Sunday, June 11, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 727 – 732

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 722 – 726 தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 

727 – 732

(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

727. Oxygen – உயிர்க்கால்

நெஞ்சத்தின் வலது கீழறையில் நின்று சுவாசப் பைக்குச் செல்லும் கருப்பு இரத்தமானது அங்குள்ள மயிரிழைக் குழல்களுக்குள் பாயும். அவற்றிற்கும் காற்றுத் துவாரங்களுக்கு மிடையே ஈரமான மெல்லிய தாள் மட்டுமே யிருப்பதால் அவற்றிலுள்ள இரத்தமானது காற்றிலிருந்து உயிர்க்காலை (Oxygen) வாங்கிக் கொள்ளவும் காற்றிற்குத் தன்கனுள்ள கரிப்புளிப்பை (Carbonic Acid)க் கொடுத்துவிடவும் இயலும்.

மேற்படி நூல்      :               உடல் நூல் (1934) பக்கங்கள் – 29, 30

728. Vitamins – உயிர்சத்து

உயிர்ச்சத்து : (Vitamins) வெடியுப்புச் சாரம் கலந்த உயிர்ச்சத்துக்கள் உணவுப் பொருள்களில் கலந்துள்ளன என்றும் அவை சீவாதாரமா யுள்ளவை யென்றும் அவற்றைச் சில நாட்களுக்கு முன் மேலைநாட்டு அறிஞர்கள் கண்டனர். பச்சைக் காய்கறியிலும் பழங்களிலும் பாலிலும் வெண்ணெயிலும் மூளை தவிடு போக்காத அரிசியிலும், நன்றாகப் புடைக்கப்படாத கோதுமை மாவிலும் அவை உள்ளன.

மேற்படி நூல் : உடல்நூல் (1934) பக்கம் – 38

729. Red corpuscles — செங்கூடுகள்

இரத்தத்திலுள்ள செங்கூடுகள் (Red corpuscles) தட்டையாயும் வட்டமாயும் பாதி வளைவுள்ள தாயுமிருப்பன. ஒரங்களைப் பார்க்கிலும் மத்தியில் மெல்லியதா யிருக்கும். அவற்றில் நடுப்புள்ளி (Nucleus)யொன்றுங் கிடையாது. இந்தச் செங்கூடுகள் நிலையான வாழ்க்கை யுடையனவல்ல.

மேற்படி நூல் : உடல்நூல் (1934) பக்கங்கள் – 22, 23

730. Side Curtain – நடைபடுதா

ஒரு முறை இவ்வண்ணம் நடந்தபொழுது வள்ளி வேடம் பூண்ட ஆக்டர் – அவர் கொஞ்சம் புத்திசாலி – கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டுச் சரேலென்று நடைப்படுதாவுக்குள் நுழைந்து போய்விட்டார். அப்பொழுதும் வள்ளியின் வர்ணனையை நமது அயன் இராபார்ட்ஆக்டர் விட்டபாடில்லை. பாட்டின் பல்லவியில் சங்கதிகளையும், ஸ்வரங்களையும் போட்டுப் பாடித் தீர்த்துவிட்டார். பாட வேண்டிய பாட்டுகளை யெல்லாம் பாடியான பிறகு திரும்பிப் பார்த்தார். வள்ளியை மேடை மீது காணோம். அவர் விழித்தார். சபையோர் சிரித்தனர்.

இதழ்     :               விநோதன் (1934)

⁠மலர் – 2. இதழ் – 3

கட்டுரை              :               ஆட்டமும் பாட்டும், பக்கம் – 49

கட்டுரையாளர்  :               இராவ்பகதூர். ப. சம்பந்த முதலியார், (ரிடையர்ட் ஜட்ஜ்)

731இரேழி – இடங்கழி

அவ்வளவில் அவ்வீட்டின் இடங்கழி (இரேழி) யில் படுத்திருந்த அவரது அன்னை தன் மகனை விளித்து ‘குழந்தாய்! இத்தன்மையை பாபத்திற்கு ஒரு தரம் – ராம – வெனக் கூறினால் போதும் என்பதாய் உனது தந்தை சொல்லக் கேட்டிருக்கின்றேன்; அப்படிக்கிருக்க, நீ மும்முறை கூறுமாறு சொல்கின்றாயே!’ எனக் கேட்டனள்.

நூல்        :               சிரீ பகவன் நாம போதேந்திர சுவாமிகள்

⁠ திவ்விய சரிதம் (1934) பக்கம் – 27

நூலாசிரியர்         :               மாந்தை. சா. கிருஷ்ணய்யர்

732. Room – உள்ளில்

ஓர் வீட்டின் தாழ்வாரத்தில் ஓர் அடி கண்ணாடி சுவரில் இருக்க, இரண்டு சிறு பையன்கள் கண்ணாடியைப் பார்க்க அவர்கள் சாயல் நிழல் கண்ணாடியில் தெரிய, அந்நிழல் சுவருக்கு உள் கூடத்தில்

இரண்டு தப்படியில் கண்டார்கள். சிறுவர்கள் பார்த்துக் கையை ஓங்கினார். நிழலும் ஓங்கியது. காலைத் தூக்கினர்ர்கள். நிழலும் தூக்க அந்த ரூமில் (உள்ளில்) இரண்டு பயல்கள் நம் வீட்டில் இருந்து கொண்டு கையை ஓங்கி அடிக்க வருகிறான், ரூமைத் திறந்து இழுத்துப் போட்டு அடிப்போம் வாங்கடா – என்று கதவைத் திறக்க ஓடினான்.

நூல்        :               அநுபவ ஆத்மஞான விளக்கம் (1934) பக்கம் -12

நூலாசிரியர்         :               வைத்திலிங்க சுவாமிகள்

⁠ மேலணிக்குழி குடிக்காடு.

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Sunday, June 4, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 722 – 726

 




(தமிழ்ச்சொல்லாக்கம் 704-721தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 722 – 726

(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

722. Foramen Magnum – பெருந்துளை

கபால எலும்புகளுக்குக் கீழாகவுள்ள விசாலமான அறையில் மூளை இருக்கிறது. கபாலத்தினடியில் பெருந்துளை (Foramen magnum) என்னும் பெரிய வட்டவடிவமான துவாரமிருக்கிறது. அது முதுகுக் கால்வாயோடு

மேற்படி நூல்      :               நூல் உடல்நூல் (1934)

⁠எலும்புச் சட்டம், பக்கம் -9

723. Joints – பொருத்துக்கள்

உடம்பில் பலவகையான பொருத்துக்க ளுள்ளன. ஒன்றின் மேலொன்று நழுவுதற்கேற்றவாறும் கதவுக் கீல் போலப் பொருந்தி அசைதற்கேற்றவாறும் பந்தும் கிண்ணமும் போல் பொருந்துதற் கேற்றவாறும் சுழியாணிபோல் பொருந்துமாறும் பொருத்துக்கள் அமைந்துள்ளன.

மேற்படி நூல்      :               நூல் உடல்நூல் (1934)

⁠பொருத்துக்கள் – பக்கம், 15, 16

724. Connective Tissue – சேர்ப்பு இழை

உடம்பின் மெல்லிய பாகங்களும் தசைகளும் பிற கருவிகளும் மெல்லிய சேர்ப்பிழைப் பின்னல்களால் ஒன்று சேர்த்துக் கட்டப்பட்டிருக்கின்றன. சேர்ப்பிழையானது சிலம்பி வலையினும் மிக நுண்ணிய இழைகளாலாய வலைகள லாக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில வெள்ளையாயும் இறுக்கமாயுமுள்ளன. மற்றவை மஞ்சள் நிறமாயும் தொய்வாயு முள்ளன.

மேற்படி நூல்      :               உடல் நூல் (1934) சேர்ப்பு இழை – பக்கம், 17

725. Capillaries – மயிரிழைக் குழல்கள்

இரத்தத்திலுள்ள சிறு கூடுகள் சுவாசப்பை வழியாகச் செல்லுங்காலத்தில் அங்குள்ள காற்றிலுள்ள உயிர்க்காலினை ஏற்றுக் கொள்கின்றன. அவை கருவிகளிலும் ஊனிழைகளிலுமுள்ள மயிரிழைக் குழல்கள் (Capillaries) வழியாகச் செல்லும் போது உயிர்க்காலினை அவற்றில் விட்டு விடுகின்றன.

மேற்படி நூல்      :               உடல் நூல் (1934) இரத்தம் – பக்கம் – 22

726. Lungs – மூச்சுக் கருவிகள்

மூச்சுக் கருவிகளென்பன நெஞ்சிற்குமேல் மார்பகத்திலுள்ள இரண்டு தொய்வுள்ள பைகளாகும். அப்பைகள் கடற் பஞ்சு போன்ற அமைப்புள்ளன. அவற்றிலுள்ள துவாரங்கள் காற்று நிறைந்திருப்பன.

மேற்படி நூல்      :               உடல் நூல் (1934) பக்கம் – 29

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Sunday, May 28, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 716-721




(தமிழ்ச்சொல்லாக்கம் 709- 715 தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 716-721

(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. 
கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

716. Cells – அணுக்கூடுகள்

எல்லா உயிரினுடம்புகளும் மிக நுண்ணிய சிற்றறை அல்லது அணுக்கூடுகளால் (Cells) ஆக்கப்பட்டுள்ளன. அவை வொவ்வொன்றும் ஒரு வித்துடன் கூடிய முதற்பிண்டமாக இருக்கின்றது.

மேற்படி நூல் : முன்னுரை பக்கம் – 4

717. Muscles – தசைத் திரள்கள்

தனசத் திரள்கள் எலும்போடு பிணைக்கப்பட்டிருக்கின்றன. அவை சுருங்குவதனால் எலும்புகள் அசைந்தியங்குகின்றன. இடுப்பிற்குமேல் கழுத்துவரையுள்ள உடம்பில் மேற்பொந்து ஒன்றும் கீழ்ப்பொந்து ஒன்றும் இருக்கிறது. இரண்டையும் நெஞ்சின் குறுக்காகவுள்ள நீண்ட தசைத்திரள் ஒன்று Diaphragm. பிரிக்கின்றது. மேற் பாகம் மார்பென்றும் கீழ்ப்பாகம் வயிறென்றும் உலக வழக்கில் குறிக்கப்படும்.

மேற்படி நூல்       :               உடல் நூல் (1934)

உடலின் பொது அமைப்பு, பக்கம் – 6

718. Heart – நெஞ்சப்பை

மார்பின் நடுவில் இடப்பக்கத்தில் இருதயமென்னும் நெஞ்சப் பை (Hearts) அமைந்திருக்கினறது. சுவாசப் பை (lungs) இரண்டும் இருதயத்திற்கு இடப்பக்கமும் வலப்பக்கமுமாக அமைந்திருக்கின்றன. வயிற்றின் மேல் பாகத்தில் வலது பக்கத்தில் நுரையீரல் (Liver) அமைந்திருக்கின்றது. இடது பக்கத்தில் மேல் வயிறு அமைந்திருக்கின்றது. இவ்விரண்டிற்கும் கீழே சுருண்டிருக்கும் குடர் உள்ளது. வாயில் நின்று இரைக்குழலானது மேல் வயிற்றுக்குள் செல்லுகிறது. அதினின்று அது குடர்க்குள் போகின்றது. உணவானது இக்கருவிகளில் சீரணமாகின்றது. மேல் வயிற்றிற்கு இடப்பாகம் மண்ணிரல் (Spleen) என்னும் சிறுகருவி இருக்கின்றது.

மேற்படி நூல்       :               நூல் உடல்நூல் (1934)

உடலின் பொது அமைப்பு பக்கங்கள் – 67

719. Windpipe – காற்றுக்குழல்

720. Gullet – இரைக்குழல்

721. Larynx – குரல் வளை

வாயின் பின்புறத்திலிருந்து தொண்டை வழியாகச் சுவாசப் பைக்கு ஒரு குழல் செல்கிறது. அதற்குக் காற்றுக் குழல் (Windpipe) என்று பெயர். அதற்குப் பின்னேதான் இரைக்குழல் (Gullet) செல்கின்றது. காற்றுக் குழலின் மேற்பகுதி குரல் வளை (Larynx)யெனப்படும்.

மேற்படி நூல்       :               நூல் உடல்நூல் (1934)

உடலின் பொது அமைப்பு பக்கங்கள் – 7

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Sunday, May 21, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 709- 715

 




(தமிழ்ச்சொல்லாக்கம் 704-708தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 709- 715

(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. 
கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

709. .ப. சந்தோசம் – மகிழ்நன் (1934)

மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

இந்நூலிலே தொகுக்கப் பெற்ற கட்டுரைகள் அனைத்தும் சைவசித்தந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் பத்தாண்டுகளாக வெளியிடப் பெற்றுவரும் செந்தமிழ்ச் செல்வி என்னும் திங்கள் தாளிற்கு யான் இடையிடையே எழுதி வந்தனவாகும்.

ஆங்கில மொழியில் நல்லிசைப் புலவர்களான சுடீல் (Steele), அடிசன் (Addison), காருலைல் (Carlyle), கோலுடு சுமித்து (Gold-smith) முதலியவர்கள் சொற்சுவை பொருட்சுவை நகைச்சுவை நிரம்ப எழுதிய கட்டுரைகள் அம்மொழி பயிலும் மாணவர்கட்கு உவகையூட்டிப் பயன்படுவன போலத் தமிழ் பயிலும் மாணவர்கட்கு இந்நூற் கட்டுரைகள் பயன்படுமென்று கருதுகின்றேன். இதனைக் கல்லூரித் தலைவர்களும், தமிழாசிரியர்களும், மாணவர்கட்குப் பாடப் புத்தகமாக ஏற்று உதவி, என்னை ஊக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

மகிழ்நன்

நூல்        :               மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் (1934 பக். 7, 8

நூலாசிரியர்         :               மகிழ்நன்

710. பிராணாயாமம் – மூச்சடக்கி விடுதல்

உடற்பயிற்சி தேக உழைப்பில்லாத உடலின் நலத்திற்கு இன்றியமையாததது. நடத்தல், மலையேறுதல், கருவியின்றி உடற்பயிற்சி செய்தல், தோட்டம் பயிரிடுதல், மரமறுத்தல், மூச்சடக்கி விடுதல் (பிராணாயாமம்) முதலியன சாதாரணமான உடற்பயிற்சி முறைகளாகும்.

நூல்        :               உடல் நூல் (1934), பக்கம் – 41

நூலாசிரியர்         :               கா. சுப்பிரமணிய பிள்ளை, எம்.ஏ., எம்.எல்.

முத்துகிருட்டிணன் – மணி நீலன்

711. Anatomy – உடற்கூற்று நூல்

712. Physiology – உடற்செயல் நூல்

உடலின் பல பகுதிகளின் அமைப்பைப் பற்றிக் கூறும் நூல் (Anatomy) உடற் கூற்று நூலெனப்படும். அவற்றின் செயலைப் பற்றிக் கூறும் நூல் (Physiology) உடற்செயல் நூலெனப்படும். இரண்டும் உடல் நூலென்பதிலடங்கும்.

நூல்        :               உடல்நூல் (1934) முன்னுரை பக்கம் – 1

நூலாசிரியர்         :               கா. சுப்பிரமணிய பிள்ளை, எம்.ஏ., எம்.எல்.

713. Proto – plasm – முதற் சந்து

ஒரு நீர்த்துளியைப் பூதக் கண்ணாடி வழியாய்ப் பார்க்கும் பொழுது அதில் காணப்படும் மிகச் சிறிய உயிர்களின் உடலொன்றினை நுணுகி நோக்கின் அது குழைவான கண்ணாடி பேன்ற சத்தின் நுண்ணிய பிண்டமாகக் காணப்படும். அதனை அறிவியல் நூலார் முதற்சத்தென்பர் (Proto-Plasm).இம் முதற் சத்தானது மிக நுட்பமான உணவுத் துகள்களையுடையது. அதன் ஒரு பகுதியில் வித்துப் போன்ற ஓரிடம் காணப்படும். அதுவே அதன் உயிர்ப்பகுதி.

நூல்        :               உடல் நூல் (1934) முன்னுரை – பக்கம் -2

நூலாசிரியர்         :               கா. சுப்பிரமணிய பிள்ளை, எம்.ஏ., எம்.எல்.

714. Living Cell – உயிர்வாழ் சிற்றறை, சிற்றணுக் கூடு

வித்தோடு கூடிய முதற் சத்தினை உயிர்க் கருவென்னலாம். அது ஒரு சிற்றறை போன்றிருத்தலால் அதனை உயிர்வாழ் சிற்றறை (Living Cell) யெனவும் சிற்றணுக் கூடெனவும் நூலோர் கூறுவர்.

மேற்படி நூல் : முன்னுரை : பக்கம் – 2

715. Amoeba – திரிபுயிர்

நீர்த்துளியிலுள்ள புழுக்கள் பலவற்றின் உடம்புகள் ஒரு சிற்றறையே யுடையன. அவ்வுயிர்களின் உடம்பு அடிக்கடி மாறுவதால் அவற்றைத் திரிபுயிர் (Amoeba) என்பர்

மேற்படி நூல் : முன்னுரை – பக்கம் – 3

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Sunday, May 14, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 704-708

 




(தமிழ்ச்சொல்லாக்கம் 699 -703  தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 704-708

(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. 
கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

704. Picture Gallery – ஓவியக்கூடம்

பேர் பெற்ற பெரியாரால் தீட்டப்பட்ட ஓரழகிய ஓவியம் இருந்தது. ஒரு கோடீசுவரன், கலைகளின் அருமை சிறிது மறியாதவன், புகழ் கருதி அதை வாங்கித் தன் ஓவியக் கூடத்தில் (Picture Gallery) வைத்தான். அக்கூடமானது ஒரு கலைஞன் ஆட்சிக்குட்பட்டிருந்ததால், அக்கலைஞன் அவ்வோவியத்தைக் காணுந்தோறும், மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் உற்றான்.

நூல்        :       கட்டுரை மலர் மாலை 1933

கட்டுரை      :       செல்வமும் வறுமையும், பக்கம் – 102

கட்டுரையாசிரியர்       :     சாமி, வேலாயுதம் பிள்ளை, பி.ஏ., எல்.டி.,

⁠(தலைமை ஆசிரியர், கழக (போர்டு) கலாசாலை,

அய்யம்பேட்டை, தஞ்சம் சில்லா)

705. பன்னசாலை – இலை வீடு

காவிரியாற்றின் கரையில் (பன்னசாலை) இலை வீட்டில் சுபத்திரையான, தன் மனையாளோடு பரதன் வாழுநாளில் ஒருநாள் அப்பரதன், அரிய தவஞ் செய்தாலன்றி அருமகவைப் பெறலாகுமா? ஆதலால் இங்கிருந்து யான் என்செய்வேனென்று தன் மனையாளோடு கூறினன்.

நூல்        :     திருத்துருத்திப் புராணம் (1933)

திருவாலங்காட்டுப் படலம், பக்கம் – 17

உரைநடை, குறிப்புரை : ப. சிங்கார வேற்பிள்ளை

(குற்றாலம், கழக (போர்டு ) உயர்தரக்

கலாசாலைத் தலைமைத் தமிழ்ப்பண்டிதர்)

706. Museum – பொருட்காட்சிச் சாலை

707. Scientist – அறிபொருள் வல்லுநர்

நான் ஒரு பெரிய பொருட்காட்சிச் சாலைக்குச் சென்றேன். ஓர் அறிவில்லாப் பணக்காரன், அதன் உயர்வை உணராதவன். அதைத் தனதென்று பெயரிட்டுக் கொண்டிருந்தான். ஆனால், அதன் மேற்பார்வையாளராகிய ஒர் அறி பொருள் வல்லுநர் (Scientist) அதிலுள்ள பொருள்களுள் ஒவ்வொன்றின் அருமையையும் உணர்ந்து, அவற்றின் மெய்ப்பொருள் காண்பதில் கண்ணுங் கருத்துமாய், அவற்றைத் தேடி ஆராய்ந்து அடுக்கி வைப்பதில் தம் வாழ்நாளெல்லாவற்றையும் செலவழித்தவராய் இருந்தார்.

நூல் : கட்டுரை மலர் மாலை, பக்கங்கள் – 101, 102 – 1933

708. Will – இறப்பு ஏற்பாடு

ஓர் அரிய விருந்திற்கு ஓரறிவாளர் வந்திருந்தார்; ஒரு பணக்காரனும் வந்திருந்தன். பணக்காரன் தற்பெருமை வாய்ந்தவனாதலின், அறிவாளர் அவனை அணுகவில்லை. அதனால் மனம் புழுங்கிய செல்வன், மதிவலாரை நோக்கி, யான் ஒரு கோடீசுவரன் என்பது உனக்குத் தெரியாதா? – எனக் கடுங்குரலில் கழறினன். அதற்கவர் மிக்க அமைதியுடன், அவ்வளவுதான் உனது பெறுமானமென்பது எனக்குத் தெரியும் என்றார். இத்தகைப் பெரியாரொருவர், யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் உயரிய உணர்வுடன் அழகுபட எழுதி வைத்திருக்கிற இறப்பு ஏற்பாடு (Will) பின்வருமாறு அமைந்துள்ளது.

நூல்        :         கட்டுரை மலர் மாலை 1993

கட்டுரை       :    செல்வமும் வறுமையும், பக்கம் – 105, 106

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Sunday, May 7, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 699-703

 




(தமிழ்ச்சொல்லாக்கம் 688-698  தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 699-703

(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. 
கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

699. Artesian Well – தானாகவே தண்ணீர் வெளியேறும் கிணறு

மகாமக வருடத்தில் நகரபரிபாலன சபையர் தண்ணிறைத்துச் சேறள்ளி மணலிட்டு வருகின்றனர். இவ்வருடம் ஒரு தீர்த்தத்தில் தானாகவே தண்ணீர் வெளியாகும் கிணறு (Artesian Well) உண்டாக்க முயன்றதில் பயன் பெறவில்லை.

நூல்        :               திருக்குடந்தை புராண வசனம் (1932)

⁠மகாமக தீர்த்த மகிமைப் படலம், பக்கம். 51

நூலாசிரியர்         :               புது. இரத்தினசாமி பிள்ளை

⁠(கும்பகோணம் பசார் அஞ்சல் தலைவர்)

700. Tennis – நிலைச்செண்டு

நிலைச்செண்டு என்பது நின்ற நிலையிலிருந்தே பந்துகளை வீசி விளையாடுவது போலும். தற்காலம் (Tennis) டென்னிசு முதலியன போல)

நூல்        :               சேக்கிழார் (1933)

நூலாசிரியர்         :               கோவை – வழக்கறிஞர்

சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார், பி.ஏ.,

701. அவபிருதம் – முடிவு

பிரமதேவர் கும்பேசருக்கு ஒன்பது நாள் உத்சவம் நடத்திய பின்னர், பத்தாம் நாள் அவபிருத சுநானம் நடத்தி உத்சவத்தை பூர்த்தி செய்த விசயம் ஈண்டு கூறப்படும். அவபிருதம் – முடிவு: இங்கு உத்சவ முடிவின் நீராட்டு.

நூல்        :               கும்ப கோண தலபுராண வசனம் (1933)

⁠மகாமக தீர்த்த மகிமை, பக்கம் – 45

நூலாசிரியர்         :               பள்ளி ஆய்வாளர்  சாமிநாத முதலியார்

702. Oral Evidence – வாழ்மொழிக் கூறு

703. Documentary Evidence – சுவடிக் கூறு

ஆவணம் என்பது, ஒரு வழக்கைத் தீர்மானிக்க உதவும் சுவடி ஓலை முதலிய எழுத்துச் சீட்டுகள். அயலார் காட்சி என்பது வழக்கு நிகழ்ச்சியை கண்டார் சொல்வது. இவை முறையே (Oral Evidence) வாய்மொழிக்கூறு என்றும், (Documentary Evidence) சுவடிக் கூறு என்றும் தற்கால ஆங்கில நீதிமுறையில் பேசப்பெறும்.

நூல்        :               சேக்கிழார் 1933 (முதற்பதிப்பு)

நூலாசிரியர்         :               கோவை வழக்கறிஞர்

சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார், பி.ஏ.,

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்