அகரமுதல
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 835 – 849 இன் தொடர்ச்சி)
850. துண்ட நகர்வியல் Plate Tectonics என்பது கண்டத்தட்டு நகர்வியல், தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு, புவித்தட்டு நகர்வியல், புவித்தட்டுக் கட்டுமானவியல் எனப் பலவகையாகக் கூறப் படுகின்றது. பழங்கிரேக்கத்தில் tecton என்றால் கட்டுமானம் எனப் பொருள். Plate என்பது இங்கே புவித்தட்டை / புவியின் கண்டத் தட்டைக் குறிப்பிடுகிறது. எனவே, கட்டுமானம் அல்லது கட்டமைப்பு நீங்கலாகப் பிற பொருள்கள் யாவும் சரியே. ஆனால், வெவ்வேறு கலைச்சொற்களைப் பயன்படுத்துவது குழப்பத்தைத் தருகின்றது. எனவே, ஒரே கலைச்சொல்லையே நிலையாகப் பயன்படுத்த வேண்டும். கண்டத்தட்டு என்பது நிலப்பகுதியின் துண்டுதான். எனவே, அதனைச் சுருக்கமாகத் துண்டம் எனலாம். எனவே, அதுகுறித்த அறிவியல் Plate tectonics – துண்டநகர்வு எனலாம். நிலப்பெயர்ச்சி குறித்துச் சங்கக்காலத்தில் பாடல்கள் உள்ளன. நிலம்பெயரினு நின்சொற் பெயரல் (இரும்பிடர்த் தலையார், புறநானூறு 3 :14.) நிலம் திறம் பெயரும் காலை ஆயினும் கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே (கபிலர், பதிற்றுப்பத்து. 63 : 6 – 7) நிலம் புடை பெயர்வதாயினும் ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென அறம் பாடிற்றே ஆயிழை கணவ (ஆலத்தூர் கிழார், புறநானூறு. 34 : 5 – 7 அம்ம வாழி, தோழி!-காதலர் நிலம் புடைபெயர்வதாயினும், கூறிய சொல் புடைபெயர்தலோ இலரே; (மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார், நற்றிணை. 289 : 1 – 3) கண்டப்பெயர்ச்சி என்பது ஒரு காலத்தில் ஒரே நிலப்பரப்பாக இருந்த புவிப்பரப்பு பல துண்டுகளாகி நகர்வதையே குறிக்கிறது. எனவே துண்ட நகர்வு எனக் குறித்துள்ளேன். | நில நடுக்கம் தொடர்பான ஆராய்ச்சித் துறையான உலகளாவிய நகர்வியல்/ இளம் உலகிய நகர்வியல்/ புது உலகளாவிய பாறை அமைப்பியல் (New Global Tectonics) என்று தனியாகக் கூறாது அதனையும் இத் துண்ட நகர்வியலில் சேர்த்து விடலாம். | Plate tectonics |
851. துணைக் காலவியல் Parachronology – அடுக்கமைப்புக் காலக் கணிப்பியல், காலக் கண்ணாடி யியல், புவிக்கால வரிசையியல் எனப்படுகின்றது. Chronology காலயியல் என்கிறோம். Para மேலே, அப்பால், அருகில், உடன்; முழுவதும், இயல்பு அல்லாத (அசாதாரண), தவறான, ஒத்த, இணை, துணை என்னும் பொருள்களை உடைய முன்னொட்டுச் சொல். எனவே, துணைக்காலவியல் Parachronology எனலாம். | Parachronology |
852. துதிப்பாவியல் மூலச்சொல்லான hymnus என்னும் இலத்தீன் சொல்லின் பொருளும் húmnos என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருளும் (சமயம் சார்ந்த) போற்றிப்பாடல்கள்/வாழ்த்துப்பாடல்கள் ஆகும். கடவுளைத் துதிக்கும் பாடல்கள் சுருக்கமாகத் துதிப்பா எனப்பட்டது. | Hymnology |
853. தும்பியியல் odoús என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் பற்கள். கீழ்த்தாடையில் பற்கள் உடைய தட்டான் (dragonfly), ஊசித் தட்டான் (Damselfly) ஆகியவற்றை Odonata குறிப்பிடுகிறது. பொதுவாகத் தும்பிகள் குறித்த இயல் என்னும் பொருளில் தும்பியியல் எனப்பட்டது. | Odonatology |
854. துயிலியல் Hypho என்பது வலைபோல் என்னும் பொருளிலான ஒட்டுச் சொல்லாகும். Hyphology என்பது வலைநிலைப் பொருளை வேதியியலில் குறிக்கிறது. எனினும் தவறுதலாக Hypnology எனக் கருதி Hyphology – துயிலியல் அல்லது தூக்க இயல் என்று சில அகராதிகளில் குறிப்பிடப்படுகின்றன. | Hypnology |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000
No comments:
Post a Comment