Saturday, June 1, 2019

வெருளி அறிவியல் – 9 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல 


(வெருளி அறிவியல் 8 இன் தொடர்ச்சி)

வெருளி அறிவியல்  –  9

27. அறிவுவெருளி-Epistemophobia/Gnosiophobia
அறிவு தொடர்பில் எழும் தேவையற்ற மிகையான பேரச்சமே அறிவுவெருளி.
சிலருக்குப் புதியதாக எதைக் கற்க / அறிய வேண்டுமென்றாலும் பேரச்சம் வரும். சிலருக்குக் குறிப்பிட்ட ஒன்றைக் கற்க அல்லது அறிய மட்டும் பேரச்சம் வரும்.
பள்ளிக்கூடம் செல்ல பிள்ளைகள் அடம்பிடித்து மறுப்பதும் அறிவு வெருளிதான். பலர் படிப்படியாக இதிலிருந்து விடுபட்டு விடுகின்றனர். சிலர் இதிலிருந்து விடுபடாமல் முழுமையான அறிவு வெருளிக்கு ஆட்பட்டுவிடுகின்றனர்.
gnos  / epistemo ஆகிய கிரேக்கச்சொற்களின் பொருள் அறிவு.
00
28. அனைத்து வெருளி-Panophobia/Pantophobia/ Panphobia/ Omniphobia
பார்க்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் அனைத்து வெருளி.
அனைத்து என்பது இத்தன்மையது என்னும் பொருளில்தான் சங்கப்பாடல்களில் வருகிறது.
எல்லாவற்றையும் குறிக்க அனைத்தும் என்றுதான் பயன்படுத்தி உள்ளனர்.
அனைத்தும்,
புணர்ந்து உடன் ஆடும் இசையேஅனைத்தும், (மதுரைக் காஞ்சி : 266)
கடிப்பகை அனைத்தும்கேள்வி போகா (மலைபடுகடாம் : 22)
அனைத்தும் நீஅனைத்தின் உட்பொருளும் நீஆதலின், (பரிபாடல் : 3:68)
அனைத்தும்அடூஉ நின்று நலியஉஞற்றி, (அகநானூறு : 378:16)
இனைத்து என்போரும் உளரேஅனைத்தும்      
அறி அறிவு ஆகாச் செறிவினை ஆகி, (புறநானூறு : 30:7-8)
எனினும் தற்போது அனைத்து என்பதே அனைத்தும் என்னும் பொருள் மாற்றத்தைப் பெற்றுள்ளதால் அனைத்து என்பதையே இங்கே பயன்படுத்தலாம். அதற்கிணங்க
அனைத்து வெருளி
pan என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் அனைத்து.
Omni என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் எல்லாம்.
00
29. ஆங்கிலேய வெருளி-Anglophobia
ஆங்கிலேயர் தொடர்பான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் ஆங்கிலேய வெருளி.
இங்கிலாந்து, இங்கிலாந்து மக்கள், அவர்கள் மொழியான ஆங்கிலம் மீதான வெறுப்பு, அச்சம் ஆகியனவற்றை இது குறிப்பிடும். முதலில் அயர்லாந்து, வேல்சு, காட்லாந்து, பிரான்சு, சீனா, ஆத்திரேலியா,ஈரான் மக்களிடையே ஆங்கில வெருளி  ஏற்பட்டது.  பின்னர்ப் பிற நாட்டு மக்களிடமும் பரவியுள்ளது. 
Anglo  என்பது  இங்கிலீசு என்பதைக் குறிக்கும் இலத்தீன் முன் னொட்டு.
இங்கிலாந்தைக் குறிக்கும் இலத்தீன் பெயரான ஆங்கிலியா என்பதிலிருந்து இது வந்தது.
தமிழில் நாம் மூலச் சொல் அடிப்படையில் சரியாக ஆங்கிலம், ஆங்கில, ஆங்கிலேயர் என்று குறிக்கின்றோம்.
00
30. ஆடி வெருளி-Eisoptrophobia
கண்ணாடியைப் பார்த்தால் அல்லது கண்ணாடியில் காணும் தன் உருவத்தைப் பார்த்தால் ஒருவருக்கு ஏற்படும் தேவையற்ற அச்சம்  ஆடி வெருளி (ஆடிப்பார்வைவெருளி).
தொடக்கத்தில் கண்ணாடி போல் எதிரொளிக்கும் நீர்நிலைகளில் தன் உருவத்தைப் பார்த்து ஏற்படும் அச்சமே  ஆடி வெருளியாக அல்லது ஆடிப்பார்வை வெருளியாக உருவானது.
பொன்னின் ஆடியிற் பொருந்துபு நிற்போர்
(மணிமேகலை 19.91) எனச் சாத்தனார் பொன் வளையத்தினுள் பதிக்கப்பட்ட கண்ணாடியில் தம் உருவம் காண்பதைக் குறிப்பிடுகிறார்.
அப்பொழுதெல்லாம் ஆடி வெருளி இல்லை போலும்.
கண்ணாடி உடைந்தால் தீயூழ் நேரும் என்னும் மூடநம்பிக்கை உள்ளவர்கள், கண்ணாடி உடைந்துவிடும் என்ற அச்சத்தால்  அதைப் பயன்படுத்தாமல் கண்ணாடி வெருளிக்கு ஆளாவர்.
‘Eisoptro’ என்றால் கிரேக்க மொழியில் கண்ணாடி என்று பொருள். eis(உள்ளே), optikos(பார்வை) என்பதன் இணைப்பிலிருந்து இச்சொல் உருவானது.
ஆடி வெருளி (Eisoptrophobia)  என்பதைக் கரையான் வெருளியான ஐசோப்பிடிரோபோபியா Isopterophobia உடன் தொடர்பு படுத்திக் குழப்பிக் கொள்ளக் கூடாது.
(தொடரும்)
அறிவுவெருளி
அறிவுவெருளி
அனைத்து வெருளி
அனைத்து வெருளி
ஆங்கிலேய வெருளி
ஆங்கிலேய வெருளி
ஆடி வெருளி
ஆடி வெருளி
(காண்க – வெருளி அறிவியல் 10)

Sunday, May 26, 2019

வெருளி அறிவியல் – 8 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


(வெருளி அறிவியல் 7 இன் தொடர்ச்சி)

வெருளி அறிவியல்  –  8

 23. அழிவு வெருளி-Atephobia
அழிவு பற்றிய இயல்பிற்கு மீறிய பேரச்சம்  அழிவு வெருளி
அழி(74), அழிக்குநர்(1), அழிக்கும்(6), அழித்த(8), அழித்தரும்(1), அழித்தலின்(2), அழித்தான்(1), அழித்து(15), அழிதக்கன்று(2), அழிதக்காள்(1), அழிதக(6), அழிதகவு(1), அழிதரு(2), அழிந்த(14), அழிந்தன்று(1), அழிந்தனள்(1), அழிந்து(37), அழிந்தோர்(3), அழிப்ப(3), அழிப்படுத்த(1), அழிபவள் (1), அழிபு(4), அழிய(26), அழியர்(1), அழியல்(2), அழியலன்(1), அழியா(3), அழியாதி(1), அழியாது(1), அழியின்(1), அழியுநர்(1), அழியும்(4), அழிவது(3), அழிவல்(1), அழிவு(14), அழீஇ(1) ஆகிய சொற்கள் அழிவு தொடர்பாகச் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன.
 மனையியலில் destroy அழி, நிலைகுலை, தகர எனவும், பொறிநுட்பவியலில் destroyer அழிகலன் எனவும் பயன்படுத்துகின்றனர். எனினும் அழிவு பற்றிய பேரச்சம் குறித்த கலைச் சொல் இல்லை.
குறிப்பிட்ட நாளில் பெரு வெள்ளம் வந்து உலகம் அழியும், நிலநடுக்கத்தால் உலக மக்கள் அனைவரும் மடிவார்கள் என்றெல்லாம் அஞ்சுவது பலரின் வழக்கமாக உள்ளது. அவர்கள் அஞ்சும் நாள்வந்த பின்னரும் உலகம் இருக்கும். என்றாலும் வேறொரு நாளில் உலகம் அழியும் என மீண்டும் எண்ணத் தொடங்கிப் பிறரையும் அச்சுறுத்துவார்கள்.
00
24. அழுக்கு வெருளி- Automysophobia
மாசு வெருளி/தூசு வெருளி/ நுண்மி வெருளி/ தொற்றுவெருளி குப்பை வெருளி – Misophobia/ Mysophobia /Molysmophobia/Molysomophobia/Verminophobia/ Amathophobia/Koniophobia;
நோய் நுண்மி வெருளி-Bacillophobia, Microbiophobia, Bacteriophobia/ germophobia, germaphobia
தூய்மையின்மை அல்லது துப்புரவின்மையால் -அஃதாவது அழுக்கினால் – ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் அழுக்கு வெருளி.
 அழுக்கு’ என்பது சங்கக்காலத்திலேயே வழங்கிய சொல்.
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் (புறநானூறு : 126:11) என மலையமான் திருமுடிக் காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடும் பொழுது கபிலர் பற்றிக் குறிக்கின்றார். இங்கே மன அழுக்கின்மை போற்றப்படுகிறது.
பின்னர் உரைகளிலும் இன்றளவில் மக்கள் வழக்கிலும் அழுக்கு, அப்பழுக்கு என்பன இடம் பெறுகின்றன.
அழுக்கு வெருளி உடையவர்கள்  அழுக்கு மீதான பேரச்சம் அல்லது வெறுப்பால் ஓயாமல் கை கழுவுவர் அல்லது அடிக்கடி குளிப்பர்.
அழுக்கின் மீதான பெருவெறுப்பால் நலக்கேடு ஏற்பட்டுத் துன்பங்களுக்கு ஆளாக அல்லது உயிரிழக்க நேரிடும் என்ற தேவையற்ற பேரச்சமே இவர்களை ஆட்டுவிக்கும்.
தூசு வெருளி, மாசு வெருளி/தூசு வெருளிநுண்மி வெருளிதொற்றுவெருளி,நோய் நுண்மி வெருளி என முன்பு தனித்தனியாகக் குறிப்பிட்டிருந்தோம் வெவ்வேறு பெயர்களில் குறிக்கப்படுவன ஒன்றைத்தான் என்பதால்,  இப்பொழுது இணைத்துவிட்டோம்.
அழுக்கின் பிறப்பிடங்களில் ஒன்றாகிய குப்பை பற்றிய பேரச்சம் குப்பை வெருளி(Rupophobia) எனப்படுகிறது. இதனையும் அழுக்கு வெருளியுடன் இணைத்துள்ளோம்.
ஒரு பெயரை மட்டும் குறிப்பிட்டால் அது வேறு, இது வேறு என்பதுபோல் பேசவோ கருதவோ கூடும். எனவே, மாற்றுப்பெயர்கைளயும் இங்கே குறித்துள்ளோம்.
auto  என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் தான்/தானே. myso  என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அழுக்கு.
amathos,  koni  ஆகிய கிரேக்கச் சொற்களின் பொருள் தூசி.
musos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தூய்மையற்ற என்பதாகும்.
molysmo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அருவருப்பான அழுக்கு.
00
25. அழைப்பக வெருளி – coetusermophobia
அழைப்பு மையங்கள் மீதான தேவையற்ற பேரச்சம் அழைப்பக வெருளி.
இந்த உதவி வேண்டுமா, அந்த உதவி வேண்டுமா, இதற்குக் கடன் வேண்டுமா, அதற்குக் கடன் வேண்டுமா என்பனேபால் பணி மிகுந்துள்ள  நேரங்களிலும் கால நேரம் பார்க்காமலும் அழைப்பு மையங்களில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. இதனால் எரிச்சலடைவோர் மிகுதி. இதனால் இவர்களிடமிருந்து மட்டுமல்ல, தொலைபேசி மணி ஒலித்தாலே இம்மையங்களில் இருந்துதான் அழைப்பு வந்திருக்கும் என நடுங்குவோரும் உள்ளனர்.
இதற்கு மறுதலையாக அழைப்பு மையங்களில் வாடிக்கையாளர் பணி மையங்களில் பணியாற்றுவோர்  பல்வகை உணர்ச்சி மிகுந்த வாடிக்கையாளர்களை நாளும் எதிர்கொண்டு அழைப்புகள் கண்டு அஞ்சும் போக்கும் உள்ளது.
 00
26. அளறு வெருளிபாழ்வினையர் உலகு வெருளிநரக வெருளி– Hadephobia/Stygiophobia/Stigiophobia
அளறு/நரகம் தொடர்பான வரம்புமீறிய பேரச்சமே அளறு வெருளி.
எலலாச்சமய நூல்களிலும் குற்றம் இழைத்தவர்கள், பாவம் செய்தவர்கள் இறப்பிற்குப்பின் அளறுலகு/நரகுலகு செல்வர் என்றும் அங்கே கடுமையான தண்டனைகள் பாவியருக்கு வழங்கப்பெறும் என்றும் கதைகள் உள்ளன. இதனை அறிந்து அங்கே இறப்பிற்குப்பின் செல்ல நேரிடும் என்று அளவு கடந்த பேரச்சம் கொள்வர் இத்தகையர்.
மக்கள் தவறுசெய்யாமல் இருக்கத்தான் இத்தகைய கதைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், இதனைநம்பி மக்கள் தவறு இழைக்காமல் இருந்தால் இவ்வுலகம் பண்பாடு மிக்கதாக,அமைதியானதாக, ஒற்றுமையாக இருந்திருக்கும். பாவக்கதைகளை விளக்குபவர்களே பாவம் செய்பவர்களாகத்தான் இருக்கின்றனர். இருப்பினும் சிறுபான்மையர் ஒழுக்க வரம்பிற்குள் வாழ இக்கதைகள் உதவுகின்றன. அவ்வாறு வாழ விரும்புவோரே அளறு வெருளிக்கும் ஆளாகின்றனர்.
Hades என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் அளறு/நரகம்
stygius என்னும் இலத்தீன் சொல்லிற்கும் /Stúgios  என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கும்  நரகம் தொடர்பான என்று பொருள். [சுடைக்சு(Styx) என்பது நிலஉலகத்தையும்நரகமாகிய கீழுலகத்தையும் பிரிக்கும் ஆறு.இதன் தொடர்பான பேரச்சத்தை இச்சொல் குறிக்கிறது.]
00
(தொடரும்)
அழிவு வெருளி
அழிவு வெருளி
அழுக்கு வெருளி
அழுக்கு வெருளி
அழைப்பக வெருளி
அழைப்பக வெருளி
அளறு வெருளி/ பாழ்வினையர் உலகு வெருளி/ நரக வெருளி
அளறு வெருளி/ பாழ்வினையர் உலகு வெருளி/ நரக வெருளி

Sunday, May 19, 2019

வெருளி அறிவியல் – 7 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


(வெருளி அறிவியல் 6 இன் தொடர்ச்சி)

வெருளி அறிவியல்  –  7

18. அயலிந்தியர் வெருளி-Mikatikoindicaphobia 
அயல்நாட்டில் வாழும் இந்தியர்கள் (NRI) தொடர்பில் ஏற்படும் தேவையற்ற அச்சம் அயலுறை இந்தியர்கள் வெருளி. சுருக்கமாக அயலிந்தியர் வெருளி எனலாம்.
வெளிநாட்டிலிருந்து செல்வம் திரட்டி வந்து, இங்கே நம் தொழிலைச் சிதைப்பார்கள், செல்வத்தைத் தேய்ப்பாரகள், செல்வாக்கை ஒடுக்குவார்கள், வளர்ச்சியை அழிப்பார்கள் என்றெலலாம் தேவையற்ற கவலையும் அளவு கடந்த வெறுப்பும் கொள்வர்.
Indica என்பது இலத்தீனிலும் கிரேக்கத்திலும் இந்தியாவைக் குறிப்பிடும் சொல்.
00
19. அரசியலர் வெருளி-Politicophobia/ civiliphobia
அரசியல்வாதிகள் அல்லது  அரசியல்மீது ஏற்படும் அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் அரசியலர் வெருளி.
அடாவடித்தனம்செய்து மக்களைத் துன்புறுத்தும் அல்லது அச்சுறுத்தும் அரசியல்வாதிகள் உள்ளனர். இதனால் எந்த அரசியல்வாதியைப் பார்த்தாலும் அல்லது அரசியல் என்றாலே சிலருக்கு அச்சம் ஏற்படும்.
அரசியல்வாதிகள் சிலர் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தல், குறுக்கு வழிகளில் பணம் சம்பாதித்தல், தன்னலம், தம் குடும்பநலன் ஆகியவற்றுக்காகப் பிறரை அடக்குமுறைக்கு ஆளாக்குதல் போன்றவற்றை எண்ணி வேறுபாடில்லாது எல்லா அரசியல்வாதிகள் மீதும் அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் கொள்வர்.
அரசியல்வாதிகள் சிலர் செய்யும் அடாவடி, அட்டூழியம், ஒழுக்கக்கேடு, முறைகேடு, ஊழல், வன்முறை போன்றவற்றால் எல்லா அரசியலர் மீதும் சிலருக்குப் பேரச்சம் விளைவது இயற்கைதான். நாடகம், தொலைக்காட்சி, திரைப்படம், கதைகள் இத்தகைய காட்சிகளைக் காண்பதால் வெறுப்பு மேலும் வளர்கிறது.
அரசியல்வாதி வெருளி(civiliphobia) எனப் புதிய வெருளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அரசியலர் வெருளிக்கும் அரசியல்வாதி வெருளிகும் வேறுபாடு இல்லை என்பதால் அதனை இதிலேயே இணைத்துள்ளேன்.
00
20. அயில் வெருளி -Enetophobia
ஊசி அல்லது கூரிய முனை உடைய பொருள்களைப் பார்த்தால் ஏற்படும் இயல்பிற்கு மீறிய பேரச்சம் அயில்/ ஊசி வெருளி.
அயில் என்றால்  கூர்மை, (கூர்மையான) கைவேல்இரும்பு, முதலான பல பொருள்கள் சங்கப் பாடல்களில் உள்ளன. இங்கு நாம் கூரிய முனைப் பொருள்கள் என்று கையாள்கிறோம்.

ஈட்டி, வேல்கம்பு, எஃகுமுனை கொண்ட வேட்டை எறிகருவி, படைவீரர் எறிவேல், மீனெறி வேல், மீன் குத்தும் ஈட்டி, ஊசி முதலான கூர் முனைப் பொருள்கள் சங்கக் காலத்தில் இருந்துள்ளன.

கூர்மையான நுனி உடைய யானையின் தந்தம் அயில் நுனை மருப்பு (முல்லைப்பாட்டு 34) எனப்படுகிறது.

கூரிய வேலைப் பகைவர் எறியும் பொழுது, கண்ணை இமைத்தால் தோல்வி என்று அஞ்சாது எதிர்நோக்கும் வீரர்கள் தமிழகத்தில் இருந்துள்ளனர்.

விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு என்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள் 775). இப்பொழுது காலம் மாறிவிட்டது.

ஊசி அல்லது கூரிய பொருள்கள் குத்தி,]  குருதிக்காயம் ஏற்பட்டிருந்தாலோ பிறருக்குக் காயம் ஏற்பட்டதைக் கண்டிருந்தாலோ இளம்பருவத்தில் வரும் அச்சம் கூரிய பொருள்கள் மீதான பேரச்சத்தை வளர்க்கிறது.

கூர் வெருளி(Aichmophobia),நுனை வெருளி(Belonephobia), ஊசி வெருளி(needle phobia) ஆகியவற்றுடன் ஒப்புமை உடையது.



00
21. அலை பேசி வெருளி-Nomophobia (no-mobile-phone phobia)
அலைபேசியைப் பயன்படுத்த முடியாத சூழலில் ஏற்படும் தேவையற்ற பேரச்சமே அலைபேசி வெருளி.
அலை இணைப்பு கிடைக்காமல் அல்லது மின்னேற்றம் இன்மையால் அல்லது வேறு சூழலில் அலைபேசியைப் பயன்படுத்த முடியாமல் போனால்  இதனைப் பயன்படுத்துவோர் அடையும் கிலி, மனத் தடுமாற்றம், காரணமில்லாப் பேரச்சம் முதலானவை அலைபேசி வெருளியாக மாறுகிறது. அலைபேசி இயங்கா வெருளி என்பதைச் சுருக்கமாக அலைபேசி வெருளி எனக் குறிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் அல்லது இளைஞர்கள் அலைபேசியைப் பயன்படுத்தும் பொழுது அவர்களின் பெற்றோர் முதலான உறவினர்களுக்கு இவர்கள் தவறாகப் பயன்படுத்தி வாழ்க்கையை அழித்துக் கொள்வார்களோ என்ற  பெரும் அச்சம், மனத்தைப்பாதிக்கும் விளையாட்டு அல்லது  பாலியல் படங்கள் மூலம் மனச்சிதைவிற்கு ஆளாவார்களோ என்ற பேரச்சம் எழுவதால்  அலைபேசி வெருளி எனப் பொதுவாகச் சொல்வதும் பொருத்தம்தான்.
ஐக்கிய இங்கிலாந்தில் பாதிக்கு மேற்பட்டோர் அலைபேசி வெருளியால் துன்புறு கிறார்களாம்.
இதன் ஆங்கிலச்சொல் Nomophobia  என்பது இரு சொற்கள் பகுதி கலந்து உருவான ஒட்டுச்சொல்(portmanteau).  யூகோவு(YouGov) என்பவர் 2008 இல் இதனைக் கட்டுரையில் குறிப்பிட்ட பொழுது  தொலைபேசி இயங்காத பொழுது53 விழுக்காட்டினர்  பாதிப்பிற்குள்ளாவதாகத் தெரிவித்து இருந்தார்.  இப்பொழுது இந்த அளவு கூடியுள்ளது.
00
22. அவைக்கோ வெருளி(போப்பு வெருளி)-Papaphobia
போப்பாண்டவர் என அழைக்கப்பெறும் அவைக்கோ மீதான தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் அவைக்கோ வெருளி.
உரோமன் கத்தோலிக்க திரு அவையின் தலைவர் போப்பு அல்லது போப்பாண்டவர் என அழைக்கப்பெறுகிறார். திரு அவையின் தலைவர் என்ற முறையில் இங்கே அவைக்கோ எனச் சுட்டப்பட்டுள்ளது. திருத்தந்தை என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.
துறவியர் வெருளி(Hierophobia) சமயவர் வெருளி(Ecclesiaphobia / Ecclesiophobia) தூயவர் வெருளி(Hagiophobia) போன்ற சமயத்தவர் சாரந்த வெருளி இது.
 papa என்னும் இலத்தீன் சொல்லிற்கு அவைக்கோ / ‘போப்பு’ எனப் பொருள்.
00
(தொடரும்)



அயலிந்தியர் வெருளி
அயலிந்தியர் வெருளி

அரசியலர் வெருளி
அரசியலர் வெருளி

அயில் வெருளி
அயில் வெருளி

அலை பேசி வெருளி
அலை பேசி வெருளி

அவைக்கோ வெருளி(போப்பு வெருளி)
அவைக்கோ வெருளி(போப்பு வெருளி)
(காண்க – வெருளி அறிவியல் 8)