(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 746 – 758 இன் தொடர்ச்சி)
759. தகவலியல் | Informatics |
760. தகவல் தொடர்புப் பொறியியல் | Communication Engineering |
761. தகவல் நுட்பியல் | Information Technology |
762. தகவல் முறைமைப் பொறியியல் | Information Systems Engineering |
763. தகைமையியல் Timology என்பது மேன்மை, மாண்பு, சிறப்பு, தகுநிலை முதலியவை பற்றிய இயல். இதனை விழுமியம் என்னும் பொருளிலேயே ஆங்கிலத்தில் பெரும்பாலும் குறிப்பிடு கின்றனர். தமிழிலும் அவ்வாறே குறிக்கின்றனர். தகைமை என்பது பொருத்தமான சொல்லாக இருக்கும். Axiology என்பதை விழுமியம் என்பதால் இதனைத் தகைமையியல் எனலாம். | Timology |
764. தசைநாணியல் | Tenontology / Syndesmology |
765. தசையியல் | Myology |
766. தடய இயற்பியல் | Forensic physics |
767. தடய மானிடவியல் | Forensic Anthropology |
768. தடயவியல் | Forensic Science |
769. தடயக் கதிரியல் | Forensic Radiology |
770. தடுப்பு இனமேம்பாட்டியல் | Preventive eugenics |
771. தடுப்பூசியியல் vaccine – பகைப்பால், அம்மைப் பால், அம்மைப்பால், ஆவைன், ஊசியேற்றம், தடுப்பாற்றல் மருந்து, தடுப்பு ஊனீர், தடுப்பு மருந்து, தடுப்புநிரல், தடுப்பூசி, தடுப்பூசி மருந்து, பாலேற்றம், வேக்சின் பகைப்பில் எனப்படுகிறது. வேக்சின் பகைப்பில் என்பதில் பகைப்பால் என்பது தான் தட்டச்சுப் பிழை யாகப் பகைப்பில் எனக் குறிக்கப் பட்டுள்ளதா எனத் தெரிய வில்லை. அல்லது இது சரி என்றால் விளக்கம் தெரிய வில்லை. எப்படியாயினும் ஒலிபெயர்ப்புச் சொல்லையும் கலந்து கியூ வரிசை என்பதுபோல் சொல்லப் பட்டுள்ள இச்சொல் விலக்கப்பட வேண்டும். ஒலி பெயர்ப்பிலும் வேக்குசின் என்றுதான் குறிக்க வேண்டும். மாட்டம்மைப் பாலை எடுத்து மனிதர்களுக்குப் போடும் முறை என்பதால், இலத்தீனில் பசு என்னும் பொருளுடைய vacca என்னும் சொல்லில் இருந்து vaccīnus உருவானது. தொடக்கத்தில் அம்மைக் கான அம்மைப்பால் ஏற்றப் பட்டிருந்தாலும் பிறகு எல்லா நோய்க்குமான தடுப்பூசி களையும் குறிப்பதாக அமைகிறது. எனவே, சுருக்கமாகத் தடுப்பூசி எனலாம். தடுப்பூசிகள் ஆக்கம், மேம்பாடு குறித்த அறிவியல் இது. எனவே, தடுப்பூசியியல் -Vaccinology என்பதையே பயன்படுத்தலாம். | Vaccinology |
772. வளைசலியத் தட்பியல் | Ecological Climatology |
773. தட்பியல் Climatology–காலநிலை ஆய்வியல், காலவியல், கால நிலை யியல், தட்பவெப்ப நிலை இயல், தட்பவெப்ப நிலை நூல், தட்பவெப்ப நிலையியல், தட்பவெப்பவியல், வெதண நிலையியல் எனப் பலவாறாகக் கூறப்படுகின்றது. வெதணம் என்பது வெப்ப தட்பம் என்பதன் முதல் எழுத்துகளைக் கொண்டு உட்ணம் என்பதில் அணம் சேர்த்து உருவாக்கப்பட்டதா எனத் தெரியவில்லை. Chronology காலவியல் எனக் கூறப்படுவதால், Climatology என்பதற்கு ஈடாகக் கூறமுடியாது. Weather காலநிலை எனப்படுவதால் இங்கும் அதையே பயன்படுத்துவது சரியல்ல. எனவே, தட்ப வெப்பவியல் என்பதே சரியாக உள்ளது. இதனையும் நாம் சுருக்கமாகத் தட்பவியல் எனலாம். தட்பம் குறையக் குறைய வெப்பம் மிகுகிறது. எனவே வெப்பம் என்பது தட்பமின்மையக் குறிக்கிறது. ஆதலின் பொதுவாகச் சுருக்கமாகத் தட்பவியல் எனலாம். தண்> தட்பு> தட்பம் என ஆகியுள்ளது. வழக்கத்தில் தட்பம் என்றால் குளிர்ச்சியை மட்டும் கருதலாம் என்பதால் தட்பு + இயல் = தட்பியல் எனக் குறிப்போம். விளக்கத்தில் தட்பம் வெப்பம் குறித்த இயல் என அறிவோம். | Climatology
|
774. தணிப்பகம் Clinic– மருந்தகம், பண்டுவமனை, செய்மருத்துவம், நோய், மருந்து, மருத்துவகம், பிணியாய் நிலையம், சிகிச்சை நிலையம், சிகிச்சை நிலையம், மருத்துவ நிலையம் எனப்படுகின்றது. பண்டுவம் என்பது treatment என்பதற்குரிய நல்ல சொல்தான். எனவே, பண்டுவமனை என்பதும் சரிதான். எனினும் therapy என்பதற்குப் பயன்படுத்தப்படுவதால் இங்கே பயன்படுத்தவில்லை. Clinical பிணிஆய்வுக்குரிய, மருத்துவத்திற்குரிய, சிகிச்சைசார், சாய்ச்சாலை (இலங்கை வழக்கு), சாய்வுற்ற, மருத்துவப் பயிற்சி சார்ந்த, நோய்ப்படுக்கைத் தொடர்புடைய, படுக்கை மருத்துவப் பயிற்சியைச் சார்ந்த, மனைசார், மருத்துவமனைசார் எனப் படுகின்றது. Clinic என்னும் இலத்தீன் சொல்லிற்குப் பொருள் படுக்கைக்குரிய. Clinic தணிப்பறை என ஆறாவது உலகத்தமிழ் மாநாட்டுக் கட்டுரையிலேயே குறித்திருந்தேன். நோயைத் தணிப்பதற்குத் தொடக்க நிலையில் மருத்துவர் அறை நாடிச் செல்கிறோம். அடுத்த நிலை தேவைப்படும் பொழுதுதான் மருத்துவமனை செல்கிறோம். எனவே, Clinic என்பதை மருத்துவமனை என்று சொல்வதைவிடத் (நோய்த்) தணிப்பறை என்பதுதான் பொருத்தமாக இருக்கும். இருப்பினும் சொற்சீர்மை கருதி இப்போது தணிப்பகம் எனக் குறித்துள்ளேன். தணிப்பகம் – Clinic 775. தணிப்பகம் சார் > தணிப்பக – Clinical எனலாம். | Clinic |
776. தணிப்பக மரபணுவியல் | Clinical Genetics |
777. தணிப்பகத் தொற்றியல் | Clinical epidemiology |
778. தணிப்பக நோயியல் | Clinical Pathology |
779. தணிப்பக மருந்தியல் | Clinical pharmacology |
குறிப்பு : தணிப்பக என மேலே குறிப்பிட்ட இடங்களில் (தணிப்பு >) தணி என்றே குறிக்கலாம். |
|
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000
No comments:
Post a Comment