(வெருளி நோய்கள் 136 -140 : தொடர்ச்சி)

141. அச்சச்சூழல் வெருளி-Counterphobia

அச்சம் ஏற்படுவதற்கான சூழல் உருவானால் அதனைத் தவிர்க்க முயலாமல், அளவுகடந்து அஞ்சுவது அச்சச்சூழல்வெருளி.

இஃதும் அச்சச்சூழலின் ஒரு பகுதிதான்.

counter என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் எதிராக.

00

142. அச்சப்ப வெருளி – Zymarikaphobia 

அச்சப்பம் (pasta)பற்றிய அளவற்ற பேரச்சம் அச்சப்ப வெருளி.

pasta என்பதற்கு இலத்தீனில் மாவு, மாவு உணவு என்னும் பொருள்கள். கிரேக்கத்தில் வாற்கோதுமைக் கஞ்சி என்னும் பொருள். இத்தாலிய உணவுவகையான இது, கோதுமை மாவில் செய்யப்பெறும் இடியாப்ப வகை என்பதால் மலையாளத்தில் கோதுமை இடியாப்பம் என்கின்றனர்.

00

143. அச்சுப் பொறி வெருளி –  Printerphobia 

அச்சுப் பொறி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அச்சுப் பொறி வெருளி

எழுத்தச்சுப் பொறிகள் பயன்பாடு உள்ள  இடங்களில் அதைப் பயன்படுத்தும் தொழிலாளிகளுக்கும் உரிமையாளர்களுக்கும் திடீரென்று பழுதானால் என்ன ஆகும் என்பது போன்ற அச்சங்கள் வருகின்றன. அச்சுப்பொறியின் ஒலியால் இடையூறுக்கு ஆளாகிக் கவலைப்படுவர். இப்போது கணிணி அச்சுப்பொறி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கணியச்சுப் பொறியில் தாள் சிக்கிக் கொள்வதால், இயங்கும்போது ஏற்படும் ஒலியால், எதிர்பாராத நேரத்தில் மை உலர்ந்து போவதால் என அமைதியாகச் சிக்கலை எதிர்நோக்கால் வீண் கவலைகளுக்கும் பேரச்சத்திற்கும் ஆளாவோர் உள்ளனர். 

முதலில் இதை மை வெருளி என்றனர். அச்சுமை பரவலாக அமையாமல் அச்சிடப்படும் தாள்கள் ஒரு பகுதியில் மைத்திட்டும் மறு பகுதியில் மை இன்றியும் அமையும். அல்லது மை தீர்ந்ததைச் சரியாகக் கவனிக்காவி்ட்டால் மீண்டும் அச்சிட வேண்டிய வேலை வரும் என்றெல்லாம் கவலைப்படுவதால் இவ்வாறு கூறினர். ஆனால் இப்பொழுது மைக்குழல் – பேனா – எடுத்துச் செலல மறந்து விட்டால்  என்ன ஆகும், எழுதும் பொழுது மை தாளில் அல்லது ஆவணத்தில் சிந்தி விட்டால் அல்லது கையில் ஒட்டிக்கொண்டு அதன்மூலம் தொடும் தாள்களில் பரவிவிட்டால் என்னாவது போன்ற கவலைகள் வரும். எனவே, இதனை மை வெருளி(inkaphobia) எனக் கூறி விட்டனர். அச்சுப்பொறி வெருளியை மை வெருளி என்று சொல்வது இல்லை.

00

144. அஞ்சலூர்தி வெருளி – Yubinshaphobia 

அஞ்சல் உறைகளை எடுத்துச் செல்லும்  ஊர்தி குறித்த அளவுகடந்த பேரச்சம் அஞ்சலூர்தி வெருளி.

அரசு அஞ்சல் ஊர்திகள் பயன்பாடு குறைந்து விட்டாலும் தனியாரின் தூதஞ்சல் ஊர்திகளின் பயன்பாடு மிகுதியாக உள்ளது. அவை பற்றிய பேரச்சமும் இதில் அடங்கும்.

00

145. அஞ்சல் பெட்டி வெருளி –  Xinxiangphobia 

அஞ்சல் பெட்டி குறித்த வரம்பற்ற பேரச்சம் அஞ்சல் பெட்டி வெருளி.

அஞ்சல் வெருளியில் அடங்கும் அஞ்சல் பெட்டி வெருளியைத் தனியாகப் பிரித்து அஞ்சல் பெட்டி வெருளி என்கின்றனர்.

00

(தொடரும் )