Wednesday, May 7, 2014

ஆர்க்கிமிடிசு 2 – தி.சி.கருப்பண்ணன் : Archimidese by T.C.Karuppannan, akaramuthala

ஆர்க்கிமிடிசு 2 – தி.சி.கருப்பண்ணன், கலை.மு.

archimides03

  விலக்கம் உற்ற தண்ணீரின் எடை எவ்வளவோ, அவ்வளவு குறைவு பொருளின் எடையிற் காணும். ஏனெனில் தண்ணீருள் அமிழும் பொருளை தண்ணீர் எப்போதும் மேல் நோக்கித் தள்ளுகிறது. இவ்வாறு கீழே அமிழும் பொருளை மேல் நோக்கித் தள்ளும் தண்ணீரின் ஆற்றல், பொருளால் விலக்கம் உற்ற தண்ணீரின் எடைக்கு ஒப்பாகும் எடுத்துக்காட்டாக, ஓர் இரும்புத் துண்டு 4 கிலோ கிராம் எடையுள்ளதாகக் கொள்வோம். இது தண்ணீருள் முழுதும் மூழ்கும்படி தொங்கவிடப்பட்டால் ஏறத்தாழ அரைகிலோகிராம் எடையுள்ள தண்ணீர் விலக்கப்படும். எனவே தண்ணீருக்குள் அதன் எடை 8 கிலோ கிராம் தான்.
  மேற்கூறிய அடிப்படையிற்றான் நாம் தண்ணீரில் எளிதாக மிதந்து நீந்துகின்றோம். நாம் நீந்தும்போது நமது உடலால் விலக்கம் உறும் தண்ணீரின் எடை ஏறத்தாழ நமது எடைக்கு ஒப்பாகும். நம் எடைக்கு ஒப்பான ஆற்றல் கொண்டு தண்ணீர் நம்மை மேல் நோக்கித் தள்ளுகிறது. எனவே தான் தண்ணீரினுள் நமக்கு எடையே இல்லாததுபோல் புலப்படுகின்றது. அதனாற்றான் தண்ணீருக்கு மேலே தலையை வைத்து நீந்துவதை விட, உடல், தலையாவும் தண்ணீருள் ஆழ்ந்த நிலையில் நீந்துவது எளிமையாக இருக்கிறது. தலையும் சேர்ந்து தண்ணீருள் அமிழும்போது விலக்கம் உறும் தண்ணீரின் அளவும் பெரிதாகிறது. அதனால் முன்னைய நிலையை விடப் பின்னைய நிலையில் தண்ணீரின் மேல் நோக்கித் தள்ளும் ஆற்றலும் பெரிதாகிறது. ஒரு மரக்கட்டை அதன் எடை என்னவோ அவ்வெடையுள்ள தண்ணீர் விலக்கம் உற்றதும் மிதத்தல் பெறுகிறது. இவ்வாறே படகும் கப்பலும் மிதக்கின்றன. நீர் மூழ்கிக் கப்பலும் ஆர்க்கிமிடிசின் இத்தத்துவ அடிப்படையிற்றான் இயங்குகிறது. ஆர்க்கிமிடிசு கணிதம் அறிவியல் இவற்றில் பெரும் புலமை பெற்று விளங்கினார். அவர் கல்லறையும் உருளை உருண்டை வடிவங்கள் பொறிக்கப்பட்டுப் பார்ப்போர்க்குக் கணித அறிவை ஊட்டவல்லதாய் அமைந்துள்ளது.
(குறள்நெறி – வைகாசி 2, 1005 / 15.05.1964)

 

Tuesday, April 29, 2014

ஆர்க்கிமிடிசு – தி.சி.கருப்பண்ணன்

ஆர்க்கிமிடிசு – தி.சி.கருப்பண்ணன், கலை.மு.,


 archimides03
மழை பெய்கிறது கதிரவன் காய்கிறது. இவற்றால் மண்ணால் புற்பூண்டுகள் பயிர் பச்சைகள் முளைத்துத் தழைக்கின்றன. இன்னோரன்ன பல்வேறு நிகழ்ச்சிகள் இயல்பாய் நடைபெறுகின்றன. மழை எங்கிருந்து உருவாகின்றது? காயும் கதிரவன் எவ்வாறு இயங்குகின்றது? மண்ணினிருந்தும் புற்பூண்டுகள் எப்படித் தோன்றி வளர்கின்றன? இத்தகைய வினாக்கள் நம் மனத்துள் எழுதுவதில்லை. நாம் இவற்றையெல்லாம் இயற்கையெனக் கூறி மேனோக்கோடு விட்டு விடுகின்றோம். ஆனால் ஒரு விஞ்ஞானியோ இவை போன்ற நிகழ்ச்சிகளைக் கூர்ந்து நோக்குகின்றான். நோக்கியவற்றை ஆழ்ந்த அறிவு கொண்டு ஆய்கின்றான். இங்ஙனம் பெற்ற ஆராய்ச்சி அறிவைப் புதுமைகள் காணப் பயன்படுத்துகின்றான்.
தண்ணீர் நிரப்பிய பெருந்தொட்டியில் ஒரு விஞ்ஞானி குளித்தார். குளிக்கும் நிலையில் அவருக்கு ஓர் உண்மை தென்பட்டது. அவர்தான் ‘நிற்க வேறு இடம் அளிப்பின் இவ்வுலகையே ஆட்டிக் காட்டுவேன்’ என முழங்கிய கிரேக்க விஞ்ஞானி ஆர்க்கிமிடீசு. அவர் அப்போது கண்ட உண்மைதான் நாம் இப்போது கூறும் பொருட்செறிவுத் தத்துவம் அவர் பிறந்த ஆண்டு கி.மு.257. அவரது இடம் சிசிலித்தீவைச் சார்ந்த சிராக்கூசு. அவரது தந்தை ஒரு கிரேக்க வானறிஞர். அலெக்சாண்டிரியாவில் அன்று புகழ் பெற்று விளங்கிய கணிதப் பள்ளியில் ஆர்க்கிமிடீசு பயின்றார். கணித ஆராய்ச்சியில் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டிருந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் கிரேக்கர்கள் உடல் உழைப்பை இழிவாய்க் கருதினர். கருவிகள் மூலம் சோதனை செய்து விஞ்ஞான உண்மைகளைத் தெளிவுபுடுத்தலை, கிரேக்கர்கள் அன்று விரும்பவில்லை. ஆயினும் ஆர்க்கிமிடிசு தான் கண்ட உண்மைகளை வெளியிடுமுன் கருவி கொண்டு அவற்றிற்கு விளக்கம் பெற்றார் என நம்ப இடமுண்டு. ஆனால் கருவிகளின் மூலம் எப்படித் தெளிவு பெற்றார் என்பதை மட்டும் அவர் விளக்கவில்லை. அவர் தான் கண்ட அறிமுறை உண்மைகளைப் பல வழிகளில் பயனுறும்படி செயற்படுத்தியும் காட்டினார்.
ஐரோ என்னும் கிரேக்க மன்னன் தனக்கு ஒரு பொன்முடி செய்ய பொற் கொல்லன் ஒருவரிடம் வேண்டிய அளவு தங்கத்தைக் கொடுத்தான். பொற்கொல்லனும் பொன்முடி செய்து மன்னனிடம் தந்தான். பொன்முடி நிறுக்கப்பட்டபோது கொடுத்த தங்கத்தின் எடையளவு ஒப்ப இருந்தது. இருந்தாலும் பொற்கொல்லன் பொருள் விரும்பிப் பொன்முடியில் வெள்ளிக் கலப்புச் செய்திருக்கக் கூடுமென மன்னன் ஐயுற்றான் பொன்முடி தூய தங்கத்தாலேயே செய்யப்பட்டதா என்பதை அறிய மன்னன் வழிதேடினான். வெவ்வேறு மாழை(உலோக)ப் பொருள்கள் வெவ்வேறு எடையுள்ளன என்பது அன்று தெரிந்து உண்மைதான். ஒரு தங்கக் கட்டி அதே அளவுள்ள வெள்ளிக் கட்டியை விட மேலான எடை கொண்டது. இவ்வுண்மையை பயன்படுத்திப் பொன்முடியைச் சோதிக்க முடியும். ஆனால் இவ்வழியைப் பின்பற்றினால் பொன்முடியே சிதைவுறும். ஏனெனில் முதலில் அப்பொன்முடியை உருக்கி ஒரு சதுரக் கட்டியாய்ச் சமைக்க வேண்டும். பின்னர் அதை அளவுள்ள தூய தங்கக் கட்டியோடு ஒப்பிட வேண்டும் இத்தூய தங்கக் கட்டியின் எடையை விட அது குறைந்து காணப்பட்டால், வெள்ளிக் கலப்பு வெளியாகும். பொன்முடியையே அழித்துப் பின்னர் சோதிப்பது பயனுடைத் தன்று. எனவே உருவம் சிதையாமல் கொடுத்த தங்கத்தாலேயே அப்பொன்முடி செய்யப்பட்டதா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். இப்பொறுப்பை மன்னன் ஆர்க்கிமிடிசிடம் ஒப்படைத்தான்.
archimedes-eureka
இம்முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது தான் ஆர்க்கிமிடிசு பொருட் செறிவுத் தத்துவத்தைக் கண்டதாகக் கூறப்படுகிறது. ஆர்க்கிமிடிசு குளிக்கத் தண்ணீர்த் தொட்டிக்குள் இறங்கினார். தண்ணீர் மட்டம் சற்று உயர்ந்ததைக் கண்ணுற்றார். தொட்டிக்குள் உடல் மேன் மேலும் முழகுங்கால் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வந்தது. இவ்வாறு வருதல் இயற்கைதான். இன்று இதை நாமே செய்து கண்கூடாகப் பார்க்கலாம். இதில் எந்தப் புதுமையும் நாம் காணவில்லை. ஆனால் ஆர்க்கமிடிசு இதிலிருந்துதான் ஒழுங்கற்ற உருவங்களின் கன அளவைக் காணும் முறையைக் கண்டு பிடித்தார். பொன்முடியைச் சோதிக்க இம்முறையைக் கையாண்டார். ஒரு பாத்திரம் நிறையத் தண்ணீர் ஊற்றினார். பொன்முடியை இத்தண்ணீரில் முழுதும் மூழ்கும்படி பக்குவமாகத் தொங்க விட்டார். வழிந்து வரும் தண்ணீரை அளந்தார். இத்தண்ணீரின் கன அளவும் பொன்முடியின் கன அளவும் ஒன்றுதான் என்பது தெற்றென விளங்குகின்றதன்றோ! இப்போது எளிதில் பொன்முடியைச் சோதிக்கலாம். வழிந்து வந்த தண்ணீரின் கன அளவுள்ள தூய தங்கம் எடை போடப்பட்டது. இவ்வெடையும் பொன் முடி எடையும் ஒன்றாய் அமைய வேண்டுமன்றோ! ஆனால் அவை ஒன்றாய் அமையவில்லை. இவ்வாறு திருட்டு வெளிப்பட்டுப் பொற்கொல்லன் தூக்கிலிடப்பட்டான். பொறியியலாளர்களும் விஞ்ஞானிகளும் ஒரு பொருளை அதே கன அளவுள்ள தண்ணீரோடு ஒப்பிட மேற்கண்ட முறையைக் கையாண்டனர். ஒரு பொருளின் எடைக்கும் அதே கன அளவுள்ள தண்ணீரின் எடைக்கும் உள்ள விகிதத்தை செறி எண் என வழங்குகின்றனர். ஏறத்தாழத் தங்கத்தின் செறிவு எண் 20; வெள்ளியின் செறிவு எண்10. அதாவது,
ஒரு கன சென்டிமீட்டர் தங்கத்தின் எடை             =  செறிவு எண்  20
ஒரு கன சென்டிமீட்டர் தண்ணீரின் எடை
ஒரு கன சென்டி மீட்டர் வெள்ளியின் எடை     = செறிவு எண் 10
ஒரு கன சென்டி மீட்டர் தண்ணீரின் எடை
(ஒரு கன சென்டி மீட்டர் தண்ணீரின் எடை 1 கிராம் ஆகும்.)
மேற்கூறிய முறையை ஒட்டியே மிதக்கும் தத்துவமும் அமைந்துள்ளது. நரம் கிணற்றில் இறங்கி மூழ்கிக் குளிக்கும்போது சிறிது மேலும் தண்ணீருள் எளிதாக நீந்திச் செல்லுகின்றோம். மற்றும் மரக்கட்டை தண்ணீருள் முழுவதும் அமிழாமல் மிதப்பதைக் காண்கின்றோம். இவை பற்றி நாம் சிறிதும் சிந்திப்பதில்லை. ஆனால் ஆர்க்கிமிடிசு இவற்றை ஆராய்ந்து தான் படகு, கப்பல் முதலானவை மிதந்து செல்லும் அடிப்படைத் தத்துவத்தைக் கண்டுபிடித்தார். ஒரு பொருள் தண்ணீருள் அமிழும் போது ஓரளவு தண்ணீரை விலக்கிச் செல்கிறது. பொருள் முழுவதும் அமிழுங்கால் அதன் கன அளவு எவ்வளவோ அவ்வளவு தண்ணீர் விலக்கம் உறுகிறது. தண்ணீருள் ஆழ்ந்துள்ள போது பொருளின் எடை ஓரளவு குறைவாக இருக்கும்.
(தொடரும்)
-          குறள்நெறி சித்திரை 19,1995 / மே 05,.1964

 

Monday, April 7, 2014

ஊர்ப்புற மேம்பாட்டில் தகவல் தொடர்பு, தொழில்நுட்ப ஏந்துகளின் தாக்கம்

ஊர்ப்புற மேம்பாட்டில் தகவல் தொடர்பு, தொழில்நுட்ப ஏந்துகளின் தாக்கம்


- கே.சி.சிவபாலன்
                ஆராய்ச்சி மாணவர் வேளாண் விரிவாக்கத்துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோவை – 03              
                 agri_sivapalan01


இந்தியாவின் மக்கட்தொகை 121 கோடியில்,  சிற்றூர்களில் மட்டும் 70 கோடிக்கு அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். நமது நாட்டில் உள்ள ஆறு இலட்சத்து முப்பத்து ஆறாயிரம் (6,36,000) சிற்றூர்களில் வசிக்கும் உழவர்களே நாட்டின் உணவுத் தேவைக்காகக் கூலங்களை(தானியங்க‌ளை) உற்பத்தி செய்கின்றனர். சிற்றூர்களை மேம்படுத்த வகுக்கப்பட்ட சிற்றூர் மேம்பாட்டுத் திட்டங்கள், வேளாண் தொழில்நுட்பங்கள், விடுதலை அடைந்த 65 வருடங்களில் இன்னமும் முழுமையாக மக்களை போய்ச் சேரவில்லை என்பது கசப்பான உண்மையாகும். அதற்கு முதன்மைக் காரணம் சரியான தகவல் தொடர்பு இன்மையே ஆகும். இன்றைக்கு ஊர்ப்புறங்களில் நிலவி வரும் வறுமை, கல்வியறிவின்மை, குறைந்த  நலவாழ்வு வாய்ப்புகள்,  குறைந்த வேலை வாய்ப்புகள், பெருகிவரும் நகரம் சார்ந்த இடப் பெயர்வுகள்,பெருகிவரும் வேளாண் வேலையாட்கள் தட்டுப்பாடு போன்ற சிக்கல்களுக்கும்  முதன்மைக் காரணமாக அறியப்படுதலும் தகவல் தொடர்பு இன்மையே.
வேளாண்  அறிவியலார் கண்டறிந்த அறிவுசார் தொழில்நுட்பங்கள், புதிய மேம்பாட்டு உத்திகளை மக்களிடையே விரைவாகக் கொண்டு சேர்க்க வேண்டும். தகவல் தொடா;பு இடைவெளி இல்லாமல் இருந்தால் தான்  மன்பதைப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அகன்று நீடித்த வளர்ச்சி (Sustainable development) அடைய முடியும். தகவல் தொடர்பு என்பது மனிதக் குலம் தோன்றியதில் இருந்து நடந்து வரும் நிகழ்வாகும். தகவல்களை அறிந்து கொள்ளும் பண்புதான்  மன்பதை, பொருளாதார மாற்றங்களுக்கு முதல்படி என்று சொல்ல வேண்டும். தகவல்களை அறிந்துகொள்வதும், புதிய நுட்பங்களை அன்றாட வாழ்வில் புகுத்திப் பார்ப்பதும்தான் தனிமனிதனைத் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் வைக்கின்றது. தகவல்தொடர்பு குறிப்பாக இணையமும் தொலைத் தொடார்பும் என்பது வெறும்  அறிவியல் இணைப்புக் கருவிகளுக்கு இடையேயான தொடர்பு அன்று! அதுவே  மன்பதை வளர்ச்சிக்கான இணைப்புச் சங்கிலியாகும்.
வேளாண்  மன்பதை அறிவியலாளர்களின் பங்கு
வேளாண் தொழில்நுட்பங்களை, எளிமைப்படுத்தி மக்களிடம் சென்று சேர்ப்பிக்க வேண்டியது வேளாண் மன்பதை அறிவியலாளர்களின் பணியாகும். வேளாண் விரிவாக்கத் துறையின் சார்பாக மேற்கொள்ளப்படும் ஊரகக் கூட்டங்கள், பயிற்சிகள், கையேடுகள், குறுந்தகடுகள், வானொலி, தொலைபேசி நிகழ்ச்சிகள், தொழில்நுட்ப விளக்கக் கூட்டங்கள், வேளாண் அறிவியலாளர்களுக்கான பயிற்சிகள், ஆராய்ச்சித் திட்டங்கள், கல்வியியல் பணிகள் மூலமாக இதுவரை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால் மாறிவரும் இன்றைய  ஊரகச் சூழ்நிலையில், வேளாண் தகவல்கள் விரைவான வகையில் அதிக அளவு மக்களைச் சென்று அடையும் வகையில் தொழில்நுட்பம் பின்பற்றப்பட வேண்டும். அந்தப் பணியைத் திறம்பட செய்வது தகவல்-தொடர்பு தொழில்நுட்பக்கைக் கருவிகள்  (Information and Communication Technology Tools (ICT)) ஆகும். தகவல் தொடர்பு தொழில்நுட்ப ஏந்துகள் மூலம் துல்லியமான, மேம்படுத்தப்பட்ட தேவையான தொழில்நுட்பங்களைக் குறைந்த காலக்கெடுவில்  உழவர்களுக்கும்,  ஊரக மக்களுக்கும் கொண்டு  சேர்க்க முடியும். இவ்வாறு இன்றியமையாத வகையில் செயல்படும் தகவல் தொடர்பு, தொழில்நுட்ப ஏந்துகள் எவ்வகையில் ஊர்ப்புற மேம்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிவது சிறப்பாகும். மேலும் இவற்றால் பெரிதினும் பெரிதாக நன்மைகள் அமைய இவ்வகை ஏந்துகளை அன்றாட வாழ்வில் இயல்பாகப் பயன்படுத்துவதிலுள்ள இடர்ப்பாடுகள் என்பதைப் பற்றியும் அறிவதும் சாலச் சிறந்தது.
இணைய வழிப் பணிகள்
இந்தியாவில் 1995களில்  தொடங்கிய கைபேசி, இணையம், கணிப்பொறி பயன்கள் அறிவுசார் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. தகவல் தொடர்பு தொழில்நுட்ப ஏந்துகளில்  முதன்மையானது  இணையம். இந்தியாவில் மட்டும் 2012இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 137 பேராயிரம்(மில்லியன்) இணையத் தளப் பயனாளிகள் உள்ளனர். அதில் 38 பேராயிரம் மக்கள்  சிற்றூர்களில்  வசிக்கின்றனர். ஏறக்குறைய 31 பேராயிரம் மக்கள் மாதம் ஒரு முறையாவது இணைய வசதியினைப் பயன்படுத்துபவராக உள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் 2014 இல்  45 பேராயிரமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.(ஐ.எம்.யு.ஏ,2013). தமிழகத்தில் மட்டும் 16.5 விழுக்காட்டினர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். தேசிய அளவில் ஆங்கிலம், இந்தி மொழிகளுக்கு அடுத்தபடியாகத் தமிழ்மொழி  மிகுதியான அளவில் இணையத்தில் பயன்படுத்தும் மொழியாக உள்ளது. இணையத்தைச் சிறந்த தகவல் தொடர்பு  ஊடகமாகப் பயன்படுத்த முடியும் என்பதால் தான் தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பாக தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக இணையத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தளத்தில் வேளாண்மை தோட்டக்கலை, வணிகம், வேளாண் பொறியியல், விதைச் சான்றிதழ், அங்ககச் சான்றிதழ், பட்டுப் புழு வளர்ப்பு, வனவியல், மீன் வளம், கால் நடை வளர்ப்புச் செய்திகள், தொழில்நுட்பக் குறிப்புகள், அரசு திட்டங்கள், வட்டார வளர்ச்சி, வங்கிப்பணி, கடன் உதவி, பயிர்க்காப்பீடு,  வேளாண் நலமனை(அக்ரி கிளினிக்),  உழவர்(கிசான்) அழைப்பு மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலை மன்பதை வானொலிச் சந்தை தகவல் மையம், வெற்றிக் கதைகள், உழவர் கூட்டமைப்பு, உழவர்கள் கண்டுபிடிப்பு, பல்கலை  வெளியீடுகள், ‘காண் ஒலிக்’ காட்சி (video) போன்ற ஏராளமான செய்திகள் 3.6 இலட்சம் பக்கங்களுக்கு மேலாக உள்ளன. அத்துணை செய்திகளும் தமிழிலேயே வழங்கப்படுவது மிகவும் சிறப்பானதாகும். கணிப்பொறி, இணையத் தளவசதி கொண்ட உழவர்கள் <www.tnau.agritechportal.ac.in> என்ற இணைய முகவரி மூலம் தகவல்களைப் பெறலாம்.
தொலைபேசி வழி தகவல்  பணிகள்
இந்தியாவில் கைபேசி வைத்துள்ளோர் எண்ணிக்கை 929.37 பேராயிரமாக உள்ளது. இருப்பிடத் தொலைபேசிகள் 31.53 பேராயிரம் இணைப்புகள் உள்ளன. மொத்தத் தொலைபேசி இணைப்பு பெற்றுள்ளோர் எண்ணிக்கை 960.9 பேராயிரமாக உள்ளது. தொலைபேசி அல்லாதோர்-தொலைபேசி  பயனாளர் அடர்த்தி விகிதம் 79.28 விழுக்காடு தேசிய அளவில் காணப்படுகிறது. இதுவே  ஊர்ப்புறங்களில் 33 விழுக்காடு உள்ளது. தொலைபேசி தொடர்பு வசதியினைச்  சிற்றூர் மேம்பாடு- வேளாண் வளர்ச்சிக்குத் திறம்பட  பயன்படுத்த முடியும். தமிழ்நாடு வேளாண் பல்கலை மூலமாக அன்றாடம், சந்தைத் தகவல்கள் உழவர் பெருமக்களுக்குக் குறுந்தகவல்களாக (Short message service) அனுப்பப்படுகின்றது. சந்தைச் செய்திகள்,  கூல(தானிய) விலைகள், ஏற்றுமதி – இறக்குமதி விவரங்கள்  கட்டணமின்றியே வழங்கப்படுகின்றன. இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனம் (IFFCO) மூலமாகப் பதிவு செய்த  உழவர்களுக்கு  நாள்தோறும் 5 ‘குரல் வழி குறுந் தகவல்கள்’ (Voice based sms) அளிக்கப்படுகின்றன.
உழவர்களுக்கான குறை தீர்க்கும் தொலைபேசிப் பணி மையம் (Kisan Call Centre – KCC)
உழவர்களின் வேளாண் சார்ந்த  ஐயங்களை உடனுக்குடன் தீர்வு தர  உழவர் குறை தீர்க்கும் பணி மையம் 2004 ஆம் ஆண்டில் இருந்து செயல்படுகின்றது.  காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் இந்த மையம் வேளாண் தொடர்பான  ஐயங்களுக்கு உரிய விளக்கத்தினைத் தமிழ் மொழியில் வழங்கி வருகின்றது. கட்டணமில்லாத் தொலைபேசி  எண் 1800-180-1551 மூலம் தொடர்பு கொள்ளும்  உழவர்களின் கேள்விகளுக்கு, மையத்தில் பணியாற்றும் வேளாண் பட்டதாரிகள் உடனுக்குடன் தீர்வு கூறுகின்றனர். தீர்வு காண இயலாத கேள்விகள் இரண்டாம் நிலையில், உரிய அறிவியலர்களுக்கு அனுப்பப்பட்டு  மறுமொழிகளைப் பெற்று  உழவர்களுக்கு 72 மணி நேரத்திற்குள்ளாகக் கைபேசி வழி அனுப்ப ஆவன செய்யப்பட்டுள்ளது.
முடிவுரை
வேளாண் தொழில்நுட்பப் பரிமாற்றம் மட்டுமின்றி, சிற்றூர்ப் பொருளியல், அரசு நலத்திட்டங்கள் போன்ற தகவல்கள் சிற்றூர் மக்களைச் சென்றடைய தகவல் தொடர்பு தொழில்நுட்ப  ஏந்துகள் சிறப்பான பங்கு வகிக்கின்றன. கல்வி,  நலவாழ்வு, வணிக முன்னேற்றம் போன்றவை கீழ்த்தட்டு மக்களுக்கும் கிடைக்க உதவும் தகவல் தொடர்பு ஊடகங்களை முறையாகப் பயன்படுத்த வழிகாட்டு முறைகளை ஏற்படுத்த வேண்டும். வேளாண் தொழில்நுட்பங்களைப் பரிமாற்றம் செய்ய  ஒப்படைப்ப உணர்வோடு பணியாற்றும் மன்பதை அறிவியலர்களுக்கு (Social Scientists) தகவல்  தொடர்பு  ஊடகங்கள் குறித்த மேம்பட்டப் பயிற்சியை அளிக்க வேண்டும். அரசு துறைகளை ஒருங்கிணைத்து, கணிப்பொறி, இணையம் மூலம் தகவல்களைப் பரிமாற்றம் செய்து துல்லியமான, இடம் சார்ந்த தகவல்களை,  உழவர்களின் உரிய தேவைகளுக்கு ஏற்ப தகவல்களை உருவாக்க வேண்டும். மன்பதை அறிவியலர்களின் துணை கொண்டு உரிய தகவல் தொழில்நுட்ப ஊடகங்கள் மூலம் தகவல்கள்  உழவர் பெரு மக்களைச் சென்றடைய முயற்சிகள் மேற்கொண்டால் இரண்டாவது பசுமைப் புரட்சி மலரும். நீடித்த  மன்பதை வளர்ச்சி ((Sustainable Social development) ஏற்பட்டு உலக அரங்கில் இந்தியா சிறப்பான இடத்தை அடையும்.