தமிழில் எண்ணற்ற அறிவியல் செய்திகள் உள்ளன. இன்றைக்குக் காணப்படும் அறிவியல் உண்மைகள் அன்றே கண்டறியப்பட்டுள்ளன. அறிவியல் தமிழின் அன்றைய வளத்தையும் இன்றைய உண்மையையும் உணர்த்த அனைவருக்குமான அறிவியல் தமிழ் என்னும் நூல் கணியச்சில் உருவாக்கப்பட்டது. 10 ஆண்டுகளாக உறங்கிக் கிடக்கும் உண்மைகளை இணையத்தில் ஏற்றலாம் என இவ்வலைப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. புதிய பதிவுகளும் மேற்கொள்ளப்படும்.
Monday, March 18, 2013
Sunday, March 17, 2013
Sunday, September 30, 2012
மூ மா(Dinosaur)
மூ மா(Dinosaur)
இலக்குவனார் திருவள்ளுவன்
ஊழித்
தொடக்கக் காலத்தில் தயனோசர்(Dinosaur) முதலான விலங்குகள் வாழ்ந்தமையாகக்
கண்டறிந்துள்ளனர். அவற்றைத் தமிழில் கூற இயலுமா என்றால் மிகச் சிறப்பாகக்
கூற முடியும் என்பதே உண்மை. நீரில் வாழும் உயிரினங்களை நீரி என்றும்
ஊர்ந்து வாழும் உயிரினங்களை ஊரி என்றும் வயிற்றால்-அகட்டால் ஊர்ந்து
செல்லும் பாம்பினை அகடூரி என்றும் அழைத்துள்ளனர். இவை போல் மிக மிக மிக
மூத்தக் காலத்தினைச் சேர்ந்த - அழிந்து ஒழிந்து போன பேரளவிலான ஊரும்
உயிரினங்களை - ஊர்வனவற்றை மூஊரி - மூவூரி என்றும் கூறலாம். ஊர்வனவை
முதுகுத்தண்டுகள் உள்ள உயிரினங்கள். இவை நுரையீரல் மூலமே
மூச்சுவிடுகின்றன.
மூத்த பல்லியினம் என்ற வகையில் மூ ஊரி என்னும் பொருளைத்தான் தயனோசர்
என்னும் சொல்லும் குறித்தாலும், ஊர்வன அல்லாத சில உயிரிகளும் இவற்றில்
அடங்கும் என்பதால், தமிழறிந்தோர் தவறு என எண்ணுவர். எனவே, மா என்பது
விலங்கினத்தைக் குறிப்பதால் இவ்வகை உயிரினங்களை மூமா எனலாம். இவற்றுக்கும்
முந்தையவை தொன்மா ஆகும். எனவே மூமா என்பதைக் கேலியாக எண்ணாமல்
பயன்படுத்தினால் எளிய பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும். மூமா வகைகளை
அவற்றின் தோற்றம், உணவுப் பழக்கம் முதலியவற்றின் அடிப்படையில்தான்
பெயரிட்டுள்ளனர். அவ்வாறே நாமும் தமிழில் கூறலாம். எனினும் சில உயிரினங்களை
அவற்றின் நேர் பொருளில் குறிப்பதைவிடத் தோற்றம் அல்லது உண்ணும் முறை
அல்லது செயல்பாட்டு அடிப்படையில் கூறுவதே ஏற்றதாக இருக்கும். மேலும்,
இவ்வினங்கள் நீர் வாழ்வன அல்லது பறப்பனவாக இருப்பின் அதற்கேற்ற வகையில்
மீனம், நீரி, புள்(பறவை) முதலான அடைமொழிகளுடன் அழைக்கலாம். தமிழில்
குறிப்பிடுவதால் அதன் உடல் அமைப்பை வைத்துக்கொண்டே பெயரைப் புரிந்து
கொள்ளவும் அல்லது பெயர் மூலம் உருவ அமைப்பைப் புரிந்து கொள்ளவும் இயலும்.
சான்றாகப் பரு மூமா என்னும் பொழுது மிகவும் பருத்துள்ள மூமா எனப் புரிந்து
கொள்ளலாம். அல்லது மூன்று கொம்புடைய - முக் கொம்புடைய- மூமாவின் படத்தைப்
பார்த்தால் முக்கொம்பு மூமா எனப் புரிந்து கொள்ளலாம். புரியாமல் பிறமொழிச்
சொற்களை மனப்பாடமாகக் கூறுவதை விடப் புரிந்து சொன்னால் எளிதில் மனத்தில்
பதியுமல்லவா?
மூமா வகைகளை இனிப் பார்ப்போம்.
● ஆப்பிரிக்க வேட்டைமூமா (Afrovenator):
ஆப்பிரிக்க வேட்டையாளர்
என்னும் பொருளில் அழைக்கப்படுகிறது. ஆப்பிரிக்க வேட்டை மூமா எனத் தமிழில்
கூறலாம். விலங்குபோல் காலும் மூன்று விரல்களும் கொண்ட இருகாலி. ஊனுண்ணி
வகையைச் சேர்ந்தது. இதன் மூக்கிலிருந்து வால் வரை ஏறத்தாழ 9 கோல்(மீட்டர்)
நீளம் உள்ள விலங்கு; இதன் எடை ஏறத்தாழ 1.5 பாரம்(டன்).
● ஈரளவிப் பல்மூமா /இரை கொல் மூமா (Dimetroden):
வெட்டுப்பற்களும் கூரிய பற்களும் என ஈரளவுப் பற்களை உடையன என்னும்
பொருளில் பெயரிடப்பட்டுள்ளது. ஈரளவிப் பல்மூமா என்பது சரியாக அமையும்.
ஏனெனில் தோற்றத்தின் அடிப்படையில் இதனை மூத்த ஊர்வனவற்றுடன் கருதினாலும்
இவ்வினம் அதற்கும் முந்தைய பாலூட்டி வகையைச் சேர்ந்தது. இரையைக் கொன்று
தின்னும் மூத்த உயிரினம் என்னும் பொருளில் இரைகொல் மூமா என்றும்
சொல்லலாம். இரையைக் கொன்று தின்பன பலவாக இருப்பினும் மூத்த இனம் என்ற
வகையில் அச் சிறப்பை இவ்வுயிரினத்திற்குத் தரலாம். 285 பேராயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம்; 3.5 கோல்(மீட்டர்)/11 அடி நீளமானது;
சிறு விலங்குகளைக் கொன்று இரையாக உண்ணும் உயிரி; முதுகுத் துடுப்பு உடல்
வெப்ப நிலையைக் கட்டுப்படுத்த உதவும்.
● கிளியலகி மூமா(Achelousaurus):
கிரேக்கத் தொன்மைக் கதையில் குறிக்கப்படும் ஆக்கிலோசு (Achelous)என்னும் கொம்பிழந்த ஆற்றுத் தேவதையின்
பெயரில் இம் மூமா அழைக்கப்பெறுகிறது. தோற்றத்தில் இதன் மூக்கு,
கிளியின்அலகைப் போல் உள்ளதால் நாம் இதனைக் கிளியலகி மூமா எனலாம். இது 74
நூறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மூமா எனப்பெறுகிறது. இதன் உயரம் 6
கோல்(மீட்டர்). இது பயிருண்ணி விலங்கு.
● கொடு நக மூ மா (deinonychus):
பயங்கரமான கை
என்னும் பொருளில் பெயரிடப்பட்டுள்ளது. கொடு(வளைந்த) நகம் உடையதால் கொடுநக
மூமா என நாம் அழைப்பின் ஏற்றதாக இருக்கும். மனிதனின் அளவே உயரமானது;
விரைவாகச் செல்லக் கூடியது. இரையாகும் உயிரிகளின் குடல்களைக் கிழித்து
எடுப்பதற்கேற்ப 12 சிறுகோல்(செ.மீ)/4.5 அங்குலம் நீள வளைந்த நகங்களை
உடையது.
● கொம்பு மூமா (Agathaumas):
பெருவிந்தை
என்னும் பொருளுளில் இதற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கொம்புமுக
உயிரினங்களில் இவ்வகைதான் முதலில் கண்டறியப்பட்டது. கொம்புடைய மூமா
என்பதால் கொம்பு மூமா என்று சொல்வது எளிதில் புரிவதாக அமையும். 65
பேராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம்; 30 அடி நீளமும் 6
பாரம்(டன்) எடையும் உடையது.
● சதை உண் மூமா (Allosaurus):
பல்லியினங்களில் இருந்து இதன் முதுகு மாறுபட்டு அமைந்துள்ளமையால் மாறுபட்ட பல்லி
என்னும் பொருளில் இதற்குப் பெயர் சூட்டி உள்ளனர். பிற உயிரிகளின் சதைகளைக்
கிழித்து உண்ணும் பழக்கமுடைய இதனைச் சதைஉண் மூமா என்று சொல்லலாம். 200
பேராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இருகால் உயிரினம்; 13
கோல்(மீட்டர்)/43 அடி நீளமும் இரண்டு பாரத்திற்கு(ton) மேல் எடையும்
உள்ளது; 3 கோல்(மீட்டர்)/10 அடி நீளமானது.
● சிதள் மூமா (Stegosaurus):
கூரைப்பல்லி
என்னும் பொருளில் அழைக்கப்படுகிறது. முதுகில் உள்ள சிதள்கள் கூரைபோல்
அமைவதால் அவ்வாறு கூறுகின்றனர். அதைவிடச் சிதள் மூமா என்பது தமிழுக்கு
ஏற்றதாக அமையும்.1.5 பாரம்(ton) எடையுள்ளது. முதுகில் உள்ள சிதள்கள் உடல்
வெப்ப நிலையைக் கட்டுப்படுத்தும். 8 கோல்(மீட்டர்)/26அடி நீளமுள்ளது;
தீங்கற்றது; பயிர் உண்ணி.
● சிறு மூமா (Euparkeria):
இங்கிலாந்து நாட்டு இயற்பியலாளர்-விலங்கியலாளர் வில்லியம் கிச்சன்
பார்க்கர் (William Kitchen Parker :23.06.1823 - 03.07.1890) என்னும்
அறிஞரைப் போற்றும் வகையில் பார்க்கரின் சிறந்த விலங்கு
என்னும் பொருள்பட இப்பெயர் இடப்பட்டுள்ளது. எனினும் சிறிய மூமா என்பதால்
நாம் சிறு மூமா என்று சொல்லலாம். 245 பேராயிரம் (மில்லியன்) ஆண்டுகளுக்கு
முன்பு வாழ்ந்த உயிரினம்; கோழி அளவு உடையது; ஊண் உண்ணி; வெகுவிரைவாகச்
செல்லக் கூடியது.
● நெட்டெலும்பு மூமா (Acrocanthosaurus) :
நெடுமுதுகெலும்புப் பல்லி
என்னும் பொருளில் அழைக்கப்படுகிறது. நெட்டெலும்புப் பல்லி என்று சொன்னால்
தவறாகப் புரிந்து கொள்ளலாம். எனவே, நெட்டெலும்பு மூமா எனலாம். இருகால்
உயிரி; பிற உயிரிகளை இரையாகக் கொண்டு வாழும்; இதன் நீளம் ஏறத்தாழ 12
கோல்(மீட்டர்); இதன் எடை 6 முதல் 7 பதின் பாரம் (மெட்ரிக் டன்).
● நெடுங்கழுத்தி மூமா(Mamenchisaurus):
தாவர உண்ணி. 156 முதல் 145 பேராயிரம் (மிலலியன்) ஆண்டுகளுக்கு முற்பட்ட
இனம். 9.3 கோல் (மீட்டர்)/31 அடி நீளமுடைய நெடுங்கழுத்தும் நீண்ட வாலும்
உடைய நாற்கால் விலங்கு. மிக நீளமான கழுத்தையுடைய தோற்றத்தின் அடிப்படையில்
நெடுங்கழுத்தி மூமா எனப்படுகிறது. இதன் நீளம் 21 கோல்(மீட்டர்).
● பயிர் உண் மூமா (Dryosaurus):
இதன்பின் கடைவாய்ப்பற்கள் கருவாலி(ஓக்) இலை போன்று இருப்பதால் கருவாலி(ஓக்) பல்லி
என்னும் பொருளில் அழைக்கின்றனர். பயிரினங்களை உண்பதால், பயிர் உண் மூமா
என்று நாம் சொல்லலாம். சதைஉண் மூமாக்களிடமிருந்து தப்பிப்பதற்காக மிக
விரைவாகச் செல்கிறது.
● பரு மூமா (Brontosaurus):
இடி முழக்கப் பல்லி என்னும் பொருளில் பெயர் கொண்டது. பருத்த உடல் அமைப்பின் அடிப்படையில் நாம், பரு மூமா என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். 200 பதின்நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம்; 21 கோல்(மீட்டர்) /69 அடி நீளமுடையது.
● புடைப்போட்டு மூமா(Stygimoloch) :
ஃச்டைக்சு(styx) ஆற்றிலிருந்து வந்த பேய்
என்னும் பொருளில் அழைக்கப் படுகிறது. பயிருண்ணி மூமா; இருகால் விலங்கு.
இதன் தலை ஓட்டில் கொம்பு போன்ற 4 அங்குலப் புடைப்பு இருக்கும். எனவே,
இதனைப் புடைப்போட்டு மூமாஎன்று சொல்லலாம். இதன் நீளம் 2 முதல் 3
கோல்(மீட்டர்); எடை 170 நிறை.
● புள்ளலகி மூமா(Pterodactylus):
சிறகு விரல்
என்னும் பொருளில் அழைக்கப்படுகிறது. பறவையின் அலகைப் போன்ற அலகு உடையது.
எனவே, புள்ளலகி மூமா என்று சொல்லலாம். மிக நீண்ட இறக்கை உடையது.
● பெரு மூ மா (Tyrannosaurus):
பல்லி அரக்கன்
என்னும் பொருளில் குறிப்பிட்டுள்ளனர். அரக்கன் என்பது உயர்திணை. அரக்கனைப்
போன்ற பெருந்தோற்றம் கொண்டது என்பதால் பெருமூமா என்று சொல்வதே சிறப்பாய்
அமையும். 100 பதின்நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினம். 5
கோல்(மீட்டர்)/16 .2 அடி உயரமும் 14 கோல்(மீட்டர்)/45 அடி நீளமும் உள்ளது;
6.8 பதின்பார(metric ton)எடை உடையது.
● முக்கொம்பு மூமா (Triceratops):
முகத்தில் மூன்று கொம்புகளை உடையது. மூன்று கொம்புடைய முகம்
என்னும் பொருளில் அழைக்கப்படுகிறது. எனவே, மூன்று கொம்புடைய -
முக்கொம்புடைய - மூமா என்னும் பொருளில் முக்கொம்பு மூமா என்பது பொருத்தமாக
இருக்கும். 6 பாரம்(ton) எடையுடையது; 9 கோல்(மீட்டர்)/30அடி நீளமுடையது.
இதுவும் பயிர் உண்ணியே.
● மூச்சிறகி(pteranodon):
பெரும் சிறகின் அடிப்படையில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெருஞ்சிறகினை
உடைய மூத்த இனம் என்பதால் மூச்சிறகி எனப்படுகிறது. 100 பேராயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம். 7.5 கோல்(மீட்டர்)/25 அடி நீளத்தில்
பெருஞ் சிறகுடையது. எனினும் பறவை போல் உயரத்தில் பறக்காது. தலையிலுள்ள
தட்டைக் கொம்பு சுக்கான் போல் செயல்படும். இரையாகப் பிற உயிரைக் கொன்று
தின்னும் இரைகொல்லி விலங்கு.
● மூ நீரி(Plesiasaurus):
பல்லியை விட நீர் வாழ் மீனினத்துடன் ஒப்புமை மிகுதியாக உள்ளமையால் பல்லியை ஒத்தது
என்னும் பொருளில் அழைத்துள்ளனர். நீரில் வாழும் உயிரி என்ற வகையில்
தமிழில் தெளிவாகவே மூநீரி என்று சொல்லலாம். 200 பேராயிரம் ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம்; 5 கோல்(மீட்டர்)/16 அடி நீளமுடையது.
● மூப் புள்(archaeopteryx):
தொன்மைச்சிறகு என்னும் பொருளில் அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் மூலப்பறவை அல்லது முதல் பறவை என்னும் பொருள்கொண்ட உருவோகெல்(Urvogel)
என்னும் செருமானியப் பெயரிலும் குறிக்கப்படுகின்றது. மூப்புள் எனத்
தமிழி்ல் இப்பொருளில் சுருக்கமாகச் சொல்வது சிறப்பாக உள்ளது. 195-135
பேராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம்; .5 கோல்(அரை மீட்டர்) நீளம் உடையது; காகம் அளவுடையது. சிறு வடிவப்பறவை. எனினும் இதன் சிறகுகள் நீளமானவை.
● மூ மீனம்(Ichthysaurus):
மீன் பல்லி
என்னும் பொருளில் அழைக்கப்பட்டாலும் நீர் வாழ் உயிரினமான இதனை மூ மீனம்
என்பதே பொருத்தமாக இருக்கும். 2 கோல் முதல் 10 கோல்(மீட்டர்)/(6.6 அடி
முதல் 33அடி) வரை நீளமுள்ளது. பொதுவாகச் சிறிய அளவிலே காணப்பட்டவை. 225
பேராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த (கடற்பன்றி/டால்பின் வகை) உயிரினம்.
மீன்களை உண்பது. ஊனுண்ணி; பிற உயிரினங்களின் சதை முதலியவற்றை உண்ணும்
உயிரினம்.
● மூப் பெரு முதலை(Deionosuchus):
பயங்கர முதலை
என்னும் பொருளில் பெயரிட்டுள்ளனர். பெருத்த உருவம் கொண்ட முதலை என்பதால்
மூப் பெரு முதலை என்று சொல்லலாம். 75 பேராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
வாழ்ந்த உயிரினம். 16 கோல்(மீட்டர்)/52அடி நீளம் வரை உள்ளது.
மேலும் நூற்றுக்கணக்கிலான மூமாக்கள் பற்றிக் கண்டறிந்து உள்ளனர். எனவே, இவற்றின் தொடர்ச்சியைப் பிறிதொரு நாளில் காணலாம்.
Monday, September 24, 2012
நுண்ணோக்கி(microscope)
நுண்ணோக்கி(microscope)
இலக்குவனார் திருவள்ளுவன்
பழந்தமிழகத்தில் கண்ணாடி, ஆடி, படிகம், புளகம், அத்தம், படிமக்கலம், உருவங்காட்டி, கஞ்சனம் எனக் கண்ணாடிகள் குறிக்கப் பெற்றுள்ளன; தொலை நோக்காடி, நுண்ணோக்காடி போன்றவை இருந்ததற்கான குறிப்பு கிடைக்கவில்லை. ஆனால், மிகத் தொலைவில் உள்ள கோள்கள், விண்மீன்கள், பிற விண் பொருள்கள் பற்றியும் மிகச்சிறிய அணு நோயுயிரி பற்றியும் நன்கு அறிந்திருந்தனர். இத்தகைய அறிவியல் அறிவைப் பெறவும் தொலைவில் எதிரிகள் வருவதை அறியவும் எவ்வகை ஆடிகளைப் பயன்படுத்தி உள்ளனர் எனத் தெரியவில்லை.
கண்ணுக்குப் புலப்படாத மிகச் சிறிய பொருள்களையும் மிகப்பெரிதாகக் காட்டும்கருவியான நுண்ணோக்கி, நோய்மிகளை அறிந்து கொள்ளவும் இலை, வேர் முதலியவற்றின் அமைப்பைத் தெரிந்து கொள்ளவும் பல வழிகளில் பயன்படுகிறது.
பல்வகையிலான நுண்நோக்கிகள் பயன்பாட்டில் உள்ளன. என்றாலும் நுண்நோக்கி எனும்போது முதலில் கண்டறியப்பட்ட ஒளி நுண்நோக்கியையே குறிக்கின்றது.
10ஆம் நூற்றாண்டில் படிப்பதற்கு உதவியாக எழுத்துருப் பெருக்கிக் கண்ணாடி உருவாக்கப்பட்டது. கி.பி.1284 இல் சால்வினோ தி அர்மதெ (Salvino D'Armate) என்னும் இத்தாலியர் அணியக்கூடிய கண்ணாடியைக் கண்டு பிடித்தார்.
நெதர்லாந்தில் உள்ள மூக்குக் கண்ணாடி உருவாக்கும் ஆன்சு ஏன்சென்(Hans Janssen)னும் அவருடைய மகன் சக்கரியாசு ஏன்சென்னும்(Zacharias Janssen) 1590 இல் கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கினார்கள்.
அண்டன் வான் இலீவன்ஃகோக்கு (Anton van Leeuwenhoek, 1632-1723) என்னும் அறிவியலாளர் இதன் தரத்தை உயர்த்தி, உருப்பெருக்கத்தையும் உயர்த்தினார்
17ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அறிஞர் கலிலியோ கலிலி (Galileo Galilei 1564-1642) குழி வில்லைகளையும் குவி வில்லைகளையும் பயன்படுத்திக் கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கினார். இதற்கு செருமானிய மருத்துவர் கியோவான்னி ஃபபெர்(Giovanni Faber) மைக்கிராசுகோப்பு(microscope)- நுண்ணோக்கி என்னும் பெயரைச் சூட்டினார்.
செருமானிய இயற்பியலாளர் எர்னசுட் உருசுக்கா (Ernst Ruska: 25.12.1906 – 27.05. 1988) முதலில் மின்னணு வில்லையை உருவாக்கினார். 1933 ஆம் ஆண்டில் இயற்பியலாளர் மாக்ஃசு நொல் என்பாருடன் சேர்ந்து மின்னணு நுண்ணோக்கியை உருவாக்கினார். இதன் மூலம் 400 மடங்கு உருப்பெருக்கத்தைக் காண முடிந்தது. நடைமுறைத் தேவைகளுக்கு இந்நுண்ணோக்கி போதுமானதாக இல்லை. எனவே, மேலும் திருத்தமான நுண்ணோக்கிப் படைப்பிற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
1938 இல் கனடாவிலுள்ள உரொராண்டோ பல்கலைக் கழகத்தில், எலி பிராங்க்ளின் பர்ட்டன் (Eli Franklin Burton), அவரது மாணவர்களான சிசில் ஆல் (Cecil Hall), சேம்சு இல்லியர் (James Hillier), அல்பர்ட் பிறிபசு (Albert Prebus) ஆகியோர்களால் திருத்தமான நுண்ணோக்கி உருவாக்கப்பட்டது. இவ்வாறான பல்வேறு முயற்சிகளால், வெவ்வேறு தர நுண்ணோக்கிகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும் அனைத்திற்கும் அடிப்படை இயற்பியலாளர் எர்னசுட் உருசுக்கா படைத்ததே. எனவேதான் இவருக்கு 1986 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல்பரிசு (பகிர்வாக) வழங்கப் பெற்றது.
1981 ஆம் ஆண்டு கெர்டு பின்னிங்கு (Gerd Binnig) எய்ன்ரிச்சு உரோரெர் (Heinrich Rohre) ஆகியோர் பொருளின் முப்பருமையைக் காட்டும் அலகூடி நுண்ணோக்கி (scanning tunneling microscope) கண்டுபிடித்தனர். இவ்விருவருக்கும்தான் 1986 ஆண்டுநோபல் பரிசு உருசுக்காவுடன் பகிர்ந்து வழங்கப்பட்டது.
நுண்ணோக்கிகளுள் கைகளில் எடுத்துப்பயன்படுத்தும் இயல்பான உருப்பெருக்காடி தனி நுண்ணோக்கி என்றும் இரு குவி வில்லைகள் அல்லது அவற்றிற்கு மேற்பட்டவற்றைக் கொண்டது கூட்டு நுண்ணோக்கி என்றும் சொல்லப்பெறும். இவைபோல், புற ஊதாக்கதிர் மூலம் உருப் பெருக்கம் காண உதவுவது புற ஊதாக் கதிர் நுண்ணோக்கி என்றும் மின்னணுக் கற்றைகளைப்பயன்படுத்தி மீ நுண்பொருள்களையும் அறிய உதவுவது மின்னணு நுண்ணோக்கி என்றும் சொல்லப்பெறும். எனினும் ஒளியன் நுண்ணோக்கி, மின்னணு நுண்ணோக்கி, வரைவலகி நுண்ணோக்கி என அடிப்படையில் மூவகையாக நுண்ணோக்கிகள் அமைகின்றன. 20நூறாயிரம் மடங்கு பெரிதாக்கிக் காட்டும் மின்னணு நுண்ணோக்கிகளும் இப்போது உள்ளன.
வரைவலகி ஆய்வு முறையில், நுண்ணோக்கி அமைக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பக் கோட்பாட்டு அடிப்படையில், பின் வரும் வகைகள் முதன்மையாக உள்ளன:-
- அணுவிசை நுண்ணோக்கியம் (Atomic Force Microscopy, AFM)
- அமுக்க காந்த வலிவு நுண்ணோக்கியம் (Piezo Force Microscopy, PFM)
- அலகூடு நுண்ணோக்கியம்(Scanning Tunneling Microscopy,STM)
- உந்து விசை உமிழ்வு மின்னணு நுண்ணோக்கியம் (Ballistic Electron Emission Microscopy, BEEM)
- ஒளி வெப்ப நுண்ணலைமாலையியம் (Photothermal Microspectroscopy, PTMS)
- ஒளியன் அலகூடு நுண்ணோக்கியம் (Photon Scanning Tunneling Microscopy, PSTM)
- காந்த ஒத்ததிர்வு வலிவு நுண்ணோக்கியம் (Magnetic Resonance Force Microscopy, MRFM)
- காந்த வலிவு நுண்ணோக்கியம் (Magnetic Force Microscopy, MFM)
- சுழற்சி முனைப்புறு அலகூடு நுண்ணோக்கியம் (Spin Polarized Scanning Tunneling Microscopy,SPSM)
- தழலிஆய்வு வலிவு நுண்ணோக்கியம் (Kelvin Probe Force Microscopy,KPFM) அல்லது புறப்பரப்புதிறல் நுண்ணோக்கியம் (Surface Potential Microscopy,SPM)
- நிலை மின் நுண்ணோக்கியம் (Electrostatic Force Microscopy, EFM)
- பரப்பண்மை வரைவலகி ஒளிசார் நுண்ணோக்கியம் (Near-Field Scanning Optical Microscopy, NSOM) (or Scanning Near-Field Optical Microscopy,SNOM)
- மின்வேதியல் அலகூடு நுண்ணோக்கியம் (Electrochemical Scanning Tunneling Microscope, ESTM)
- வரைவலகி கொண்ம நுண்ணோக்கியம் (Scanning Capacitance Microscopy, SCM)
- வரைவலகி மின்துகள் கடத்தும நுண்ணோக்கியம்(Scanning Ion-Conductance Microscopy,SICM)
- வரைவலகி மின்வேதிய நுண்ணோக்கியம் (Scanning Electrochemical Microscopy, SECM)
- வரைவலகி மின்னழுத்த நுண்ணோக்கியம்(Scanning Voltage Microscopy,SVM)
- வரைவலகி மீ.ஏதி நுண்ணோக்கி முறை (Scanning SQUID microscope, SSM)[மீ. ஏதி - மீக்கடத்துக் குவைய இடையீட்டு ஏதி(SQUID-Superconducting Quantum Interference Device)]
- வரைவலகி முற்ற ஆய்வு நுண்ணோக்கியம்(Scanning Hall Probe Microscopy, SHPM)
- வரைவலகி வாயில் நுண்ணோக்கியம் (Scanning Gate Microscopy, SGM)
- வரைவலகி வெப்பஞ்சார் நுண்ணோக்கியம் (Scanning Thermal Microscopy, SThM)
- வலிவேற்ற நுண்ணோக்கியம் (Force Modulation Microscopy, FMM)
Friday, September 21, 2012
தனிமங்கள்(Chemical Elements)
தனிமங்கள்(Chemical Elements)
- இலக்குவனார் திருவள்ளுவன்
அணுக்கள் பல இணைந்தவையே பொருள்கள். இவற்றுள் ஒரே வகை அணுக்கள் பல
சேர்ந்தது தனிமம்(element) எனப்படுகிறது. ஒரு தனிமத்தின் அணுவைப்போல்
மற்றொரு தனிமத்தின் அணு இருக்காது. ஆதலின் ஒரே அணு எண் கொண்ட அணுக்களால்
முழுவதுமான பொருளே தனிமம் ஆகும். சான்றாக இரும்பு ஒரு தனிமம். இதில்
இரும்பு அணுக்களின் பொருளைத் தவிர வேறு எந்தப் பொருளின் அணுக்களும் இரா.
தனிமமானது மாழை(உலோகம்), அல்மாழை(அலோகம்) என இருவகைப்படும்.
இயல்பான நிலையில் தனிமங்கள் திண்பொருளாகவும்(எ.கா. பொன், செம்பு)
நீர்ப்பொருளாகவும் [(எ.கா. (அ.) மாழை: அதள்(பாதரசம்) ; (ஆ.) அல்மாழை:
செந்நீர்மம் (புரோமின்)], சில வளிநிலையிலும் (எ.கா. உயிர்வளி) உள்ளன.
இயற்கையில் பல தனிமங்கள், வேறு சில தனிமங்களுடன் சேர்ந்தே கிடைக்கின்றன.
இவ்வாறு இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட நிறை
விகிதத்தில் இணைந்து சேர்ந்த கலவை சேர்மம் எனப்பெறும்.
அதே போல் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தூய பொருள்கள் வீத அளவின்றிச் சேருவது கலவை.
தனிமத்தின் மிக மிகச்சிறிய அலகுதான் அணு எனப்பெறுகிறது. அணுவானது
முன்னணு(புரோட்டான்), நள்ளணு(நியூட்ரான்), மின்னணு( எலக்ட்ரான்) போன்ற
நுண்ணிய அணுத்துகள்களாகப்பிரிக்கப்படக் கூடியது.
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட அணுக்கள் ஒன்று சேர்ந்து மூலக்கூறுகளை (molecules) உண்டாக்குகின்றன.
அணுக்கள் சேர்ந்து மூலக்கூறுகளை உருவாக்காமல் தனித்த நிலையில் உள்ள
அணுக்களை அடிப்படை அலகுகளாகக் கொண்ட தனிமங்கள் உள்ளன. இவை ஓரணுத்
தனிமங்கள் ஆகும்.
இவற்றுள் ஒரே வகை அணுக்கள் சேர்ந்த மூலக்கூறுகளை உடையது தனிமம்.
வெவ்வேறு வகை அணுக்கள் சேர்ந்த மூலக்கூறுகளைக் கொண்டது சேர்மம்.
ஒரு தனிமத்தின் அணுவின் உட்கருவில் உள்ள முன்னணுக்களின்(புரோட்டன்களின்)
எண்ணிக்கையைக் குறிப்பது அணு எண் எனப்பெறும். தனிமங்களின் பெயர்கள் அணு
எண்களின் வரிசைக்கு ஏற்பவும் அணுநிறைகளின் வரிசைக்கு ஏற்பவும் அகர
வரிசைப்படியும் அட்டவணையாக உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு நாம், அணு எண்
நிரல்படி அட்டவணையைப் பார்ப்போம்.
தனிமத்தின் பெயர்களுள் பல இலத்தீன், கிரேக்கம் முதலிய மொழிச்
சொற்களாகும். கண்டறிந்த வல்லுநர்களின் பெயர்கள், கண்டறிந்த இடங்களின்
பெயர்கள், பிற அறிவியல் அறிஞர்களின் பெயர்கள் என்ற முறையில் பல பெயர்கள்
அமைந்துள்ளன. இப் பெயர்களில் இருக்கும் ஒன்று அல்லது இரண்டு எழுத்துகளில்
உருவாக்கப்பட்டதே வேதியல் குறியீடு ஆகும். நாம் ஏன் இவற்றைத் தமிழில்
குறிப்பிட வேண்டும் எனச் சிலர் வினவலாம். தமிழில் படித்தால்தான் நன்கு
புரிந்து கொள்ளவும் உள்ளத்தில் பதிந்து கொள்ளவும் இயலும். தொடக்க
நிலையில் தமிழிலும் பின்னர் அடைப்பிற்குள் உள்ள பன்னாட்டு முறையையும்
தெரிந்து கொள்வதே நலமாகும்.
தனிமங்களின் அட்டவணை
அணு எண்
|
தனிமம்
|
குறியீடு
| அணுநிறை |
| 1 | நீர்வளி (Hydrogen) | நீ (H) | 1.00797 |
| 2 | கதிர்வளி (Helium) | க (He) | 4.0026 |
| 3 | கல்லம் (Lithium) | கல் (Li) | 6.94 |
| 4 | குருகம் (Beryllium) | கு (Be) | 9.0122 |
| 5 | பழுப்பம் (Boron) | ப (B) | 10.811 |
| 6 | கரிமம் (Carbon) | கரி (C) | 12.011 |
| 7 | வெடிவளி (Nitrogen) | வெ (N) | 14.0677 |
| 8 | உயிர்வளி (Oxygen) | உ (O) | 15.994 |
| 9 | பைம்மஞ்சள்வளி (Fluorine) | பை (F) | 18.9984 |
| 10 | புத்தொளிரி (Neon) | பு (Ne) | 20.1797 |
| 11 | வெடிமம் (Sodium) | வெடி (Na) | 22.9898 |
| 12 | வெளிமம் (Magnesium) | வெளி (Mg) | 24.312 |
| 13 | ஈயம் (Aluminium) | ஈம் (Al) | 26.98 |
| 14 | கன்மம் (Silicon ) | கன் (Si) | 28.086 |
| 15 | எரிமம் (Phosphorous) | எ (P) | 30.974 |
| 16 | கந்தகம் (Sulfur) | கக (S) | 32.064 |
| 17 | பாசிகம் (Chlorine) | பா (Cl) | 35.453 |
| 18 | மடியன் (Argon ) | மடி (Ar ) | 39.9 |
| 19 | சாம்பரம் (Potassium ) | சா (K ) | 40.1 |
| 20 | சுதைமம் (Calcium) | சு (Ca) | 45.0 |
| 21 | ‘காண்டிமம்’ (Scandium ) | கா (Sc ) | 44.956 |
| 22 | கரும்பொன்மம் (Titanium ) | கரு (Ti) | 47.9 |
| 23 | வெண்ணாகம் (Vanadium ) | வெக(V ) | 50.942 |
| 24 | குருமம் (Chromium ) | குரு (Cr ) | 51.996 |
| 25 | மங்கனம் (Manganese ) | மங் (Mn ) | 54.938 |
| 26 | இரும்பு (iron) | இரு (Fe ) | 55.847 |
| 27 | வண்ணிமம் (Cobalt) | வண் ( Co) | 58.933 |
| 28 | வெள்ளையம் (Nickel ) | வெய (Ni i ) | 58.91 |
| 23 | செம்பு (Copper ) | செ (Cu ) | 63.5 |
| 30 | துத்தநாகம் (Zinc ) | து (Z n) | 65.4 |
| 31 | நரைமம் (Gallium ) | ந (Ga) | 69.72 |
| 32 | ‘செருமம்’ (Rubidium ) | செரு (Rb) | 72.59 |
| 33 | சவ்வீரம் (Arsenic ) | ச (As) | 74.9 |
| 34 | மதிமம் (Selenium) | நி (Se) | 78.96 |
| 35 | செந்நீர்மம் (Bromine) | செநீ (Br) | 79.904 |
| 36 | மறைவளி (Krypton) | மறை (Kr) | 83.80 |
| 37 | செவ்வரிமம்(Rubidium) | செம் (Rb) | 85.47 |
| 38 | வெண்ணிமம்(Stronium) | வெணி(Sr) | 87.62 |
| 39 | கருநரைமம்(Yttrium) | கந (Y) | 88.905 |
| 40 | வண்மம்(Zirconium) | வம(Zr) | 91.22 |
| 41 | அருமிமம்(Niobium) | அரு (Nb) | 92.906 |
| 42 | முறிவெள்ளி(Molybdenum) | மு(Mo) | 95.94 |
| 43 | செயற்கைத்தனிமம்(Technetium) | செய(Te) | 97.9072 |
| 44 | சீர்பொன்(Ruthenium) | சீர்(Ru) | 101.07 |
| 45 | திண்ணிமம்(Rhodium) | திண்(Rh) | 102.90550 |
| 46 | பொன்னிமம்(Palladium) | பொம்(Pd) | 106.42 |
| 47 | வெள்ளி(Silver) | வெள்(Ag) | 107.8682 |
| 48 | வெண்ணீலிமம்(Cadmium) | வெநீ(Cd) | 112.44 |
| 49 | நீலவரிமம்(Indium) | நீவ(In) | 114.8182 |
| 50 | வெள்ளீயம்(Tin) | வெஈ(Sn) | 118.710 |
| 51 | நொய்ம்மிமம்(Antimony) | நொ(Sb) | 121.760 |
| 52 | ஒளிர்மம்(Tellurium) | ஒ(Te) | 127.60 |
| 53 | கருமயிலம்(Iodine) | கம(I) | 126.90447 |
| 54 | அயலிமம்(Xenon) | அய (Xe) | 131.30 |
| 55 | நீலநீறிமம்(Cesium) | நீநீ(Cs) | 132.90543 |
| 56 | மங்கிமம்(Barium) | ம(Ba) | 137.327 |
| 57 | ஊக்கிமம்(Lanthanum) | ஊ(La) | 138.9055 |
| 58 | நெகிழிமம்(Cerium) | நெ(Ce) | 140.115 |
| 59 | வெண்மஞ்சை(Praseodymium) | வெம(Pr) | 140.90765 |
| 60 | புதுமஞ்சை(Neodymium) | புமNd) | 144.24 |
| 61 | கதிர்மம்(Promethium) | கம்(Pm) | 144.9127 |
| 62 | வெண்நரைமம்(Samarium) | வெந(Sm) | 150.35 |
| 63 | ‘ஐரோப்பிமம்’ (Europium) | ஐ(Eu) | 151.965 |
| 64 | காந்தனிமம்(Gadolinium) | காம் (Gd) | 157.25 |
| 65 | விளர்மம்(Terbium) | விள(Tb) | 158.92534 |
| 66 | உறிமம்(Dysprosium) | உறி(Dy) | 162.50 |
| 67 | ‘ஓல்மிமம்’(Holmium) | ஓ(Ho) | 164.93032 |
| 68 | ‘எர்பிமம்’ (Erbium) | எர்(Er) | 167.26 |
| 69 | வடமம்(Thulium) | வ(Tm | 168.93421 |
| 70 | ‘எட்டர்பிமம்’(Ytterbium) | எம் (Yb) | 173.04 |
| 71 | மஞ்சிமம்(Lutetium) | மம் (Lu) | 174.967 |
| 72 | ‘ஆஃப்னிமம்’(Hafnium) | ஆஃப்(Hf) | 178.49 |
| 73 | வெம்மம்(Tantalum) | வெம்(Ta) | 180.9479 |
| 74 | மின்னிழைமம்(Tungsten) | மி(W) | 183.84 |
| 75 | அரிமம்(Rhenium) | அரி(Re) | 186.207 |
| 76 | விஞ்சிமம்(Osmium) | விம்(Os) | 190.2 |
| 77 | உறுதிமம்(Iridium) | உறு(Ir) | 192.217 |
| 78 | வன்பொன்(Platinum) | வ.பொ.(Pt) | 195.08 |
| 79 | தங்கம்(Gold) | த(Au) | 196.95654 |
| 80 | இதள்(Mercury) | இத(Hg) | 200.59 |
| 81 | சாம்பிமம்(Thallium) | சாம்(Ti) | 204.3833 |
| 82 | காரீயம்(Lead) | காரீ(Pb) | 207.2 |
| 83 | நிமிளை(Bismuth) | நிமி(Bi) | 208.98037 |
| 84 | மஞ்சளம்(Polonium) | மள்(Po) | 208.9824 |
| 85 | நொறுங்கிமம்(Astatine) | நொறு(At) | 209.9871 |
| 86 | கதிரம்(Radon) | கர(Rn) | 222.0176 |
| 87 | ‘விரெஞ்சிமம்’(Francium) | விரெ(Fr) | 223.0197 |
| 88 | கதிரிமம்(Radium) | கதி(Ra) | 226.0254 |
| 89 | கதிர்வினைமம்(Actinium) | கவி(Ac) | 227.0278 |
| 90 | சுடரிமம்(Thorium) | சுட(Th) | 232.0381 |
| 91 | புறக்கதிரம்(Protactinium) | புற(Pa) | 231.0388 |
| 92 | விண்ணிமம்(Uranium) | விண்(U) | 238.0289 |
| 93 | சேண்மிமம்(Neptunium) | சேண்(Np) | 237.0482 |
| 94 | சேணாமம்(Plutonium) | சேய்(Pu) | 244.0642 |
| 95 | ‘அமரிக்கம்’(Americium) | அமெ(Am) | 243.0614 |
| 96 | ‘கியூரிமம்’(Curium) | கியூ(Cm) | 247.0703 |
| 97 | ‘பெரிக்ளிமம்’(Berkelium) | பெரி(Bk) | 247.0703 |
| 98 | ‘கலிபோரிமம்’(Californium) | கலி(Cf) | 251.0796 |
| 99 | ‘ஐன்சுதீனம்’(Einsteinium) | ஐன்(Es) | 252.083 |
| 100 | ‘வெரிமம்’(Fermium) | வெர்(Fm) | 257.0951 |
| 101 | ‘மெந்தலீமம்’ (Mendelivium) | மெம் (Md) | 258.10 |
| 102 | ‘நோபிளம்’(Nobelium) | நோ(No) | 259.1009 |
| 103 | ‘இலாரன்சம்’(Lawrencium) | இலா(Lr) | 262.11 |
| 104 | ‘உருத்தரம்’(Rutherfordium) | உரு(Rf) | 261 |
தனிமங்களின் தன்மை, நிறம், கண்டறியப்பட்ட இடம், மிகுதியாய்க்
கிடைக்கும் இடம், அறிஞர் பெயர் முதலியவற்றின் அடிப்படையில் பெயர்
சூட்டப்பட்டவாறே தமிழிலும் தரப்பட்டுள்ளன. எனினும் ஒற்றை மேற்கோளுக்குள்
சாய்வெழுத்துகளில் அடங்கியவை பன்னாட்டு முறையிலேயே அளிக்கப்பட்டுள்ளன. இவை
நம்நாட்டில் கிடைக்கக்கூடிய இடங்களில் பெயர் சூட்டுவது பொருத்தமாக
இருக்கும் எனக் கருதி இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளன. பிற அறிவியல் தமிழ்
அகராதிகளில் உள்ளவற்றை விடமிகுதியாகத் தமிழில் குறிக்கப்பெற்றுள்ளன. நண்பர்
ஒருவர் புதுச்சேரியில் அறிஞர் ஒருவர் தனிமங்களைத் தமிழில்
குறிப்பிட்டுள்ளாரே. பார்க்கவிலலையா? புதியன ஏன்? என்றார். அக்கையேடு
கிடைக்கவில்லை. எனினும் பின்னர் தமிழ்ப்பல்கலைக்கழக அறிவியல் களஞ்சியத்தில்
உள்ள பட்டியலைப் பார்த்தேன். இப்பட்டியல்தான் தனி நூல் வடிவம்
பெற்றிருக்கும் எனக் கருதுகிறேன். இவ்வட்டவணைக்கும் பல்கலைக்கழக
அட்டவணைக்கும் ஒரு பகுதி ஒற்றுமை உள்ளது. ஆனால், தமிழில் குறிக்க
இயலாதபொழுது அறிவியல் பெயர்களை அயல்மொழி என உணரும் வண்ணமே குறிக்க
வேண்டும். அவ்வாறு இல்லாமல் தமிழ் எனத் தவறாக உணரும் வண்ணம் குறிக்கக்
கூடாது. பல்கலைக்கழக அட்டவணை அவ்வாறுதான் உள்ளது. சான்றாக அலுமினியம்
என்பது அளமியம் எனக் குறிக்கப்பெற்றுள்ளது. இதைப்படிப்பவர்கள் நல்ல
தமிழ்ப்பெயர் என நம்பும் மாயை உள்ளது, உண்மையில் அலுமினியத்திலுள்ள முதல்
நான்கு எழுத்துகள் (ALUM)அளம்; என ஒலிப்பிக்கப்பட்டு அளம் + இயம் =
அளமியம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இதுபோல்தான் அப்பட்டியலில்
நாற்பதுக்கும் மேற்பட்ட தனிமங்கள் பெயர்கள் தமிழ் வடிவ ஒலி பெயர்ப்பில்
குறிக்கப் பட்டுள்ளன. எனவே அவை செம்மையை எதிர்நோக்கிய இடைக்கால
ஏற்பாடாகத்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் எனலாம். மேலும் கடோலின்
என்னும் அறிஞர் பெயர் சுட்டப்பெற்ற ‘கடோலின்’ என்பதைக் god - கடவுள் எனக்
கொண்டு கடவுளியம் எனக் கூறியுள்ளதும் பொருந்தாது. எனவே பிற தமிழ் வடிவம்
கண்டு குழம்ப வேண்டா.
இங்கே 104 தனிமங்கள்குறிக்கப்பெற்றுள்ளன. இப்பொழுது 118 தனிமங்களைக்
கண்டறிந்துள்ளனர். எஞ்சியன குறித்துப்பிறிதோர் சமயம் காணலாம்.
Subscribe to:
Comments (Atom)









