(வெருளி நோய்கள் 281 – 285 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 286 – 290
286. இசைக் கருவி வெருளி – Gakkiphobia
இசைக் கருவி குறித்த வரம்பற்ற பேரச்சம் இசைக் கருவி வெருளி.
சிலருக்கு எல்லா இசைக்கருவிகள் மீதும் பேரச்சம் இருக்கும். சிலருக்கு இசைக்கருவி ஒன்றின் மீதோ பலவற்றின் மீதோ வெறுப்பும் பேரச்சமும் ஏற்படும். இதனால் பேரச்சத்திற்குள்ளாகும் கருவியில் மீட்டப்படும் இசை கண்டும் பேரச்சம் ஏற்படும். இசைக்கருவியின் படத்தையோ படக்காட்சிகளையோ சிலநேரம் இசைக்கருவி வைத்திருக்கும் இசைக்கலைஞர் மீதோ பேரச்சம் ஏற்படும்.
இசை வெருளி( Melophobia/Musicophobia) உள்ளவர்களுக்கு இசைக்கருவி வெருளி வர வாய்ப்புண்டு.
00
287. இசைக்கள வெருளி-vilimusophobia
இசைக்களம் தொடர்பான வரம்பு கடந்த பேரச்சம் இசைக்கள வெருளி.
இசை யொலியை இனிமையாகக் கருதாமல் அதிரும் இரைச்சல் ஒலியாகக் கருதுவதால் இத்தகைய வெருளி வருகிறது. உண்மையில் இப்பொழுதெல்லாம் இனிய ஓசையைவிட காட்டுக்கத்தல் ஒலிகளையே இனிய இசையாகக் கருதும் தலைமுறை வந்து விட்டது. இதை விரும்பாத முந்தைய தலைமுறைக்கு இப்போதைய இசையொலி வெருளியை உருவாக்குகிறது.
vilimus என்னும் இலத்தீன் சொல்லிற்கு வட்டம், செயற்களம் எனப் பொருள்.
Musophobia எலி வெருளியைக் குறிக்கும். இங்கு muso என்பது இசையைக் குறிக்கிறது.
செல்லிசை வெருளி (paremusophobia) போன்றதுதான் இதுவும்.
00
288. இசைத் தட்டு வெருளி – Vinylophobia
இசைத் தட்டு குறித்த வரம்பற்ற பேரச்சம் இசைத் தட்டு வெருளி.
வினைல்(vinyl) என்றால் நெகிழ்மம். பளபளப்பும் உறுதியும் அதே நேரம் நெகிழ்வும் மிக்க நெகிழி இசைத்தட்டை இங்கே குறிக்கிறது.
பாடல் முதலியற்றைக்கேட்கபதில் பேரச்சம் கொள்வோருக்கும் இசைத்தட்டைப் பார்த்தால் வெருளி வரும்.
இசைத்தட்டுகளை இசைப்போர் சிலர் உரத்து அதனை வைப்பர். அதனால் எரிச்சலுறுவோர் இசைத்தட்டு மீதே வெறுப்பும் பேரச்சமும் கொள்வர்.
00
289. இசைநிகழ்ச்சி வெருளி – Concertophobia
இசைநிகழ்ச்சி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இசைநிகழ்ச்சி வெருளி.
Concert என்றால் ஒத்திசை என்றுதான் பொருள். இதனை அடிப்படையாகக் கலைநிகழ்ச்சிககள் நடைபெறுவதால அனைத்துக் கலை நிகழ்ச்சிகளையும் இது குறிக்கிறது. எனினும் பெரும்பான்மை இசை நிகழ்ச்சியையே கருதுகின்றனர்.
தாய்மொழி இசை, பல்வேறு பிற மொழி இசை அல்லது பிற நாட்டு இசைகள் என இசைகள் எனப் பல வகைப்படும். சிலருக்குத் தாயக இசையில் ஈடுபாடில்லாமல் பிற நாட்டு இசைமீதே ஈடுபாடு இருக்கும். அவர்களுக்குத் தாயக இசை வெறுப்பாக இருக்கும்.
இதனால் அவர்கள்மீது வெறுப்புறும் தாயக இசை அன்பர்களுக்குப் பிற இசைகள்மீது வெறுப்பு வரும்.
ஆரவார இசைகளைக் கேட்பதாலும் சிலருக்கு எரிச்சலும் வெறுப்பும் வரும்.
இசை வெருளி( Melophobia/Musicophobia) உள்ளவர்களுக்கும் இசைக் கருவி வெருளி(Gakkiphobia) உள்ளவர்களுக்கும் இசைநிகழ்ச்சி வெருளி வர வாய்ப்புண்டு.
00
290. இஞ்சியப்ப வெருளி – Gingerbreadphobia
இஞ்சியப்பம்பற்றிய அளவுகடந்த பேரச்சம் இஞ்சியப்ப வெருளி.
Bread என்பது வெதுப்பி எனப்படுகிறது. என்றாலும் Gingerbread என்னும் பொழுது தன்மை அடிப்படையில் இஞ்சியப்பம் என்கின்றனர். எனவே, அந்தச் சொல்லே இங்கே கையாளப்பட்டுள்ளது.
இஞ்சிப்பத்தில் உள்ள அதிக சருக்கரையும் வெம்மி(கலோரி)யும் அதை மிகுதியாகச் சாப்பிடுவது உடல்நலச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இது தீங்கு விளைவிக்கும். மேலும், சிலருக்கு இஞ்சி அல்லது பிற உசிலை/மசாலாப் பொருட்களால் ஒவ்வாமை ஏற்படலாம். இத்தகை தீங்கு பக்கத்தை எண்ணிப் பார்த்து இஞ்சியப்பம் மீது வெருளி கொள்வர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
No comments:
Post a Comment