Thursday, August 7, 2025

வெருளி நோய்கள் 226 -230 : இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 221 -225 – தொடர்ச்சி)

  1. அறியாமை வெருளி – Althazagoraphobia(1)
    அறியாமைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் அறியாமை வெருளி.
    அறியாமையால் பணிச்சுணக்கம், பண இழப்பு முதலானவை ஏற்படுவதால் அறியாமையை அடுத்தவர் வெளிப்படுத்தும் பொழுது சினம் வருகிறது. அறியாமையால் இடரோ இழப்போ ஏற்படலாம் என்ற அச்சத்திற்கும் ஆளாகின்றனர்.
    00
  2. அறியாதவர் வெருளி – Agnostophobia
    அறியப்படாதவர் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அறியாதவர் வெருளி.
    பொதுவாகக் கூட்டங்கள், வரிசைகள், கடைத் தெருக்கள், பயணங்கள், பொதுவிடங்கள் முதலான இடங்களில் காணும் அறியாதவர் பற்றிய பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். இவர்களால் திருடு போகலாம், தீங்கு நேரலாம் முதலான பல்வகைப் பேரச்சங்களுக்கு ஆளாகின்றனர்.
    agnostos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அறியப்படாதவர்.
    00
  3. அறிவியல் வெருளி – Scientophobia
    அறிவியல் குறித்த வரம்பற்ற பேரச்சம் அறிவியல் வெருளி.
    பிற்போக்கு மத வாதிகளும் பழமைவாதிகளும் அறிவியல் முன்னேற்றங் கண்டு வெறுப்பவரகளாக உள்ளனர். கடவுளின் ஆணைக்கு எதிரானதாகக் கருதி எதிர்க்கிறார்கள். இத்தகையோரும் அறிவியல் வெருளிக்கு ஆளாகிறார்கள்.
    அறிவியல் ஆக்கவும் அழிகக்வும் கூடியது. ஆனால் அழிவிற்கே அதனைப் பயன்படுத்துகிறார்கள் என அறிவியல் மீது பேரச்சம் கொள்வோரும் உள்ளனர்.
    அறிவியல் சார் கற்பனைக் கதைகள் பலவற்றில் அறிவியலின் அழிவுப்பாதை கூறப்படுகின்றது. இதனைப் படிப்போருக்கும் அறிவியல் வெருளி வருகிறது. அறிவியல் என்றால் இயற்பியல், வேதியல், உயிரியல் மட்டுமல்ல. தொல்லியல் முதலான எல்லாத் துறையியல்களுமே அறிவியல்களே! இவை மீதான பேரச்சம் குறித்துப் பல கட்டுரைகள் பல பக்கங்களில் வந்துள்ளன. அந்த அளவில் அறிவியல் குறித்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர். அணுஆயுதப்போர் முதலான பேரழிவிற்குக் காரணமானவையும் அறிவியல் விளைவுகளே என அதனைக் கண்டு அளவுகடந்த பேரச்சம் கொள்வோர உள்ளனர்.
    00
  4. அறிவுத் துறைகள் வெருளி – Ologypediaphobia
    அறிவுத் துறைகள் குறித்த வரம்பற்ற பேரச்சம் அறிவுத் துறைகள் வெருளி.
    அறிவியல் வெருளியில் குறித்தவையே இதற்கும் பொருந்தும். அறிவியல் வளர்ச்சியை மக்கள் முன்னேற்றத்திற்கானதாகக் கருாமல் அழிவிற்கானதாகக் கருதுவோர் அறிவியல் துறைகளைக் கண்டு வெறுக்கிறார்கள். அறிவியலைக் கற்பதில் ஆர்வமின்மையும் வெறுப்பும் உள்ள மாணாக்கர்களும் அறிவியல் வெருளிக்கு ஆளாகிறார்கள்.
    -ology என்பது அறிவியல் அல்லது அறிவியல் துறையைக் குறிக்கும் பின்னொட்டுச் சொல். -pedia, என்னும் பின்னொட்டு paidia என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது. கற்றல் என்பது பொருள். இணைந்து அறிவியல் கற்பதிலான வெறுப்பு அல்லது பேரச்சம் என்னும் பொருளைத் தருகின்றன.
    00 (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன், வெருளி அறிவியல் தொகுதி 1/5

Wednesday, August 6, 2025

வெருளி நோய்கள் 221 -225 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 216 -220 : தொடர்ச்சி)

அழுக்குச் சமை கலன் அல்லது தூய்மையற்ற உண்கலன்கள், ஏனங்கள் குறித்த வரம்பற்ற பேரச்சம் அழுக்கு ஏனங்கள் வெருளி.
அழுக்குச் சமை கலன் வெருளி என முதலில் நேர் பொருளாகக் குறித்திருந்தேன். பொதுவான ஏனம் என்னும் சொல்லைப் பயன் படுத்துவே சிறப்பு என்பதால் இப்பொழுது அழுக்கு ஏனங்கள் வெருளி என மாற்றியுள்ளேன்.
சமைத்த பாத்திரங்கள், உணவுத் தட்டுகள், வட்டில்கள், குவளைகள் முதலியன கழுவப்படாமல், தூய்மைப்படுத்தப்படாமல் இருப்பதைப் பார்க்கும் பொழுது, வீட்டிலோ உணவகங்களிலோ தூய்மைக் குறைவான பாத்திரங்கள் அல்லது தட்டுகள், குவளைகள் முதலியவற்றில் உணவு பரிமாறும் பொழுது அளவுகடந்த வெறுப்பிற்கும் பேரச்சத்திற்கும் ஆளாகின்றனர். இவற்றால் நோய் பரவும் என்பதால் விழிப்பாக இருக்க வேண்டும். ஆனால், அச்சத்துடன் அவற்றை ஏற்காமல் புறக்கணிக்க வேண்டும். தூய்மைக் குறைபாட்டுடன் பயன்படுத்தி அஞ்சுவதை விட இதுதான் சிறந்தது.
00

மாசு வெருளி/தூசு வெருளி/நுண்மி வெருளி/தொற்றுவெருளி/ குப்பை வெருளி-Misophobia/Mysophobia/Molysmophobia/Molysomo phobia/Verminophobia/Amathophobia/Koniophobia/Rupophobia/ Rypophobia/Koniphobia
நோய்மி வெருளி- Bacillophobia/Microbiophobia/Bacteriophobia/ Germophobia/Germaphobia , தூய்மையின்மை வெருளி – Ataxaphobia
தூய்மையின்மை அல்லது துப்புரவின்மையால் -அஃதாவது அழுக்கினால் – ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் அழுக்கு வெருளி.
அழுக்கு வெருளி உடையவர்கள் அழுக்கு மீதான பேரச்சம் அல்லது வெறுப்பால் ஓயாமல் கை கழுவுவர் அல்லது அடிக்கடி குளிப்பர்.
அழுக்கின் மீதான பெருவெறுப்பால் நலக்கேடு ஏற்பட்டுத் துன்பங்களுக்கு ஆளாக அல்லது உயிரிழக்க நேரிடும் என்ற தேவையற்ற பேரச்சமே இவர்களை ஆட்டுவிக்கும்.
தூசு வெருளி, மாசு வெருளி/தூசு வெருளி/ நுண்மி வெருளி/ தொற்றுவெருளி, நோய் நுண்மி வெருளி என முன்பு தனித்தனியாகக் குறிக்கப்பட்டன. வெவ்வேறு பெயர்களில் குறிக்கப்படுவன ஒரே வெருளியைத்தான் என்பதால், இப்பொழுது இணைத்துத் தரப்படுகிறது.
அழுக்கின் பிறப்பிடங்களில் ஒன்றாகிய குப்பை பற்றிய பேரச்சம் குப்பை வெருளி(Rupophobia) எனப்படுகிறது. இதுவும் அழுக்கு வெருளியுடன் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
ஒரு பெயரை மட்டும் குறிப்பிட்டால் அது வேறு, இது வேறு என்பதுபோல் பேசவோ கருதவோ கூடும். எனவே, மாற்றுப்பெயர்களும் இங்கே தரப்பட்டுள்ளன.
auto என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் தான்/தானே. myso என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அழுக்கு.
amathos, koni ஆகிய கிரேக்கச் சொற்களின் பொருள் தூசி.
musos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தூய்மையற்ற என்பதாகும்.
molysmo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அருவருப்பான அழுக்கு.
00

தனிப்பட்ட முறையிலும் உடைமைப் பொருள்களையும் அழுக்காக வைத்திருத்தல் அழுக்குடைமை வெருளி.
சீருந்தில் சேறு படிந்து அல்லது வேறு வகையில் அழுக்கு படிதல் போன்று உடைமைப் பொருள்களில் அழுக்கு படிந்திருத்தல் அல்லது படியும் என எதிர்பார்த்தல் ஆகியவற்றால் ஏற்படும் அளவு கடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
00

அழைப்பு மையங்கள்(call centres) மீதான தேவையற்ற பேரச்சம் அழைப்பக வெருளி.
இந்த உதவி வேண்டுமா, அந்த உதவி வேண்டுமா, இதற்குக் கடன் வேண்டுமா, அதற்குக் கடன் வேண்டுமா என்பனேபால் பணி மிகுந்துள்ள நேரங்களிலும் கால நேரம் பார்க்காமலும் அழைப்பு மையங்களில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. இதனால் எரிச்சலடைவோர் மிகுதி. இதனால் இவர்களிடமிருந்து மட்டுமல்ல, தொலைபேசி மணி ஒலித்தாலே இம்மையங்களில் இருந்துதான் அழைப்பு வந்திருக்கும் என நடுங்குவோரும் உள்ளனர்.
இதற்கு மறுதலையாக அழைப்பு மையங்களில் வாடிக்கையாளர் பணி மையங்களில் பணியாற்றுவோர் பல்வகை உணர்ச்சி மிகுந்த வாடிக்கையாளர்களை நாளும் எதிர்கொண்டு அழைப்புகள் கண்டு அஞ்சும் போக்கும் உள்ளது.
00

அளறு/நரகம் தொடர்பான வரம்புமீறிய பேரச்சமே அளறு வெருளி.
அளறு வெருளி/பாழ்வினையர் உலகு வெருளி/நரக வெருளி என்று நாமும் மூவகையாகக் குறிக்கலாம். எனினும் வெவ்வேறு வெருளி என மக்கள் எண்ணக்கூடாது என்பதற்காக அளறு வெருளி என்றுமட்டுமே குறிப்பிடலாம்.
எலலாச் சமய நூல்களிலும் குற்றம் இழைத்தவர்கள், பாவம் செய்தவர்கள் இறப்பிற்குப் பின் அளறுலகு/நரகுலகு செல்வர் என்றும் அங்கே கடுமையான தண்டனைகள் பாவியருக்கு வழங்கப்பெறும் என்றும் கதைகள் உள்ளன. இதனை அறிந்து அங்கே இறப்பிற்குப் பின் செல்ல நேரிடும் என்று அளவு கடந்த பேரச்சம் கொள்வர் இத்தகையர்.
மக்கள் தவறு செய்யாமல் இருக்கத்தான் இத்தகைய கதைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், இதனை நம்பி மக்கள் தவறு இழைக்காமல் இருந்தால் இவ்வுலகம் பண்பாடு மிக்கதாக, அமைதியானதாக, ஒற்றுமையாக இருந்திருக்கும். பாவக்கதைகளை விளக்குபவர்களே பாவம் செய்பவர்களாகத்தான் இருக்கின்றனர். இருப்பினும் சிறுபான்மையர் ஒழுக்க வரம்பிற்குள் வாழ இக்கதைகள் உதவுகின்றன. அவ்வாறு வாழ விரும்புவோரே அளறு வெருளிக்கும் ஆளாகின்றனர்.
திருவள்ளுவர் ஒழுக்க வரையறை இல்லாப் பெண்களின் மேல்லிய தோள், கீழானவர்கள் ஆழ்ந்து கிடக்கும் நரகம் என்னும் பொழுது அளறு என்றுதான் குறிப்பிடுகிறார்.
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு 
(திருக்குறள் 919) என்கிறார் அவர்.
Hades என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் அளறு/நரகம்
stygius என்னும் இலத்தீன் சொல்லிற்கும் Stணgios என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கும் நரகம் தொடர்பான/ கீழுலகம் என்று பொருள். [சுடைக்சு(Styx) என்பது நிலஉலகத்தையும் நரகமாகிய கீழுலகத்தையும் பிரிக்கும் ஆறு. இதன் தொடர்பான பேரச்சத்தை இச்சொல் குறிக்கிறது.]
00

Tuesday, August 5, 2025

வெருளி நோய்கள் 216 -220 : இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 211-215 தொடர்ச்சி)

அழகு குறித்த வரம்பற்ற பேரச்சம் அழகு வெருளி.
அழகான பெண்கள் அல்லது அவர்களின் பெற்றோர் சிலர் அழகினால் தங்களுக்கு அல்லது தங்கள் மகளுக்குப் பேரிடம் ஏற்படும் என்று கவலைப்பட்டுப் பேரச்சம் கொள்கின்றனர். அழகிய பெண்களால் வீரர்கள் வீழ்ந்த வரலாறுகள் பல உண்டு. அழகு குறைந்தால் முதுமை வெளியே தெரியும் என்று அஞ்சி அழகினைப் பேணுவது குறித்துக் கவலைப்படுவோரும் உள்ளனர். அழகிய பெண்களுக்கு மட்டுமல்ல. அழகிய ஆண்களுக்கும் அழகு வெருளி ஏற்படுகிறது.
00

அழி பொருள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அழி பொருள் வெருளி
சாவு வெருளி எனவும் இதனைக் குறிக்கின்றனர். சாவு வெருளியை Thanato Phobia/ Thantophobia எனக் குறிப்பதால் பிண வெருளியாகவும் அழிபொருள் வெருளியாகவும் இதனைக் குறிக்கலாம்.
இறப்பு மட்டுமல்லாமல் இறப்பு தொடர்பான சவப்பெட்டி, நடுகல், கல்லறை, இடுகாடு,சுடுகாடு, ஈமச்சடங்கு, அமரர் ஊர்தி முதலியவற்றின் மீதும் பேரச்சம் ஏற்படுகிறது.
எனினும், கல்லறைவெருளி(Coimetrophobia / Koimetrophobia), நடுகல் வெருளி(Placophobia), புதைவு வெருளி(Taphephobia/Taphiphobia/Taphophobia / Taphosphobia), இறுதிச்சடங்கு வெருளிCedeiaphobia), இறுதிச் சடங்கு பொறுப்பு வெருளி (Gamocedeiaphobia) என இவை தனித்தனியாவும் குறிக்கப்பெறுகின்றன. ஆதலின் அழிவுற்ற உடல் அல்லது பொருளைப்பார்த்து ஏற்படும் பேரச்சம் எனக் கொள்ளலாம்.
nekros என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பிணம்.
00

அழிப்பு(destruction) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அழிப்பு வெருளி.
இயற்கையால் ஏற்படும் அழிவுகள் போல் விதிமுறையின்றிக் கட்டடம் கட்டி உரிய அரசுத்துறையின் அல்லது நீதிமன்றத்தின் ஆணையால் அழிக்கப்படுதல், வன்முறையாளர்களால் அழிவு நேர்தல் போன்றவற்றாலும் அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
காண்க: அழிவு வெருளி(Atephobia)
00

அழிவு(ruin) பற்றிய இயல்பிற்கு மீறிய பேரச்சம் அழிவு வெருளி
மனையியலில் destroy அழி, நிலைகுலை, தகர எனவும், பொறிநுட்பவியலில் destroyer அழிகலன் எனவும் பயன்படுத்துகின்றனர். எனினும் அழிவுபற்றிய பேரச்சம் குறித்த கலைச் சொல் இல்லை.
குறிப்பிட்ட நாளில் பெரு வெள்ளம் வந்து உலகம் அழியும், நிலநடுக்கத்தால் உலக மக்கள் அனைவரும் மடிவார்கள் என்றெல்லாம் அஞ்சுவது பலரின் வழக்கமாக உள்ளது. அவர்கள் அஞ்சும் நாள்வந்த பின்னரும் உலகம் இருக்கும். என்றாலும் வேறொரு நாளில் உலகம் அழியும் என மீண்டும் எண்ணத் தொடங்கிப் பிறரையும் அச்சுறுத்துவார்கள்.
காண்க: அழிப்பு வெருளி(Apollymophobia)
00

அழுகைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் அழுகை வெருளி.
பிறர் அழுவதைப் பார்த்து அல்லது திரைக்காட்சியிலோ தொலைக்காட்சியிலோ வரும் அழுகைக் காட்சிகளைப் பார்த்து, அழுகின்ற செய்திகளையோ கதைகளையோ படித்துப் பேரச்சம் கொள்கின்றனர்.
00

Monday, August 4, 2025

வெருளி நோய்கள் 211 -215 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 206 -210 தொடர்ச்சி)

அவாய்த்தீவுபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் அவாய் வெருளி.
அவாய்(Hawaii) ஐக்கிய அமெரிக்காவில் 50 ஆவது மாநிலமாக 1959இல் இணைந்த தீவுக்கூட்டம். வட பசிபிக்கு கடலில் அமைந்துள்ள இதன்தலைநகரம ஆனலூலூ(Honolulu).
அவாய்த்தீவு, அதன் மக்கள், மொழி, கலை, நாகரிகம், பண்பாடு முதலானவற்றின்மீது ஏற்படும் தேவையற்ற வெறுப்பினால் விளைவது.
00

மருத்துவ ஆய்விற்காக உடைகளைக் கழற்றச் செய்தல் அவிழ்ப்பு வெருளி.
வேறு காரணங்களுக்காக உடலை அம்மணமாக்குவதிலிருந்து வேறு பட்டது இது.
மறைவிடங்களில் நோய் இருந்தால் மருத்துவரிடம் ஆடையை அவிழ்த்துக் காட்ட வேண்டுமே என்று அஞ்சி மருத்துவரைப் பார்க்காமல் நோயை முற்ற விடுபவர்களும் உள்ளனர்.
தொடைப்பகுதிகள் அல்லது பின் பகுதிகளில் ஊசி செலுத்துவதற்காக ஆடையை ஒதுக்க அஞ்சி அது குறித்துக் கவலைப்பட்டே ஆடை வெருளிக்கு ஆளாவோரும் உள்ளனர்.
வீட்டைச் சுற்றி அம்மணமாக நடக்கும் இயல்பு உள்ளவர்களும் மங்கிய வெளிச்சத்தில் மருத்துவர் முன் ஆடையை அவிழ்க்க அஞ்சுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
exuer என்றால் சட்டை கழற்று என்பது பொருள்.
காண்க: அம்மண வெருளி – Dishabiliophobia/Gymnophobia /Nudophobia
00

போப்பாண்டவர் என அழைக்கப்பெறும் அவைக்கோ மீதான தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் அவைக்கோ வெருளி.
உரோமன் கத்தோலிக்க திரு அவையின் தலைவர் போப்பு அல்லது போப்பாண்டவர் என அழைக்கப்பெறுகிறார். திரு அவையின் தலைவர் என்ற முறையில் இங்கே அவைக்கோ எனச் சுட்டப்பட்டுள்ளது. திருத்தந்தை என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.
துறவியர் வெருளி(Hierophobia/hermitphobia) சமயவர் வெருளி(Ecclesiaphobia/Ecclesiophobia) தூயவர் வெருளி(Hagiophobia) போன்ற சமயத்தவர் சாரந்த வெருளி இது.
papa என்னும் இலத்தீன் சொல்லிற்குப் போப்பு எனப் பொருள்.
00

அழகு மங்கை பற்றிய காரணமற்ற பேரச்சம் அழகி வெருளி.
அழகான பெண்கள், சூடேற்றும் அல்லது சிற்றின்ப எழுச்சியூட்டும் பெண்கள் ஆகியவர்களுடனான உறவு அல்லது தொடர்பு அல்லது நட்பு முறியும் பொழுது அழகி வெருளி உண்டாகிறது. அழகான பெண்களைத் தொலைவிலிருந்து கண்டாலே, அவர்களுடன் எவ்வகைத் தொடர்பும் ஏற்படாத பொழுதே இத்தகையோர் திகிலடைந்து அல்லது மலைத்துப்போய் அல்லது திகைத்துப்போய்த் துன்பத்திற்கு ஆளாகின்றனர். இதனால் மூச்சுத் திணறல், வேகமாக மூச்சு விடுதல், சீரற்ற இதயத் துடிப்பு, வியரத்தல், குமட்டல், ஒட்டுமொத்தப் பேரச்சம் ஆகியவற்றால் பாதிப்புறுகின்றனர்.
பெண் வெருளி(gynephobia), சிறுமி வெருளி(puellaphobia) வகையைச் சேர்ந்தது. அவற்றின்உட்பிரிவாகவும் கொள்ளலாம்.
cali என்னும் கிரேக்கச் சொல்லிற்கு அழகு என்றும் gyne என்னும் கிரேக்கச் சொல்லிற்குப் பெண் என்றம் பொருள்கள்.
காதல் தேவதையைக் குறிக்கும் Venus என்னும் சொல்லில் இருந்து venustraphobia சொல் உருவானது.
00

அழகான விலங்குகள், பறவைகள் மீதான காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் அழகு விலங்கு வெருளி.
அழகு துன்பம் தருவது என்ற எண்ணங்கொண்டவர்களுக்கு அழகான விலங்குகளையோ பறவைகளையோ கண்டால் பேரச்சம் வருகின்றது.

(தொடரும்)

Sunday, August 3, 2025

வெருளி நோய்கள் 206 -210 : இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 201 -205 தொடர்ச்சி)

அல்பேனியா(Albanai) மாநிலம் தொடர்பான காரணமற்ற அளவற்ற பேரச்சம் அல்பேனிய வெருளி..
அல்பேனியக் குடியரசு (Republic of Albania) ஐரோப்பாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள நாடாகும். இதன் தலைநகரம் திரானா(Tirana).
அல்பேனிய (Albania)நாடு, நாட்டிலுள்ள மலைகள், மக்கள், கொடி, நாகரிகம், பண்பாடு, வணிகம் முதலானவை மீது தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
அல்பேனியர்கள், அல்பேனியாவில் மட்டுமல்லாமல் கொசாவா(Kosovo[a]), மாசிடோனியா(Macedonia), மாண்டெனெகிரோ (Montenegro), செர்பியா(Serbia), குரோட்டியா(Croatia), கிரீசு(Greece), இத்தாலி(Italy) நாடுகளிலும் வசிக்கின்றனர். இங்குள்ளோர்களில் பலருக்கு அல்பேனிய வெருளி உள்ளது.

00

  1. அவரை வெருளி – Fasoliphobia
    அவரை, சீமை அவரை தொடர்பான மிகையான பேரச்சம் அவரை வெருளி.
    அவரைக்காயால் பல நன்மைகள் உள்ளன. குடல் புற்று நோய்க்கு மருந்தாகவும் பயன்படும். என்றாலும் அவரையின் சுவை பிடிக்காமலும் ஒவ்வாமை ஏற்படும் என்று கவலைப்பட்டும் சிலர் அவரை வெருளிக்கு ஆளாகின்றனர்.
    00
  2. அவரைப் பனிய வெருளி – Vanillaphobia
    நெற்று அவரை(Vanilla) அல்லது நெற்றுஅவரை மணம் சேர்க்கப்பட்ட பனியேடு- அவரைப் பனியம்- பற்றிய அளவற்ற பேரச்சம் அவரைப் பனிய வெருளி.
    பனிக்கூழ் என்று சொல்லி வந்தாலும் பனிப்பாலேடு என்பதன் சுருக்கமாகப் பனியேடு எனக்குறித்துப் பின்னர் பனியம் என மாற்றியுள்ளேன். (பனிக்கூழ்> பனியம் என்றே சொல்லலாம் என்கிறீர்களா? பனியேடு எனப் பயன்படுத்தி வந்தமையால் அதிலிருந்து மாற்றுகிறேன்.)
    ‘வனிலா’ என்பது மெக்கிசோவைப் பிறப்பிடமாகக் கொண்ட நறுமணப் பொருள். வெனிலா என்றும் வெண்ணிலா என்றும் உச்சரிக்கும் இதனை வனிக் கொடி என்றும் பெரும்பிரண்டை என்றும் குறிப்பிட்டுள்ளனர் தமிழ்நூலோர். இசுபானிசுச் சொல்லான வனிலா என்பதன் பொருள் சிறு நெற்று என்பதாகும்.
    00
  3. அவா வெருளி – Periergeiaphobia
    அவா தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அவா வெருளி.
    ஒன்றின் மீதான அவா, அதன் விளைவான ஆசை முதலியவற்றால் ஏற்படும் நிறைவேறுமா என்பது குறித்த கவலை, நிறைவேற்றுவதில் உள்ள அச்சம் ஆகியவற்றின் வளர்ச்சியால் அவா வெருளி உண்டாகிறது.
    00

(தொடரும்)

Saturday, August 2, 2025

வெருளி நோய்கள் 201 -205 : இலக்குவனார் திருவள்ளுவன்

 



(

(வெருளி நோய்கள் 196-200 தொடர்ச்சி)

அலைபேசியைப் பயன்படுத்த முடியாத சூழலில் ஏற்படும் தேவையற்ற பேரச்சமே அலைபேசி வெருளி.


அலை இணைப்பு கிடைக்காமல் அல்லது மின்னேற்றம் இன்மையால் அல்லது வேறு சூழலில் அலைபேசியைப் பயன்படுத்த முடியாமல் போனால் இதனைப் பயன்படுத்துவோர் அடையும் கிலி, மனத் தடுமாற்றம், காரணமில்லாப் பேரச்சம் முதலானவை அலைபேசி வெருளியாக மாறுகிறது.

அலைபேசி இயங்கா வெருளி என்பது சுருக்கமாக அலைபேசி வெருளி எனக் குறிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் அல்லது இளைஞர்கள் அலைபேசியைப் பயன்படுத்தும் பொழுது அவர்களின் பெற்றோர் முதலான உறவினர்களுக்கு இவர்கள் தவறாகப் பயன்படுத்தி வாழ்க்கையை அழித்துக் கொள்வார்களோ என்ற பெரும் அச்சம், மனத்தைப்பாதிக்கும் விளையாட்டு அல்லது பாலியல் படங்கள் மூலம் மனச்சிதைவிற்கு ஆளாவார்களோ என்ற பேரச்சம் எழுவதால் அலைபேசி வெருளி எனப் பொதுவாகச் சொல்வதும் பொருத்தம்தான்.
ஐக்கிய இங்கிலாந்தில் பாதிக்கு மேற்பட்டோர் அலைபேசி வெருளியால் துன்புறு கிறார்களாம்.
இதன் ஆங்கிலச்சொல் Nomophobia என்பது இரு சொற்கள் பகுதி கலந்து உருவான ஒட்டுச்சொல்(portmanteau). இயூகோவு(YouGov) என்பவர் 2008 இல் இதனைக் கட்டுரையில் குறிப்பிட்ட பொழுது தொலைபேசி இயங்காத பொழுது53 விழுக்காட்டினர் பாதிப்பிற்குள்ளாவதாகத் தெரிவித்து இருந்தார். இப்பொழுது இந்த அளவு கூடியுள்ளது.
00

அலை தொடர்பான பெருங்கவலையும் பேரச்சமும் அலை வெருளி.
கரையில் நின்றிருந்தாலும் அலைகளில் சிக்க நேரிடும், அலை அடித்துக் கொண்டு சென்றுவிடும் என்பன போன்றகவலைகளும் அதனால் பேரச்சமும் கொள்வர்.
கடலலை மட்டுமல்லாமல் அலைபோல் எழுச்சி உள்ள நீர்நிலைகள் யாவற்றைக் கண்டாலும் ஏற்படும் கட்டுக்கடங்காத பேரச்சமே இந்நோய்.
கடல்கோள்(சுனாமி), கடல்கோள் பற்றிய நினைவு, கடலோரப்பாறைகளில் மோதும் அலைகள், ஏற்ற இறக்கமுள்ள அலை பாய்வு, வெள்ளம், நீரலைஉள்ள ஆறு முதலான நீர்நிலைகள், அலைகளின் ஒலி என யாவற்றிலும் ஏற்படும் மிகையான பேரச்சம் இத்தகையோர்க்கு வரும்.
‘kymo’ என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கு அலை எனப் பொருள் .
00

அலைமிதவை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அலைமிதவை வெருளி.
அலைமிதவையில் பயணம் செய்யும் பொழுது கவிழ்ந்து விடும், பேரலை வந்து மூழ்கடித்துவிடும், இறக்க நேரிடலாம் என்ற பேரச்சம் வரும்.
00

மாந்த உடலில் மாந்த அல்லாத உயிர் – அல்மாந்த நிலை – இருப்பதாக எண்ணிக் கவலைப்பட்டுப்பேரச்சம் கொள்வது அல்மாந்த வெருளி.

அல்மாந்த என்பதை அன்மாந்த என்றுதான் குறிக்க வேண்டும். நல் முறை > நன் முறை, தொல் மரபு > தொன் மரபு என்பனபோல்.புதுச் சொல் என்பதால் எளிமை கருதி,மாந்த அல்லாத என்பதைப் புரிந்து கொள்ளும் வகையில் அல் மாந்த எனப்பட்டுள்ளது.

Friday, August 1, 2025

வெருளி நோய்கள் 196 -200 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 191 -195 : தொடர்ச்சி)

அயல்நாட்டில் வாழும் இந்தியர்கள் (NRI) தொடர்பில் ஏற்படும் தேவையற்ற அச்சம் அயலுறை இந்தியர்கள் வெருளி. சுருக்கமாக அயலிந்தியர் வெருளி எனலாம்.
வெளிநாட்டிலிருந்து செல்வம் திரட்டி வந்து, இங்கே நம் தொழிலைச் சிதைப்பார்கள், செல்வத்தைத் தேய்ப்பார்கள், செல்வாக்கை ஒடுக்குவார்கள், வளர்ச்சியை அழிப்பார்கள் என்றெல்லாம் தேவையற்ற கவலையும் அளவு கடந்த வெறுப்பும் கொள்வர்.
வெளி நாடுகளில் அங்குள்ள தாய்நாட்டாருக்கு அயலிந்தியர் தங்கள் வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு முதலானவற்றைப் பறிக்கின்றனர் என்ற வெருளியும் உள்ளது.
00

அயலார் வீடுகளுக்குச் செல்வதற்கு ஏற்படும் அளவு கடந்த பேரச்சம் அயல்மனை வெருளி.
அடுத்தவர் வீடுகளில் கழிவறைக்குச் செல்வதற்குக் கூச்சம் கலந்த அச்சம் சிலருக்கு ஏற்படும். கழிவறை தூய்மையின்மையாக இருக்கும் என்ற கவலையிலும் சிலருக்கு அடுத்தவர் இல்லத்தில் அல்லது வெளியிடங்களில் உள்ள கழிவறைகளைப் பயன்படுத்த பேரச்சம் வரும். கழிவறைகளில் கூடுதல் நேரம் இருப்பவர்களும் நோயுற்று இருப்பவர்களும் அடுத்தவர் இல்லக் கழிவறைகளுக்குச் செல்ல அஞ்சுவர். தம் வீட்டுக் கழிவறைகளைப் பயன்படுத்த இவர்களுக்கு அச்சம் இருப்பதில்லை.
பொதுவாக இதனை அயல்மனை வெருளி என்னும் பொருளில் கையாண்டாலும் அயல் மனையில் உள்ள கழிவறைக்குச் செல்ல ஏற்படும் பெருங்கவலை என்பதால் கழிவறை வெருளி எனவும் சொல்லலாம். ஆனால், பிறர் வீடுகளுக்குச் சென்றால் சீட்டாட்டம் ஆட நேரிடும் என அளவுகடந்த பேரச்சம் கொள்வதையும் Expellophobia என்றுதான் கூறுகின்றனர். எனவே, பொதுவாக இதனை அயல்மனை வெருளி எனலாம்.
Expello என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் வெளியேற்று.
00

அயல்மொழி பெயர்ப்பிற்கான இலிங்கோசம் தளம்(www.lingojam.com) தொடர்பான அளவுகடந்த பேரச்சம அயல்மொழி பெயர்ப்பு வெருளி
Lingo என்றால் அயல்மொழி எனப்பொருள்.
00

அயல்மொழி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அயல்மொழி வெருளி.
xeno என்னும் கிரேக்கச் சொல்லிற்கு அயல்நாட்டிற்குரிய என்றும் glosso என்னும் கிரேக்கச் சொல்லிற்கு மொழி என்றும் பொருள்.
00

அயல்யாழ்(guitar) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அயல்யாழ் வெருளி.
செவ்விசை(Classical guitar), செழுமிசை(Folk guitar), மின்(Electric guitar), மீளொலி(Resonator guitar) முதலான பலவைக அயல்யாழ்கள் உள்ளன
. ஒட்டு மொத்தமாக அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வகைகள் மீது பேரச்சம் இருக்கலாம்.
00