Monday, March 25, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1136- 1144

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1121-1135 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1136- 1144

(கவிஞர் சுரதா கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. Degree – மாத்திரை
  2. Beauty Spot – அழகின் உறைவிடம்
  3. Radio – ஒலிபரப்பி
  4. Department of Epigraphy – கல்வெட்டுப் பதிவு நிலையத்தார்
  5. Executive Officer – ஆணையாளர்
  6. சல்லரி- கஞ்சிரா
    சல்லரி என்றழைக்கப்பட்டு வந்த பழைய கைப்பறையே இன்று கஞ்சிரா என்று அழைக்கப்படுகிறது. இதை வாசித்தால் கிலுகிலுவென்னும் ஒருவித ஒலி உண்டாகும். தலைஞாயிறு இராதா கிருட்டிணையர், புதுக்கோட்டை மான்-ண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்திப் பிள்ளை ஆகியோர் கஞ்சிரா வாசிப்பதில் மிகச் சிறந்தவர்கள்.

★

  1. இசைத்தமிழன்
    அறுபத்து மூன்று நாயன்மார்களுக்குள்ளே ஆனாய நாயனார் என்பவர் வேய்ங்குழலைக் கொண்டு வாசித்த போது சராசரங்கள் யாவும் இயக்கமற்று அவ்வினிய ஓசையென்னும் தேனையுண்டு தியங்கிய பிரமரங்கள் போல் சலனமற்று நின்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. சங்கீதத்துக் குருகாத கன்னெஞ்சமுடையான் மானிட இயல்புடையவ னல்ல னென்றும் சகல துர்க்குணங்களுக்கும் அவன் மனம் இலேசாய் இணங்குமென்று இங்கிலாண்டு தேசத்தன் காளிதாசரென்று பெயர்பெற்ற ஷேக்ஸ்பியர் என்னும் நாடகக்கவி கூறுகின்றனரென்றால் சங்கீதத்தின் பெருமையை இன்னும் என்னென்று வியப்பது.

இதழ் : சனவிநோதினி (1910)
கட்டுரையாளர் : இசைத்தமிழ்
★

  1. BALCONY – உயர்நிலைப்படி
    கொட்டகையை யடைந்ததும் டிக்கெட்டு விவரங்களை விசாரித்தான். இரண்டு டாலர் – அல்லது சுமார் ஏழு உரூபா – கொடுத்தால் எல்லாவற்றிலும் உயர்ந்ததான பாக்சு (Box) அல்லது பெட்டி என்ற ஆசனம் கிடைக்குமென்று அங்குள்ளவர்கள் சொன்னார்கள். பணப்பையைத் திறந்து பார்த்தான். அதில் ஐந்து டாலர்களிருந்தன. அவன் மனம் சோக்கில் நிலைத்திருந்தபடியால் பெட்டி டிக்கட்டையே வாங்கிக்கொண்டு உள்ளே சென்று உயர்நிலைப் (Balcony) படியேறி, ஒரு பாக்ஸில் போய் உட்கார்ந்தான்.

நூல் : நாகரீகப் போர் (1925), அதிகாரம் 4 – மாயா மித்திரம், பக்கம் – 38,
நூலாசிரியர் : பாசுகர என். நாராயணய்யா, பி.ஏ., பி.எல்., எல்.டி.,
★

  1. இரணியப் பிண்டம் – பொற்கட்டி
    இந்தியாவில் (இ)ரிக்குவேத காலத்திலேயே (ஏறத்தாழ கி.மு. 2000) பொற்கட்டி, பணமாக உபயோகிக்கப்பட்டதாக அறிகிறோம். அது இரணியப் பிண்டம் என்றழைக்கப்பட்டது. தமிழில் அதன் நேர் பொருள் பொற்கட்டி. கந்தபுராண ஆசிரியர் கச்சியப்ப சிவாச்சாரியார் இரணியனைப் பொன்னன் என்றே கூறுவார். ‘ஆடகப் பெயரின் அவுனர் மார்பினன்’ என வரூஉம் குமரகுருபரர் வாக்கும் (திருவாரூர் நான்மணிமாலை) ஈண்டு நினைவு கூறற்பாலது.

நூல் : பணம் (1953) பக்கம் – 15,
நூலாசிரியர் : ரெ. சேசாசலம், எம்.ஏ.,
(ம. தி. தா. இந்துக் கல்லூரி – பொருளாதார ஆசிரியர்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

நூல் நிறைவு. தொடர்ந்து

சொல் வழங்கிய நூல்களும் ஆசிரியர்களும் பட்டியலும்

சொல் வழங்கிய இதழ்களும் ஆசிரியர்களும் பட்டியலும்

இடம் பெற்றுள்ளன. தொடர்ந்து அவை வரும்.

Monday, March 18, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1121-1135

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1098- 1120 -தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1121-1135

(கவிஞர் சுரதா கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. ஐம்பால்
    ஐம்பால் – கூந்தல், ஐந்து வகையாக முடிக்கப்படுதலின் அப்பெயர்த் தாயிற்று.
    நூல் : பெரிய புராணவாராய்ச்சி (1924) பக்கம் : 11
    நூலாசிரியர் : வா. மகாதேவ முதலியார் (கிறித்தவ கலாசாலைத் தமிழாசிரியர்)
    ★
  2. கோளம் – தரை நூல்
    பா. வே. மாணிக்க நாயக்கர்
    நான் பா. வே. மாணிக்க நாயக்கரை அடிக்கடி பொன்மலையில் சென்று கண்டேன். மகாநாட்டிலிருந்து காட்டுப் புத்தூருக்கு வந்ததும் எனது (இ)லயன்சு குறிப்புகளைக் கொண்டு, உயிர் நூல், பூமி நூல் ஆகியவற்றை எழுதினேன். அவற்றை அடிக்கடி கொண்டு சென்று மாணிக்க நாயக்கரிடம் காட்டியதுண்டு. அவர் கலைச் சொற்களைக் கவனிப்பார் தனித்தமிழ்ச் சொற்களைப் போற்றி, இப்படி எழுதுங்கள் என்பார். பொருத்தமான புதிய சொற்களையும் சொல்லுவார். -கோளம் என்பதை ‘தரை நூல்’ என்று திருத்தினார்
    சுத்தானந்த பாரதியார்
    (நூல் : ஆத்ம சோதனை)
    ★
  3. சாமுத்திரிக நூல் – வடிவமை நூல்
    வடிவமை நூலிற் சொல்லும்
    ⁠வனப்பெலாம் அமைத்து வேதன்
    கடிமலர்ச் செங்கை வண்ணம்
    ⁠காட்டிய உருவு கொல்லோ
    !

    நூல் : நைடதம், நளன் தூதுப் படலம், பாடல் 89
    நூலாசிரியர் : அதிவீரராம பாண்டியன்
    ★
  4. Statue – உருநிலை
    குருவெனச் சென்னையிற் கூடி னானுக்கெந்
    திருநலஞ் சான்றொளிர் செய்ய மாணிக்க
    வருமணி யனையவ னாகு மில்லருக்
    குருநிலை யெடுத்தன ருவத்தி நெஞ்கமே!
  5. ஆசான் – ஆசிரியன் :
    (இங்கு டாக்டர் மில்லர் அவர்களைக் குறித்தது) உருநிலை – Statue
    நூல் : பாவலர் விருந்து

    ★
  6. புத்தி மயக்கம் – சிந்தை மருள்
  7. மோட்ச வீடு – மேலகம்
  8. ஆராதனை – வழிபாடு
  9. தேவாங்கம் – பட்டுச் சீலை
  10. சன்மார்க்கம் – நல்லாறு
  11. உன்னதம் – மேன்மை
  12. சிரக் கம்பம் – தலை நடுக்கம்
    நூல் : விசுவகர் மோபதேச வீரகண்டாமணி,
    பி. கல்யாண சுந்தராசாரி (நூலைப் பதிப்பித்தவர்)
    ★
  13. Deg – நீண்ட சமையல் பாத்திரம்
  14. Cheeks – கதுப்புகள்
  15. இராசுட்டிரம்   –   நாடு

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, March 11, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1098-1120

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1079- 1097 தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1098-1120

(கவிஞர் சுரதா, கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. அம்போதரங்கம் – நீரின் அலை
    அம்போதரங்கம் (நீரின் அலை) அல்லது அசையடி – இது கடல் அலைகள் போல அடிகள் அளவடியாய் நிற்பது.
  2. அசோரத்திரம் – இரவும் பகலும்
  3. அத்துவிதம் – இரண்டற்றது
  4. இலஞ்சம்ர் – கைக்கூலி
  5. காலேசு -கல்லூரி
  6. கைங்கரியம் – தொண்டு
  7. தரும சாத்திரங்கள் – உயர் நூல்கள்
  8. திரவிய சாலை – காசடக்குங் கூடம்
  9. பந்தம் – கட்டுப்பாடு
  10. பிரத்தியட்சம் – கண்கூடு
  11. வாதபுத்தகம் – வழக்குப் புத்தகம்
  12. உபநிடதம் – மறைமுடிவு
  13. (இ)ரப்பர் மரம் – பிசின் மரம்
    நூல் : சிரீ இராமநாத மான்மியம்
    நூலாசிரியர் : ச. பொன்னம்பல பிளளை
    ★
  14. இந்திர நீல ரத்தினம் – கார் தந்த மணி
  15. பீதாம்பரம் – மின்நூல் ஆடை
  16. விவிதம் – பலவகை, பலவிதம்
  17. பூமிசுதன் – செவ்வாய்
  18. வியோகம்-பிரிவு
  19. .பூர்வ பக்கம் – முதற்பக்கம்
  20. தாசி – அடியவள்
  21. வாளாம்பிகை – இளையவள்
  22. Defence – எதிர்க்கட்சி
  23. Sea Custom – கடல்வரி

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, March 4, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1079- 1097

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1071- 1078 தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1079- 1097

(கவிஞர் சுரதா கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. அருத்த சாத்திரம் – பொருள்நூல்
    தன்னநுபவத்திற்கு இரண்டு பங்கும், ஆசுத்திக்கு ஒரு பங்கும், அறத்திற்கு ஒரு பங்குமாகப் பங்கிட்டு வைக்க வேண்டுமென்று பொருணூலே சொல்லுதலால், அறத்துக்கு நாலிலொரு பங்கு சொல்லப்பட்டது.
    நூல் : திரிகடுகவுரை, இரெளத்திரி, ஆண்டு ஆறாம் பதிப்பு,
    ⁠பாடல் – 21, பக்கம் – 13
    உரையாசிரியர் : திருக்கோட்டியூர் இராமநுசாசாரியர்★
  2. கிருடடிபட்சம் – தேய்பிறை
  3. சுக்கில பட்சம் – வளர்பிறை
  4. பினாமி – பேர் இரவல்
    க. பாலசுப்பிரமணியன், பி. ஏ., பி. எல்,
    சீர்காழி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்).
    ★
  5. Punctuation – குறியீடு
    இப் புத்தகத்தை ஊன்றிப் படிக்கும் மாணவர்கள் தம் வாழ்நாளைப் பயனுறச் செய்து கொள்ளல் வேண்டுமென்னும் நோக்கமே இதனைத் தொகுத்ததற்குக் காரணமாம். மாணவர்கள் செய்யுள்களையும் வசனங்களையும் எளிதாகப் படித்துக் கொள்ளுமாறு பதப்பிரிவுகளும் அவ்விடத்திற்கேற்ற (Punctuation) குறியீடுகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
    நூல் : செந்தமிழ் நூன்மாலை, பாயிரம், பக்கம் – 4
    தொகுப்பாசிரியர்கள் : கோ. வடிவேலு செட்டியார், ஆ. நா. கன்னையா
  6. இலண்டன் டைம்சு (The London Times)பிரிட்டீசு பத்திரிக்கை
  7. பீகிங் கெசெட்டு (Peking Gazette) சீனப்பத்திரிக்கை
  8. இரங்கூன் கெசெட்டு (The Rangoon Gazette) பருமா பத்திரிக்கை
  9. இரங்கூன் மெயில் (The Rangoon Mail) பருமா பத்திரிக்கை
  10. சிலோன் கெசெட்டு சிலோன் பத்திரிக்கை
  11. கொளும்பு சர்னல் (The Colombo Journal)
  12. கண்டி எரால்டு (The Kandy Herald)
  13. சிலோன் மார்னிங் லீடர் (The Ceylon Morning Leader)
  14. சிலோன் டெய்லி நியூசுஸ் (The Ceylon Daily News)
  15. .. டைம்சு ஆப் சிலோன் (The Times of Ceylon)
  16. சிலோன் அப்செர்வர்
  17. சிலோன் இண்டிபெண்டெண்டு (The Ceylons Independent)
  18. இந்தியா கெகெஜட் (The India Gazette)
  19. பெங்கால் ஃகார்க்காரன் (The Bengal Harkara)

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, February 26, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1071- 1078

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1066-1070 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1071- 1078

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. அறுவை – துணி
  2. சவளி – ஆடை
    அறுக்கப்படுவதனால் அறுவை என்றும், துணிக்கப்படுவதனால் துணி என்றும், சவண்டிருப்பதனால் சவளி என்றும் ஆடை பல பொதுப் பெயர் பெறும். சவளுதல் – துவளுதல். மென் காற்றிலும் ஆடுவது (அசைவது) ஆடை, சவளி என்னும் தமிழ்ச் சொல் த்ஜவளி என்று தெலுங்கிலும் ஜவளி என்று கன்னடத்திலும் எடுப்பொலியுடன் ஒலிக்கப்படுவதாலும், நாம் அவ்வாறே தமிழிலும் ஒலிப்பதாலும், வடசொல்லென்று தவறாகக் கருதப்படுகின்றது.
    வடமொழியில் இச்சொல் இல்லை. எனவே ஜவுளிக்கடை, ஜவுளி வாணிகம் என்பன சவளிக்கடை, சவளி வாணிகம் என எழுதப்படுதலே பிழையற்றதாம்.
    இதழ் : தேனமுதம் (மார்ச்சு 1972), அடை- 2, துளி – 13, பக்கம் – 51
    ★
  3. தேசாபிமானம்
    தந்தையே சுவர்க்கம், தந்தையே
    தருமம், தந்தையே சிறந்த தவம்;
    தந்தை மனமகிழ்ந்தால் தேவர்கள் மனமகிழ்கிறார்கள்.

குழந்தையைத் தானே சுமந்து
பெற்று வளர்ப்பதால், தாயானவள் தந்தையினும் மேல்.
பிறந்த நாடும்
சுவர்க்கத்தினு மேலானவை

  • மகா நிருவாண தந்திரம்

  • ‘இந்த நாடு என் சொந்தநாடே, என் தனையே
    தந்த நாடே என்றுமகிழ் நெஞ்சில் என்றும் எண்ணிலா –
    ஒருவன் தனையும் கண்டதுண்டோ கண்ணிலே?’
    சுகாட்டு
    இதழ் தமிழர் நேசன், தொகுதி : 11 பகுதி 2, பக்கம் :167
    ★
  1. 1074. இந்தியத் தமிழர்கள்
    திருக்குறள். இது ஆதிவேதத்திற்கு வழி நூலாகும்; இவற்றுள் செந்நாப்புலவர் யதார்த்த சீவிய சரிதம், அவரது கடவுள் வாழ்த்து மூலம், முதல் அறத்துப்பால் மூலம் இவைகளுக்கு க. அயோத்திதாச பண்டிதர், பதம், கருத்து, பொழிப்பு, அகலவுரைகளுமுண்டு. இந்தியத் தமிழர்களுக் கின்றியமையாதவனாகிய சிறந்த நூலாகும்.
    நூல் : நிகழ்காலத்திரங்கல் (1925)
    ⁠சித்தார்த்த புத்தக சாலையார்,
    கோலார் – தங்க வயல்(கோல்ட் பீல்ட்)

★

  1. பூவராகம் – நிலப்பன்றி
    திருத்தில்லையில் வேளாளர் குலத்தில் வைணவ சமயத்தில் ஆ. பூவராகம் பிள்ளை 1899 ஆம் ஆண்டு நவம்பர்த்திங்கள் இருபத்தேழாம் நாள் பிறந்தார். தந்தையார் பெயர் ஆதிமூலம் பிள்ளை.
    1076. சித்ரம் – அழகு
    1077. கரி – கைம்மா (யானை)
    1078. காந்தன் – கணவன்

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, February 19, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1066-1070



(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1061-1065 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1066-1070

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. Border – வரம்புகள்
    பூஞ்செடிகளைக் சூழ்ந்து கோலப்பட்டிருக்கும் வரம்புகளில் விதவிதமான கள்ளிகளும், கீரைகளும், புற்களும், சிறு செடிகளும் உள்ளன. ஐரோப்பியரது பங்களாக்களிலேயே பூக்கள் பறிக்கப்படாமல், கொத்துக் கொத்தாகச் செடிகளிலே புன்முறுவல் தவழும் இன்முகத்துடன் மிளிர்கின்றன.
    நூல் : தமிழ்நாடு பயணக் கட்டுரைகள் (1968), பக்கம் : 147
    எழுதியவர் : அரு. சோமசுந்தரம், ஊழியன் 21-9.1926
    தமிழ் வாரப் பத்திரிகை, காரைக்குடி.

தொகுப்பு : ஏ. கே. செட்டியார்
★

  1. Under Ground Drainage – புதை சாக்கடை
    ‘எனக்கு அண்டர்கிரவுண்ட் ட்ரெயினேஜ்’ என்பதற்குத் தமிழில் எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. நினைத்துக் கொண்டேயிருந்தேன்; சரியான சொல் கிடைக்கவில்லை. சில திங்கள் சென்றபின் ஒரு சிற்றூருக்குச் சென்றிருந்தேன்; அங்குள்ள ஒருவரிடம் என்னய்யா உங்களூரில் வளர்ச்சித் திட்டங்களெல்லாம் எப்படி? என்று கேட்டேன். அவர் விளக்குகள், சாலைகள் போடுவது போன்றவற்றைக் கூறிவிட்டுப் ‘புதை சாக்கடையும்’ அமைக்கப் போகிறார்கள் என்றார்.
    எனக்குப் புதையல் கிடைத்தது போலத் தனித்தமிழ்ச் சொல் கிடைத்தது. Under Ground Drainageகுப் புதை சாக்கடை என்ற சொல் எவ்வளவு பொருத்தம். இது போன்ற வளமான சொற்களைக் கொண்டவர்கள் நாம்.
    இதழ் : தமிழ்ப் பாவை 7, 11. 1967, மலர் -7 இதழ் – 11
    சொற்பொழிவாளர் : கி. ஆ. பெ. விசுவநாதன்
    ★
  2. கடிகாரம் – காலக் கருவி
    அறிவுடையவர்களாகத் தங்களைத் தாங்களே மதித்துக் கொண்டிருக்கும் செல்வர் சிலருக்கு முன்னுண்டது நன்கு செரித்துவிட்டது எனத் தாமறிந்து கொள்ளாமல், அறிவற்ற பொருளாகிய காலக் கருவி (கடிகாரம்) அதனையுணர்த்த, மேலும் மேலும் பஞ்சுப் பொதியடைப்பது போல வயிற்றை அடைத்துத் தமது அருமை உடலைக் கெடுத்துக் கொள்கிறார்களே! இஃதென்ன அறியாமை!
    நூல் : கட்டுரைப் பொழில் (1958), பக்கம் 15
    நூலாசிரியர் : பெருஞ்சொல் விளக்கனார். முதுபெரும் புலவர்
    அ. மு. சரவண முதலியார்
    (1936ல் நிகழ்த்திய பெரிய புராணச் சொற்பொழிவிலிருந்து எடுக்கப் பெற்றது.)
    ★
  3. மன்னார் கோயில் – மன்னார்குடி
    நூல் : மன்னார்கோயிற் புராணம் (1855)
    நூலாசிரியர் : திரிசிரபுரம் மகாவித்வான் கோவிந்த பிள்ளை, கோயில் குடி
    ★
  4. சொற்பொழிவு
    உபந்யாசம், பிரசங்கம் என்ற சொற்களுக்குப் பதிலாகத் தற்போது தமிழ் மக்களிடையே சொற்பொழிவு எனும் அழகான சொல்லை உருவாக்கியவர் திருநெல்வேலியைச் சேர்ந்த பால்வண்ண முதலியார் என்பவராவார். எப்படி மேடையில் பேசுவது என்பது பற்றிச் சொற்பொழிவாற்றுப்படை என்ற பெயரில் ஒரு சிறந்த நூல் இயற்றினார். உபந்நியாசம் என்பதற்குப் பதிலாகச் சொற்பொழிவு என்ற புதிய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியதற்காக அவரை அக்காலத்தில் பலர், ‘அதோ சொற்பொழிவு போகிறது’ என்று கேலி செய்தனராம்!
    இதழ் : (கலைவாணன் (25, 9, 1961), மலர் – 2. இதழ் – 21.

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, February 12, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1061-1065

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1048-1060 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1061-1065

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. இண்டர்வியூ – நேர்காணல்
    வினா – விடை என்ற இண்டர்வியூ முறையை ஆங்கிலேயர் அறிமுகப்படுத்தினர். அதனை நேர்காணல் என்னும் தனித் தமிழ்ச் சொல்லால் முதன் முதல் குறிப்பிட்டவர் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார்தான்
    பாபநாசம் குறள்பித்தன்
    நூல் : முதன் முதலாக உலகில் நடந்த நிகழ்ச்சிகள், திசம்பர் 1992
    ★
  2. கவிராத்திரி – பாடல் இரவு
    தமிழமுத மன்றத்தின் சார்பில், கவிஞரும் மருத்துவருமாகிய ச. அறிவுடை நம்பி அவர்களது மருத்துவ மனையில் 7.11.1992 அன்று மாதாந்திரப் பாடல் இரவு (கவிராத்திரி) சிறப்பாக நடைபெற்றது.
    இதழ் : முத்தமிழ் முரசு, 21.12.92
    ஆசிரியர் : மு. சுப. கருப்பையா, தஞ்சை
    ★
  3. Treadle – மிதித்தியக்கும் அச்சுப் பொறி
    1933இல் கல்விக் கழகத்துக்கு மிதித்தியக்கும் அச்சுப் பொறி (Treadle) ஒன்று வாங்கி ஒர் அச்சகம் நிறுவப் பெற்றது.
    இதழ் : செந்தமிழ்ச் செல்வி, மார்ச்சு 1973, சிலம்பு : 47; பரல் – 7 பக்கம் : 366
    கட்டுரையாளர் : வ. சுப்பையா பிள்ளை
    ★
  4. Complimentary Copy- அன்பிதழ்
    இதழ் : விடுதலை, நாள் :10, 7. 2001
    ★
  5. செராக்(கு)சு – ஒளியச்சு
    மு. இளங்கோவன்
    தமிழ் ஆராய்ச்சியாளர்
    பாரதிதாசன் பல்கலைக் கழகம்
    திருச்சிராப்பள்ளி – 620 024
    (6. 12, 95 – அவர் எழுதிய கடிதத்திலிருந்து)

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்