(வெருளி நோய்கள் 156 -160 : தொடர்ச்சி)

161. அட்டோபர் வெருளி – shiyuephobia 

நடைமுறை ஆண்டில் பத்தாவது மாதமான அட்டோபர் மாதம் குறித்த  வரம்பில்லாப் பேரச்சம் அட்டோபர் வெருளி.

shi என்னும் சீனச்சொல்லிற்குப் பத்து எனப் பொருள்.yue என்னும் சீனச்சொல்லிற்கு மாதம் எனப் பொருள். எனவே, shiyue பத்தாம் மாதமாகிய  அட்டோபர் திங்களைக் குறிக்கிறது.

அட்டோபர் மாதம் என்பது பழைய உரோமன் நாட்காட்டியில் முதலில் எட்டாவது மாதமாகத்தான் இருந்தது.  ôctō என்னும் சொல்லிற்குக் கிரேக்கத்திலும் இலத்தீனிலும் 8 என்றுதான் பொருள். தமிழில் அட்டம் என்பது 8ஐக் குறிக்கும். இதனால்தான் அட்டமி, அட்ட கணம், அட்டகிரி, அட்டகருமம் எனப் பல சொற்களும் 8 என்னும் பொருளில் உள்ளன. பின்னர் அட்டம் என்பது திரிந்து அஃசுடம் என்றானதால் இதைத் தமிழ்ச்சொல்லல்ல எனத் தவறாக எண்ணுகிறோம். 

வல்லின க் மெய்யெழுத்து அடுத்த ட கரம் வராது. எனவே, ஒலிப்பியலுக்கேற்ப  அக்டோபர் (அல்லது ஒலிப்பினிமையின்றி அக்குடோபர்) எனச் சொல்லாமல் அட்டோபர் எனப்படுகிறது. எனவே, எட்டாவது மாதத்தை அட்டோபர் என்று சொல்வது பொருத்தமாகும்

00

162. அட்டைப் பெட்டி வெருளி –  Cogombophobia / Pygmachophobia/ B💡mpnophobia 

அட்டைப் பெட்டி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அட்டைப் பெட்டி வெருளி.

தாள் வெருளி போன்றதுதான் அட்டைப்பெட்டி வெருளியும்.

பாதுகாப்பின்மை, ஒவ்வாமை, போன்றவை பற்றிய எண்ணங்களால் ஏற்படும் அளவு கடந்த பேரச்சம் கொள்கின்றனர்.

வெற்று அட்டைப் பெட்டி வெருளி(B💡mpnophobia) எனப் புதிய வெருளியாகக் குறிக்கப் பெற்றுள்ளது. அட்டைப் பெட்டி ஒன்றும் இல்லாமல் காலியாக இருக்கும் பொழுது நாம் அட்டைப்பெட்டி என்கிறோம். புத்தகம் இருந்தால் புத்தகப்பெட்டி என்பதுபோல் எதுவும் இருப்பின் அப்பொருளின் பெயரில் அழைக்கிறோம். எனவே, அட்டைப் பெட்டி வெருளி உள்ளதால் தனியாகக் குறிக்க வேண்டா. இதனுடனேயே இணைத்துள்ளேன்.

00

163. அணி ஒளி விளக்கு வெருளி – Hrongyophobia 

அணி ஒளி விளக்கு (எரிமலை விளக்கு) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அணி ஒளி விளக்கு வெருளி.

எரிமலைக் குழம்பின் பெயரால் (lava lamp) என அழைக்கப்பெற்றாலும் தமிழில் எரிமலை விளக்கு என்றால் தவறாகப் பொருள் கொள்ள நேரிடும்.1963இல் பிரித்தானியத் தொழில் முனைவோர் எடுவர்டு கிரேவன் வாக்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது அணி ஒளி விளக்காகும்.

கண்ணாடிக்குப்பி ஒன்றில் நீர்மத்தில் வண்ண மெழுகுக்கலவை உள்ளது. வெப்பமூட்டப்படும் பொழுது மெழுகு சுற்றியுள்ள நீர்மத்தைக் குளிரச் செய்கிறது. அது ஒளிரும் பொழுது பார்வைக்கு மென்மையான இடையீடற்ற குழம்பு என்னும் பொருளில் உள்ள பாஃகோயிஃகோயி எரிமலைக் குழம்பு(pāhoehoe lava) போல் உள்ளது. எனவே, இதற்கு இப்பெயர்.

00

164. அணில் வெருளி – Sciurophobia

அணிலைக் கண்டு வரும் தேவையற்ற பேரச்சம் அணில் வெருளி.

அணில் அச்சம் கொள்பவர் என்றால் அணில் படம், அணில்பற்றிய கதை, கட்டுரை முதலியன, அணில் காட்சிப்படம் என எதைக்கண்டாலும் அஞ்சுவோர் உள்ளனர். அணிலைக் கண்டால்கூடவா பயம் வரும் என்று பார்த்தால் அமெரிக்காவில் மட்டுமே 2,50,000 பேர் அணில் வெருளி உள்ளவர்கள் இருக்கின்றனராம்.

00

165. அணுஆயுத வெருளி-Nucleomituphobia

அணுஆயுதங்கள் மீதான அளவுகடந்த பேரச்சம் அணுஆயுத வெருளி.

அணுஆயுதக் கருவிகள் இல்லாவிட்டாலும் இருந்து பயன்படுத்தப்படாமல் இருந்தாலும், அவை பயன்படுத்தப்பட்டுப் பேரழிவுகள் ஏற்படும் என்று கருதுவதால் உருவாகும் அச்சம் அணுஆயுத வெருளி.

அமெரிக்கத் தலைவர்களுக்கு ஈராக்கு மீது ஏற்பட்டஅச்சம் இத்தகையதுதான். என்றாலும் அணுஆயுதக் கருவிகள்  இல்லை என்றறிந்த பொழுதும் இருப்பதாகப் பிறரை அச்சுறுத்தி அந்நாட்டை அழிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டது. 

போர் முழக்கங்களும் அமைதியின்மையும் வல்லரசு ஆசையும் நிறைந்த உலகில் எல்லா நாட்டினருக்கும் அணுஆயுத வெருளி இருப்பதில் வியப்பில்லை.

Nucleomitu என்றால் அணுஆயுதம் எனப் பொருள்.

00

(தொடரும்)