(வெருளி நோய்கள் 1161-1165: தொடர்ச்சி)

தசைக்கனி (Berry) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தசைக்கனி வெருளி.
இதனைச் சிலர் Fructophobia என்கின்றனர். fructus என்னும் இலத்தீன் சொல்லிற்குப் பழம் எனப் பொருள். எனவே, Fructophobia என்பதைப் பழ வெருளி எனப் பொதுவாகக் குறிப்பிட வேண்டும். Mourophobia என்பது குறிப்பாகத் தசைக்கனியைக் குறிப்பது.
தசைக்கனியில் வழல் நச்சம்(சப்போனின்/saponin) என்னும் நச்சுக் கலவை உள்ளது. இது குமட்டல், வாந்தி, வயிற்றுப் பிடிப்பை முதலியவற்றை ஏற்படுத்தக் கூடும். இதனால் தசைக்கனி மீது அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00

குடும்பத்தட(Family Echo) வலைத்தளம் தொடர்பான காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் தடத்தள வெருளி.
குடும்ப வழி வழி மரபினரைக் குறிப்பிடும் குடும்பத்தட விளக்கப்படத்தைக் குடும்ப மரம்(Family Tree) என்றும் கூறுவர்.
00

தடைப்பி(brake) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தடைப்பி வெருளி.
தடைப்பி சரியாகச் செயல்படாதிருக்குமோ, நேர்ச்சி(விபத்து) ஏற்படுமோ உயிருக்கு அல்லது உடலுக்குக் கண்டம் (ஆபத்து)வருமோ என்று தேவையற்ற பேரச்சத்தை வரம்புமீறி அடைவர் இத்தகையோர்.
Freno என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தடைப்பி(brake).
00

தட்டிசை(hip hop) குறித்த வரம்பற்ற பேரச்சம் தட்டிசை வெருளி.
தட்டிசை(hip hop)யைக் கேட்பதற்கே பேரச்சமாக உள்ளதாகச் சிலர் கூறுகின்றனர். இரைச்சல் ஒலி கேட்பவரை வன்முறைக்குத் தூண்டும் எனச் சிலர் கூறுகின்றனர். தட்டிசைக்கு எதிரான கட்டுரைகள் இதழ்களில் வந்துள்ளன. இவற்றையெல்லாம் கேட்டும் படித்தும் பிறருக்கும் தட்டிசை குறித்த பேரச்சம் வருகிறது.
00

தண்கலன்(refrigerator) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தண்கலன் வெருளி.
சிறு பருவத்தில் தண்கலைனைப் பயன்படுத்துவதில் ஏற்பட்ட அச்சம் நாளடைவில் காரணமின்றிச் சிலருக்கு வளர்ந்து விடுகிறது. கெடு நாளுக்குப் பின்னரும் உணவுப் பொருளை வைத்து விட்டு அது கெட்டு அதனால் நலக்குறைவு ஏற்பட்டால் தண்கலன்தான் காரணம் என எண்ணி அதன் மீது வெறுப்பை வளர்ப்பவர்களும் உண்டு. அன்றைக்குச் சமைத்த உணவைச்சுடச்சுட உண்ண வேண்டும்.இதற்கு மாறாகத் தண்கலன் பயன்பாடு உள்ளது என அதனை வெறுப்பவர்களும் உள்ளனர்.
00