Friday, December 9, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 561-565

 அகரமுதல





( தமிழ்ச்சொல்லாக்கம் 556-560 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 561-565

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

561. Lift – தூக்கி

சத்யவிரதன் மறுபடி யவளுக்குத் தைரியத்தைச் சொல்லிவிட்டுத் தூக்கி வழியே கீழே இறங்கினான். அவன் கீழே வந்த பொழுதும் அம்மாள் மறுநாள் வேலையில் உச்சித்தலைவரை மூழ்கியிருந்தாள்.

நூல்   :           நாகரீகப் போர் (1925)

அதிகாரம்   :           15 திண்ணம் விடுதலை திண்ணம், பக்கம் – 201

நூலாசிரியர்         :           பாசுகர என். நாராயணய்யா,

★

562. Introduction – முதலறிவு

இதற்கு மத்தியில், சனிக்கிழமை பொழுதடைந்ததும் சத்யவிரதன் பாட்டம் அம்மையிடம் சொன்னப் பிரகாரமே இரண்டு போலிப் பெண்களை அழைத்துக் கொண்டு அவள் மாளிகைக்குச் சென்றான். பெண்கள் முன்னேற்பாட்டின்படி வெவ்வேறிடத்திற்கு அனுப்பப்பட்டார்கள். சற்று நேரமானதும் சாமியாரும் வந்து சேர்ந்தார். சத்யவிரதனைக் கண்டு சற்று திகைப்பது போல் நின்றார். இருவருக்கும் பாட்டம் அம்மை முதலறிவு (introduction) செய்து வைத்தாள். பிறகு, சாமியாரைக் கொஞ்ச தூரத்திற்கப்பால் அழைத்துச் சென்று, சத்யவிரதனிடம் சொன்னது போல் அவரும் அன்றிரவு தனக்குத் துணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டாள். –

நூல்   :           நாகரீகப் போர் (1925) அதிகாரம் 20 – மாயாமித்திரம் மறைதல், பக்கம் – 266

★

563. Wig – மயிர்த்தொப்பி

கைதிகளுக்குள் அதிகக் கலவரை செய்யும் வகுப்பினர் ஒருவருண்டு. அவர்களை மேல் காற்றுகள் என்பார்கள். அவர்களெல்லாம் தங்கள் உடம்பில் பச்சை குத்திக் கொள்வார்கள். துன்பக் குழந்தை, தோற்கப்பட்டாலும் ஆளப்படவில்லை, கடவுளுமில்லை, எஜமானுவில்லை என்ற வாக்கியங்கள் அவர்கள் சரீரத்தில் பற்பல விடங்களில் எழுதப்பட்டிருக்கும். வழுக்கு மண்டையுடைய கைதியின் தலையில் மயிர்த்தொப்பி வரைந்திருக்கும். முழுக்குருடன் கண்கள் மேல் மூக்குக் கண்ணாடி குத்தி யிருக்கும்.

இன்னொருவன் மார்பில் ‘கண்ணிய சைன்யம்'(Legion of Honour) என்ற பிருது பச்சையில் விளங்கிற்று. அதிசயப் பேர்வழிகள் இதில் கூடியிருக்கிறார்கள்.

நூல்   :           நாகரீகப் போர் (1925) அதிகாரம் 18 – படையெழுச்சி, பக்கம் – 240

★

564. பாட்டை சாரி – வழிப்போக்கர்

‘இனி என் காதலியிருந்தென்ன? இறந்தென்ன? இனி நான் முன்போலின்றித் துறவியானேன். ஆகையால், இனி நான் வீட்டுக்குள் இருந்தாலென்ன? வெளியிலிருந்தாலென்ன? என்று ஒரு பாட்டை சாரி (வழிப்போக்கன்) யோசித்துப் பார்த்துச் சொன்னான்.

நூல்   :           பர்த்ருஅரி சிங்கார சதகம் உரை (1925) 5-வது அதிகாரம், போலித் துறவு, பக்கம். 31

தெளிபொருள் விளக்க உரை           :           தமிழ்ப் பண்டிதர் ம. மாணிக்க வாசகம் பிள்ளை

★

565. Sofa – சாய்மான மஞ்சம்

நேர்த்தியான மூங்கிற்பாயொன்று தரையில் விரித்திருந்தது. அதன் மேல் கித்தான் நாற்காலி ஓரிடத்திலும், சாய்மான மஞ்சம் (Sofa) மற்றோரிடத்திலும் வைக்கப்பட்டிருந்தன.

நூல்   :           நாகரீகப் போர் (1925) அதிகாரம் 2 – வீரனின் வியாகுலம், பக்கம்-9

நூலாசிரியர்         :           பாசுகர என். நாராயணய்யா, பி.ஏ., பி.எல்., எல்.டி.

★

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Wednesday, December 7, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 556-560

 அகரமுதல

 



(தமிழ்ச்சொல்லாக்கம் 551-555 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 556-560

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

உருதுமொழிச் சொற்கள்

556. கம்மி – குறைவு

557. சிபாரிசு – தகவுரை

558. டோபிகானா – வண்ணான் சாவடி

559. சராய் – காற்சட்டை

★

560. visting Card – காணும் சீட்டு

சிரீமதி, காமா என்ற அம்மையாரின் நட்பு சிறிது காலத்திற்குள் சிரீமான் ஐயருக்குக் கிடைத்தது. நாளுக்கு நாள் அவர்களது நட்பு அதிகமாகிக் கொண்டே வந்தது. பிறகு ஐயர் சிலகாலம் பாரீசு நகரிலிருந்து பின்னர் உரோமாபுரி, செருமனி, முதலிய இடங்களுக்குச் சென்று துருக்கி தேசத்தின் தலைநகரான கான்சுதாந்தி நோபிள் வந்தார். அங்கிருந்து அவர் ஒரு பக்கிரி வேடந்தாங்கி இந்தியாவுக்குச் செல்லும் கப்பலில் ஏறி சபமாலையுடன் ’அல்லாகோ அக்பர்’ என்று அடிக்கடி கூறிக்கொண்டு முகம்மதியர்களைப் போல் கப்பலில் ஒவ்வொரு நாளும் ஆறுதடவை கடவுளைத் தொழுது கொண்டு எகித்து தேசத்தின் துறைமுகப் பட்டினமான கெயிரோ நகரத்திற்கு வந்து சேர்ந்தார்.

அங்கே அவர் ஒரு துருக்கியப் பெயரை விசிடிங் கார்டுகளில் (காணும் சீட்டு) அச்சடித்துக் கொண்டு வழியில் தம்மைப் பற்றிக் கேட்பவர்க்கெல்லாம் அந்தச் சீட்டில் ஒன்றைக் கொடுத்துத் தாம் கல்கத்தாவில் ஒரு பெரிய வியாபாரி என்று சொல்லிக் கொண்டு இலங்கைத் தீவின் பிரபல துறைமுகப் பட்டினமான கொழும்பு வந்து சேர்ந்தார்.

கட்டுரை     :           உத்தம வீரர்-வ.வே.சு. ஜயர்

கட்டுரையாசிரியர்        :           கே.எசு. மணியன்

இதழ் :           பாலவிநோதினி

தொகுதி 7   :           பகுதி 11-12 நவம்பர், டிசம்பர் 1925 பக்கம் – 324

★

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, December 5, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 551-555

 அகரமுதல





(தமிழ்ச்சொல்லாக்கம் 546-550 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 551-555

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

551. Monkey Screw — குரங்குத் திருகு

விளக்கைப் பிரதாப்சிங்கிடம் கொடுத்துவிட்டுத் தன் இடுப்பிலிருந்து ஒர் நீண்ட கயிற்றைக் கழற்றினாள். அது சுமார் நீளமிருக்கும். அதன் சுற்றளவு மிகவும் குறைவாதலால், அது அதிகக் கனமாயாவது அதிக இடத்தை யடைத்துக் கொண்டாவது இருக்கவில்லை. மெல்லிய கம்பிகளாற் செய்யப்பட்ட கயிறாகையால், அறுந்து போகாதபடி பலமாயிருந்தது. தயிற்றை நீட்டி வைத்துக்கொண்டு, தன் சோப்பிலிருந்து பெட்டி போன்ற ஒர் இயந்திரத்தை எடுத்துக் கயிற்றின் ஒரு நுனியை அதில் இசைத்தாள். மற்றொரு நுனியில் குரங்குத் திருகு போன்ற பற்களுடன் கூடிய சிறு பிடியொன்றிருந்தது.

இந்த நுனியைத் தவிர கயிற்றின் மற்றெல்லாப் பாகங்களையும் பெட்டிக்குள் அடங்கும்படி பெட்டியின் வெளியே இருந்த ஒரு பிடியைச் சுற்றி உள்ளே இழுத்தாள்.

மேற்படி நூல் : அதிகாரம் 16 – ஸந்நேகந் தெளிதல், பக்கம் – 213

★

552. அங்காத்தல் – வாய்திறத்தல் (1925)

திருக்குறள்

அகர முதல வெழுத்தெல்லா மாதி

பகவான் முதற்றே யுலகு

எழுத்துகள் அங்காத்தலை (வாய் திறத்தலை) முதற்காரணமாக வுடைமைபோல உலகம் முதல்வனை முதற்காரணமாக வுடையது.

நூல்   :           ஞானபோதினி அல்லது சிவப்பிரகாசம் (1925) பக்கம் 13

நூலாசிரியர்         :           சோழ கந்த சச்சிதானந்தனார்.      

★

ஆங்கில மொழிச் சொற்கள்

553. சாக் – சீமைச் சுண்ணாம்பு

554. ஆப்சக்ட் லெசன் – பொருட் பாடம்

555. காம்பசு – திசையறி கருவி

நூல்   :           தற்கால தமிழ்ச்சொல்லகராதி (1925)

நூலாசிரியர்         :           திவான்பகதூர் ச. பவானந்தம் பிள்ளை 

★

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Saturday, December 3, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 546-550

 அகரமுதல





( தமிழ்ச்சொல்லாக்கம் 541-545 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 546-550

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

546. Secondary Education – இரண்டாங் கல்வி

547. University – பல்கலைக்கழகம்

நான் இரண்டாங் கல்வி கடந்து பல்கலைக் கழக முதல் வகுப்பைச் சேர்ந்த பின் எனக்கு விவாகம் நடந்தது. வயதிலும், அழகிலும், படிப்பிலும், அந்தசுத்திலும் எனக்கு ஒப்பான ஓர் வாலிபனுக்கே நான் வாழ்க்கைப்பட்டேன்.

நூல்   :           நாகரீகப் போர் (1925) அதிகாரம் : 7 – சக்தி போதம், பக்கம் 65

★

548. Treaty Ports – உடன்படிக்கைத் துறைமுகங்கள்

கீழ்நாட்டு உடன்படிக்கைத் துறைமுகங்களில் குறைந்தபட்சம் பத்து லட்சம் பெண்மக்கள் இவ்வீனத் தொழிலில் அமர்ந்திருக்கிறார்கள். இவ்வூழியத்தில் இவர்கட்கு ஒருவருடம் முதல் பத்து வருடம் வரையிலுந்தான் பிழைப்பு. இச்சாகமாட்டாப் பிழைப்புக்கு வருடந்தோறும் ஆயிரக்கணக்கில் பெண்கள் வேண்டப்படுகிறார்கள்.

நூல்   :           நாகரீகப் போர் (ஓர் நவீனம்) (1925)

அதிகாரம் 10 – குகய சந்தேசம், பக்கம் – 130

★

549. Film – தகடு

நான் முன்னிருந்த விடத்திற்கு இரகசியமாகச் சென்றேன். அவ்விடத்தில் எனக்கு மிகவும் ஆபத்தான நண்பரொருவர் ஒரு விளம்பரச் சீட்டை என் கையில் கொடுத்தார். அதில் இந்தியன் சினிமாவில் ‘துறவி’ என்ற ஒரு காட்சி நடப்பதாகத் தெரிவித்திருந்தது. அது அவ்வூருக்குப் புதிய தகடு என்றும் போடப்பட்டிருந்தது. அதில் ஒரு பெண்ணுருப்படம் அச்சிட்டிருந்தது.

மேற்படி நூல் : அதிகாரம் 13 கூடிப் பேசல், பக்கம் – 182

★

550. Pocket Book – சட்டைப்பைப் புத்தகம்

சத்யவிரதன் அவனிடம் சில உல்லாச வார்த்தைகளைப் பேசிவிட்டுத் தன் அங்கியிலிருந்து சட்டைப்பைப் புத்தகத்தை (பாக்கெட் புத்தகத்தை) எடுத்து அதிலிருந்து 500 டாலருக்கு ஒரு செக்கைக் கிழித்து அவள் கையில் கொடுத்தான். அவள் முன்போலவே அதை வேண்டாம், வேண்டாம் என்று சொல்லிக் கையில் வாங்கி உடைக்குள் வைத்துக் கொண்டாள். சத்யவிரதன் விடைபெற்று வெளியேறினான். –

மேற்படி நூல் : அதிகாரம் 15 – திண்ணம் விடுதலை திண்ணம், பக்கம் – 201

★

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்