Showing posts with label வெருளி நோய். Show all posts
Showing posts with label வெருளி நோய். Show all posts

Saturday, October 11, 2025

வெருளி நோய் 504-508 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி அறிவியல் 499-503 : தொடர்ச்சி)

எரி கற்களால் துன்பம் ஏற்படும் எனத் தேவையற்ற சூழலில் அஞ்சுவது எரிமீன் வெருளி ஆகும்.
கீழே வீழ்வதால் வீழ்மீன் என்றும் உல் என்றால் எரிதல்; எரிகின்ற சிறுபகுதி என்னும் பொருளில் உற்கை என்றும், உற்கம் என்றால் தீத்திரள்; அதனடிப்படையிலும் உற்கை என்றும் விண்ணிலுள்ள கல் என்ற பொருளில் விண்கல் என்றும் எரிகின்ற கல் என்ற பொருளில் எரிகல் என்றும் விண்ணில் இருந்து வரும் நெருப்பு என்ற பொருளில் விண்கொள்ளி என்றும் எரி மீனைக் குறிக்கின்றனர். நாம் எரிமீன் என்ற எளிய சொல்லையே பயன்படுத்தலாம்.
meteoro என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் விண் பொருள் என்பதே. பின்னர் விண்ணிலிருந்து பூமியைத் தாக்கும் விண்கற்களைக் குறித்தது. எனவே இப்போதைய பொருள் விண்வீழ் கொள்ளி எனப்படும் எரிமீன் ஆகும்
00

எரிவளி மானி(Gasgauge) குறித்த வரம்பற்ற பேரச்சம் எரிவளி மானி வெருளி.
ஊர்தி ஓட்டிக்கொண்டிருக்கும்போது எரிபொருள் தீர்ந்து விடுமோ என்ற பேரச்சம் எழுவதை இது குறிக்கிறது.
எரிவளி நிலைய வெருளியுடன்(aerostatiophobia) தொடர்புடையது.
00

எரிவாயு குழாய் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் எரிவாயு குழாய் வெருளி.
காற்று எங்கும் பரந்து விரிந்து வாய்த்திருத்தலால் வாய்வு எனப்பட்டது. இதுவே சமக்கிருதத்தில் எங்கும் பரந்து இருப்பதைக் குறிக்க வியாபி என்றானது. வாய்வு, பின்னர் வாயு என்றும் அழைக்கப்பெற்றது. தமிழ் வாயு-வையும் சமக்கிருத வழிச்சொல்லாகத் தவறாகக் கருதுகிறோம்.
00

00

Wednesday, October 8, 2025

வெருளி நோய்கள் 499-503 : இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 494-498: தொடர்ச்சி)

எபிரேயர்/(இ)யூதர்கள்(Jews) மீதும் இவர்கள் தொடர்பானவை மீதும் ஏற்படும் அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் எபிரேயர் வெருளி.
எபிரேய இனத்தைச் சேர்ந்த (இ)யூதம் என்னும் சமயத்தைப் பின்பற்றும் இவர்கள் மீது ஈவிரக்கமற்றவர்கள், அளவுகடந்து சூழ்ச்சி செய்து ஏமாற்றுபவர்கள், எவரையும் எளிதில் நம்பாதவர்கள் என்றெல்லாம் எண்ணுபவர்கள், இவர்கள் மீது வெறுப்பும் அச்சமும் கொள்கின்றனர்.
1096இல் நடைபெற்ற முதலாம் சிலுவைப் போர், 1290இல் பிரித்தானியாவிலிருந்து எபிரேயர் /(இ)யூதர்கள் வெளியேற்றப் பட்டமை, 1391 இல் எசுபானியாவில் எபிரேயர் / (இ)யூதப் படுகொலை நிகழ்ந்தது, 1492இல் எசுபானியாவிலிருந்து வெளியேற்றப்பட்டமை, 1497 இல் போர்த்துக்கல்லிலிருந்து வெளியேற்றப்பட்டமை முதலான (இ)யூதக் கொள்கை எதிர்ப்பு நிகழ்வுகள் பல நூற்றாண்டுகளாக எபிரேய /(இ)யூத வெருளி பல நாடுகளில் இருந்து வருவதை உணர்த்துகின்றன.
செமிட்டிய இனத்தின் ஒரு பிரிவினரே எபிரேயர்கள் / (இ)யூதர்கள் என்றாலும் எபிரேய / (இ)யூத வெருளி செமிட்டிய வெறுப்பாகவும் மாறி உள்ளது.
பன்னூறு ஆண்டுகளாக எபிரேயர்கள் / (இ)யூதர்கள் அடக்கி ஆளப்பட்டவர்கள். இட்லரால் பெரிதும் துன்புற்று இன அழிப்பிற்கும் ஆளாயினர். எனினும் 1949 இல் நடைபெற்ற இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உலகில் சிதறிக்கிடந்த எபிரேயர்கள்/யூதர்கள் ஒன்றிணைந்து தங்களுக்கென இசுரேல் என்னும்நாட்டை உருவாக்கிக் கொண்டனர். எனினும் இவர்களின் சில வன்முறைகளால் பிற நாட்டு மக்களில் ஒரு சாராருக்கு இவர்கள் மீது வெறுப்பு உள்ளது. எனினும் இவர்கள் மீது மட்டும்தான் வெறுப்பு உள்ளதாக எண்ண வேண்டா. ஆங்கிலேய வெருளி, செருமானிய வெருளி எனப் பல நாட்டவர் அல்லது இனத்தவர் மீதும் அவர்கள் தொடர்பானவை மீதும் வெறுப்பும் பேரச்சமும் உள்ளன.
00

ஒதுக்குப்புறமாகப் பிறரிடம் தொடர்பு கொள்ள விரும்பாமல் தனித்து இருப்பது குறித்துப் பெரிதும் அஞ்சுவது எமிய வெருளி
தமிழில் தனிமையைக் குறிக்கும் சொல் எமி.
எமியேம் துணிந்த ஏமம் சால் அருவினை என்னும் குறிஞ்சிப்பாட்டு(32) அடியில், தனித்து இருத்தல் குறிக்கப்பெறுகிறது.
வாவல்
பழுமரம் படரும் பையுண் மாலை
எமிய மாக வீங்குத் துறந்தோர்
தமிய ராக
 (குறுந்தொகை 172.1-4)
என்னும் பாடலடிகளில் கச்சிப்பேட்டு நன்னாகையார், பழுத்த மரங்களை நினைத்து வெளவால்கள் செல்லும் தனியராய் இருப்பவர்க்குத் துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில், எமியம் ஆக அஃதாவது தமியேமாகும்படி உள்ளதாகத் தலைமகள் கூறுவதாகக் கூறி உள்ளார். எமியர் என்பது தமியராய் இருப்பதைக் குறிப்பதால் இங்கே கையாளப்பட்டுள்ளது.
erem என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தனித்து இருத்தல்.
00

  1. எரி உலவி வெருளி – lomophobia

வியாழனின் எரி உலவி(Io)குறித்த அளவுகடந்த பேரச்சம் எரி உலவி வெருளி.
வியாழன் கோளைச் சுற்றும் 67 உலவிகளைக் கண்டறிந்துள்ளனர். இன்னும் சில ஆய்வில் உள்ளன. கண்டறிந்தவற்றுள் எரிமலைத்தன்மை உடைய ஐஓ/(உ)லோ (IO/LO) என்பதாகும். கிரேக்கக் கதையில் சீயசு (Zeus) காதலித்துக் கெடுத்து ஈனாப்பசுவாக(heifer) மாற்றப்பட்ட கன்னியின் பெயர் என்பதாகும். அதனையே இதற்குச் சூட்டியுள்ளனர். பழந்தமிழர் கோள்களைஅறிந்து அதன் தன்மைகளுக்கேற்பவே பெயர் சூட்டியுள்ளனர். எனவே, நாம் எரிமலைத் தன்மை மிகுதியம் உடைய இவ்வுலவியை எரி உலவி எனலாம்.
00

Tuesday, September 23, 2025

வெருளி நோய்கள் 436-440 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 431-435 : தொடர்ச்சி)

உருப்படம்(icon) குறித்த வரம்பற்ற பேரச்சம் உருப்படவெருளி.
இவற்றுள் குறிப்பாக மதச் சின்னங்கள் மீதான ஒரு வலுவான வெறுப்பு அல்லது பேரச்சம் இருக்கும். உருவ வழிபாட்டாளர்களை, கடவுள் உருவ எதிர்ப்பாளர்களை எதிர்க்கும் உருவ எதிர்ப்பு நிலைக்கு மாறுபட்டது. எனினும் உருவப்பட வெருளி, உருவ எதிர்ப்பு நிலைக்குக் கொண்டு செல்லலாம்.
மேலும் இஃது உருவ நேயர்களுக்கு எதிரானநிலைப்பாடாகும்.

  1. உருப்பொருள் வெருளி – Objectshowphobia

உருப்பொருள்கள் மீதான அளவுகடந்த பேரச்சம் உருப்பொருள் வெருளி.
அசைவூட்டப்படங்கள் அல்லது கேலிப்படங்களில் பயன்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கில் உருப்பொருள்கள் உள்ளன. இவற்றின்மீதான பேரச்சமே உருப்பொருள் வெருளி.
சில இடங்களில் பொருட்காட்சி வெருளியையும் ஆடற்காட்சி வெருளியையும் Objectshowphobia என்றே குறிக்கின்றனர். எனினும் முதன்மையாக இஃது உருப்பொருள் வெருளியையே குறிக்கிறது.
00

இடி மின்னல் கண்டு அளவுகடந்த பேரச்சம் கொள்வது உருமு வெருளி.

பொதுவாகச் சிறாரிடம் இவ்வெருளி தோன்றுகிறது. பலர் அகவை கூடும் பொழுது இவ்வெருளியில் குறைந்து காணப்படுகின்றனர். சிலர் எவ்வகை மாற்றமுமில்லாமல் இவ்வெருளியால் துன்புறுகின்றனர்.
வானிலை மாற்றத்தால் துயரம் வரும் வாய்ப்பு இல்லாத பொழுதும் அல்லது குறைந்த அளவு துன்பம் வரும் என்று அறிய நேர்ந்த பொழுதும், அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள வழி யிருந்தும், மிகப்பேரிடராகக் கற்பித்துக் கொண்டு அளவுகடந்த பேரச்சம் கொள்வர்.
விலங்கினம், பறவையினங்களுக்கும் இத்தகைய வெருளி வரும் என்கின்றனர்.

இடியைக் குறிக்கும் மற்றொரு சொல் உருமு.

இடிப்பதால் வரும் ஓசை:

பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக் கடிது இடி வெரீஇய வெண் குருகு” (அகநானூறு:141:18-9) என்னும் பாடலில் நக்கீரர், அவல் குற்றும் உலக்கையின் இடி ஓசைகேட்டு பேரிடிபோல் கருதி அஞ்சும் நிறைந்த சூலினை உடைய வெண்குருகு பற்றிக் கூறுகிறார்.
கடிது இடி உருமின் பம்பு பை அவிய
இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே
” (குறுந்தொகை:391:3-4)
என்னும் பாடலடியில் பொன்மணியார் இடியுடன் கலந்து இனிதாக மழை பெய்த பொழுது விரைந்து வரும் இடியோசையால் பாம்பு அஞ்சுவதைக் குறிப்பிடுகிறார்.
இடி ஓசை கேட்ட நாகம் போல” என்னும் உவமையும் இடிக்குப்பாம்பு அஞ்சுவதைக் குறிப்பிடுகிறது.
பாம்பின் உருமுவெருளி குறித்த பல குறிப்புகள் உள்ளன.
எனவே பிற உயிரினங்களுக்கும் உருமு(இடி) வெருளி வரும் என்பதை அன்றே தமிழர்கள் உணர்ந்திருந்தனர் எனலாம்.

bronte என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் இடி.
astrape என்பதற்கு மின்னல் எனப் பொருள்.
Cerauno என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் இடி, மின்னல்
.

00

  1. உருளப்ப வெருளி -Rigatoniphobia

உருளப்பம் (rigatoni/tube-shaped pasta) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உருளப்ப வெருளி.
rigatoni என்பது என்னும் இத்தாலியச் சொல்லிலிருந்து உருவானது. இதன் பொருள்,கோடிட்டது/வரி என்பன. எனினும் இங்கே உருள் வடிவமான இத்தாலிய உணவு வகை ஒன்றின் பெயரைக் குறிக்கிறது.
இத்தாலிய உணவு வகைகளை விரும்புபவர்கள்கூட, உருளப்பம் உடல் நலனுக்குக் கேடு தரும் எனச் சிலர் கூறுவதைக் கேள்வியுறுவதால் இதன் மீது அளவு கடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
00

  1. உருளி ஓட வெருளி – Veloxrotaphobia

உருளி ஓடம் (roller coaster) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உருளி ஓட வெருளி.
தண்ணீரிலும் தரைக்கு மேலும் சுழன்று உருண்டு செல்லும் பொழுதுபோக்கு வண்டியான இதனை உருளி ஓடம் எனலாம்.
விரைவாக உருண்டோடும் சக்கரம் உடைய விளையாட்டு வண்டியைக் குறிப்பிடுவதால், இதனை உருளி ஓடம் எனலாம். உருளி தரையில் இயங்கவும் ஓடம் நீரில் இயங்கவும் உதவுகின்றன.
விரைவாக இயங்குவதாலும் நிலத்திலும் நீரிலும் மாறி மாறி இயங்குவதாலும் மிகு அச்சம் கொள்கின்றனர்.
vēlōx என்னும் இலத்தீன் சொல்லிற்கு விரைவு/வேகம் எனப் பொருள்.
rota என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் சக்கரம்.
00

(தொடரும்)

Tuesday, August 19, 2025

வெருளி நோய்கள் 286 – 290 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 281 – 285 : தொடர்ச்சி)

286. இசைக் கருவி வெருளி – Gakkiphobia  

இசைக் கருவி குறித்த வரம்பற்ற பேரச்சம் இசைக் கருவி வெருளி.

சிலருக்கு எல்லா இசைக்கருவிகள் மீதும் பேரச்சம் இருக்கும். சிலருக்கு இசைக்கருவி ஒன்றின் மீதோ பலவற்றின் மீதோ வெறுப்பும் பேரச்சமும் ஏற்படும். இதனால் பேரச்சத்திற்குள்ளாகும் கருவியில் மீட்டப்படும் இசை கண்டும் பேரச்சம் ஏற்படும். இசைக்கருவியின் படத்தையோ படக்காட்சிகளையோ சிலநேரம் இசைக்கருவி வைத்திருக்கும் இசைக்கலைஞர் மீதோ பேரச்சம் ஏற்படும்.

இசை வெருளி( Melophobia/Musicophobia) உள்ளவர்களுக்கு இசைக்கருவி வெருளி வர வாய்ப்புண்டு.

00

287. இசைக்கள வெருளி-vilimusophobia

இசைக்களம் தொடர்பான வரம்பு கடந்த பேரச்சம் இசைக்கள வெருளி. 

இசை யொலியை இனிமையாகக் கருதாமல் அதிரும் இரைச்சல் ஒலியாகக் கருதுவதால் இத்தகைய வெருளி வருகிறது. உண்மையில் இப்பொழுதெல்லாம் இனிய ஓசையைவிட காட்டுக்கத்தல் ஒலிகளையே இனிய இசையாகக் கருதும் தலைமுறை வந்து விட்டது. இதை விரும்பாத முந்தைய தலைமுறைக்கு இப்போதைய இசையொலி வெருளியை உருவாக்குகிறது.

vilimus என்னும் இலத்தீன் சொல்லிற்கு வட்டம், செயற்களம் எனப் பொருள்.

Musophobia  எலி வெருளியைக் குறிக்கும். இங்கு muso என்பது இசையைக் குறிக்கிறது.

செல்லிசை வெருளி (paremusophobia) போன்றதுதான் இதுவும்.

00

288. இசைத் தட்டு வெருளி –  Vinylophobia

இசைத் தட்டு குறித்த வரம்பற்ற பேரச்சம் இசைத் தட்டு வெருளி.

வினைல்(vinyl) என்றால் நெகிழ்மம். பளபளப்பும் உறுதியும் அதே நேரம் நெகிழ்வும் மிக்க நெகிழி இசைத்தட்டை இங்கே குறிக்கிறது.

பாடல் முதலியற்றைக்கேட்கபதில் பேரச்சம் கொள்வோருக்கும் இசைத்தட்டைப் பார்த்தால் வெருளி வரும்.

இசைத்தட்டுகளை இசைப்போர் சிலர் உரத்து அதனை வைப்பர். அதனால் எரிச்சலுறுவோர் இசைத்தட்டு மீதே வெறுப்பும் பேரச்சமும் கொள்வர்.

00

289. இசைநிகழ்ச்சி வெருளி – Concertophobia

இசைநிகழ்ச்சி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இசைநிகழ்ச்சி வெருளி.

Concert என்றால் ஒத்திசை என்றுதான் பொருள். இதனை அடிப்படையாகக் கலைநிகழ்ச்சிககள் நடைபெறுவதால அனைத்துக் கலை நிகழ்ச்சிகளையும் இது குறிக்கிறது. எனினும் பெரும்பான்மை இசை நிகழ்ச்சியையே கருதுகின்றனர்.

தாய்மொழி இசை, பல்வேறு பிற மொழி இசை அல்லது பிற நாட்டு இசைகள் என இசைகள் எனப் பல வகைப்படும். சிலருக்குத் தாயக இசையில் ஈடுபாடில்லாமல் பிற நாட்டு இசைமீதே ஈடுபாடு இருக்கும். அவர்களுக்குத் தாயக இசை வெறுப்பாக இருக்கும்.

இதனால் அவர்கள்மீது வெறுப்புறும் தாயக இசை அன்பர்களுக்குப் பிற இசைகள்மீது வெறுப்பு வரும்.

ஆரவார இசைகளைக் கேட்பதாலும் சிலருக்கு எரிச்சலும் வெறுப்பும் வரும்.

 இசை வெருளி( Melophobia/Musicophobia) உள்ளவர்களுக்கும் இசைக் கருவி வெருளி(Gakkiphobia) உள்ளவர்களுக்கும் இசைநிகழ்ச்சி வெருளி வர வாய்ப்புண்டு.

00

290. இஞ்சியப்ப வெருளி – Gingerbreadphobia 

இஞ்சியப்பம்பற்றிய அளவுகடந்த பேரச்சம் இஞ்சியப்ப வெருளி.

Bread என்பது வெதுப்பி எனப்படுகிறது. என்றாலும் Gingerbread என்னும் பொழுது தன்மை அடிப்படையில் இஞ்சியப்பம் என்கின்றனர். எனவே, அந்தச் சொல்லே இங்கே கையாளப்பட்டுள்ளது.

இஞ்சிப்பத்தில் உள்ள அதிக சருக்கரையும் வெம்மி(கலோரி)யும் அதை மிகுதியாகச் சாப்பிடுவது உடல்நலச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இது தீங்கு விளைவிக்கும். மேலும், சிலருக்கு இஞ்சி அல்லது பிற உசிலை/மசாலாப் பொருட்களால் ஒவ்வாமை ஏற்படலாம். இத்தகை தீங்கு பக்கத்தை எண்ணிப் பார்த்து இஞ்சியப்பம் மீது வெருளி கொள்வர்.

00

(தொடரும்)

Saturday, July 26, 2025

வெருளி நோய்கள் 166 -170 : இலக்குவனார் திருவள்ளுவன்

 


அணுக்குண்டுதொடர்பான காரணமற்ற அளவுகடந்த பேரச்சமே அணுக்குண்டு வெருளி.

போர்க்கொலை நாடுகளில் இது தவிர்க்க முடியாததாக அமைந்து விடுகிறது. சான்றாகத் தமிழ் ஈழத்தில் மக்களைக் காக்கவேண்டிய அரசே எமனாகமாறி  நொடி தோறும் வேதியல் குண்டுகளையும் கொத்துக்குண்டுகளையும் பிற குண்டுகளையும் போட்டு அழித்து வந்ததால் மக்களில் பெரும்பாலோர் குறிப்பாகப் பள்ளிச்சிறுவர்களும்  பிற சிறுவர்களும் பெண்களும் அணுக்குண்டு வெருளியால் பாதிக்கப்பட்டு மனநோயராக இருக்கின்றனர்.

அணுஆயுத வெருளி (Nucleomituphobia) யைச் சார்ந்ததே இது.

00

அணைக்கட்டு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அணைக்கட்டு வெருளி.

அணைக்கட்டு அமைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் பொழுது அப்பகுதியில் உள்ள தங்கள் வீடு, நிலம், பிற உடைமைகள் அரசால் எடுக்கப்படுவது குறித்த பேரச்சம வந்து விடுகிறது. அரசால உரிய இழப்பீடு தருவதாகக் கூறினாலும் உரிய காலத்தில் உரிய இழப்பீடு தரப்படாததால் வாழ்க்கை நிலைகுறித்த வரம்பற்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். அணைக்கட்டு வந்த பின்னரும் அதன் அருகில் உள்ளவர்கள் அணைக்கட்டு உடைந்து விட்டாலோ வெள்ளம கரை புரண்டு போனாலோ உடைமை, உயிர் இழப்பிற்கு ஆளாக நேரிடும் என்று வரம்பு கடந்த பேரச்சத்திற்கு ஆளாகி விடுகின்றனர்.

00

அணையாடை(Diaper) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அணையாடை வெருளி.

அணையாடை அணிவது, மாற்றுவது போன்றவற்றால் ஏற்படும் பதற்றம், எரிச்சல் மிகுந்து அளவு கடந்த அச்சத்திற்கு ஆளாகின்றனர்.

00

அண்ட வெளியில் உள்ளவை குறித்து ஏற்படும் தேவையற்ற அச்சம் அண்ட வெருளி. 

விண்பொருள் வெருளி(Astrophobia), எரிமீன் வெருளி-Meteorophobia, விண்மீன் வெருளி(Siderophobia), புறவெளி வெருளி(Spacephobia) ஆகியனவற்றை ஒத்ததே இதுவும்.

‘kosmo’ என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் அண்டம்/முழு உலகம்.

00

அண்டை வீட்டார் குறித்த காரணமற்ற பேரச்சம் அண்டையர் வெருளி.

நம்மைக் கண்டு அண்டை வீட்டார் பொறாமை, எரிச்சல் கொள்வார்கள்  என்றும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்வார்கள் என்றும் அவர்கள் பழக்க வழக்கங்களால் நம் வீட்டு  உறுப்பினர்களுக்கும் தவறான பழக்க வழக்கங்கள் வரும் என்றும் காரணமற்ற பேரச்சம் கொள்வர்.

வீட்டிற்கு அடுத்துள்ள வீடுகளில் உள்ளவர்களை அண்டையர் குறிக்கிறது. இருக்கை அல்லது நிற்குமிடத்திற்கு அடுத்து உள்ளவர்களை அண்மையர் குறிக்கிறது. 

அண்மையர் வெருளி(sedsocophobia) காண்க.

00

Friday, July 25, 2025

வெருளி நோய்கள் 160 -165 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 156 -160 : தொடர்ச்சி)

161. அட்டோபர் வெருளி – shiyuephobia 

நடைமுறை ஆண்டில் பத்தாவது மாதமான அட்டோபர் மாதம் குறித்த  வரம்பில்லாப் பேரச்சம் அட்டோபர் வெருளி.

shi என்னும் சீனச்சொல்லிற்குப் பத்து எனப் பொருள்.yue என்னும் சீனச்சொல்லிற்கு மாதம் எனப் பொருள். எனவே, shiyue பத்தாம் மாதமாகிய  அட்டோபர் திங்களைக் குறிக்கிறது.

அட்டோபர் மாதம் என்பது பழைய உரோமன் நாட்காட்டியில் முதலில் எட்டாவது மாதமாகத்தான் இருந்தது.  ôctō என்னும் சொல்லிற்குக் கிரேக்கத்திலும் இலத்தீனிலும் 8 என்றுதான் பொருள். தமிழில் அட்டம் என்பது 8ஐக் குறிக்கும். இதனால்தான் அட்டமி, அட்ட கணம், அட்டகிரி, அட்டகருமம் எனப் பல சொற்களும் 8 என்னும் பொருளில் உள்ளன. பின்னர் அட்டம் என்பது திரிந்து அஃசுடம் என்றானதால் இதைத் தமிழ்ச்சொல்லல்ல எனத் தவறாக எண்ணுகிறோம். 

வல்லின க் மெய்யெழுத்து அடுத்த ட கரம் வராது. எனவே, ஒலிப்பியலுக்கேற்ப  அக்டோபர் (அல்லது ஒலிப்பினிமையின்றி அக்குடோபர்) எனச் சொல்லாமல் அட்டோபர் எனப்படுகிறது. எனவே, எட்டாவது மாதத்தை அட்டோபர் என்று சொல்வது பொருத்தமாகும்

00

162. அட்டைப் பெட்டி வெருளி –  Cogombophobia / Pygmachophobia/ B💡mpnophobia 

அட்டைப் பெட்டி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அட்டைப் பெட்டி வெருளி.

தாள் வெருளி போன்றதுதான் அட்டைப்பெட்டி வெருளியும்.

பாதுகாப்பின்மை, ஒவ்வாமை, போன்றவை பற்றிய எண்ணங்களால் ஏற்படும் அளவு கடந்த பேரச்சம் கொள்கின்றனர்.

வெற்று அட்டைப் பெட்டி வெருளி(B💡mpnophobia) எனப் புதிய வெருளியாகக் குறிக்கப் பெற்றுள்ளது. அட்டைப் பெட்டி ஒன்றும் இல்லாமல் காலியாக இருக்கும் பொழுது நாம் அட்டைப்பெட்டி என்கிறோம். புத்தகம் இருந்தால் புத்தகப்பெட்டி என்பதுபோல் எதுவும் இருப்பின் அப்பொருளின் பெயரில் அழைக்கிறோம். எனவே, அட்டைப் பெட்டி வெருளி உள்ளதால் தனியாகக் குறிக்க வேண்டா. இதனுடனேயே இணைத்துள்ளேன்.

00

163. அணி ஒளி விளக்கு வெருளி – Hrongyophobia 

அணி ஒளி விளக்கு (எரிமலை விளக்கு) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அணி ஒளி விளக்கு வெருளி.

எரிமலைக் குழம்பின் பெயரால் (lava lamp) என அழைக்கப்பெற்றாலும் தமிழில் எரிமலை விளக்கு என்றால் தவறாகப் பொருள் கொள்ள நேரிடும்.1963இல் பிரித்தானியத் தொழில் முனைவோர் எடுவர்டு கிரேவன் வாக்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது அணி ஒளி விளக்காகும்.

கண்ணாடிக்குப்பி ஒன்றில் நீர்மத்தில் வண்ண மெழுகுக்கலவை உள்ளது. வெப்பமூட்டப்படும் பொழுது மெழுகு சுற்றியுள்ள நீர்மத்தைக் குளிரச் செய்கிறது. அது ஒளிரும் பொழுது பார்வைக்கு மென்மையான இடையீடற்ற குழம்பு என்னும் பொருளில் உள்ள பாஃகோயிஃகோயி எரிமலைக் குழம்பு(pāhoehoe lava) போல் உள்ளது. எனவே, இதற்கு இப்பெயர்.

00

164. அணில் வெருளி – Sciurophobia

அணிலைக் கண்டு வரும் தேவையற்ற பேரச்சம் அணில் வெருளி.

அணில் அச்சம் கொள்பவர் என்றால் அணில் படம், அணில்பற்றிய கதை, கட்டுரை முதலியன, அணில் காட்சிப்படம் என எதைக்கண்டாலும் அஞ்சுவோர் உள்ளனர். அணிலைக் கண்டால்கூடவா பயம் வரும் என்று பார்த்தால் அமெரிக்காவில் மட்டுமே 2,50,000 பேர் அணில் வெருளி உள்ளவர்கள் இருக்கின்றனராம்.

00

165. அணுஆயுத வெருளி-Nucleomituphobia

அணுஆயுதங்கள் மீதான அளவுகடந்த பேரச்சம் அணுஆயுத வெருளி.

அணுஆயுதக் கருவிகள் இல்லாவிட்டாலும் இருந்து பயன்படுத்தப்படாமல் இருந்தாலும், அவை பயன்படுத்தப்பட்டுப் பேரழிவுகள் ஏற்படும் என்று கருதுவதால் உருவாகும் அச்சம் அணுஆயுத வெருளி.

அமெரிக்கத் தலைவர்களுக்கு ஈராக்கு மீது ஏற்பட்டஅச்சம் இத்தகையதுதான். என்றாலும் அணுஆயுதக் கருவிகள்  இல்லை என்றறிந்த பொழுதும் இருப்பதாகப் பிறரை அச்சுறுத்தி அந்நாட்டை அழிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டது. 

போர் முழக்கங்களும் அமைதியின்மையும் வல்லரசு ஆசையும் நிறைந்த உலகில் எல்லா நாட்டினருக்கும் அணுஆயுத வெருளி இருப்பதில் வியப்பில்லை.

Nucleomitu என்றால் அணுஆயுதம் எனப் பொருள்.

00

(தொடரும்)