Friday, November 18, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 522-526

 அகரமுதல







( தமிழ்ச்சொல்லாக்கம் 516 -521 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 522-526

(சொல்மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளனமொழி மாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

522. Director – தலைமையோர்

தூத்துக்குடியில் சுதேசிக் கப்பற் கழகம் ஏற்பட்டிருந்த காலத்தில் நமது நண்பர் அதைத் தொடங்கினோர்க்கு வேண்டும் உதவிகளை நெல்லையிலிருந்து புரிந்து வந்தபடியாலும், பொதுவாக உலக நடையில் சிறந்த அநுபவமுடையவரா யிருந்தபடியானும், மேற்படி காரியங்களை நிகழ்த்தும் தலைமையோர் (டைரக்டர்)களில் இவரும் ஒருவராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

மேற்படி நூல் : பக்கம் – 60

523. அரித்துவாரம் – சிங்கத்துளை

நூல்   :           பிரமானந்த நான்மணி மாலை (1924 பக்கம் 13

நூலாசிரியர்         :           பி.பி.நாராயணசாமி நாயுடு (திருநெல்வேலி சிந்துபூந்துறை பென்சன் போலீசு இன்சுபெக்டர்)

524. வசன நடை – ஒழுக்கம்

பத்மினி பெயர்க்கிணங்க நல்லொழுக்கம் நன்கமைந்தது; (ஒழுக்கம்-வசனநடை என்பதும் ஒருபொருள்) எவர்க்கும் எளிதில் பொருள் விளக்கும் எழிலது, செந்தமிழணங்கின் கீர்த்தியைத் தெரிவிப்பது நடந்தே நவில்வது.

நூல்   :           பத்மினி (1924 பக்கம் : 6)

தலைப்பு     :           சில தமிழ் அபிப்பிராயங்கள்.

சொல் விளக்கம்  :           திருப்பாதிரிப்புலியூர் சிரீமத்து ஞானியார் மடாலயத்து சுவாமிகள்

525. பிரசவம் – பிள்ளைப்பேறு

பூர்ணமான பிண்டாண்டத்தில் (1) குழந்தை அல்லது பிண்டம், 2) குழந்தை மிதந்து கிடக்கும் பனிநீர், 3) பனிநீரையடக்கஞ் செய்து கொண்டிருக்கும் சவ்வுகள், 4) மாயை, கொப்பூழ் கொடி, இவைகளடங்கி யிருக்கின்றன. சனன வாய்க்காலின் வழியாய்ப் பிண்டாண்டமானது வெளியில் தள்ளும் சக்திகளால் வெளியாகும் விதானத்திற்குப் ‘பிரசவம்’ அல்லது ‘பிள்ளைப்பேறு’ என்று சொல்லப்படும்.

நூல்   :           மருத்துவ மாணாக்கியர்களுக்கு உபயோகமான கைப்புத்தகம் (1924) பக்கம், 15.

நூலாசிரியர்         :           கோ. கி. மதுசூதனராவு

526. Typewriting – கையச்சு

கும்பகோணத்தில் முனிசிபாலிடியார் ஒரு சித்திர பாடசாலை வைத்திருக்கிறார்கள். அதில் சுமார் 100 பிள்ளைகள் உயர்ந்த சித்திர வேலை செய்யக் கற்றுக் கொள்ளுகிறார்கள். டைப்ரைட்டிங் என்ற கையச்சு வேலையில் பயில பல பாடசாலைகள் எங்குப் பார்த்தாலும் இருக்கின்றன.

நூல்   :           தஞ்சாவூர் சில்லாவின் வரலாறு (1924 பக்கம் : 87)

நூலாசிரியர்         :           ஆர். விசுவநாத ஐயர் (Assistant, Govt., Model High School, Saidapet)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Tuesday, November 15, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 516 -521

 அகரமுதல



தமிழ்ச்சொல்லாக்கம் 511 -515 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 516-521

(சொல்மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளனமொழி மாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

516. Passport – வழிச்சீட்டு

சிரீ திலகர் சீர்திருத்த விசயமாகப் பார்லிமெண்டார் சட்டமாக்குவதற்கு முன் இங்கிலாந்தில் பெரிய கிளர்ச்சி செய்து பொது சனங்களை எழுப்பி இந்தியாவுக்குச் சுய ஆட்சி கொடுக்கத் தொழில் கட்சி மெம்பர்களை விட்டு பார்லிமெண்ட் மகாசபையில் கேட்கும்படி செய்ய வேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டு சிரீ திலகர், விபின சந்திர பாலருடனும் கேல்காருடனும் இங்கிலாந்துக்குப் புறப்பட்டார். அவர், சென்னைக்கு வந்து, சென்னையிலிருந்து சிலோன் சென்று, அங்கிருந்து நேரே செல்வதற்கு ஆயத்தமாயிருந்தார்.

சென்னையில், சிரீ திலகருக்குப் பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது. பல்லாயிரம் பேர் கூடின ஒரு பெரிய மகா நாட்டில் சிரீ திலகர் இங்கிலாந்துக்குச் செல்லும் நோக்கத்தைப் பற்றிக் கூறினார். சென்னையை விட்டு சிலோன் போய்ச் சேர்ந்து, கப்பல் பிரயாணஞ் செய்ய ஆயத்தமாயிருக்கையில், சிரீ திலகர் முதலானோர், செல்லக்கூடாதென்று வழிச்சீட்டு (passport) (இ)ரத்து செய்யப்பட்டது. இவ்வுத்திரவு இந்தியா கவர்ன்மெண்டார் செய்ததே.

நூல்   :           லோகமான்ய பாலகங்காதர திலகர் (1924 பக்கம் : 247

நூலாசிரியர்         :           கிருட்டிணசுவாமி சர்மா

517. Bank – பணக்கூடம்

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலிச் சில்லாவில், துறைமுகப் பட்டணமாகிய தூத்துக்குடி ஒன்றைத் தவிர, வேறு எவ்விடத்திலேனும் பணக்கூட்டுத் தொழிற் சங்கம் என்பதே கிடையாது. காசுக்கடைக்காரரும், நாட்டுக்கோட்டைச் செட்டிமாரும், சில பெரும் பணக்காரர்களும் தனித்தனியே பணங்கொடுக்கல் வாங்கல் செய்வதுண்டு. ஆனால் பொது சனங்களுக்குப் போதுமான வசதிகள் ஏற்படாதிருந்தது. இது விசயத்தில் சனங்களுக்குள்ள குறைகளை நீக்கும் பொருட்டும், பணமுடையார் பலரும் அப்பயனை நிரந்தரமாயடைய வேண்டியும், முதலில் இவர் (வக்கீல் பண்டாரம் பிள்ளை என்னும் திருவாளர் தி.செ. சுப்பிரமணிய பிள்ளை) செய்த அரும் பெரும் முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கன.

உள்ளூரிலும் வெளியூரிலுமுள்ள பல தனவான்களிடத்திலும் தனித்தனியாகவும் கூட்டங்கூடியும் பேசி, திருநெல்வேலிக்கு பணக்கூடம் (பாங்க்) ஏற்படுத்த வேண்டிய அவசியத்தையும் அதனால் அடையக் கூடிய நற்பயன்களையும் ஒவ்வொருவரும், அறிந்துணரும்படி எடுத்துக் கூறிவந்தார்.

நூல்   :           வக்கீல் பண்டாரம் பிள்ளை என்னும் திருவாளர் தி. செ. சுப்பிரமணிய பிள்ளை யவர்களின் சரித்திரச் சுருக்கம் (1924) பக். 40,41.

518. Bunglow – நல்லகம்

519Durbar Hall – கொலுவிருக்கை மண்டபம்

அரண்மனையின் பழைய கட்டிடங்கள் பண்டைக் காலத்து நாட்டுப்புறப் பாங்கில் அமைக்கப்பட்டிருந்த படியாலும் இக்காலத்துக்கு அது போதாத தாயிருந்தபடியாலும் நமது நண்பர் சில கட்டிடங்கள் அதிகமாய் வேண்டுமென்று கருதினார். சமீன்தாரவர்கள் உபயோகத்திற்கு ஒரு நல்லகமுமே (பங்களா), கலியாணமாலும், கொலுவிருக்கை மண்டபமும் (தர்பார் ஹால்), சமீன் அரசாட்சிக்குரிய பலதுறைவேலைகளும், தனித்தும் சேர்த்தும் நடைபெறுதற்குப் பொருத்தமான மாளிகையும் ஆகிய முக்கியமான மூன்று கட்டிடங்களையும் மென்மையாகக் கட்டுவித்தார்.

நூல்   :           வக்கீல் பண்டாரம் பிள்ளை என்னும் திருவாளர் தி. செ. சுப்பிரமணிய பிள்ளை யவர்களின் சரித்திரச் சுருக்கம் (1924 ப. 92)

நூலாசிரியர்         :           மு. பொ. ஈசுர மூர்த்தியா பிள்ளை (திருநெல்வேலி இந்து கலாசாலைத் தமிழாசிரியர்)

520. உரையாடல் – சம்பாசணை

இவர் உரையாடலில் (சம்பாசண) ஆழ்ந்த கருத்துகள் அடங்கிக்கிடக்கும்; நுண்பொருள் நயம்பட விளங்கும் சொன்னயம் சிறந்து துலங்கும். சமயத்துக் கேற்ற விநயமும், விகடமும் இயல்பாகவே வரும். புன்சிரிப்பிற் புலவராகவும், பெருங்சிரிப்பிற் பேராசிரியராகவும் இருந்தாலும், மிக விகடமாகப் பேசும்போதும், தான் முதலிற் சிரிப்பதில்லை. அப்பாற் சிரிப்பதும் அடக்கமாகவே யிருக்கும்.

மேற்படி நூல் : பக்கங்கள் – 27, 28

521. பிரசங்கம் – விரிவுரை

ஒருநாள் மாலை 6 மணிக்கு ஒரு பெருங் கழகக் கூட்டத்தில் அரும்பொருள் ஒன்றைப் பற்றி ஓர் விரிவுரை (பிரசங்கம்) செய்ய உடம்பட்ட ஒரு நாவலர் அன்று பகலில் தம்முடம்புக்குரிய வசதிகளைக் கவனியாது அசட்டை செய்திருந்த படியால் அவர் பேசத் தொடங்கி முகவுரை முடியுமுன் அவருக்குத் தொண்டைப் புகைச்சல் வந்து மேற்பேச வொட்டாமல் தடுத்துவிட்டது.

மேற்படி நூல் : பக்கங்கள் : 37, 38

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Friday, November 11, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 511 -515

 அகரமுதல




( தமிழ்ச்சொல்லாக்கம் 505-510 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 511-515

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

511. Budget – அரசிறை கணக்கு

நூல் : (உ)லோகமான்ய பாலகங்காதர திலக் (1924) பக்கம் : 69

நூலாசிரியர் : கிருட்டிணசுவாமி சர்மா

512. வியாக்ரபாதர் – புலிக்கால் முனிவர்

மழமுனி என்னும் இயற்பெயர் கொண்ட வியாக்ரபாத (புலிக்கான்) முனிவர்க்கும், வசிட்ட முனிவர் உடன் பிறந்தாளுக்கும் மகவாய்த் தோன்றிக் குழவிப் பருவத்திற் பசிக்குப் பாற்கடல் பெற்ற உபமந்யு மாமுனிவர் பல்லாயிர முனிவரும், யோகியரும் தம்மைப் புடை சூழத் திருக்கைலை மலையின் தாழ் வரையின் கட்சிவத்யான பரராய்ச் சிவானந்த பலி தராய் எழுந்தருளியிருப்புழி அங்கு ஆயிரஞ் சூரியரொரு காலத்து உதித்தாற் போல்வதொரு பேரொளி தோன்றிற்று.

நூல்   :           பெரிய புராண வாராய்ச்சி (1924 பக்கம் : 2

நூலாசிரியர்         :           வா. மகாதேவ முதலியார்

(கிறித்தவ கலாசாலைத் தமிழாசிரியர்)

513. நாயன் – வழிகாட்டி

அன்பின் பெருமை வலிமை பயன் இவை அங்கையினெல்லிபோல இனிதின் விளங்கவும், அற்புச் சுவை ததும்பி வழிந்தோங்கவும் ஏனைச் சுவைகளாங்காங்குத் தோன்றவும் அமைந்த அறுபான் மூவர் நாயன்மார் அருஞ் சரிதை நூற்பொரு ளென்க. அடியார்கள் இப்புராணத்துள் நாயன்மா ரென்று வழங்கப் பெறுவர். ‘நாயன்’ என்னும் வடசொற்குப் பொருள் வழிகாட்டி அல்லது நடத்துவோன் என்பது; வடமொழியில் ‘கோநாய’, ‘அசுவநாய’ முதலிய பிரயோகங்கள் இருத்தல் காண்க.

மேற்படி நூல் : பெரிய புராண வாராய்ச்சி (1924 பக்கம் 15)

514. உக்தவேதீசுவரர் – சொன்னவாறறிவார்

திருத்துருத்தி யென்னுந் திருப்பதியிற் பெருமான் வடமொழிப் பெயர் உக்தவேதீசுவரர் என்பது தமிழின் அதற்கு நேர் ‘சொன்னவா றறிவார்’ என்பது.

மேற்படி நூல் : பக்கம் – 52

515. வியாச்சியம் – மன்றாட்டு வழக்கு

அதுவரை மாணவராயிருந்த மைனர் சமீன்தாரவர்களுக்குத் தக்க பருவமாகிய வயது வந்தவுடனே அரசாங்கத்தார் சமீன் ஆட்சியை உரியவர் இடத்தில் ஒப்பிக்கும்போது, சிங்கம்பட்டி மலை சம்பந்தமான மலை போன்ற மன்றாட்டு வழக்கை (வியாச்சியம்)யும் கூடவே ஒப்பித்தார்கள்.

நூல்   :           வக்கீல் பண்டாரம் பிள்ளை என்னும் திருவாளர் தி. செ. சுப்பிரமணிய பிள்ளை யவர்களின் சரித்திரச் சுருக்கம் (1924 பக்கம்-78)

நூலாசிரியர்         :           மு. பொ. ஈசுர மூர்த்தியா பிள்ளை

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Tuesday, November 8, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 505-510

 அகரமுதல





தமிழ்ச்சொல்லாக்கம் 493-504 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 505-510

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

505. கோகினோர் – ஒளிமலை

தென்னிந்தியாவில் வச்சிரகருவூர் என்னும் ஒரு கிராமம் உண்டு. அப்பெயர், வைரக்கற்களைத் தன் வயிற்றுள் அடக்கியிருக்கும் ஊர் என்று பொருள்படும். அவ்வூரின் சுற்றுப்புறமெங்கும் பண்டை நாளில் வைரக்கற்கள் புதைந்திருந்த சுரங்கங்கள் பல இருந்தன.

ஆப்பிரிக்கா அமெரிக்கா முதலிய கண்டங்களில் வைரக்கனிகள் கண்டுபிடிக்கப்படு முன்னர் வைரக்கற்களுக்காக உலகெங்கும் பேர்பெற்றது இவ்வூர்தான்.

மொகலாய அரசர்கள் வீற்றிருந்ததும், விலைமதிக்க முடியாதபடி சிறந்து விளங்கியதுமான மயிலாசனத்தின் மேலிருந்த வைர மணிகளெல்லாம் இங்கிருந்து போனவையே. இப்போது இங்கிலாந்து அரசர் முடியில் அணிபெறத் திவ்விய ஒளி வீசும் கோகினோர் அல்லது ’ஒளிமலை’ எனப்படும் உயர்தர வைரமணியும், இவ்வூரில் முதன்முதல் அகப்பட்டு, பின் ஆப்புகானியர் சீக்கியர் முதலியவர் கைமாறி, கடைசியில் ஆங்கிலேயர் கைப்பட்டது.

நூல்   :           பத்மினி (1924), பக்.41,42,

நூலாசிரியர்         :           வே. முத்துலாமி ஐயர், எம்.ஏ. எல்.டி.,

(சென்னைத் தமிழர் கல்விச் சங்கத்தின் அங்கத்தினர்)

506. (உ)ருத்திர பூமி – சுடுகாடு

கல்லாதார் முகம் (உ)ருத்திரபூமி (சுடுகாடு)யை ஒக்குமெனவும், கல்லாதார் உருவம் மரத்துக் கொப்பெனவும், கல்லாதார் கண்கள் இரண்டும் புண்களை யொக்குமெனவும், கற்றார் சபையில், கல்லாதார் சுவானத்துக் கொப்பாவார் எனவும், கல்லாதார் உடம்பு பாழ்நிலத்தை யொக்குமெனவும் அறிஞர் கூறியிருக்கின்ற தனக்குப் பாழ் கற்றறிவில்லா உடம்பு என்பதனாலு மறிக.

நூல் : தமிழ்க் கல்வி (1924) பக்கம் 96

நூலாசிரியர் : மனத்தட்டை எசு. துரைசாமி ஐயர்

507. Liquor Amnii — முன்நீர், பனிநீர்

வாசுதவமாகவே கருப்பையானது கருப்பக் காலத்தில் 20 நிமிடத்திற்கொருதரம் சிறுத்துக் குறுகிப் பிற்பாடு தளர்ச்சியடையும் பிண்டம் சிதைந்து போகாமலிருப்பதற்காக அதைச் சுற்றிலும் ஓர்வகை நீர் ஏற்பட்டிருக்கிறது. அதை (Liquor Amnii) முன்நீர், பனிநீர் என்பார்கள்.

நூல்   :     மருத்துவ மாணாக்கியர்களுக்கு உபயோகமான கைப்புத்தகம் (1924) பக்கம் -5

நூலாசிரியர்         :           கோ.கி. மதுசூதன இராவு (மதராசு கவர்ன்மென்ட் பிரசவ வைத்திய சாலையில் மருத்துவ மாணாக்கியர்களின் உபாத்தியாயர்)

508. Cells – கண்ணறை

509. கோரியன் / Chorion – வெளித்தோல்

510. ஆம்னியன் / Amnion – உள்தோல்

கருத்தரித்த முட்டையானது அதிசீக்கிரமாய் வளர்ந்து அநேக விதங்களான நுண்ணிய கண்ணறைகளாக மாறுகிறது. பிண்டத்தைச் சுற்றிலும் நீருடன் மூடியிருக்கும் இரண்டு சவ்வுத் தோல்களுற் பத்தியாகின்றன. வெளித்தோலுக்கு கோரியன் என்றும் உள் தோலுக்கு ஆம்னியன் Amnion என்றும் பெயர்.

மேற்படி நூல் : பக்கம் – 4

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Saturday, November 5, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 493-504

 அகரமுதல






(தமிழ்ச்சொல்லாக்கம்: 486-492 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 493-504

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

493. Wrist Watch – மணிக்கட்டு கெடியாரம்

நல்லொழுக்கம் நாட்டிலில்லை. சூதே சொந்தமாயிற்று. வாதே வழக்கமாயிற்று. தீதே தேடலாயிற்று சட்டையுடன் சாப்பிடுதலே சகசமாயிற்று. அரைக்கை சட்டை அபரிமிதமாயிற்று. மணிக்கட்டு கெடியாரமே (ரிசுட்டுவாச்சே /Wrist Watch) பெசுட்வாச் (Best Watch)சாயிற்று.

நூல்   :           தமிழ்க் கல்வி (1924) பக்கம் 66

நூலாசிரியர்         :           மனத்தட்டை எசு. துரைசாமி ஐயர்

494. அவகாசம்      –           இயைந்த காலம்

495. அவதரித்தல் –           பிறத்தல்

496. ஆராதனை    –           வழிபாடு

497. வாகனம்         –           ஊர்தி

498. சரசுவதி          –           சொற்கிறைவி

499. சரசுவதி          –           பனுவலாட்டி

500. இரத்தம்          –           புண்ணீர்

501. பிரசவ வீடு    –           மகப்பெறும் இல்லம்

502. விவாகச் செயல்     –           மணவினை

503. விவாகச் சிறப்பு     –           மணவிழா

504. ஆகாய வாணி         –           விட்புலச் சொல்

நூல்   :           உதயன சரிதம் (1924) மொழி பெயர்ப்பு           :           பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்