(வெருளி நோய்கள் 141 -145 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 146 -150
146. அஞ்சல் முத்திரை வெருளி – Grammatosimophobia
அஞ்சல் முத்திரை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அஞ்சல் முத்திரை வெருளி.
பொதுவாக அஞ்சலகங்களில் பணியாற்றுவோருக்கே அஞ்சல் முத்திரை வெருளி வருகிறது.
அஞ்சல் முத்திரை இடுவதற்குப் போதுமான மை பயன்படுத்தப் பட்டதா? அஞ்சல் முத்திரை தெளிவாக விழுந்திருக்குமா? அஞ்சல் முத்திரை மையால் ஒவ்வாமை ஏற்படுமா என்றெல்லாம் தேவையற்ற கவலையும் அச்சமும் கொள்வர்.
00
147. அஞ்சல் வெருளி – Postalphobia
அஞ்சல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அஞ்சல் வெருளி
அஞ்சல்கள்(தபால்கள்), அஞ்சல் பெட்டி, அஞ்சல் கொண்டு வருபவர், வீட்டில் மாட்டும் அஞ்சல்வைப்புப் பெட்டி முதலியவற்றில் ஒன்று அல்லது பலவற்றின் மீது அச்சம் கொள்வோர் உள்ளனர்.
படிப்பறிவு குறைந்த காலத்தில் அஞ்சல் வந்துள்ளது என்றாலே – அது நல்ல செய்தியைக் கொண்டு வந்திருந்தாலும் உணராமல் அவசரப்பட்டு – ஏதேனும் கெட்ட செய்தி அல்லது துயரச்செய்தி தெரிவிக்க அஞ்சல் வந்ததாக எண்ணி அஞ்சிக் கவலைப்பட்டோர் இருந்தனர். இப்பொழுதும் சிலருக்கு அத்தகைய கவலைகள் உண்டு. வீட்டில் மாட்டி வைக்கும் அஞ்சல் பெட்டியில் குறும்புக்காரச் சிறுவர்கள், கற்கள் முதலான பொருள்கைளப் போட்டு விடுகின்றனர் என்று கவலைப்படுவோரும் உள்ளனர். அஞ்சலகப்பெட்டியில் அஞ்சலைச் சேர்த்த பின்னர், சரியான நேரத்தில் எடுத்திருப்பார்களா, சரியான நேரத்தில் உரியவருக்குச் சென்று சேருமா எனக் கவலைப்படுவோரும் உள்ளனர். என்னதான் மின்னஞ்சல்கள் பெருகினாலும் அஞ்சல் பணிகளும் இருக்கத்தான் செய்கின்றன. எனவே, இதனைப் பயன்படுத்துவோர் தொடர்ந்து கவலைக்கும் அச்சத்திற்கும் உள்ளாகி அஞ்சல் வெருளியராக மாறிவிடுகின்றனர்.
00
148. அடளை வெருளி – Codfishophobia
அடளை மீன்(Codfish) பற்றிய பேரச்சம் அடளை வெருளி
Cod என்றால் மீன் என்றுதான் பொருள். பொதுவாக உண்பதற்குரிய கடல் மீன்வகையைக் குறிக்கிறது. பலவகை கடல் மீன்களுள் அடளை என்பதும் ஒருவகை. இங்கே அடளை என்பது எடுத்தாளப்படுகிறது. உண்மீன் என்று சிலர் குறிக்கின்றனர். அது பொதுவான பெயர் என்பதால் அடளை மீன் எனக் குறித்துள்ளேன்.
00
149. அடிக்கப்படல் வெருளி – Aichmorhabdophobia
கூர்மையான குச்சியால் அல்லது அதுபோன்ற ஒன்றால் தாக்கப்படுவோம் எனப் பேரச்சம் கொள்வது அடிக்கப்படல் வெருளி.
சிறியவர்களுக்கு மூத்தவர்களால் அடிக்கப்படுவோம் என்ற பேரச்சம் உள்ளது. மாணவர்களுக்கு ஆசிரியர்களாலும் உடன் படிப்பவர்களாலும் அடிக்கப்படுவோம் என்ற பேரச்சம் உள்ளது. இப்பொழுதெல்லாம் மாணாக்கர்களால் தாக்கப்படுவோம் என்ற பேரச்சம் ஆசிரியர்களுக்கு வருகிறது.
aichmorhabdo என்றால் கிரேக்கத்தில் கூர்மையான கம்பி அல்லது கோல் எனப் பொருள்.
00
150. அடிப்பாக ஆடி வெருளி – Hyalinopygophobia
அடிப்பாகம் கண்ணாடியாக இருப்பின் அதுகுறித்து அளவுகடந்த பேரச்சம் கொள்வது அடிப்பாக ஆடி வெருளி.
இத்தகையோர், மெதுவாக வைக்காவிட்டால் கண்ணாடி அடிப்பாகம் உடைந்து விடும்,கீறல் விழும், நீர்மப்பொருள் கசியும் என்பன போன்ற கவலைகளுக்கும் அச்சங்களுக்கும் ஆட்படுகின்றனர்.
00
(தொடரும் )
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் தொகுதி 1/5
No comments:
Post a Comment