(வெருளி நோய்கள் 211-215 தொடர்ச்சி)

அழகு குறித்த வரம்பற்ற பேரச்சம் அழகு வெருளி.
அழகான பெண்கள் அல்லது அவர்களின் பெற்றோர் சிலர் அழகினால் தங்களுக்கு அல்லது தங்கள் மகளுக்குப் பேரிடம் ஏற்படும் என்று கவலைப்பட்டுப் பேரச்சம் கொள்கின்றனர். அழகிய பெண்களால் வீரர்கள் வீழ்ந்த வரலாறுகள் பல உண்டு. அழகு குறைந்தால் முதுமை வெளியே தெரியும் என்று அஞ்சி அழகினைப் பேணுவது குறித்துக் கவலைப்படுவோரும் உள்ளனர். அழகிய பெண்களுக்கு மட்டுமல்ல. அழகிய ஆண்களுக்கும் அழகு வெருளி ஏற்படுகிறது.
00

அழி பொருள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அழி பொருள் வெருளி
சாவு வெருளி எனவும் இதனைக் குறிக்கின்றனர். சாவு வெருளியை Thanato Phobia/ Thantophobia எனக் குறிப்பதால் பிண வெருளியாகவும் அழிபொருள் வெருளியாகவும் இதனைக் குறிக்கலாம்.
இறப்பு மட்டுமல்லாமல் இறப்பு தொடர்பான சவப்பெட்டி, நடுகல், கல்லறை, இடுகாடு,சுடுகாடு, ஈமச்சடங்கு, அமரர் ஊர்தி முதலியவற்றின் மீதும் பேரச்சம் ஏற்படுகிறது.
எனினும், கல்லறைவெருளி(Coimetrophobia / Koimetrophobia), நடுகல் வெருளி(Placophobia), புதைவு வெருளி(Taphephobia/Taphiphobia/Taphophobia / Taphosphobia), இறுதிச்சடங்கு வெருளிCedeiaphobia), இறுதிச் சடங்கு பொறுப்பு வெருளி (Gamocedeiaphobia) என இவை தனித்தனியாவும் குறிக்கப்பெறுகின்றன. ஆதலின் அழிவுற்ற உடல் அல்லது பொருளைப்பார்த்து ஏற்படும் பேரச்சம் எனக் கொள்ளலாம்.
nekros என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பிணம்.
00

அழிப்பு(destruction) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அழிப்பு வெருளி.
இயற்கையால் ஏற்படும் அழிவுகள் போல் விதிமுறையின்றிக் கட்டடம் கட்டி உரிய அரசுத்துறையின் அல்லது நீதிமன்றத்தின் ஆணையால் அழிக்கப்படுதல், வன்முறையாளர்களால் அழிவு நேர்தல் போன்றவற்றாலும் அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
காண்க: அழிவு வெருளி(Atephobia)
00

அழிவு(ruin) பற்றிய இயல்பிற்கு மீறிய பேரச்சம் அழிவு வெருளி
மனையியலில் destroy அழி, நிலைகுலை, தகர எனவும், பொறிநுட்பவியலில் destroyer அழிகலன் எனவும் பயன்படுத்துகின்றனர். எனினும் அழிவுபற்றிய பேரச்சம் குறித்த கலைச் சொல் இல்லை.
குறிப்பிட்ட நாளில் பெரு வெள்ளம் வந்து உலகம் அழியும், நிலநடுக்கத்தால் உலக மக்கள் அனைவரும் மடிவார்கள் என்றெல்லாம் அஞ்சுவது பலரின் வழக்கமாக உள்ளது. அவர்கள் அஞ்சும் நாள்வந்த பின்னரும் உலகம் இருக்கும். என்றாலும் வேறொரு நாளில் உலகம் அழியும் என மீண்டும் எண்ணத் தொடங்கிப் பிறரையும் அச்சுறுத்துவார்கள்.
காண்க: அழிப்பு வெருளி(Apollymophobia)
00

அழுகைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் அழுகை வெருளி.
பிறர் அழுவதைப் பார்த்து அல்லது திரைக்காட்சியிலோ தொலைக்காட்சியிலோ வரும் அழுகைக் காட்சிகளைப் பார்த்து, அழுகின்ற செய்திகளையோ கதைகளையோ படித்துப் பேரச்சம் கொள்கின்றனர்.
00