Showing posts with label – இலக்குவனார் திருவள்ளுவன். Show all posts
Showing posts with label – இலக்குவனார் திருவள்ளுவன். Show all posts

Saturday, April 23, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1434 – 1451: இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1424-1433 இன் தொடர்ச்சி)

1434. மர வளைசலியல்

Dendroecology – மரவரை சுற்றுப்புறவியல் எனக் குறிக்கப்படுகிறது.

வரலாற்று சுற்றுச்சூழல் செயல்முறைகளை பகுப்பாய்வு செய்ய மரக்காலவியலைப் பயன்படுத்தும் அறிவியல் என்றும் கடந்தகால, நிகழ்கால வனச்சூழல் மாறுபாடுகளை மதிப்பிடுவது என்றும் இவ்வறிவியல் குறித்து விளக்கு கின்றனர். மரத்தின் அடிப் படையிலான புறவியல் என்பதாலும் ecology / வளைசலியல் என நாம் வரையறுத்துள்ளதாலும்,

 மர வளைசலியல் – Dendroecology எனலாம்.

Dendroecology

1435. மரவரைத் தொல்லியல்

மரவரை என்பது மரத்தில் உள்ள காலங்காட்டும் வளையத்தைக் குறிப்பது.

Dendroarcheology

1436. மரவளைய நீரியல்

Dendrohydrology

1437. மரவியல்

Dendrology/ Treeology

1438. மரியாளியல்/  பெண்தெய்வஇயல்

முழுமை பகுதித் தொடர்பியல்  என்றும் சில அகராதிகளில் குறிக்கப் பெறுகின்றது. முழுமையும் பகுதியுமாக முரண்பாடான சொற்களை இணைத்துள்ள இவ்விளக்கம் சரியில்லை.

Mariology

1439. மருத்துவ அளவீட்டியல்

Posology

1440. மருத்துவஆய்வக நுட்பியல்

Medical laboratory technology

1441. மருத்துவ ஒழுக்கவியல்

Deontology(3)

1442. மருத்துவ நுண்ணுயிரியல் 

Medical microbiology

1443. மருத்துவ மின்னணுவியல்

Medical Electronics

1444. மருத்துவ, மணத்தாவர உயிரிய நுட்பியல்         

Biotechnology of medical and aromatic plants

1445. மருத்துவக் குமுகவியல்

Medical sociology

1446. மருத்துவப்படிம இயல்

Imageology

1447. மருத்துவப்பூச்சி யியல்           

Medical Entomology

1448. மருத்துவ வேதிப் பொறியியல்

Medical Chemical Engineering

1449. மருந்தளவியல்

Dosology

1450. மருந்தாக்கயியல்

Pharmaceutics

1451. மருந்தியல் 

phármakon என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் மருந்து.

Pharmacology/ Latrology

(தொடரும்

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Thursday, October 24, 2019

பயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல

பயிர்அறிவியல் சொல் வளம்
  தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை உணர்த்துவதாக உள்ளன. சொற்களே அறிவியலை உணர்த்துகின்றன என்றால் அறிவியல் துறையில்  நம் முன்னைப் பழந்தமிழர் மிகச் சிறந்து இருந்திருக்க வேண்டும் அல்லவா? நாம் மீண்டும் அறிவியலில் சிறந்து விளங்கப் பழந்தமிழ் அறிவியல் வளங்களை அறிந்து புதியன படைக்க வேண்டும். இங்கே நாம் பயிர் அறிவியல் சொற்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
  பயிர் வகைகளை வகைப்படுத்திப் பெயர்கள் சூட்டியுள்ளமையே மிகச் சிறந்த அறிவியல் வளத்திற்கு நாம் உரியவர்கள் என்பதை எடுத்து இயம்புகின்றது.
  அரும்பு, மொட்டு, மலர், முகை, வீ முதலான  பூ வகைகளும் இலை, கீரை, ஓலை, மடல் முதலான இலை வகைகளும் தமிழின் பயிர் அறிவியல் வளத்தை உணர்த்துவனவாகும். மேலும் சிலவற்றைப் பார்ப்போம்.  பூக்காம்பு   சிறியதாக இருப்பின் காம்பு என்றும் பருத்தும் மென்மையாகவும் இருப்பின் தாள் அல்லது தண்டு என்றும் உள் துளையுள்ளது நாளம் என்றும் அழைக்கப் பெறும்.  பூவின் அகவிதழ்  அல்லி என்றும் புறவிதழ் புல்லி என்றும் அழைக்கப் பெறும். இதழ் பெரியதாக இருப்பின் மடல் என்றுதான் சொல்ல வேண்டும்.
 இவ்வாறு, நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக வழி வழியாக அறிவியல் மரபைப் பின்பற்றியே உரிய  பிரிவு வகைளுக்கேற்பவே சொல்லி வருகிறோம். இருப்பினும் இன்று மரபுகளை மறந்தும் அறியாமலும்  தவறாகப் பேசும் வழக்கம் வந்துள்ளது.  நாம்  மரபார்ந்த தமிழ் அறிவியல் சொற்களை அறிய திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, உரிச்சொல் நிகண்டு முதலான பல்வேறு நிகண்டுகளைப் படித்துப் பார்க்கலாம். எடுத்துக்காட்டிற்கு ஒரு நிகண்டு நூற்பாவைப் பார்ப்போம்.
மணமலி பூவீ மலர்போ து அலராம்
துணர் மஞ்சரிகொத்துத் தொத்தோடு இணராம்
நலம்சேர் குலைதாறு வல்வரியாகும்
பலம்காய் கனியாம் பழம்
(உரிச்சொல் நிகண்டு பா. 94)
அஃதாவது மலரானது பூ, வீ, போது. அலர் என்றும் பூங்கொத்தானது துணர், மஞ்சரி, தொத்து, இணர் என்றும் குலையானது தாறு, வல்லரி என்றும் பழமானது பலம், காய், கனி என்றும் பெயர் பெறும்.  இவ்வாறு உரிச்சொல் நிகண்டு வகைப்படுத்திக் கூறுகிறது.
கி.பி. 11 ஆம்  நூற்றாண்டில் வந்த உரிச்சொல் நிகண்டிற்கு முன்னரே கி.பி. 9ஆம் நூற்றாண்டில் வந்த பிங்கல நிகண்டு இதே  பொருண்மையில் சொல்லும்  நூற்பாக்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
தாதும் அதழும்  தண்டும் தோடும்
ஏடும் பூவின் இதழ்ப் பெயர் என்ப.
அல்லி அகஇதழ்
புல்லி புற இதழ்
(பிங்கல நிகண்டு பா. 2813-2815)
 இவ்வாறு நிகண்டுகள்  தெரிவிக்கும் அறிவியல் உண்மைகளைக் கூறப் பல  நூற் தொகுதிகள்  வெளியிட வேண்டும். எனினும் சுருக்கமாகச் சிலவற்றை மட்டும் பார்ப்போம். மொழி ஞாயிறு பாவாணர், புலவர்மணி இரா.இளங்குமரனார் முதலான அறிஞர்கள் பலரும் தமிழின் சொல் வளம் குறித்து முன்னரே கட்டுரைகள், நூல்கள் வழி விளக்கி உள்ளனர்.  இலக்கியங்கள் அடிப்படையிலும் வழக்குச் சொற்கள் அடிப்படையிலும் அவர்கள் தெரிவித்தவற்றையே நாம்  காண்போம்.
பிஞ்சின் பெயர்கள் அதனதன் நிலைக்கேற்ப மாறுபடும். அவையாவன: பூவோடு கூடிய இளம்பிஞ்சு- பூம்பிஞ்சு; இளங்காய்-பிஞ்சு; மா- வடு; பலா- மூசு; எள்-கவ்வை, தென்னை, பனை-குரும்பை, சிறு குரும்பை-முட்டுக் குரும்பை, முற்றாத தேங்காய்- இளநீர், இளம் பாக்கு-நுழாய், இள நெல்- கருக்காய், வாழை- கச்சல்.
அடுத்துக் காய்நிலைகள் பெயர்களைப் பார்ப்போம்.  பழுக்கும் நிலையிலுள்ள முற்றிய காய்-பழக்காய்; முற்றிய பனங்காய்- கடுக்காய்; உரிய காலத்திற் காய்ப்பது-காலக்காய் அல்லது பருவக்காய்; காலமல்லாக் காலத்திற் காய்ப்பது-வம்பக்காய்; முற்றிய காய்- கருக்காய்.
குலைவகைகளைப் பின்வருமாறு கூறவேண்டும்அவரை துவரை முதலியன- கொத்து; கொடிமுந்திரி போன்றது-குலை; வாழை- தாறு, கேழ்வரகு, சோளம் முதலியன- கதிர்; நெல், தினை முதலியன-அலகு அல்லது குரல்; வாழைத்தாற்றின் பகுதி- சீப்பு,
பின்வருமாறு கனி வகைகள் அழைக்கப்பெறும் : தெங்கு, பூசணி முதலியன-காய்; முந்திரி நெல்லி முதலியன- கனி; மா, வாழை முதலியன-பழம்.
முதிர்ச்சி யடைந்த அல்லது முதிர்ச்சியடையாத பிற வகைகள் குறிக்கப்பட வேண்டிய பெயர்கள்முதிர்ந்தபின்  கனிவில்லாதது-காய்; முதிர்ந்தபின்  கடினமானது-நெற்று; செவ்வையாய்ப் பழுக்காத பழங்கள்-சிவியல், சூம்பல், வெம்பல், சொத்தை; சொத்தைவகை-சொண்டு, சொத்தை, சொட்டை; தோல்வகை-தொலி, தோல், தோடு, ஓடு, சிரட்டை; விதைவகை- வித்து, விதை, மணி, முத்து, கொட்டை.
காய் முதிர்ச்சி வகைகள் வருமாறு: மா, வாழை முதலியன- பழுத்தல், சுரை பூசணி முதலியன- முற்றல்; தேங்காய், பீர்க்கு முதலியன- நெற்று; நெல், சோளம் முதலியவற்றின் கதிர் முதிர்ச்சி-விளைச்சல்.
காய்கனி ஆகியவை கெட்டுப்போனால் பின்வருமாறு அழைக்கப்பட வேண்டும்நுனியில் சுருங்கிய காய்-சூம்பல்; சுருங்கிய பழம்-சிவியல்; புழு, பூச்சி அரித்த காய் அல்லது கனி- சொத்தை; சூட்டினால் பழுத்த பிஞ்சு-வெம்பல்; குளுகுளுத்த பழம்- அளியல்; குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய்-அழுகல்; பதராய்ப்போன மிளகாய்-சொண்டு.
சொத்தையாய்ப் போன தேங்காய் வகைகளின் பெயர்கள் வருமாறுகோட்டான் உட்கார்ந்த தினால் கெட்ட காய்- கோட்டான்காய் அல்லது கூகைக்காய், தேரையமர்ந்ததினால் கெட்ட காய்- தேரைக்காய், அல்லிக்காய்; ஒருவர் தமித்து இளநீர் குடித்த தென்னையிற் கெட்ட காய் -ஒல்லிக்காய், அல்லிக்காய்.
காயின் காம்பிதழ்களுக்கும் பின்வருமாறு வெவ்வேறு பெயர்கள் உள்ளனதேங்காய் பனங்காய் முதலியவற்றின் காம்பிதழ்-இதக்கை; சோளத்தின் காம்பிதழ்-சொங்கு.
பின்வருமாறு பழத்தோல் வகைகளுக்கும் வெவ்வேறு பெயர்கள் உள்ளனமிக மெல்லியது-தொலி; திண்ணமானது-தோல்; வன்மையானது-தோடு; மிக வன்மையானது-ஓடு; சுரையின் ஓடு- குடுக்கை; தேங்காய் நெற்றின் மேற்பகுதி-மட்டை; நெல் கம்பு முதலியவற்றின் மூடி- உமி; வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி- கொம்மை.
 காய் முதலானவற்றின் உள்ளீடுளையும் ஒரே மாதிரி கூறக்கூடாதுஅவற்றின் வகைகளுக்கேற்ற பெயர்கள் வருமாறுநீர் போலிருப்பது-சாறு; கட்டிச் சோறுபோலிருப்பது.(கத்தரி முருங்கை கற்றாழை முதலியவற்றின் உள்ளீடு)- சோறு; வாழை மா முதலியவற்றின் உள்ளீடு- சதை; சீத்தா, பலா- சுளை.
வித்துவகைகளின் பெயர்களைப் பார்ப்போம் : கத்தரிவிதைபோலச் சிறியது-விதை; வேப்பமுத்துப் போல் உருண்டு திரண்டது-முத்து; புளியங்கொட்டைபோல் வயிரங் கொண்டது- காழ்; மாங்கொட்டைபோற் பெரியது- கொட்டை.
வேர்களும் வகைகளுக்கேற்ப வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பெறும்அவை வருமாறுஆழமாக இறங்குவது-வேர்; திரண்டிருப்பது-கிழங்கு; உருண்டு மென்மையாயிருப்பது- பூண்டு; குட்டையான கற்றையா யிருப்பது-கட்டை.
 வேரின் பிரிவுகளும் பின்வருமாறு அழைக்கப் பெறும் தண்டின் தொடர்ச்சியாக ஆழமாய் இறங்குவது- ஆணிவேர்; ஆணிவேரின் கிளை- பக்கவேர்; கிழங்கு பூண்டு முதலியவற்றின் சன்னமான கிளைவேர்- சல்லிவேர்.
அரிதாள்வகைகளை அறிவோமா? : நெல், கேழ்வரகு- இருவி; சோளம், கரும்பு- கட்டை; தென்னை, பனை- தூறு; வேம்பு, புளி- முருடு;
அடிவகைகளுக்கும் வெவ்வேறு பெயர்கள் உள்ளனஅவையாவன : நெல், கேழ்வரகு- தாள்; கீரை, வாழை-தண்டு; நெட்டி, மிளகாய்ச் செடி- கோல்; குத்துச்செடி, புதர்- தூறு; கம்பு, சோளம்- தட்டு அல்லது தட்டை; கரும்பு- கழி; மூங்கில்- கழை; புளி, வேம்பு- அடி.
கிளைகளும் பிரியும் இடத்திற்கேற்பப் பலவாறு குறிக்கப்பெறுகின்றனஅவைஅடிமரத்தினின்று பிரியும் மாபெருங் கிளை- கவை; கவையின் பிரிவு- கொம்பு அல்லது கொப்பு; கொம்பின் பிரிவு- கிளை; கிளையின் பிரிவு- சினை; சினையின் பிரிவு- போத்து; போத்தின் பிரிவு- குச்சு; குச்சின் பிரிவு- இணுக்கு;
காய்ந்த அடியுங் கிளையும் அழைக்கப்படுவதற்குரிய பெயர்கள்: காய்ந்த குச்சு- சுள்ளி; காய்ந்த சிறு கிளை- விறகு; காய்ந்த கழி- வெங்கழி; காய்ந்தகொம்பும் கவையும் அடியும்- கட்டை.
இலைநரம்புகளிலும் பின்வருமாறு வேறுபாட்டுப் பெயர்கள் உள்ளன : காம்பின் தொடர்ச்சியாக இலையின் நுனிவரை செல்வது- நரம்பு; நரம்பின் கிளை- நாம்பு.
பூ மடல்களின் பெயர்களும் வாழைதாழைதென்னைபனைக்கேற்ப அழைக்கப்பெறும்அவை இவைதாம்வாழை மடல்- பூ; தாழை, வாழை முதலியவற்றின் மடல்-மடல்; தென்னை, பனை முதலியவற்றின் மடல்-பாளை.
 காய், கனி, இலை, வேர் முதலான ஒவ்வொன்றிற்கும் அவற்றின் வகைகள், நிலைகளுக்கேற்பப் பெயர் சூட்டியுள்ள அறிவியல் வளம் பிற மொழிகளில் காண இயலாதது. அறிவியல் பாடங்கள் இவற்றின் அடிப்படையில் அமையும் வகையில் அறிவியல் ஆசிரியர்கள் நூல்களை எழுத வேண்டும். பாடத்திட்டங்களும் அதற்கேற்ப அமைய வேண்டும்.  இவை பிற மொழிப் பாடங்களிலும் இடம் பெற்று உயர்தனிச் செம்மொழியான தமிழ் அறிவியல் மொழி என்பதை உலகோர் புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும்.
தமிழ் அறிவியல் செய்திகளைத் தரணி எங்கும் பரப்புவோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி, 25.10.2019