(வெருளி நோய்கள் 121 -125 – தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 126-130
126. அகராதி வெருளி – Lexicophobia
அகராதி குறித்த வரம்பற்ற பேரச்சம் அகராதி வெருளி.
அகராதிகளில் சொற்பொருள் காண்பது எப்படி என்று தெரியாமல் கவலைப்படுபவர்களும் அதனால் அகராதி மீது வெறுப்பு கொள்பவர்களும் உள்ளனர். சிலர் அகராதிகளில் சொற்பொருள் தேடுகையில் பரபரப்படைந்து வெறுப்பாக மாற்றிக் கொள்கிறார்கள். புத்தக வெருளி உள்ளவர்களுக்கும் அகராதி வெருளி வர வாய்ப்புள்ளது.
00
127.) அகவை 20 வெருளி – Vigintannophobia
அகவை 20 குறித்த வரம்பற்ற பேரச்சம் அகவை 20 வெருளி.
வளரிளம் பருவத்தில் உள்ளவர்களுக்குப் பிற சூழல் கண்டு கவலையும் பேரச்சமும் எழுவதுண்டு. வளரிளம் பருவத்தில் உள்ள பிள்ளைகள் மீது பெற்றோர்களுக்குக் கவலையும் பேரச்சமும் ஏற்படுவதுண்டு. இப்பருவத்தில் 20 அகவையை இரண்டுங்கெட்டான் அகவையாகக்கருதி பிள்ளைகள் வழி மாறிச் செல்வார்களோ என்ற அச்சம் பெற்றோருக்கு ஏற்படுகிறது. தவறான ஆர்வத்தின் காரணமாகத் தீய செயலில் இறங்கிவிட்டு இதனால் குடும்பத்தினருக்குத் தன்னைப்பற்றித் தெரிய வருமோ தனக்கு அவப்பெயர் வருமோ என்று கவலையும் அச்சமும் கொள்ளும் இருபால் இளைஞர்களும் உள்ளனர்.
00
128.) அகவை 30 வெருளி – Trigintannophobia
அகவை 30 குறித்த வரம்பற்ற பேரச்சம் அகவை 30 வெருளி.
30 அகவையில் திருமணம் ஆகாமல் இருந்தால் இனி திருமணம் ஆகுமா? நல்ல பெண் அல்லது மாப்பிள்ளை அமையுமா? என்ற கவலை. இக்கவலை பெற்றோர்களுக்கும் வரும். திருமணம் ஆகிக் குழந்தை பிறக்காமலிருந்தால் எளிய மகப்பேறு அமையுமா? என்ற அச்சம் உறவு கொள்வது குறித்த அச்சம் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பது குறித்த அச்சம் என 30 அகவையை ஓர் அளவுகோலாகக்கருதிப் பேரச்சமும் பெருங்கவலையும் கொள்வர்.
00
129.) அகவை 40 வெருளி – Quadragintannophobia
அகவை 40 குறித்த வரம்பற்ற பேரச்சம் அகவை 40 வெருளி.
“நாற்பது வயதில் நாய்க்குணம்” என்று பழமொழி உண்டு.
‘பாரதவிலாசு’ படத்தில்
நாற்பது வயதில் நாய்க் குணம் – அதை
நாம் தான் தெரிஞ்சு நடக்கணும்
என்றொரு பாடல் உண்டு. இதுபோல் நாற்பது அகவையில் பொறுப்புகள் குறித்த கவலையால் அல்லது ஏற்படும் எரிச்சல் உணர்வுகளால் இவை நோயாக மாறுமோ என்ற பேரச்சததால் 40 அகவை நிலை கண்டு பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
130.) அகவை 50 வெருளி – Quinquagintannophobia
அகவை 50 குறித்த வரம்பற்ற பேரச்சம் அகவை 50 வெருளி.
ஐம்பது அகவை வந்துவிட்டாலே வாணாள் முடிவு நெருங்கப் போவதாகத் தேவையற்றுக் கவலைப்பட்டுப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர். விரைவில் குடும்பப் பொறுப்புகளை முடிக்க வேண்டுமே என்ற எண்ணியும் கவலைப்படுவர். பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கப்போவது தொடர்பான உடல் தொல்லைகளால் கவலைகள் ஏற்படுகின்றன. நலக்குறைபாடுகள் ஏற்பட்டு அவற்றுடன் வீட்டிலோ பணியிடத்திலோ வேலை பார்க்க வேண்டி வருவது மேலும் எரிச்சலையும் துன்பத்தையும் தந்து பேரச்சம் கொள்வர். உடலமைப்பில் ஏற்படும் சில மாற்றங்களாலும் கவலை கொள்வர்.
00
(தொடரும் )
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் தொகுதி 1/5
No comments:
Post a Comment