(வெருளி நோய்கள் 1171-1175 : தொடர்ச்சி)

தந்தையர் நாள் (Father’s Day) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தந்தையர் நாள் வெருளி.
தந்தை வெருளி(Patrophobia) உள்ளவர்களுக்குத் தந்தையர் நாள் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00

தந்தையின் உடன்பிறப்புகளான அத்தையர், பெரியப்பா, சித்தப்பாக்கள் ஆகியோர் மீதான தேவையற்ற பேரச்சம் தந்தையின் உடன்பிறப்பர் வெருளி
தந்தையின் உடன்பிறப்புகள் காட்டும் கண்டிப்புகளால் அவர்கள் மீது வெருளி வருகிறது.
00

தந்தைவழி மாமன் தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தந்தைவழி மாமன் வெருளி.
தந்தைவழி மாமன் கண்டிப்பைப் புரிந்து கொள்ளாமல் அவரகள்மீது தேவையற்ற வெருளி கொள்கின்றனர்.
00

அரசியலில் தப்பான நிலைப்பாடு எடுத்துள்ளதாக அடையும் அளவுகடந்த பேரச்சம் தப்பு வெருளி.
இதனை மகிழ்ச்சி கண்டு அளவுகடந்த பேரச்சம் கொள்ளும் களிப்பு வெருளி எனத் தவறாகக் குறிப்பிடுகின்றனர்.களிப்பு வெருளி(cherophobia) எனத் தனியாக உள்ளது. எனவே, குழப்பிக் கொள்ள வேண்டா.
அரசியல் வெருளி என்றால் அரசியலர் வெருளி(civiliphobia) எனப் பொருள் கொள்ள நேரும்.
00

பிறருடன் இருந்தாலும் யாரும் இல்லையென்று கவலைப்படுவதும் அளவுகடந்த பேரச்சம் கொள்வதும் தமிய வெருளி. தொடர்பற்றுத் தனித்து இருப்பது குறித்த பேரச்சம் கொண்டிருப்பர் இத்தகையோர்.
“தமியர் உறங்கும் கௌவை இன்றாய் இனியது கேட்டு இன்புறுக இவ்வூரே” (குறு:34:2-3).
தமியளாய சீதைக்கும்(கம்பரா. மாயாசீதை. 80).
“மடை மாண் செப்பில் தமிய வைகிய பொய்யாப் பூவின் மெய் சாயினளே” (குறு:9:2-3).
தானே தமியன்வந்தன னளியன் (மணி. 16, 58).
எனத் தமிய நிலை தமிழ் இலக்கியங்களில் குறிக்கப்பெற்றுள்ளது.
தமியனேன் தனிமை தீர்த்தே(திருவாச. 5, 68). (திருவாச 12, 3).
என மாணிக்கவாசகர் இறைவன் திருப்பெருந்துறையில் தனிமையில் விட்டு மறைந்தமையை எண்ணி வருந்தியு்ள்ளார். வருந்தும் தனிமை நிலைமையைத் ‘தமியனேன்’ என்கிறார் அவர். இதனடிப்படையில் தமியன் சொல் இங்கே கையாளப்படுகிறது.
00