சொல்லியுஞ் செய்யார் கயவரே  

என்னும் பாடலடிகளை எடுத்துக்காட்டிப் பூவாமல் காய்ப்பது எனப் பலாவகையைக் குறிப்பிடுகின்றார் அடியார்க்கு நல்லார்.

பூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே

என ஔவையார் நல்வழியில்(35), பிறர் சொல்லாமல் தாமே பணி செய்வாரைக் குறிப்பிடுகையில் பூவாமல் காய்க்கும் மரத்தை எடுத்துக்காட்டாகக் கூறுகின்றார். இதற்கு விளக்கம் தருவோர் அத்தி, ஆல், பலா, அரசு போன்ற பூவாமல் காய்க்கும்  மரங்கள் என்கின்றனர்.
இவற்றுள் அத்தி யைச் சங்கப் பாடல்களில் அதவம் என்றே குறிப்பிட்டுள்ளனர்.

அதலத் தீங்கனி அன்ன செம்முகத்
துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்க
என்கின்றது நற்றிணை(95:3-4)

குரங்குக்குட்டியின் முகம் இனிய அத்திப்பழம் போன்று சிவந்த நிறம் எனக் கூறுவதன் மூலம் அத்திப்பழம் நிறம் சிவப்பு என இப்பாடலடி விளக்குகிறது.

ஆற்றயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து

என்னும் குறுந்தொகை(24.3) பாடலடி மூலம் அதவமாகிய அத்தி ஆற்றங்கரையோரம் முளைத்து வளரும், அதன் கிளைகள் வெண்மையான நிறம் கொண்டவை  என்னும் அறிவியல் செய்திகள் கூறப்படுகின்றன.

 பூக்காத்தாவரம் கிரைப்டோகம் (cryptogam) என ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. கிரேக்க மொழியில் இதன்பொருள் மறைக்கப்பட்ட விதை என்பதாகும். இதன் மூலம் விதை உற்பத்தியாகா என்கின்றது இக்கலைச்சொல். கார்ல் இலினௌசு (Carl Linnaeus: 1707–1778) என்னும் அறிஞர் தாவரக் குடும்பங்களை 25 வகையாகப் பகுத்து இவ்வகையையும் அதில் சேர்த்துள்ளார். 18 ஆம் நூற்றாண்டில் கண்டு உணரப்பட்ட பூவிலிக் குடும்பம் பற்றி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னைத் தமிழ் மக்கள் அறிந்துள்ளனர்.
 அத்தியில் பல வகை உண்டு. அவை வருமாறு(செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி: முதன் மடலம்: முதற்பகுதி: பக்.196-197):-

  1. கல்லத்தி (stone fig- Ficus scandens)
  2. காட்டத்தி (jungle fig- Ficus hispida)
  3. குருகத்தி (glossy long leaved fig- Ficus tjakela)
  4. கொடியத்தி (creeper fig- Ficus repens)
  5. சிற்றத்தி (small fig – Ficus polycarpa)
  6. சீமையத்தி அல்லது தேனத்தி (foreign fig- Ficus carica)
  7. செவ்வத்தி (red fig- Ficus heterophylla)
  8. நாட்டத்தி (country fig- Ficus glometra alias Ficus racemosa)
  9. நாயத்தி
  10. நீரத்தி (yellow fig-Ficus callosa)
  11. பேயத்தி (devil fig-Ficus oppositifolia)
  12. பேரத்தி (tall fig-Ficus excelsa)
  13. மரந்தின்னியத்தி ((sandpaper fig-Ficus asperrima)
  14. மலையத்தி (mountain fig- Ficus macrocarpa)
  15. விழலத்தி அல்லது ஊழலத்தி
 இவை போல் வெள்ளை அத்தி, பசலத்தி, நல்ல அத்தி, வயமம் முதலானவைகளும் உள்ளன. அத்திக்கு ஆழரம் என்றும் உதும்பரம் என்றும்  வேறு பெயர்கள் உள்ளன. வங்காளத்திலும் இந்தியிலும்  உதும்பரா என்றும் மராத்தியில் உதும்பர் என்றும் குசராத்தியில் உம்பரா என்றும்  சமசுகிருதத்தில் ஔதும்பரா என்றும் மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் அத்தி என்றும் சிங்களத்தில் அத்தி அல்லது அட்டி என்றும் அழைக்கப்படுவதால் அத்தியின் பரவலான விளைச்சலையும் தமிழ்ப்பயன்பாட்டின் சிறப்பையும் நன்கு புரிந்து  கொள்ளலாம்.

 அத்தியின் மரப்பட்டை சிவப்பு அல்லது சாம்பல் நிறத்திலும் காய்கள் நீள்முட்டை வடிவில் அடிமரம், கிளைகள், தண்டுகள் என எல்லா இடங்களிலும் கொத்து கொத்தாகக் காய்க்கும். அத்துதல் என்றால் ஒட்டுதல் என்று பொருள். கிளைகளை ஒட்டிக் காய்ப்பதால் அத்தி என்று பெயர் வந்தது என்பர்.  

அத்திப்பழம் மட்டுமல்லாமல் அத்தியின் இலை, பட்டை, பால் முதலான அனைத்துமே மருந்தாகப் பயன்படுவன. அத்திப்பழத்தை நாள்தோறும் உண்டால் சீரான குருதி ஓட்டம் ஏற்படும். எனவே, குருதி அழுத்த மாறுபாடு உள்ளவர்களுக்குப் பெரும் பயன் அளிக்கும். நீரிழிவு(சருக்கரை) நோய், மூலநோய் ஆகியவற்றைக் குணப்படுத்த அத்தி மரவேரில் இருந்து எடுக்கப்படும் அத்திக்கள் மருந்தாகப் பயன்படும். அத்திக்கள்ளிற்கு அத்திப் பதநீர் என்றும் பெயர்.

அத்தி மரத்தடியில் குத்தி எடுக்கும் அத்திப்பாலும் மருத்துவப் பயன்கள் உடையது. சிலப்பதிகார (6:7)உரையில் ஆல், அரசு, அத்தி, இத்தி,  ஆகிய நால்வகை மரங்களில் பால் மிகுதியாக உள்ளமையால் இவை நாற்பால் மரங்கள் எனச் சொல்லப்படுவதைத் தெரிவிப்பதால் அத்திப்பாலின் சிறப்பை அறியலாம். இவை போன்ற மிகுதியான மருத்துவப்பயன்களைத் தமிழ் மருத்துவ இலக்கியங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்; தமிழ் மருத்துவர்கள் மூலம் தேவைக்கேற்பப் பயன்படுத்தி நல்வாழ்வு வாழலாம்.

 பூவிலி என்பது பூச்சூனியம் என்றும் அழைக்கப்பெற்றுப் பின்னர் புட்பசூனியமாக மாறி உள்ளது. புட்ப சூனியம் என்பதற்கு  அத்தி, ஆல் முதலிய மலரில்லா மரவகை என அகராதிகள் விளக்குகின்றன. பூவாமல் காய்க்கும் வகையைச் சேர்ந்த அத்தியைப்பற்றிக் குறிப்பிடுகையில், அத்திப்பூ பூத்தாற்போல் என்றும் அத்திப்பூவை யாரறிவார் என்றும் அத்திப்பூவைக் கண்டவர் உண்டா  என்றும் கூறுவதேன்?

  பூவாத் தாவரங்களாகிய கோளிகளை விளக்கும் அறிவியலறிஞர்கள் இவை பூக்கும் தன்மை யில்லாத பூக்களை உடையன; அத்திப்பூவும் அத்தன்மையதே என்கின்றனர். அத்திப்பூ எப்பொழுதாவதுதான் பூக்கும்  என்பதை  உணர்த்தவே எப்பொழுதோ காணப்படும் ஒன்றை அல்லது செய்யப்படும் ஒன்றை விளக்குகையில்  அத்திப்பூ பூத்தாற் போல் என்று கூறுவதாகக் கருதுகின்றனர். கொத்து கொத்தாக அத்திக்காய்கள் தொங்குகையில் எப்பொழுதோ பூக்கும் பூவை அறியும் வாய்ப்பு குறைவு என்பதால்  அத்திப்பூவை யாரறிவார் என்று சொல்கின்றனரோ என்றும் எண்ணத் தோன்றும். உண்மையில் இதில்  அறிவியல் உண்மை உள்ளது. பூக்கள் நுண்மையானவையாகவும் எண்ணிறந்தவையாகவும் மஞ்சரிக்குடத்தின் உட்பக்கத்தில் ஒட்டிக் கொண்டு வளரும். எனவே, வெளியே பார்வைக்குத் தெரியாது. இவ்வாறு, அத்திப்பிஞ்சிற்குள் கொத்துக் கொத்தாக அத்திப் பூ இருப்பதால் காய்களுக்குள் இருக்கும் பூவை யாரும் அறிய முடியாது என்ற பொருளில் வந்ததே இப்பழமொழிகள்.

 அத்திப்பூக்களில் ஆண்பூ, பெண்பூ, மலட்டுப்பூ(Gall flower), அலிப்பூ(Neutral sterile or Mule flower) என நால்வகை உண்டு. பழுத்த அத்தி பச்சை,சிவப்பு, கறுப்பு, பழுப்பு,மஞ்சள் எனப் பல நிறத்தை உடையது. அத்திமரப் பூக்களில் வளரும் சிறு குளவியே அத்திப்பூச்சி எனப்படுகிறது. இப்பூச்சியின் வாயிலாகவே அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
 அத்திப்பழம் நறுமணமாக இருக்குமே தவிர, அத்திக்காய்க்குள் பூக்கள் அமைவன போல் அதற்குள் மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். எனவேதான் அத்திப்பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அத்தனையும் சொத்தை அல்லது புழு;  அத்திக்காயைப் புட்டுப்பார்த்தால் அங்கும் இங்கும் பொள்ளல் என்னும் பழமொழிகள் வந்தன. இப்பழ மொழிகள் அத்திப்பழத்தின் தன்மையை விளக்குகின்றன.

பெண்பூவிலிருந்து சதைப்பற்றுள்ள  சிறு கனி உருவாகும். அதனையே விதை என்பர். அத்திப்பழம் சொத்தையாக இருந்தாலும் விதை இருக்கும் என்பதை அத்திப்பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அதற்குள்ளும் விதை இருக்கும் என்னும் பழமொழி விளக்குகிறது.

 அத்திப்போல் துளிர்த்து .. .. வாழுமாறு வாழ்த்தும் பழமொழி அத்தி செழுமையாகத் துளிர்ப்பதை விளக்குகிறது.

பழமொழிகள் வாயிலாக அறிவியல் உண்மைகளை உணர்த்துவதால் இவை இயல்பாக அனைவரும் அறிந்த அறிவியல் செய்திகளாக இருந்துள்ளன எனலாம்.

அனைவரின் உள்ளங்களிலும் அறிவியில் தமிழ் உணர்வு அத்திபோல் துளிர்க்கட்டும்!
அறிவியல் தமிழ் செழிக்கட்டும்!


Tuesday, September 18, 2012

நோக்கிகள்

நோக்கிகள்

- இலக்குவனார் திருவள்ளுவன்

புதிய அறிவியல் - செவ்வாய்க் கிழமை, புரட்டாசி 2, 2043 12:03 இதிநேTuesday, September 18, 2012 12:03 IST



தொலைவில் உள்ள ஒன்றை அண்மையில் உள்ளது போல் காண்பதற்கும் நுண்ணிய ஒன்றைப் பெரிதாக்கிக் காண்பதற்கும் ஆராய்வதற்கும் உற்றறிவதற்கும் உணர்வதற்கும் பயன்படுவன நோக்கிகள். அறிவியலில் பயன்படுத்தப் பெறும் நோக்கிகள் வருமாறு: -

  1. அகட்டு நோக்கி -laparoscope
  2. அலைவு நோக்கி -oscilloscope
  3. இணக்குநோக்கி -synchroscope
  4. இரவுநோக்கி- nightscope
  5. இருநோக்கி bina cular
  6. இருமைமேல்நோக்கி -epidioscope, epidiascope
  7. இரைப்பை நோக்கி- gastroscope
  8. உடல் இயக்க நோக்கி-kinetoscope
  9. உருநோக்கி- iconoscope
  10. உள்நோக்கி- endoscope
  11. உறைம நோக்கி cryoscope
  12. ஒளிர்நோக்கி-fluoroscope
  13. கருநோக்கி -fetoscope
  14. குரல்வளை நோக்கி- laryngoscope
  15. குறிநோக்கி- sniperscope
  16. சிற்றிழைநோக்கி -fiberscope
  17. சிறுநீர்க்குழாய்நோக்கி -urethroscope
  18. சிறுநீர்ப்பை நோக்கி cystoscope
  19. சுடர்நோக்கி- spinthariscope
  20. சுழல் நோக்கி -gyroscope
  21. சுழல்பொருள்நோக்கி -stroboscope
  22. சூழ்நோக்கி-periscope
  23. செவிநோக்கி -otoscope
  24. சேணிலைநோக்கி- radarscope
  25. தசைநோக்கி -myoscope
  26. திரைநோக்கி -kinescope
  27. துடிப்புநோக்கி -stethoscope
  28. துளைநோக்கி -borescope / boroscope
  29. தூண்டல்நோக்கி -tachistoscope
  30. தொலைநோக்கி -telescope
  31. நிறமாலைக்கதிர்நோக்கி -spectrohelioscope
  32. நிறமாலைநோக்கி -spectroscope
  33. நுண்ணழுத்தநோக்கி -statoscope
  34. நுண்ணோக்கி -microscope
  35. படநோக்கி- bioscope
  36. படிக நோக்கி / இருநிற நோக்கி dichroscope/ dichrooscope
  37. சுழல் நோக்கி - kaleidoscope
  38. பாதைநோக்கி/துகள்நோக்கி -hodoscope
  39. மாறு நோக்கி-hagioscope
  40. மின்நோக்கி -electroscope
  41. மின்னோட்டநோக்கி-galvanoscope
  42. மீநுண்நோக்கி -ultramicroscope
  43. முகில்நோக்கி -nephoscope
  44. முப்பரும நுண்ணோக்கி -stereomicroscope
  45. முப்பருமநோக்கி -stereoscope
  46. முனைமைநோக்கி- polariscope
  47. மூச்சுக் குழல் நோக்கி bronchoscope
  48. மூட்டுக்குழி நோக்கி-arthroscope
  49. மேல்நோக்கி-episcope
  50. விரி நோக்கி  - pantoscope   
  51. விழிநோக்கி -ophthalmoscope
  52. வெப்பநோக்கி –thermoscope