(வெருளி நோய்கள் 131 -135 : தொடர்ச்சி)

136. அகற்றல் வெருளி – Disposophobia

தனிப்பட்ட உடைமைகள் அகற்றப்படுதல் அல்லது காணாமல் போதல் தொடர்பாக ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் அகற்றல் வெருளி.

முதலில் இதை இன்மை வெருளி எனக் குறிப்பிட்டேன். ஆனால், இன்மை வெருளி(nihilophobia / Tipotaphobia/Nullophobia) எனத் தனியாக உள்ளதாலும் இல்லாமையைக் குறிக்கும் இன்மை வெருளியாகக் கூறாமல் இருந்த பின் இல்லாது போதலைக் குறிப்பதால் தனியாகக் குறிக்க வேண்டும் என்பதாலும் இப்பொழுது அகற்றல் வெருளி எனக் குறிக்கப்பட்டுள்ளது.

dispos என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் தனிப்பட்ட பொருள்கள் அகற்றப்படுதல்.

00

137. அக்குள் வெருளி- Maschaliphobia

அக்குள் குறித்து  ஏற்படும் தேவையற்ற பேரச்சம் அக்குள் வெருளி

பொதுவாக அக்குளில் வியர்வை நாற்றம் வருவதால், அப்பகுதியில் முடி வளர்வதால்,  அரிப்பு வருவதால் அக்குள்குறித்த பேரச்சம் வருகிறது.

Achsel என்னும் செருமானியச் சொல்லின் பொருள் அக்குள். அதிலிருந்து Maschali சொல் உருவாகியுள்ளது.

                                                             00      

138. அங்கேரிய வெருளி – Hungarophobia

அங்கேரியர் தொடர்பான மிகை வெறுப்பும் அளவுகடந்த பேரச்சமும் அங்கேரிய வெருளி.

அங்கேரிய மொழி அங்கேரியாவிலும், உருமேனியாவில் சில பகுதிகள், சுலொவாக்கியா, செருபியா, உக்கிரைன், குரோவாட்சுக்கா, ஆத்திரியா, சுலொவீனியா முதலிய நாடுகளிலும் பேசப்படுகின்றது. இங்கெல்லாம் அங்கேரிய மொழி, கலை, பண்பாடு, நாகரிகம், மக்கள் மீதான வெறுப்பும் பேரச்சமும் உள்ளன. இதன் அளவு, அளவு கடந்து போகும் பொழுது அங்கேரிய வெருளியாகிறது.

00

139. அசுரன் வெருளி – Teratophobia (1)

அசுரன்பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் அசுரன் வெருளி.

சிதைவுரு வெருளியையும் ‘Teratophobia ‘ என்கின்றனர்.

அச்சப் பேருரு என்னும் பொருள் கொண்ட ‘teras’ என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து ‘Terato’  சொல் உருவானது.

காண்க : சிதைவுரு வெருளி -Teratophobia  

00

140. அச்ச வெருளி-Fearaphobia / Phobusphobia

அச்சம் பற்றிய பேரச்சம் வருவதே அச்ச வெருளி.

பலருக்கு எதைக்கண்டாவது அச்சம் வரும். ஆனால் சிலருக்கு அச்சம் குறித்தே பேரச்சம் வரும். இந்தப் பொருள் அல்லது சூழல் அல்லது படம் அல்லது படக்காட்சி அல்லது நிறம் அல்லது ஆள் அல்லது புத்தகம் அல்லது கதை அச்சத்தை விளைவிக்கலாம் எனக் கருதிப் பேரச்சம் கொள்வர். அச்சந்தரும் செய்திகளைப் படித்தாலும் கேட்டாலும் நாடகம் அல்லது தொலைக்காட்சி அல்லது திரைக்காட்சிகளில் பார்த்தாலும் பேரச்சம் வரும்.

தொடரி, பேருந்து, வானூர்திகளில் பயணம் மேற்கொள்ளும் பொழுது எதிரில் அல்லது உடன் அமர்ந்திருப்பவர் கடத்திவிடுவாரோ என்பது போன்ற  அச்சத்திற்கும் ஆளாவர். (அச்சநோய் வரும் என அஞ்சுவது வெருள்நோய் வெருளி. அது வேறு வகை.)

phobus  என்னும் இலத்தீன் சொல்லிற்கும் phobos என்னும் கிரேக்கச் சொல்லிற்கும் அச்சம் எனப் பொருள்.

00

(தொடரும் )