Thursday, May 16, 2019

வெருளி அறிவியல் – 6 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

(வெருளி அறிவியல் 5 இன் தொடர்ச்சி)

வெருளி அறிவியல்  –  6

12. அம்மண வெருளி Dishabiliophobia/Gymnophobia /Nudophobia
அம்மணம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அம்மண வெருளி.
அம்மணமாக இருப்பது அல்லது தன்னுடைய அம்மண நிலையைப் பிறர் பார்ப்பது பிறரின் அம்மண நிலையைப் பார்ப்பது தொடர்பான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் கொண்டிருப்பர்.
gymnos என்னும் கிரேக்கச் சொல்லிற்கு  உடுப்பற்ற எனப் பொருள்.
(gymnasion என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உடற்பயிற்சிக்கான இடம் எனப் பொருள். gymnasein என்றால் உடையின்றிப் பயிற்சி எனப் பொருள்.)
ஆடையிலி வெருளி(Dishabiliophobia), உடுப்பின்மை(நிருவாண) வெருளி (Gymnophobia), அம்மண வெருளி(Nudophobia) எனத் தனித்தனியாகக் கூறுவதை விட அம்மண வெருளி என்றே சொல்லலாம்.
ஆடை அவிழ்ப்பு வெருளி(exuerphobia) என்பது மருத்துவ நோக்கில் ஆடையை அவிழ்க்கச் சொல்வது குறித்தது.
dis என்னும் இலத்தீன் சொல்லிற்குப் பிரி எனப்பொருள். habil என்னும் இலத்தீன் சொல்லிற்கு ஆடை எனப் பொருள்.
00
13. அமைதி வெருளி-Sedatephobia
அமைதிச் சூழலில் உருவாகும் தேவையற்ற அச்சமே அமைதி வெருளி.
அமைதி ஆயிரம் சொற்களை உணர்த்தும் என்பர். ஆனால் அமைதியான சூழலே சிலருக்கு தேவையற்ற சிந்தனைகளுக்கு வழி வகுத்து அச்சம் ஏற்படுத்தும். புயலுக்குப்பின்தான் அமைதி என்பர். ஆனால், அமைதியான சூழலே சிலருக்குப் பேரிடர் வரப்போகிறது  என எண்ணச்செய்து மனத்தில் கலவரத்தை உண்டு பண்ணிப் பேரச்சத்திற்குத் தள்ளிவிடும். தனிமைச் சூழல் அமைதியைத் தருவதால் அதுவே பேரச்சம் தரவும் வாய்ப்பாகிவிடுகிறது.
sedate என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் அமைதி அல்லது உறக்கம் அல்லது இறப்பு.
00
14. அயர்ச்சி வெருளி– Copophobia/Kopophobia
அயர்ச்சியின் பொழுது ஏற்படும் தேவையற்ற பேரச்சம் அயர்ச்சி வெருளி.
அயர்ச்சி, களைப்பு அல்லது சோர்வு ஏற்பட்டால் நோய் ஏற்படும், உடலுக்கு முடியாமல் போகும், படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாமல் போய்விடும், இவற்றால் மேற்கொண்டு வேலைபார்க்க முடியாமல் துன்பப்பட  நேரிடும் என்று கற்பனைகளை வளர்த்துக் கொண்டு பேரச்சம் கொள்வர். 
களைப்பால் வேலையைக் குறித்த காலத்தில் முடிக்க முடியாது, குறிப்பிட்ட நேரத்திற்குள் படிக்க முடியாது குறித்த நேரத்தில் முடிக்க முடியாமையால் வரவேண்டிய பணமோ வெற்றியோ வராது போய்விடும் களைப்பால் உடல் நலக் கேடு ஏற்படும் மருத்துவச் செலவு ஏற்படும் என்று களைப்பு தொடர்பாகப் பேரச்சம் கொள்வர்.
kopo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அயர்ச்சி/சோர்வு.
00
15. அயல்மனை வெருளி / கழிவறை வெருளி – Expellophobia
அயலார் வீடுகளில கழிவறைக்குச் செல்வதற்கு ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் (அயல்) கழிவறை வெருளி.
அடுத்தவர் வீடுகளில் கழிவறைக்குச் செல்வதற்குக் கூச்சம் கலந்த அச்சம் சிலருக்கு ஏற்படும். கழிவறை தூய்மையின்மையாக இருக்கும் என்ற கவலையிலும் சிலருக்கு அடுத்தவர் இல்ல அல்லது வெளியிடங்களில் உள்ள கழிவறைகளைப் பயன்படுத்த பேரச்சம் வரும். கழிவறைகளில் கூடுதல் நேரம் இருப்பவர்களும் நோயுற்று இருப்பவர்களும் அடுத்தவர் இல்லக் கழிவறைகளுக்குச் செல்ல அஞ்சுவர். தம் வீட்டுக் கழிவறைகளைப் பயன்படுத்த இவர்களுக்கு அச்சம் இருப்பதில்லை.
பொதுவாக இதனை அயல்மனை வெருளி என்னும் பொருளில் கையாண்டாலும் அயல் மனையில் உள்ள கழிவறைக்குச் செல்ல ஏற்படும் பெருங்கவலை என்பதால் கழிவறை வெருளி எனலாம்.
பிறர் வீடுகளுக்குச் சென்றால் சீட்டாட்டம் ஆட நேரிடும் என அளவுகடந்த பேரச்சம் கொள்வதையும்  Expellophobia என்றுதான் கூறுகின்றனர். இதனை அயல்மனை வெருளி எனலாம்.
Expello என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் வெளியேற்று.
00
16. அயலக மருத்துவர் வெருளி – xeniatrophobia
அயல்நாட்டு மருத்துவர்கள் மீதான அளவுகடந்த பேரச்சம் அயலக மருத்துவர் வெருளி.
சிலர் பழகிய மருத்துவர் தவிர வேறு மருத்துவர்களிடம் செல்ல மாட்டார்கள். அவர் வெளியூர் சென்றிருந்தாலும் அவர் வரட்டும் என, வந்தபின்னரே பார்ப்பர். அதைப்போன்றுதான் அயல்நாட்டு மருத்துவர்கள் குறித்த அச்சமும் சிலருக்கு ஏற்படுகிறது. நாட்டுச் சூழலுக்கும் உடல்நிலைச் சூழலுக்கும் அயல்நாட்டு மருத்துவர்கள் பாெருந்தி வர மாட்டார்கள் எனக் கவலைப்படுவர். புதிய மருத்துவ முறைகளால் கூடுதல் கட்டணம்  கொடுக்க வேண்டி வரும், பொருள் நிலைக்கேற்ப அமையாது என்பதுபோன்ற அச்சங்களும் சிலருக்கு வரும்.
அயலார் வெருளி(Xenophobia/Zenophobia), மருத்துவர் வெருளி(iatrophobia) போன்ற வெருளிதான் இதுவும்.
Xeno என்னும் கிரேக்கச் சொல்லிற்கு அயல் நாடு, அயல்நாட்டிற்குரிய எனப் பொருள்கள்.
iatro என்னும் கிரேக்கச் சொல்லிற்கு மருத்துவர் எனப் பொருள்.
00
17. அயலார் வெருளி-Xenophobia/Zenophobia
அயலாரைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் அயலார் வெருளி
அயல்(27), அயலிலாட்டி(3), அயலிற்பெண்டிர்(1), அயலார்(2), அயலோர்(3), அயல(9), அயலது(25) ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களி்ல் பயன்படுத்தப்பட்டுள்ளன. போர்க்காலத்தில் அயல் நாட்டார், அயல்வீரர்கள் வரும்பொழுது நாடு தோல்வியைத் தழுவினால் அயலவர் மீது அச்சம் கொண்டுள்ளனர்.
அயல் நாட்டினர், அயல் மொழியினர், அயல் இனத்தவர், அயல் ஊரினர்,உறவும் நட்புமாய் அமையாத அயலார் என அயலார்கள் மீது சிலர் தேவையற்ற பேரச்சம் கொள்வர்.
xenos என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் அயல்நாட்டினர்/முன்பின் அறியாதவர்
00
(தொடரும்)



அம்மண வெருளி
அம்மண வெருளி
அமைதி வெருளி
அமைதி வெருளி
அயர்ச்சி வெருளி
அயர்ச்சி வெருளி
அயல்மனை வெருளி / கழிவறை வெருளி
அயல்மனை வெருளி / கழிவறை வெருளி
அயலக மருத்துவர் வெருளி
அயலக மருத்துவர் வெருளி
அயலார் வெருளி
அயலார் வெருளி
(காண்க – வெருளி அறிவியல் 7)

Sunday, May 12, 2019

வெருளி அறிவியல் – 5 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


வெருளி அறிவியல்  –  5

7. அணுஆயுத வெருளி-Nucleomituphobia
அணுஆயுதங்கள் மீதான அளவுகடந்த பேரச்சம் அணுஆயுத வெருளி.
அணுஆயுதக்கருவிகள் இல்லாவிட்டாலும் இருந்து பயன்படுத்தப்படாமல் இருந்தாலும், அவை பயன்படுத்தப்பட்டுப் பேரழிவுகள் ஏற்படும் என்று கருதுவதால் உருவாகும் அச்சம் அணுஆயுத வெருளி. அமெரிக்கத் தலைவர்களுக்கு ஈராக்கு மீது ஏற்பட்டஅச்சம் இத்தகையதுதான். என்றாலும் அணுஆயுதக் கருவிகள்  இல்லை என்றறிந்த பொழுதும் இருப்பதாகப் பிறரை அச்சுறுத்தி அந்நாட்டை அழிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டது.
போர் முழக்கங்களும் அமைதியின்மையும் வல்லரசு ஆசையும் நிறைந்த உலகில் எல்லா நாட்டினருக்கும் அணுஆயுத வெருளி இருப்பதில் வியப்பில்லை.
Nucleomitu என்றால் அணுஆயுதம் எனப் பொருள்.
00
8. அணுக்குண்டு வெருளி – Atomosophobia
அணுக்குண்டுதொடர்பான காரணமற்ற அளவுகடந்த பேரச்சமே அணுக்குண்டு வெருளி.
போர்க்கொலை நாடுகளில் இது தவிர்க்க முடியாததாக அமைந்து விடுகிறது. சான்றாகத் தமிழ் ஈழத்தில் மக்களைக் காக்கவேண்டிய அரசே எமனாகமாறி  நொடி தோறும் வேதியல் குண்டுகளையும் கொத்துக்குண்டுகளையும் பிற குண்டுகளையும் போட்டு அழித்து வந்ததால் மக்களில் பெரும்பாலோர் குறிப்பாகப் பள்ளிச்சிறுவர்களும்  பிற சிறுவர்களும் பெண்களும் அணுக்குண்டு வெருளியால் பாதிக்கப்பட்டு மனநோயராக இருக்கின்றனர்.
அணுஆயுத வெருளி (Nucleomituphobia) யைச் சார்ந்ததே இது.
00
9. அண்ட வெருளி-Kosmikophobia
அண்ட வெளியில் உள்ளவை குறித்து ஏற்படும் தேவையற்ற அச்சம் அண்ட வெருளி.
விண்பொருள் வெருளி(Astrophobia), எரிமீன் வெருளி-Meteorophobia விண்மீன் வெருளி(Siderophobia), புறவெளி வெருளி(Spacephobia) ஆகியனவற்றை ஒத்ததே இதுவும்.
‘kosmo’ என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் அண்டம்/முழு உலகம்.
00
10. அதள் வெருளி-Doraphobia
விலங்குத் தோல் மீதான அளவுகடந்த பேரச்சமே அதள் வெருளி.
விலங்குத் தோலால் அல்லது தோல் முடியால்(fur) நோய் ஏற்படும், பெருந்துன்பம் நிகழும் என்று அவற்றிற்கான வாய்ப்பு இல்லாத பொழுதும் தேவையற்று அஞ்சுவது அதள் வெருளி.
சிறு பருவத்தில் விலங்கின் தோல் தொடர்பாகக் கேட்ட கதைகளால் அஞ்சி அதுவே நாளடைவில் பேரச்சமாக வளர்ந்து அதள் வெருளியாவதும் உண்டு.
தோல் அல்லது தோல் முடி குறித்த ஒவ்வாமைபற்றித் தீவிரமாகச் சிந்தித்து வெருளி நோயாக மாறும் வாய்ப்பும் உள்ளது.
அதள் என்பது விலங்கின் தோலினைக்(leather) குறிக்கும்.
dora என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் தோல்.
00
11. அதிர்ச்சி வெருளி-Hormephobia
துயரச் செய்தி அல்லது கெட்ட செய்தி வரும் என்றோ வந்தபின்போ தேவையற்ற பேரச்சம் கொள்வதுஅதிர்ச்சி வெருளி.
காரணமின்றியே மின் அதிர்ச்சி ஏற்படும் என்று தேவையற்று அச்சம் கொள்வதை யும் அதிர்ச்சி வெருளியில் சேர்க்கின்றனர். அதனை மின்வெருளி(Electrophobia)யில் சேர்ப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
தேர்வில் அல்லது தேர்தலில் தோல்வி அல்லது தொழில் முயற்சியில் தோல்வி என்னும் அதிர்ச்சி செய்தி கேட்பதாலோ இதனால் வாழ்வே இருண்டுபோவதாக அஞ்சுவதாலோ எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மை ஏற்பட்டு அதிர்ச்சி வெருளிக்கு ஆளாகின்றனர். முன்பெல்லாம் தொலைவரி(தந்தி) வந்தாலே செய்தி என்ன என்று அறியும் முன்னரே துயரச்செய்தியாக இருக்கும் என்று பேரதிர்ச்சி கொள்வோர் இருந்தனர்.
00
(தொடரும்)
அணுஆயுத வெருளி
அணுஆயுத வெருளி
அணுக்குண்டு வெருளி
அணுக்குண்டு வெருளி
அண்ட வெருளி
அண்ட வெருளி
அதள் வெருளி
அதள் வெருளி
அதிர்ச்சி வெருளி
அதிர்ச்சி வெருளி
(காண்க – வெருளி அறிவியல் 6)

Wednesday, May 8, 2019

வெருளி அறிவியல் – 4 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

வெருளி அறிவியல்  –  4
அகவை வெருளி
அச்ச வெருளி
அச்சச்சூழல் வெருளி
அடைதாழ் வெருளி
அடைதாழ் வெருளி
அடைப்பிட வெருளி
அடைப்பிட வெருளி
அண்மையர் வெருளி
அண்மையர் வெருளி

  1. அகவை வெருளி – senecophobia
அகவை(வயது) கூடுவது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அகவை வெருளி.  
ஆண்டு ஒன்று போனால் வயது ஒன்று போகும் என்பது இயற்கை. எனினும் சிலருக்கு அகவை கூடுவது தோற்றத்தில் முதுமையைக் காட்டும் எனக் கவலை தருவதாக அமைகிறது. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அகவை கூடினால் வாய்ப்பு குறையும் என்ற அச்சம் வரும். இவற்றால் இத்தகையோர் அகவை கூடுவது குறித்த தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.பெண்களுக்கு அகவை கூடுவது குறித்த அச்சம் இருப்பதாகக் கருதுவர். ஆனால் ஆண்களுக்கும் அகவை கூடுவது குறித்த அச்சம் உள்ளது.
senec என்னும் இலத்தீன் சொல்லிற்கு அகவையாதல் (வயதாதல்) எனப் பொருள்.
இவ்வெருளி உள்ளவர்கள் முதுமை வெருளிக்கும்(Gerontophobia) ஆளாவார்கள்.
00
  1. அச்ச வெருளி-Fearaphobia
அச்சம் பற்றிய பேரச்சம் வருவதே அச்ச வெருளி.
பலருக்கு எதைக்கண்டாவது அச்சம் வரும். ஆனால் சிலருக்கு அச்சம் குறித்தே பேரச்சம் வரும். இந்தப் பொருள் அல்லது சூழல் அல்லது படம் அல்லது படக்காட்சி அல்லது நிறம் அல்லது ஆள் அல்லது புத்தகம் அல்லது கதை அச்சத்தை விளைவிக்கலாம் எனக் கருதிப் பேரச்சம் கொள்வர். அச்சந்தரும் செய்திகளைப் படித்தாலும் கேட்டாலும் நாடகம் அல்லது தொலைக்காட்சி அல்லது திரைக்காட்சிகளில் பார்த்தாலும் பேரச்சம் வரும்.
தொடரி, பேருந்து, வானூர்திகளில் பயணம் மேற்கொள்ளும் பொழுது எதிரில் அல்லது உடன் அமர்ந்திருப்பவர் கடத்திவிடுவாரோ என்பது போன்ற  அச்சத்திற்கும் ஆளாவர். (அச்சநோய் வரும் என அஞ்சுவது வெருள்நோய் வெருளி. அது வேறு வகை.)
00
  1. அச்சச்சூழல் வெருளி-Counterphobia
அச்சம் ஏற்படுவதற்கான சூழல் உருவானால் அதனைத் தவிர்க்க முயலாமல், அளவுகடந்து அஞ்சுவது அச்சச்சூழல்வெருளி.
counter என்னும் இலத்தீன் சொல்லிற்கு எதிர் எனப் பொருள். counterphobia என்னும் பொழுது அச்சத்திற்கு எதிரான அச்சம் எனப் பொருளாகிறது. அச்சச்சூழலுக்கு எதிரான அச்சம் என்ற பொருளில் குறிக்கின்றனர்.அஞ்சுவதற்குரிய சூழல் நேர்ந்தால் அதனை எதிர்கொள்ளாமல் பெருங்கவலையும் பேரச்சமும் கொள்வதை இது குறிக்கிறது.
இஃதும் அச்சச்சூழலின் ஒரு பகுதிதான்.
00
  1. அடைதாழ் வெருளி-Cleithrophobia/Cleisiophobia
சிறிய இடத்தில் இருக்கும் பொழுது அடைத்துப் பூட்டி வைக்கப்படுவோம் என்று ஏற்படும் தேவையற்ற பேரச்சம் அடைதாழ் வெருளி.
குளியலறை போன்ற சிறிய அறைக்குள் இருக்கும் பொழுது தாழ்ப்பாள் திறக்க முடியாமல் உள்ளேயே இருக்க வேண்டுமோ அல்லது யாரும் கதவைப் பூட்டி விட்டுச் சென்று விடுவரோ அல்லது தானாகக் கதவு பூட்டிக் கொள்ளுமோ என்ற பேரச்சம் வரலாம்.
சிலர் மின்ஏணிக்குள் / ஏணறைக்குள் தனியாக நுழைந்ததும் கதவு திறக்கமுடியாமல் போய்விடுமோ என்று பேரச்சம் கொள்வர்.
cleithro என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் மூடு அல்லது அடை.
00
  1. அடைப்பிட வெருளி-Claustrophobia
வெளியேற முடியாத அளவில் அறைக்குள் இருக்கும்பொழுது ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் அடைப்பிட வெருளி.
அடைதாழ் வெருளிக்கும் இதற்கும்  வேறுபாடு உள்ளது. ஊடுகதிர்க்கருவி முதலான மருத்துவக் கருவி வழி ஆய்வுகளுக்காக ஆய்வறையில் இருக்கும்பொழுது ஆய்வாளர் வெளியில் இருப்பார். அப்பொழுது ஏற்படும் தேவையற்ற அச்சம்.
கதவு பூட்டப்பட்ட ஊர்திகள், பலகணி/காற்றமாடங்கள் இல்லாத அறைகள், தானியங்கித் தாழ்ப்பாள் உள்ள உணவக அறைகள் என இவை போன்றவற்றில் மாட்டிக் கொள்ளும் பொழுது அல்லது மாட்டிக்கொள்ளுவோமோ என எண்ணும் பொழுது வரும் பேரச்சம்.
claustrum  என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் அடைப்பு.
00
  1. அண்மையர் வெருளி – sedsocophobia
தவறானவர் அடுத்து இருப்பதாகப் பேரச்சம் கொள்வது அண்மையர் வெருளி.
நகரும் படிக்கட்டு அல்லது பொது இடங்களில் அடுத்து அமர்ந்திருப்பவர் தவறானவர் அல்லது தீங்கானவர் எனப் பேரச்சம் கொள்வர். யாரைப்பார்த்தாலும் ஐயம் ஏற்படுவது போன்றதுதான் இதுவும்.
sedsoco என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் மீண்டும் தொடங்குதல் என்பதுதான் நேர் பொருள். அடுத்த வரிசைத் தொடக்கமாக அண்மையில் உள்ளவரைக் குறிக்கிறது.

00
(தொடரும்)

Friday, May 3, 2019

வெருளி அறிவியல் – 3 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

வெருளி அறிவியல்  – 3

‘தெனாலி’ படம் பார்த்தவர்களுக்குப் பின்வரும் பயங்கள்பற்றிய பேச்சு நினைவிருக்கும்:
“எனக்கு எல்லாம் பயமயம். … காலால் உதைத்தால் காலில் அடிபடும் என்ற பயம் எனக்கு; கவிதை பயம் எனக்கு; கதை பயம் எனக்கு; பீமனின் கதைக்கும், அனுமனின் கதைக்கும் பயம்; உதைக்கும் பயம்; சிதைக்கும் பயம்;
கதவு பயம் எனக்கு; கொஞ்சம் திறந்த கதவும் பயம், முழுதாக மூடின கதவும் பயம், பூட்டு போட்ட கதவென்றாலும் பயம் எனக்கு;
காடு பயம் எனக்கு; நாடு பயம் எனக்கு; கூடு பயம் எனக்கு;
குளம் பயம் எனக்கு; குளத்துக்குள் இருக்கும் நண்டு கண்டாலும் பயம் எனக்கு; பூச்செண்டு கண்டாலும் பயம் எனக்கு;
செண்டுக்குள் இருக்கும் வண்டு கண்டாலும் பயம் எனக்கு.
கடிக்கிற நாயும், பூனையும், பூனை தின்கிற எலியும் பயம் எனக்கு;
வெடித்துச் சிதறுகிற குண்டும் பயம் எனக்கு, குண்டுக்காகப் பதுங்கும் பதுங்குகுழியும் பயம் எனக்கு, பதுங்குகுழிக்குள் இருக்கிற பாம்பும் கடிக்குமோ என்ற பயம் எனக்கு.
மக்கள் கூட்டம் பயம் எனக்கு; தனிமை பயம் எனக்கு; தொங்கப் பயம், தாவப் பயம்;
இந்தக் காசு பயம்; மாசு பயம்; தூசு பயம்; அழுக்கு பயம்; குளிக்க பயம்; ஆடை பயம்; ஆடையில்லை என்றாலும் பயம்;
இந்த ஆங்கிலமும் பயம் எனக்கு;
செபிக்கப் பயம், சபிக்கப் பயம், எடுக்கப் பயம், கொடுக்கப் பயம், சகிக்கப் பயம், சுகிக்கப் பயம்.
எதையும் உயரத்தில் வைத்து அடுக்கப் பயம், யாரையும் கோவித்து அடிக்கப் பயம்.
அண்டை மனிதரை அணுகப் பயம், அணுகிய மனிதரை இழக்கப் பயம்.
உறவு பயம்; துறவு பயம்; இரவு பயம்; விடியலும் பயம்; புதியம் பார்க்க ஏனோ பயம்; மதியம் தூங்கி எழுந்தாலும் பயம்;
சோக பயம்; வேக பயம்; நோய்(உரோகப்) பயம்; நோக பயம், போக பயம், வருவதும் பயம் எனக்கு; வாழ பயம், சாகவும் பயம் ! இவ்வாறு பயங்கள்பற்றிக் கமல் அடுக்கிக் கொண்டே போவார். இடையில், பத்துப் ‘போபியோ’ பெயர்களைக் குறிப்பிட்டு ஆங்கிலத்தில் உள்ள எல்லா ‘போபியா’க்களும் தன்னிடம் இருப்பதாக மருத்துவர் பஞ்ச பூதம் சொன்னதாகக் கதை நாயகர் சொல்வார். இவற்றை அச்சநோய்பற்றி அறியாதவர்கள் அறிய உதவும் குறிப்புகளாகக் கொள்ளலாம்.
இத்தகைய பயங்களையும் மேலும் பலவற்றையும் குறிப்பிடும் வெருளி நோய் குறித்துத்தான் நாம் பார்க்கப் போகின்றோம்.
வெருளிகளைத் தனித்தனியாகத்தான் குறிப்பிடுகின்றனர். எனினும் எளிதில் அறிவதற்காகப் பின்வரும் வகைப்பாடுகளை வரையறுத்துள்ளேன்.

அண்டம் சார் வெருளிகள்
அறம் சார் வெருளிகள்
ஆயுதம் சார் வெருளி 
இடவகை வெருளிகள்
இயற்கை சார் வெருளிகள்
இலக்கியம் சார் வெருளிகள்
உடலியக்க சார் வெருளிகள்
உடல்ஊட்டம் சார் வெருளிகள்
உணர்வு சார் வெருளிகள்
உயிரினம் சார் வெருளிகள்
உறவு சார் வெருளிகள் palvakai
உறுப்பு சார் வெருளிகள்
ஊர்தி சார் வெருளிகள்
எண் சார் வெருளிகள்
ஒலி, ஒளி சார் வெருளிகள்
ஒழுக்கம் சார் வெருளிகள்
கட்டடம் சார் வெருளிகள்
கருத்துசார் வெருளிகள்
கலை சார் வெருளிகள்
களவு சார் வெருளிகள்
கற்பிதம் சார் வெருளிகள்
கற்பிதம் சார் வெருளிகள்
கனவு சார் வெருளிகள்
காற்று வெருளிகள் 
கூர்மை தொடர்பான வெருளிகள்
சமயம் சார் வெருளிகள்
சுவை சார் வெருளிகள்
செயல்பாட்டு சார் வெருளிகள்
சொற்கள் சார் வெருளிகள்
தண்ணீர் சார் வெருளிகள்
தனிமைத் தொடர்பான வெருளிகள்
தன்மை வெருளிகள்
தீண்டல் சார் வெருளிகள்
தீர்வு சார் வெருளிகள்
தூய்மை வெருளிகள்
நாடு சார் வெருளிகள்
நிற்றல்சார் வெருளிகள்
நீர் சார் வெருளிகள்
நோய் சார் வெருளிகள்
பயிர் வெருளிகள்
பருவ வெருளிகள்
பாலியல் சார்ந்த வெருளிகள்
பொருள் வெருளிகள்
பேச்சு சார் வெருளிகள்
மக்கள் சார் வெருளிகள்
மருத்துவம் சார் வெருளிகள்
மாழை சார் வெருளிகள்
வண்ணம் சார் வெருளிகள்
வளம் சார் வெருளிகள்
வேலை சார் வெருளிகள்
இவற்றை இன்னும் சிலவற்றுடன் சேர்த்து இறுதியில் விளக்குவேன்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்