Wednesday, July 23, 2025

வெருளி நோய்கள் 151 -155 : இலக்குவனார் திருவள்ளுவன் வெருளி நோய்கள் 151 -155 : இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 146 -150 தொடர்ச்சி)

151. அடிபந்தாட்ட வெருளி – Baseballphobia 

அடி பந்தாட்டம்(Baseball) குறித்த காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் அடி பந்தாட்ட வெருளி.

எந்த விளையாட்டாக இருந்தாலும் வெற்றி கிடைக்குமா அல்லது தோல்விையச் சந்திக்க நேருமா என்ற கவலை வருவது இயற்கை. அடி பந்தாட்டத்தில் பந்து படக்கூாத இடத்தில் பட்டுவிடுமோ, பந்தால் காயம் ஏற்படுமோ, அடுத்தவருக்குக் காயத்தை ஏற்படுத்தி அதனால் சண்டை வருமோ என்றெல்லாம் தேவையின்றிக் கவலைப்படுவோர் உள்ளனர். சிறு பருவத்தில் இவ்வாறு நேர்ந்ததாலோ அல்லது பிறருக்கு இவ்வாறு நேர்ந்ததைப் பாரத்ததாலோ வளர்ந்த பின்னரும் அச்சத்தை வளர்த்துக் கொண்டு கவலைப்படுவர்.

00

152. அடுக்கப்ப வெருளி – Pizzaphobia/Pepperluciophobia

அடுக்கப்பம் (Pizza) உணவு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அடுக்கப்ப வெருளி.

அடுக்கப்பம் [பீசா அல்லது பீத்துசா (pizza/piːtsə)] என்பது இத்தாலி உணவு. நம் நாட்டில் அன்றாட உணவுபோல் மிகுதியாக விற்பனையாகிறது. மேல்பகுதியில் தக்காளிச் சாறு, பாலாடைக்கட்டியும் அதற்கடுத்த அடுக்காகக் கீழ்ப்பகுதியில் இறைச்சிகள், கொத்துக்கறி, கடல் உணவுகள், பாலாடைக்கட்டிகள், காய்கறிகள், கீரைகள் முதலானவற்றையும் வைத்து அடுமனையில் சுடப்படும் தட்டையான வட்ட வடிவான உரொட்டி ஆகும்.

அடுத்தடுத்து அடுக்குபோல் உண்பொருள்கள் வைக்கப்படுவதால் அடுக்கப்பம் என்று கூறலாம். 

00

153. அடுக்கப்ப நறுக்கி வெருளி – B&cophobia 

அடுக்கப்ப நறுக்கி(pizza cutter) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அடுக்கப்ப வெருளி

இதனைப் பேரளவில் செய்து விட்டு நறுக்கியால்(pizza cutter) தேவையான வட்டவடிவுகளில் நறுக்குகினறனர். நறுக்கப்பயன்படும் அடுக்கப்ப நறுக்கி குறித்து ஏற்படும், கை விரல்களை வெட்டி விடும் என்பதுபோன்ற தேவையற்ற பேரச்சத்தையே அடுக்கப்ப நறுக்கி வெருளி வெளிப்படுத்துகிறது. 

அடுக்கப்பம் குறித்த விளக்கத்தை அடுக்கப்ப வெருளியில் காண்க.

00

154. அடுக்கப்பப் பெட்டி வெருளி – P🐟xmophobia  

அடுக்கப்பப் பெட்டி (pizza box) குறித்த வரம்பற்ற பேரச்சம் அடுக்கப்பப் பெட்டி வெருளி.

அடுக்கப்பம் குறித்த விளக்கத்தை அடுக்கப்ப நறுக்கி வெருளியில் காணலாம்

அடுக்கப்பத்தை எடுத்துச் செல்வதற்கும் சிறிது நேரமேனும் சூடு ஆறாமல் இருப்பதற்காகவும் பெட்டியைப்பயன்படுத்துகின்றனர். பெட்டியிலுள்ள நச்சு மை, பசை, சாயங்கள் முதலானவை அடுக்கப்பச் சூட்டினால் வேதியல் மாற்றத்திற்கு ஆளாகி உடலுக்குத் தீங்கு இழைக்கும். இதனால் பாலுணர்வுச் சுரப்பிகளுக்கு ஊறுநேரும் என்ற அச்சமும் உள்ளது. பெட்டியைப் பயன்படுத்துவால் ஏற்படலாம் எனக் கருதப்படும் தீங்குகள் குறித்து ஏற்படும்  அளவுகடந்த பேரச்சமே அடுக்கப்பப் பெட்டி வெருளி ஆகும்.

00

155. அடுக்குமனை வெருளி – Apartmentphobia

அடுக்குமனை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அடுக்குமனை வெருளி.

அடுக்குமனைகளில் குடியிருக்கும் அண்டை வீட்டார் அல்லது பிறரால் சண்டைகள் வரும், குடியிருப்பின் பொதுவான செயல்பாடுகள், சங்க ஈடுபாடுகள் ஆகியவற்றால் தகராறு வரும், பழகியும் பழகாமலும் பொறாமைப்டுவோர் இருப்பர் என்பனபோன்றவற்றை நினைத்துப் பெருங்கவலை கொள்வோர் உள்ளனர்.

அடுக்குமனைகளில் குடியிருப்பது குறித்த தேவையற்ற பேரச்சமே அடுக்குமனை வெருளி.

சரியான விதிமுறைகளைப் பின்பற்றிக் கட்டப்படாமல் இடிந்து விழும் அடுக்குமனைபற்றிய செய்திகளையும் அரசு விதிகளை மீறிக் கட்டப்படும் அடுக்குமனைகள் இடிக்கப்படும் நிலைகள் குறித்த செய்திகளையும்  படிப்போர் அடுக்குமனைகளை வாங்குவதற்கும் அஞ்சுவர். வாங்கிவிட்டால் அச்சத்துடனே குடியிருப்பர். பன்மாட அடுக்ககத்தில் வாழ்வோருக்கு ஏற்படும் தேவையற்ற அளவு கடந்த பேரச்சமும் இத்தகையதே!

00

(தொடரும் )

Tuesday, July 22, 2025

வெருளி நோய்கள் 146 -150 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 141 -145 : தொடர்ச்சி)

146. அஞ்சல் முத்திரை வெருளி – Grammatosimophobia

அஞ்சல் முத்திரை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அஞ்சல் முத்திரை வெருளி.

பொதுவாக அஞ்சலகங்களில் பணியாற்றுவோருக்கே அஞ்சல் முத்திரை வெருளி வருகிறது.

அஞ்சல் முத்திரை இடுவதற்குப் போதுமான மை பயன்படுத்தப் பட்டதா? அஞ்சல் முத்திரை தெளிவாக விழுந்திருக்குமா? அஞ்சல் முத்திரை மையால் ஒவ்வாமை ஏற்படுமா என்றெல்லாம் தேவையற்ற கவலையும் அச்சமும் கொள்வர்.

00

147. அஞ்சல் வெருளி –  Postalphobia 

அஞ்சல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அஞ்சல் வெருளி

அஞ்சல்கள்(தபால்கள்), அஞ்சல் பெட்டி, அஞ்சல் கொண்டு வருபவர், வீட்டில் மாட்டும் அஞ்சல்வைப்புப் பெட்டி  முதலியவற்றில் ஒன்று அல்லது பலவற்றின் மீது அச்சம் கொள்வோர் உள்ளனர்.

படிப்பறிவு குறைந்த காலத்தில் அஞ்சல் வந்துள்ளது என்றாலே – அது நல்ல செய்தியைக் கொண்டு வந்திருந்தாலும் உணராமல் அவசரப்பட்டு – ஏதேனும் கெட்ட செய்தி அல்லது துயரச்செய்தி தெரிவிக்க அஞ்சல் வந்ததாக எண்ணி அஞ்சிக் கவலைப்பட்டோர் இருந்தனர்.  இப்பொழுதும் சிலருக்கு அத்தகைய கவலைகள் உண்டு. வீட்டில் மாட்டி வைக்கும் அஞ்சல் பெட்டியில் குறும்புக்காரச் சிறுவர்கள், கற்கள் முதலான  பொருள்கைளப் போட்டு விடுகின்றனர் என்று கவலைப்படுவோரும் உள்ளனர். அஞ்சலகப்பெட்டியில் அஞ்சலைச் சேர்த்த பின்னர், சரியான நேரத்தில் எடுத்திருப்பார்களா, சரியான நேரத்தில் உரியவருக்குச் சென்று சேருமா எனக் கவலைப்படுவோரும் உள்ளனர். என்னதான் மின்னஞ்சல்கள் பெருகினாலும் அஞ்சல் பணிகளும் இருக்கத்தான் செய்கின்றன. எனவே, இதனைப் பயன்படுத்துவோர் தொடர்ந்து கவலைக்கும் அச்சத்திற்கும் உள்ளாகி அஞ்சல் வெருளியராக மாறிவிடுகின்றனர்.

00

148. அடளை வெருளி – Codfishophobia

அடளை மீன்(Codfish) பற்றிய பேரச்சம் அடளை வெருளி

Cod என்றால் மீன் என்றுதான் பொருள். பொதுவாக உண்பதற்குரிய கடல் மீன்வகையைக் குறிக்கிறது. பலவகை கடல் மீன்களுள் அடளை என்பதும் ஒருவகை. இங்கே அடளை என்பது எடுத்தாளப்படுகிறது. உண்மீன் என்று சிலர் குறிக்கின்றனர். அது பொதுவான பெயர் என்பதால் அடளை மீன் எனக் குறித்துள்ளேன்.

00

149. அடிக்கப்படல் வெருளி – Aichmorhabdophobia 

கூர்மையான குச்சியால் அல்லது அதுபோன்ற ஒன்றால் தாக்கப்படுவோம் எனப் பேரச்சம் கொள்வது அடிக்கப்படல் வெருளி.

சிறியவர்களுக்கு மூத்தவர்களால் அடிக்கப்படுவோம் என்ற பேரச்சம் உள்ளது. மாணவர்களுக்கு ஆசிரியர்களாலும் உடன் படிப்பவர்களாலும் அடிக்கப்படுவோம் என்ற பேரச்சம் உள்ளது. இப்பொழுதெல்லாம் மாணாக்கர்களால் தாக்கப்படுவோம் என்ற பேரச்சம் ஆசிரியர்களுக்கு வருகிறது.

aichmorhabdo என்றால் கிரேக்கத்தில் கூர்மையான கம்பி அல்லது கோல் எனப் பொருள்.

00

150. அடிப்பாக ஆடி வெருளி – Hyalinopygophobia

அடிப்பாகம் கண்ணாடியாக இருப்பின் அதுகுறித்து அளவுகடந்த பேரச்சம் கொள்வது அடிப்பாக ஆடி வெருளி.

இத்தகையோர், மெதுவாக வைக்காவிட்டால் கண்ணாடி அடிப்பாகம் உடைந்து விடும்,கீறல் விழும், நீர்மப்பொருள் கசியும் என்பன போன்ற கவலைகளுக்கும் அச்சங்களுக்கும் ஆட்படுகின்றனர்.

00

(தொடரும் )

Monday, July 21, 2025

வெருளி நோய்கள் 141 -145 : இலக்குவனார் திருவள்ளுவன்

      22 July 2025      அகரமுதல



(வெருளி நோய்கள் 136 -140 : தொடர்ச்சி)

141. அச்சச்சூழல் வெருளி-Counterphobia

அச்சம் ஏற்படுவதற்கான சூழல் உருவானால் அதனைத் தவிர்க்க முயலாமல், அளவுகடந்து அஞ்சுவது அச்சச்சூழல்வெருளி.

இஃதும் அச்சச்சூழலின் ஒரு பகுதிதான்.

counter என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் எதிராக.

00

142. அச்சப்ப வெருளி – Zymarikaphobia 

அச்சப்பம் (pasta)பற்றிய அளவற்ற பேரச்சம் அச்சப்ப வெருளி.

pasta என்பதற்கு இலத்தீனில் மாவு, மாவு உணவு என்னும் பொருள்கள். கிரேக்கத்தில் வாற்கோதுமைக் கஞ்சி என்னும் பொருள். இத்தாலிய உணவுவகையான இது, கோதுமை மாவில் செய்யப்பெறும் இடியாப்ப வகை என்பதால் மலையாளத்தில் கோதுமை இடியாப்பம் என்கின்றனர்.

00

143. அச்சுப் பொறி வெருளி –  Printerphobia 

அச்சுப் பொறி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அச்சுப் பொறி வெருளி

எழுத்தச்சுப் பொறிகள் பயன்பாடு உள்ள  இடங்களில் அதைப் பயன்படுத்தும் தொழிலாளிகளுக்கும் உரிமையாளர்களுக்கும் திடீரென்று பழுதானால் என்ன ஆகும் என்பது போன்ற அச்சங்கள் வருகின்றன. அச்சுப்பொறியின் ஒலியால் இடையூறுக்கு ஆளாகிக் கவலைப்படுவர். இப்போது கணிணி அச்சுப்பொறி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கணியச்சுப் பொறியில் தாள் சிக்கிக் கொள்வதால், இயங்கும்போது ஏற்படும் ஒலியால், எதிர்பாராத நேரத்தில் மை உலர்ந்து போவதால் என அமைதியாகச் சிக்கலை எதிர்நோக்கால் வீண் கவலைகளுக்கும் பேரச்சத்திற்கும் ஆளாவோர் உள்ளனர். 

முதலில் இதை மை வெருளி என்றனர். அச்சுமை பரவலாக அமையாமல் அச்சிடப்படும் தாள்கள் ஒரு பகுதியில் மைத்திட்டும் மறு பகுதியில் மை இன்றியும் அமையும். அல்லது மை தீர்ந்ததைச் சரியாகக் கவனிக்காவி்ட்டால் மீண்டும் அச்சிட வேண்டிய வேலை வரும் என்றெல்லாம் கவலைப்படுவதால் இவ்வாறு கூறினர். ஆனால் இப்பொழுது மைக்குழல் – பேனா – எடுத்துச் செலல மறந்து விட்டால்  என்ன ஆகும், எழுதும் பொழுது மை தாளில் அல்லது ஆவணத்தில் சிந்தி விட்டால் அல்லது கையில் ஒட்டிக்கொண்டு அதன்மூலம் தொடும் தாள்களில் பரவிவிட்டால் என்னாவது போன்ற கவலைகள் வரும். எனவே, இதனை மை வெருளி(inkaphobia) எனக் கூறி விட்டனர். அச்சுப்பொறி வெருளியை மை வெருளி என்று சொல்வது இல்லை.

00

144. அஞ்சலூர்தி வெருளி – Yubinshaphobia 

அஞ்சல் உறைகளை எடுத்துச் செல்லும்  ஊர்தி குறித்த அளவுகடந்த பேரச்சம் அஞ்சலூர்தி வெருளி.

அரசு அஞ்சல் ஊர்திகள் பயன்பாடு குறைந்து விட்டாலும் தனியாரின் தூதஞ்சல் ஊர்திகளின் பயன்பாடு மிகுதியாக உள்ளது. அவை பற்றிய பேரச்சமும் இதில் அடங்கும்.

00

145. அஞ்சல் பெட்டி வெருளி –  Xinxiangphobia 

அஞ்சல் பெட்டி குறித்த வரம்பற்ற பேரச்சம் அஞ்சல் பெட்டி வெருளி.

அஞ்சல் வெருளியில் அடங்கும் அஞ்சல் பெட்டி வெருளியைத் தனியாகப் பிரித்து அஞ்சல் பெட்டி வெருளி என்கின்றனர்.

00

(தொடரும் )

Sunday, July 20, 2025

வெருளி நோய்கள் 136 -140 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 131 -135 : தொடர்ச்சி)

136. அகற்றல் வெருளி – Disposophobia

தனிப்பட்ட உடைமைகள் அகற்றப்படுதல் அல்லது காணாமல் போதல் தொடர்பாக ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் அகற்றல் வெருளி.

முதலில் இதை இன்மை வெருளி எனக் குறிப்பிட்டேன். ஆனால், இன்மை வெருளி(nihilophobia / Tipotaphobia/Nullophobia) எனத் தனியாக உள்ளதாலும் இல்லாமையைக் குறிக்கும் இன்மை வெருளியாகக் கூறாமல் இருந்த பின் இல்லாது போதலைக் குறிப்பதால் தனியாகக் குறிக்க வேண்டும் என்பதாலும் இப்பொழுது அகற்றல் வெருளி எனக் குறிக்கப்பட்டுள்ளது.

dispos என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் தனிப்பட்ட பொருள்கள் அகற்றப்படுதல்.

00

137. அக்குள் வெருளி- Maschaliphobia

அக்குள் குறித்து  ஏற்படும் தேவையற்ற பேரச்சம் அக்குள் வெருளி

பொதுவாக அக்குளில் வியர்வை நாற்றம் வருவதால், அப்பகுதியில் முடி வளர்வதால்,  அரிப்பு வருவதால் அக்குள்குறித்த பேரச்சம் வருகிறது.

Achsel என்னும் செருமானியச் சொல்லின் பொருள் அக்குள். அதிலிருந்து Maschali சொல் உருவாகியுள்ளது.

                                                             00      

138. அங்கேரிய வெருளி – Hungarophobia

அங்கேரியர் தொடர்பான மிகை வெறுப்பும் அளவுகடந்த பேரச்சமும் அங்கேரிய வெருளி.

அங்கேரிய மொழி அங்கேரியாவிலும், உருமேனியாவில் சில பகுதிகள், சுலொவாக்கியா, செருபியா, உக்கிரைன், குரோவாட்சுக்கா, ஆத்திரியா, சுலொவீனியா முதலிய நாடுகளிலும் பேசப்படுகின்றது. இங்கெல்லாம் அங்கேரிய மொழி, கலை, பண்பாடு, நாகரிகம், மக்கள் மீதான வெறுப்பும் பேரச்சமும் உள்ளன. இதன் அளவு, அளவு கடந்து போகும் பொழுது அங்கேரிய வெருளியாகிறது.

00

139. அசுரன் வெருளி – Teratophobia (1)

அசுரன்பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் அசுரன் வெருளி.

சிதைவுரு வெருளியையும் ‘Teratophobia ‘ என்கின்றனர்.

அச்சப் பேருரு என்னும் பொருள் கொண்ட ‘teras’ என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து ‘Terato’  சொல் உருவானது.

காண்க : சிதைவுரு வெருளி -Teratophobia  

00

140. அச்ச வெருளி-Fearaphobia / Phobusphobia

அச்சம் பற்றிய பேரச்சம் வருவதே அச்ச வெருளி.

பலருக்கு எதைக்கண்டாவது அச்சம் வரும். ஆனால் சிலருக்கு அச்சம் குறித்தே பேரச்சம் வரும். இந்தப் பொருள் அல்லது சூழல் அல்லது படம் அல்லது படக்காட்சி அல்லது நிறம் அல்லது ஆள் அல்லது புத்தகம் அல்லது கதை அச்சத்தை விளைவிக்கலாம் எனக் கருதிப் பேரச்சம் கொள்வர். அச்சந்தரும் செய்திகளைப் படித்தாலும் கேட்டாலும் நாடகம் அல்லது தொலைக்காட்சி அல்லது திரைக்காட்சிகளில் பார்த்தாலும் பேரச்சம் வரும்.

தொடரி, பேருந்து, வானூர்திகளில் பயணம் மேற்கொள்ளும் பொழுது எதிரில் அல்லது உடன் அமர்ந்திருப்பவர் கடத்திவிடுவாரோ என்பது போன்ற  அச்சத்திற்கும் ஆளாவர். (அச்சநோய் வரும் என அஞ்சுவது வெருள்நோய் வெருளி. அது வேறு வகை.)

phobus  என்னும் இலத்தீன் சொல்லிற்கும் phobos என்னும் கிரேக்கச் சொல்லிற்கும் அச்சம் எனப் பொருள்.

00

(தொடரும் )

Saturday, July 19, 2025

வெருளி நோய்கள் 131 -135 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 126 -130 : தொடர்ச்சி)

131. அகவை 60 வெருளி – Sexatannophobia

அகவை 60 குறித்த வரம்பற்ற பேரச்சம் அகவை 60 வெருளி.

50 அகவையாளருக்கு ஏற்படும் பேரச்சம் மேலும் பெருகும்.  ஒரு புறம் மணிவிழா குறித்த மகிழ்ச்சியும் உள்ளுக்குள் பொறுப்புகள் தொடர்பான கவலையும் கலந்த அகவை இது. பணி ஓய்வு முடிந்த பின்னரும் வீட்டு நிலையை உயர்த்த முடியவில்லை, பிள்ளைகளுக்குத் திருமணம் செய்விக்க முடியவில்லை, சொந்த வீடுவாங்கிக் குடி போக முடியவில்லை, இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் குறித்த கவலை எனக் கவலையின்வடிவாக மாற்றும் அகவையாக உள்ளது. எனவே, தேவையற்ற பேரச்சத்திற்கு ஆளாகி விடுகின்றனர்.

அறுபது வயதில் சேய்க் குணம்  – அப்ப  

அனுசரிச்சு நாம் அணைக்கணும்.

என்று ‘பாரதவிலாசு’ படத்தில் கண்ணதாசனின் பாடல் வரிகள் வரும். இதனை உணர்ந்து முதியோரை மதித்து அணைத்து நடந்தால் வெருளி வராது.

00

132. அகவை 70 வெருளி – Septuagintannophobia 

அகவை 70 குறித்த வரம்பற்ற பேரச்சம் அகவை 70  வெருளி.

அறுபது அகவையில் ஏற்படும் கவலைகள் மேலும் பெருகும் அகவை இது. முதுமை நோய்கள் குறித்த பெருங்கவலைகளும் பேரச்சங்களை ஏற்படுத்தி விடுகின்றன. பிள்ளைகள் அல்லது மருமக்கள் மதிப்பதில்லை், சரியாகப் பேணுவதில்லை என்ற கவலையும் அத்தகைய சூழலில் உள்ளவர்களுக்கு ஏறப்ட்டு வாழ்வில் வெறுப்பை உண்டாக்கி விடுகிறது. முதியோரும் குழந்தைகளே என எண்ணி இவர்களை மதித்துக் கொண்டாடினால் வெருளி வரும் வாய்ப்பு இருக்காது.

00

133. அகவை 80 வெருளி – Octogintannophobia 

அகவை 80 குறித்த வரம்பற்ற பேரச்சம் அகவை 80 வெருளி.

முதுமைத் தள்ளாட்டத்தால் 70 அகவையில் ஏற்பட்ட கவலைகள் பெருகி 80இல் வாணாள் குறித்த பேரச்சத்திற்கு ஆளாவர்.

00

134. அகவை 90 வெருளி – Nonagintannophobia 

அகவை 90 குறித்த வரம்பற்ற பேரச்சம் அகவை 90 வெருளி.

80 அகவை வெருளியின் தொடர்ச்சிதான் 90 அகவை வெருளி. “காடு வா வா என்கிறதே! ஆனால், வரவில்லையே” என்ற கவலை தோய்ந்தஅச்சம் பலருக்கு ஏற்படும்.

00

135. அகவை வெருளி – senecophobia

அகவை(வயது) கூடுவது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அகவை வெருளி.  

இவ்வெருளி உள்ளவர்கள் முதுமை வெருளிக்கும்(Gerontophobia) ஆளாவார்கள்.

அகவை கூடக்கூட உடன் பொறுப்பும் கூடுகிறது என்ற கவலை, எதிர்கால வாழ்வு குறித்த கவலை, தோற்றத்தில் முதிர்ச்சி ஏற்படுவது குறித்த கவலை, பணி நிலைம குறித்துக் கவலை, நலக்கேடுகள் குறித்துக் கவலை எனப் பலவகையிலும் அகவை தொடர்பாக ஏற்படும் பேரச்சம். 

00

(தொடரும் )

Friday, July 18, 2025

வெருளி நோய்கள் 126 -130 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 121 -125 – தொடர்ச்சி)

அகராதி குறித்த வரம்பற்ற பேரச்சம் அகராதி வெருளி.

அகராதிகளில் சொற்பொருள் காண்பது எப்படி என்று தெரியாமல் கவலைப்படுபவர்களும் அதனால் அகராதி மீது வெறுப்பு கொள்பவர்களும் உள்ளனர். சிலர் அகராதிகளில் சொற்பொருள் தேடுகையில் பரபரப்படைந்து வெறுப்பாக மாற்றிக் கொள்கிறார்கள். புத்தக வெருளி உள்ளவர்களுக்கும் அகராதி வெருளி வர வாய்ப்புள்ளது.

00

127.) அகவை 20 வெருளி – Vigintannophobia

அகவை 20 குறித்த வரம்பற்ற பேரச்சம் அகவை 20 வெருளி.

வளரிளம் பருவத்தில் உள்ளவர்களுக்குப் பிற சூழல் கண்டு கவலையும் பேரச்சமும் எழுவதுண்டு. வளரிளம் பருவத்தில் உள்ள பிள்ளைகள் மீது பெற்றோர்களுக்குக் கவலையும் பேரச்சமும் ஏற்படுவதுண்டு. இப்பருவத்தில் 20 அகவையை இரண்டுங்கெட்டான் அகவையாகக்கருதி பிள்ளைகள் வழி மாறிச் செல்வார்களோ என்ற அச்சம் பெற்றோருக்கு ஏற்படுகிறது. தவறான ஆர்வத்தின் காரணமாகத் தீய செயலில் இறங்கிவிட்டு இதனால் குடும்பத்தினருக்குத் தன்னைப்பற்றித் தெரிய வருமோ தனக்கு அவப்பெயர் வருமோ என்று கவலையும் அச்சமும் கொள்ளும் இருபால் இளைஞர்களும் உள்ளனர்.

00

128.) அகவை 30 வெருளி – Trigintannophobia 

அகவை 30 குறித்த வரம்பற்ற பேரச்சம் அகவை 30 வெருளி.

30 அகவையில் திருமணம் ஆகாமல் இருந்தால் இனி திருமணம் ஆகுமா? நல்ல பெண் அல்லது மாப்பிள்ளை அமையுமா? என்ற கவலை. இக்கவலை பெற்றோர்களுக்கும் வரும். திருமணம் ஆகிக் குழந்தை பிறக்காமலிருந்தால் எளிய மகப்பேறு அமையுமா? என்ற அச்சம் உறவு கொள்வது குறித்த அச்சம் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பது குறித்த அச்சம் என 30 அகவையை ஓர் அளவுகோலாகக்கருதிப் பேரச்சமும் பெருங்கவலையும் கொள்வர். 

00

129.) அகவை 40 வெருளி – Quadragintannophobia 

அகவை 40 குறித்த வரம்பற்ற பேரச்சம் அகவை 40  வெருளி.

“நாற்பது வயதில் நாய்க்குணம்” என்று பழமொழி உண்டு.

‘பாரதவிலாசு’ படத்தில் 

நாற்பது வயதில் நாய்க் குணம் – அதை

நாம் தான் தெரிஞ்சு நடக்கணும்  

என்றொரு பாடல் உண்டு. இதுபோல் நாற்பது அகவையில் பொறுப்புகள் குறித்த கவலையால் அல்லது ஏற்படும் எரிச்சல் உணர்வுகளால் இவை நோயாக மாறுமோ என்ற பேரச்சததால் 40 அகவை நிலை கண்டு பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.

00

130.) அகவை 50 வெருளி – Quinquagintannophobia 

அகவை 50 குறித்த வரம்பற்ற பேரச்சம் அகவை 50  வெருளி.

ஐம்பது அகவை வந்துவிட்டாலே வாணாள் முடிவு நெருங்கப் போவதாகத் தேவையற்றுக் கவலைப்பட்டுப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர். விரைவில் குடும்பப் பொறுப்புகளை முடிக்க வேண்டுமே என்ற எண்ணியும் கவலைப்படுவர். பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கப்போவது தொடர்பான உடல் தொல்லைகளால் கவலைகள் ஏற்படுகின்றன. நலக்குறைபாடுகள் ஏற்பட்டு அவற்றுடன்  வீட்டிலோ பணியிடத்திலோ வேலை பார்க்க வேண்டி வருவது மேலும் எரிச்சலையும் துன்பத்தையும் தந்து பேரச்சம் கொள்வர். உடலமைப்பில் ஏற்படும் சில மாற்றங்களாலும் கவலை கொள்வர்.

00

(தொடரும் )