(வெருளி நோய்கள் 126 -130 : தொடர்ச்சி)

131. அகவை 60 வெருளி – Sexatannophobia

அகவை 60 குறித்த வரம்பற்ற பேரச்சம் அகவை 60 வெருளி.

50 அகவையாளருக்கு ஏற்படும் பேரச்சம் மேலும் பெருகும்.  ஒரு புறம் மணிவிழா குறித்த மகிழ்ச்சியும் உள்ளுக்குள் பொறுப்புகள் தொடர்பான கவலையும் கலந்த அகவை இது. பணி ஓய்வு முடிந்த பின்னரும் வீட்டு நிலையை உயர்த்த முடியவில்லை, பிள்ளைகளுக்குத் திருமணம் செய்விக்க முடியவில்லை, சொந்த வீடுவாங்கிக் குடி போக முடியவில்லை, இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் குறித்த கவலை எனக் கவலையின்வடிவாக மாற்றும் அகவையாக உள்ளது. எனவே, தேவையற்ற பேரச்சத்திற்கு ஆளாகி விடுகின்றனர்.

அறுபது வயதில் சேய்க் குணம்  – அப்ப  

அனுசரிச்சு நாம் அணைக்கணும்.

என்று ‘பாரதவிலாசு’ படத்தில் கண்ணதாசனின் பாடல் வரிகள் வரும். இதனை உணர்ந்து முதியோரை மதித்து அணைத்து நடந்தால் வெருளி வராது.

00

132. அகவை 70 வெருளி – Septuagintannophobia 

அகவை 70 குறித்த வரம்பற்ற பேரச்சம் அகவை 70  வெருளி.

அறுபது அகவையில் ஏற்படும் கவலைகள் மேலும் பெருகும் அகவை இது. முதுமை நோய்கள் குறித்த பெருங்கவலைகளும் பேரச்சங்களை ஏற்படுத்தி விடுகின்றன. பிள்ளைகள் அல்லது மருமக்கள் மதிப்பதில்லை், சரியாகப் பேணுவதில்லை என்ற கவலையும் அத்தகைய சூழலில் உள்ளவர்களுக்கு ஏறப்ட்டு வாழ்வில் வெறுப்பை உண்டாக்கி விடுகிறது. முதியோரும் குழந்தைகளே என எண்ணி இவர்களை மதித்துக் கொண்டாடினால் வெருளி வரும் வாய்ப்பு இருக்காது.

00

133. அகவை 80 வெருளி – Octogintannophobia 

அகவை 80 குறித்த வரம்பற்ற பேரச்சம் அகவை 80 வெருளி.

முதுமைத் தள்ளாட்டத்தால் 70 அகவையில் ஏற்பட்ட கவலைகள் பெருகி 80இல் வாணாள் குறித்த பேரச்சத்திற்கு ஆளாவர்.

00

134. அகவை 90 வெருளி – Nonagintannophobia 

அகவை 90 குறித்த வரம்பற்ற பேரச்சம் அகவை 90 வெருளி.

80 அகவை வெருளியின் தொடர்ச்சிதான் 90 அகவை வெருளி. “காடு வா வா என்கிறதே! ஆனால், வரவில்லையே” என்ற கவலை தோய்ந்தஅச்சம் பலருக்கு ஏற்படும்.

00

135. அகவை வெருளி – senecophobia

அகவை(வயது) கூடுவது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அகவை வெருளி.  

இவ்வெருளி உள்ளவர்கள் முதுமை வெருளிக்கும்(Gerontophobia) ஆளாவார்கள்.

அகவை கூடக்கூட உடன் பொறுப்பும் கூடுகிறது என்ற கவலை, எதிர்கால வாழ்வு குறித்த கவலை, தோற்றத்தில் முதிர்ச்சி ஏற்படுவது குறித்த கவலை, பணி நிலைம குறித்துக் கவலை, நலக்கேடுகள் குறித்துக் கவலை எனப் பலவகையிலும் அகவை தொடர்பாக ஏற்படும் பேரச்சம். 

00

(தொடரும் )