வெருளி நோய்கள் 166 -170
166. அணுக்குண்டு வெருளி – Atomosophobia
அணுக்குண்டுதொடர்பான காரணமற்ற அளவுகடந்த பேரச்சமே அணுக்குண்டு வெருளி.
போர்க்கொலை நாடுகளில் இது தவிர்க்க முடியாததாக அமைந்து விடுகிறது. சான்றாகத் தமிழ் ஈழத்தில் மக்களைக் காக்கவேண்டிய அரசே எமனாகமாறி நொடி தோறும் வேதியல் குண்டுகளையும் கொத்துக்குண்டுகளையும் பிற குண்டுகளையும் போட்டு அழித்து வந்ததால் மக்களில் பெரும்பாலோர் குறிப்பாகப் பள்ளிச்சிறுவர்களும் பிற சிறுவர்களும் பெண்களும் அணுக்குண்டு வெருளியால் பாதிக்கப்பட்டு மனநோயராக இருக்கின்றனர்.
அணுஆயுத வெருளி (Nucleomituphobia) யைச் சார்ந்ததே இது.
00
167. அணைக்கட்டு வெருளி – Fragmaphobia
அணைக்கட்டு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அணைக்கட்டு வெருளி.
அணைக்கட்டு அமைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் பொழுது அப்பகுதியில் உள்ள தங்கள் வீடு, நிலம், பிற உடைமைகள் அரசால் எடுக்கப்படுவது குறித்த பேரச்சம வந்து விடுகிறது. அரசால உரிய இழப்பீடு தருவதாகக் கூறினாலும் உரிய காலத்தில் உரிய இழப்பீடு தரப்படாததால் வாழ்க்கை நிலைகுறித்த வரம்பற்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். அணைக்கட்டு வந்த பின்னரும் அதன் அருகில் உள்ளவர்கள் அணைக்கட்டு உடைந்து விட்டாலோ வெள்ளம கரை புரண்டு போனாலோ உடைமை, உயிர் இழப்பிற்கு ஆளாக நேரிடும் என்று வரம்பு கடந்த பேரச்சத்திற்கு ஆளாகி விடுகின்றனர்.
00
168. அணையாடை வெருளி – Diaperphobia
அணையாடை(Diaper) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அணையாடை வெருளி.
அணையாடை அணிவது, மாற்றுவது போன்றவற்றால் ஏற்படும் பதற்றம், எரிச்சல் மிகுந்து அளவு கடந்த அச்சத்திற்கு ஆளாகின்றனர்.
00
169. அண்ட வெருளி-Kosmikophobia / Universophobia
அண்ட வெளியில் உள்ளவை குறித்து ஏற்படும் தேவையற்ற அச்சம் அண்ட வெருளி.
விண்பொருள் வெருளி(Astrophobia), எரிமீன் வெருளி-Meteorophobia, விண்மீன் வெருளி(Siderophobia), புறவெளி வெருளி(Spacephobia) ஆகியனவற்றை ஒத்ததே இதுவும்.
‘kosmo’ என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் அண்டம்/முழு உலகம்.
00
170. அண்டையர் வெருளி – Geitophobia
அண்டை வீட்டார் குறித்த காரணமற்ற பேரச்சம் அண்டையர் வெருளி.
நம்மைக் கண்டு அண்டை வீட்டார் பொறாமை, எரிச்சல் கொள்வார்கள் என்றும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்வார்கள் என்றும் அவர்கள் பழக்க வழக்கங்களால் நம் வீட்டு உறுப்பினர்களுக்கும் தவறான பழக்க வழக்கங்கள் வரும் என்றும் காரணமற்ற பேரச்சம் கொள்வர்.
வீட்டிற்கு அடுத்துள்ள வீடுகளில் உள்ளவர்களை அண்டையர் குறிக்கிறது. இருக்கை அல்லது நிற்குமிடத்திற்கு அடுத்து உள்ளவர்களை அண்மையர் குறிக்கிறது.
அண்மையர் வெருளி(sedsocophobia) காண்க.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் தொகுதி 1/5
No comments:
Post a Comment